Monday, 6 May 2019

அள்ளித் தரும் அட்சய திருதியை.!!

அட்சய திருதியை (7.5.2019)


நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவை. சில மாதங்களில் வரும் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் தனி சிறப்பு உண்டு. அமாவாசை தினத்தை அடுத்து வரும் திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய மகிமைமிக்கதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் தமிழ் மாதத்தில், சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திருதியை திதி ‘‘அட்சய  திருதியை’’ என போற்றப்படுகிறது. ‘‘அட்சயம்’’ என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் (அட்சயம் - தேயாது எதிர் கருத்துள்ள சொல், சயம் - தேய்தல்). ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவகிரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள்.

மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நாள் இது. சூரியன் பிதுர்க்காரகர். சந்திரன் மாத்ருகாரகர். பெரியவர்கள் வாழ்த்தும்போது ‘சூரிய சந்திரர்போல் நிலைத்து வாழ்க’ என்பார்கள். நீடூழி வாழ ஆத்மகாரகனாகிய சூரியனும் மனோகாரகனாகிய சந்திரனும் வலுப்பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு சூரியனும், சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திருதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும். அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களை செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.

பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம். கோயில்களில் அன்னதானம் செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம், தேங்காய் சாதம், நீர் மோர், பழங்கள் கலந்த பால் சாதம், பால் பாயசம் போன்றவை வழங்கலாம். இந்த நாளில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். பிரசித்தி பெற்ற தலங்களுக்கும் செல்லலாம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வாங்கலாம். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம். 

வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம். புதிய பூஜைகள், விரதங்கள், விட்டுப்போன வழிபாடுகளைத் தொடங்கலாம். அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வாங்கலாம். ஏழை, எளியவர்கள், இல்லாதோருக்கு ஆடை, போர்வை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும். தயிர், பால் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். ஆதரவற்ற முதியோர்கள், சிறார் இல்லங்களிலும் ஏழைகளுக்கும் இனிப்பு வழங்குவதால் திருமண பிராப்தம் கூடி வரும். அரிசி, பருப்பு, தானியங்களை தானம் செய்தால் விபத்துகள் நேராமல் இறைவன் காத்தருள்வார். 
பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். அட்சய திருதியை தினத்தில் தங்கம், வைர, ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 

மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெற்றுக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள் ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாஹா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திருதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத ஸ்ரீலட்சுமி தேவியைப் பூஜிக்க வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment