Monday, 6 May 2019

ஆனந்தம் அள்ளித் தரும் அட்சய திருதியை.!!

அட்சய திருதியை 7.5.2019


அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று: கிருஷ்ணரும், குசேலரும் தமது குருகுலவாசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு நீங்கி துவாரகாபுரியின் மன்னரானார். ஆனால், குசேலரோ பரம ஏழையாக இருந்தார். அவருக்குத் திருமணமாகி 27 குழந்தைகள் இருந்தனர். தனது குழந்தைகளுக்கு அனுதினமும் உணவு அளிக்கவே அவர் பெரிதும் அவதிப்பட்டார். அவர் கொண்டு வரும் சிறு பொருளையும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை கவனித்தாள் அவரது மனைவி சுசீலை. இந்த சூழ்நிலையில் ஒருநாள் குசேலர் வாழ்ந்துவந்த கிராமத்தில் கிருஷ்ணர் தன்னிடம் உதவி வேண்டி வருவோர்க்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாகக் கேள்விப்பட்டாள் சுசீலை. தங்களுடைய இந்த வறுமை நிலையைப் போக்க எண்ணிய அவள், குசேலரிடம் விபரத்தைக் கூறி, பால்ய நண்பரான கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்குமாறு கூறினாள். 

முதலில் அதை ஏற்றுக் கொள்ளாத குசேலர், பிறகு மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரை சந்திக்கச் சென்றார். கிருஷ்ணருக்குப் பிடித்த அவலை ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டிஎடுத்துச் சென்றார். குசேலர் வருவதை கேள்விப்பட்ட கிருஷ்ணர் அரண்மனை வாசலுக்கே ஓடி வந்து அவரை வரவேற்றார். சிறப்பான உபசரிப்பு வழங்கினார். கிருஷ்ணரின் செல்வவளத்தைக் கண்ட குசேலர் மிக்க மகிழ்ச்சிகொண்டார். ஆனால், இவ்வளவு பெரிய அரண்மனையில் உயரிய விருந்துண்ணும் கிருஷ்ணருக்கு, தான் கொண்டுவந்த அவலை எப்படி கொடுப்பது என தயங்கினார். அதை அறிந்த கிருஷ்ணர் குசேலர் வைத்திருந்த அவலை நட்பு உரிமையுடன் வாங்கி ஒவ்வொரு பிடியாக எடுத்து உண்டார். முதல் பிடி அவலை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டதும் அட்சயம் என்றார் கிருஷ்ணர். 

அடுத்த நொடியே, கிராமத்தில் இருந்த குசேலரின் வீடு பெரிய மாட மாளிகையாக மாறியது. இரண்டாம் பிடி அவலை எடுத்ததும் அவ்வாறே கூற குசேலரின் மாளிகையில் அத்தனை விலை உயர்ந்த பொருட்களும் தோன்றின. குசேலர் குபேரரானார். குசேலருக்கு கிருஷ்ணர் அருள்புரிந்தது ஒரு அட்சய திருதியை நன்நாளில்தான். இந்நாளில் என்னென்ன செயல்களைப் புரியலாம்? செல்வத்தின் அதிபதியான குபேரன் அட்சய திருதியை நாளில் மகாலட்சுமி தேவியை வழிபட்டு செல்வத்தைப் பெருக்குவதாக ஐதீகம். எனவே, அன்று லட்சுமி குபேர பூஜை செய்யலாம். கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே உள்ள முழையூர் பரசுநாதர் ஆலயத்தில் அட்சய திருதியை அன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடப்பது வழக்கம். அப்போது சிவபெருமானை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி அருகே உள்ள திருக்கோளூரில் வைத்தமாநிதிப் பெருமாள் ஆலயம் உள்ளது. 

அவர்தான் குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்ததாக ஐதீகம். இந்த பெருமாள் அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்து படுத்திருப்பார். எனவேதான் அவரை வைத்த மாநிதி பெருமாள் என்று அழைக்கின்றனர். அட்சயதிருதியை நாளில் அவரை தரிசித்தால் வாழ்வில் வளங்கள் பெருகும். அட்சய திருதியை அன்று தங்கம் உள்ளிட்ட விரும்பிய பொருட்களை வாங்குவதோடு, முடிந்த அளவு தானம் செய்ய வேண்டும். அன்று செய்யப் படும் தானத்திற்கு, குறிப்பாக அன்னதானத்துக்குப் பலன்கள் அதிகம். அட்சய திருதியை அன்று புதுக் கணக்கு துவங்குவது, குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, புதிய ஆடைகளை வாங்குவது, தொழில் துவங்குவது போன்ற செயல்களைப் புரியலாம்.

அட்சய திருதியை அன்று நிகழ்ந்த சம்பவங்கள்:
 
பரசுராமர் அவதரித்தது அட்சய திருதியை தினத்தில்தான். கிருதயுகம் தோன்றியதும், கனகதாரா துதி பாடி ஆதிசங்கரர் தங்க நெல்லிக்கனிகளை திருமகள் மூலம் பொழிய வைத்ததும் அந்நாளிலேயே. பிரம்மா உலகைப் படைத்ததும், அன்னபூரணி அவதரித்ததும் இதே நாளில்தான். காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கிய சாகம்பரி தேவி அட்சய திருதியை அன்றே அவற்றைப் படைத்தருளினாள். ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி ஆகியோர் தோன்றிய திருநாள் இது. மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் இதே திருநாளில்தான். அட்சய திருதியை அன்று ஆலமர இலையில் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து நோயாளிகள் படுக்க பயன்படுத்தும் தலையணையின் அடியில் வைத்தால் அவர் களது நோய் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்... 

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment