Thursday, 16 May 2019

எந்த நேரத்துல பொங்கல் வைச்சா குடும்பத்துக்கு நல்லதுன்னு தெரிஞ்சுக்கோங்க..!

தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் எந்த நேரத்தில் பொங்கல் வைப்பதால் குடும்பத்தினருக்கு ஆரோக்கியம், ஆனந்தம், செல்வம் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.


இயற்கைக்கு நன்றி சொல்வதற்கு ஒரு திருநாளை உருவாக்கிக் கொண்டாடும் பெருமை, இந்த உலகிலேயே  நம் தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தானது. இந்த திருநாளுக்குப் பின்னே ஏதேனும் புராணக்கதையோ,  அரக்கன் அழிவோ இல்லை என்பதும் தனிச்சிறப்பு. தைமாதம் முதல்  நாளை  மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று ஆனந்தமாகக் கொண்டாடுகிறோம்.  கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களும் சூரியன் இல்லை என்று சொல்வதில்லை என்பதால் அத்தனை மக்களும் இணைந்து கொண்டாடும் திருவிழா இது.
சூரிய வழிபாடுதான் தைத் திருநாளின் உன்னதம். இந்த உலகத்தை உருவாக்கியதும், வாழவைப்பதும் சூரியனே. அதனால்தான் சூரியன் மகிமையால் உருவான மனிதர்கள், ஆதி பகவன் சூரியனுக்கு நன்றி சொல்வதை தங்கள் கடமையாக நினைத்து விழா எடுக்கிறார்கள். இனி இரவு நேரம் குறைந்து பகல் நேரம் அதிகரிக்கத் தொடங்கும். அதனால் மக்கள் சுறுசுறுப்படைந்து கூடுதல் நேரம் உழைக்கவும் இந்தத் தினமே ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது.  

எப்படி பொங்கல் கொண்டாடலாம் என்று பார்க்கலாம். வீட்டு வாசலில் சூரியனைப் பார்த்து பொங்கல் வைத்த காலம் எல்லாம் போயேவிட்டது ஏனென்றால் இப்போது பலருக்கு வீடு இல்லை, வீடு இருந்தாலும் வீட்டுக்கு வாசல் இல்லை. அதனால் வீட்டுக்குள் பொங்கல் வைத்து சூரியனைக் கும்பிடவேண்டிய நிலைமை அதற்காக கவலை கொள்ளவேண்டியதில்லை. ஏனென்றால் சூரியன் என்றால் நாம் கண்ணால் காணும் கோள் மட்டுமல்ல, இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒளி எல்லாமே சூரியன்தான்.
பொங்கலுக்காக புதுப்பானை, பச்சரிசி, சர்க்கரை,  தேங்காய், வாழைப்பழம், என அனைத்துப் பொருட்களுடன்  கரும்பு வாங்கிக்கொள்ளுங்கள். இந்தப் பொருட்கள் வாங்குவதில் பேரம் பேச வேண்டாம். எல்லாமே யாரோ ஒரு விவசாயிக்குப் போகிறது என்று சந்தோஷமாக வாங்குங்கள்.
சூரிய பகவானை வரவேற்கும் வகையில் வீட்டை தூய்மை செய்து  வீட்டு வாசலில்  மாவிலை தோரணம் கட்டி வைக்கவும்.  . வாழை இலைபோட்டு, சூரியனுக்கு அனைத்து விளைந்த பொருட்களையும் படைக்கவும். குறிப்பாக உணவுக்குப் பயன்படும் காய், கனிகள், கிழங்கு, பூ போன்ற அனைத்தையும் படையுங்கள். வழக்கம்போல் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் கிழங்கு வைக்க மறக்க வேண்டாம்.
குடும்பத்திற்கு எத்தனை கரும்புகள் வாங்கினாலும் பூஜை அறையில் இரண்டு கரும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைத்துக் கட்டி வைத்துக் கும்பிட வேண்டும். ஏனென்றால் இதற்குப் பின்னே ஒரு ஐதீகம் சொல்லப்படுவதுண்டு. கரும்பு ஜோடியாக வைக்கும்போது அவை மன்மதன், ரதி என்ற குறியீடு ஆகும். குடும்பத்தில் தலைவனும், தலைவியும் மன்மதன், ரதி போன்று இன்பம் அனுபவித்து ஆனந்தமாக வாழவேண்டும் என்பதற்காக குறியீடே அந்தக் கரும்புகள்.
பொங்கல் பொங்கியதும் ஆனந்தமாக, பொங்கலோ பொங்கல் என்று குரல் எழுப்புங்கள். இந்தக் குரல் சூரியனை எட்டுகிறதோ இல்லையோ உங்கள் மனசுக்குள் இருக்கும் இறைவனை தொட்டு எழுப்பட்டும். பொங்கி வழிந்ததும் வீட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் கொஞ்சம் அரிசியை போடுவது நல்லது. அரிசியை உலையில் போட்டு, அடுப்பில் எரியும் நெருப்புக்கு நன்றி சொல்லுங்கள். அதுதான் நம் வீட்டு சூரியன்.
பொங்கல் தயாரானதும் சாமியறையில் இருக்கும் வாழையிலையில் வைத்து, அதன் மீது வாழைப்பழம் உரித்து வைத்து இறைவனுக்கு மனமார நன்றி சொல்லி, வீட்டில் இருக்கும் அனைத்து கடவுள்களுக்கும் சூடம் கொளுத்தி ஆரத்தி எடுங்கள். சூரியனே இந்த உலகிற்கு தாயும், தந்தையுமாக இருந்து காப்பாற்றுகிறான் என்பதை உரக்கச் சொல்லி குழந்தைகளுக்குப் புரியவையுங்கள். நாம் கண் முன்னே காணும் இறைவன் சூரியனே.
சாமி கும்பிட்டு முடித்ததும் குடும்பத்தில் அனைவரும் அமர்ந்து பொங்கலை வாழை இலையில் வைத்து சாப்பிடவும். அதன்பிறகு அக்கம்பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கு பொங்கல், பழம், கரும்பு போன்றவற்றைக் கொடுத்து அன்பைத் தெரிவியுங்கள். இனி எந்த நேரம் பொங்கல் வைப்பது என்பதைப் பார்க்கலாம்.
சூரிய வழிபாட்டுக்கு நேரம் காலம் கிடையாது என்றாலும் கீழ்க்கண்ட நேரங்களில் பொங்கல் வைப்பது சாலச்சிறந்தது என்று கருதப்படுகிறது. இந்த நேரங்களில் சூரியன் இதமாக, முழு சக்தியுடன் மற்றும் பதமாக நம் மீது விழுகிறான். ஆக, இந்த நேரங்களில் பொங்கல் வைத்து ஆனந்தமாக கொண்டாடுங்கள்.
காலை 6.00 முதல் 9.00 மணிக்குள்
மதியம் 11.30 முதல் 1.00 மணிக்குள்
மாலை 6.00 முதல் 9.00 மணிக்குள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment