கைலாசத்தில் ‘‘சம்போ மகாதேவா’’ என்ற கோஷம் விண்னைப்பிளந்துக் கொண்டிருந்தது. கைலாச பர்வதத்தின் உச்சியில் ரத்தினம் இழைக்கப்பட்ட சிம்மாசனத்தில் பார்வதியும் பரமேஸ்வரனும் அமர்ந்துகொண்டு அருளாட்சி செய்து கொண்டிருந்தனர். தேவர்கள், முனிவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், சித்தர்கள் என்று அனைவரும் அங்கு அம்மையப்பனின் அற்புதத் திருக்கோலத்தைக்கண்டு இன்புற்றிருந்தனர். அப்போது ஒரு இளம் சன்யாசி அங்கு வந்து சேர்ந்தார். கண்களில் நீர்மல்க இரு கைகளையும் குவித்து ஈசனுக்கும், உமை அம்மைக்கும் வந்தனம் செய்தார். அவரது நெற்றியில் திருநீறு ஜொலித்தது. அந்த மகான் ஞான ஜோதியைப்போல காட்சி தந்தார்.
அவரைப் பார்த்ததும் பரமன் ‘‘வா சங்கரா. உடல் நலம் தானே. வேதத்தின் உண்மைப் பொருளான அத்வைதம் உம்மால் பூமியில் நன்கு வளர்க்கப்படுகிறதா?’’ என்று வினவினார்.‘‘பூமியில் உள்ள மக்களுக்கு எந்த குறையும் இல்லை அல்லவா?’’ என்று தாயன்போடு வினவினாள் உமா தேவியார்.‘‘பூமியில் வேத மார்க்கமான அத்வைதம் இருக்கும் வரை எந்த குறையும் தங்கள் அருளாலும், ஈசன் அருளாலும் வராது தேவி’’ என்று கூறி ஆதி சங்கரர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அம்மையப்பனை நமஸ்கரித்தார். அவருக்கு ஆசி கூறி மாகாதேவன், ஒரு தங்கத் தட்டை தந்தார். அதில் ஐந்து ஸ்படிக லிங்கங்களும் ஒரு ஓலைச்சுவடியும் இருந்தது.
அதைப் பார்த்ததும் ஒன்றும் விளங்காமல் ஆதி சங்கரர் விழித்தார். அதைக் கண்ட பரமேஸ்வரன் விளக்கம் தர ஆரம்பித்தார். ‘‘சங்கரா! வேதத்தின் பொருளான எம்மை அடைய உள்ள பல வழிகளில் ஒன்று ஞான மார்க்கமும், யோக மார்க்கமும். இவை இரண்டும் நீ எழுதிய பாஷ்யங்களிலும் மற்றும் பல நூல்களிலும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஞானமும், யோகமும் அனைவருக்கும் எளிதில் கைவரப் பெறுவதில்லை. முக்கியமாக பாமரர்களுக்கு இவை இரண்டும் எட்டாக் கனியாகவே உள்ளது. பாமரர்களும் பரமனாகிய என்னை எளிதில் அடைய வேண்டும் என்பதே என் விருப்பம். அது பக்தி மார்க்கத்தால் மட்டுமே சாத்தியம். ஆகவே நீ இந்த பக்தி மார்க்கத்தை பூமியில் வளரச்செய்ய வேண்டும். அதற்கு புதிதாக பாஷ்யங்களோ, கிரந்தங்களோ நீ படைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கங்களை நீ நிறுவிய மடங்களில் பிரதிஷ்டை செய். இதற்கு பூஜைகளை நித்தமும் அந்த மடாதிபதிகளே செய்ய வேண்டும் என்று ஆணையிடு. சங்கரரின் சீடர்களால் முப்போதும் பூஜிக்கப்படும் இந்த லிங்கத்தை காணும் அடியவர்கள், பக்தி மார்க்கத்தின் மகத்துவத்தை உணர்வார்கள். ஆம், ஞான மார்க்கத்தைப் போற்றும் ஆதி சங்கரரே பக்தி மார்க்கத்தை நிலை நாட்ட, அவர் நிறுவிய மடங்களில் நித்தமும் சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று மக்கள் உணர்வார்கள். அதனால் பக்தி மார்க்கம் பூமியில் தழைத்தோங்கும்.’’ என்று பூமியில் பக்தி மார்க்கத்தை நிலை நிறுத்தும் பொறுப்பை சங்கரரிடம் ஈசன் ஒப்படைத்தான்.
சங்கரர் அந்த லிங்கங்களை பயபக்தியோடு வாங்கிக்கொண்டார். அப்போது அந்த தட்டில் இருந்த ஓலைச்சுவடி அவர் கண்ணில் பட்டது. உடன் ஈசனிடம் தன் சந்தேகங்களைக் கேட்கத் தீர்மானித்தார். ‘‘பரம்பொருளே! வேத நாயகா! ஸ்படிக லிங்கங்களை தந்த காரணத்தை சொல்லிவிட்டீர்கள். ஆனால் இந்த ஓலைச்சுவடியைப் பற்றி சொல்லவில்லையே’’ என்று ஆதி சங்கரர் வினவினார். அதை கேட்டு பரமன் புன்முறுவல் பூத்தார்.
‘‘சங்கரா இவை ஆனந்தலஹரி என்னும் அற்புதமான படைப்பு. உலகிற்கே தாயான இந்த உமையை பூஜிக்கும் விதிமுறைகளை அழகாக உரைக்கும் அற்புதமான நூல் இது. இதுவும் லோகத்தில் பரவ வேண்டும். அதன் மூலம் மக்கள் சக்தி வழிபாட்டின் மகத்துவத்தை உணர வேண்டும். அதற்காகவே இந்த அற்புதமான நூலை உனக்கு தந்துள்ளேன்.’’ என்று திருவாய் மலர்ந்து அருளினார் மகேசன். இதைக்கேட்டு சங்கரர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடன் ஈசன் சொன்ன வேலைகளை முடிக்க சித்தம் கொண்டார் ஆதி சங்கரர். அந்த லிங்கங்களையும் ஆனந்த லஹரியையும் எடுத்துக்கொண்டு கைலாசத்தை விட்டு,வெளியில் வந்தார்.
அப்போது, கைலாசத்தின் வாயிலில் காத்துக்கொண்டிருந்த நந்திதேவரின் கண்களில் ஆதி சங்கரர் கைகளில் இருந்த ஓலைச்சுவடி பட்டது. அதைக் கண்டவுடன் நந்தி தேவருக்கு என்ன தோன்றியதோ தெரியாது. வலுக்கட்டாயமாக சங்கரரின் கைகளில் இருந்து அந்த ஓலைச்சுவடியை பிடுங்கினார். அவர் பிடுங்கிய வேகத்தில் ஓலைச்சுவடியின் பாதிக்கும் மேற்பட்ட பாகம் சுக்கு நூறாகப்போனது. அதை கண்ட சங்கரர் மனம் பதைபதைத்தது. ஓடினார் ஈசனிடம். நிகழ்ந்ததைச் சொன்னார். அதைக்கேட்ட ஈசன் சங்கரரை கனிவாக நோக்கினார். ‘‘சங்கரா ஆனந்தலஹரியின் ஐம்பத்தியோரு ஸ்லோகங்கள் நந்தியால் பாழாக்கப் பட்டது வருத்தத்தைத் தான் தருகிறது. இழந்ததை மீண்டும் பெறவும் முடியாது. ஆகவே ஆனந்த லஹரியின் பிற்பகுதியை நீயே பாடி நிறைவு செய். அதுவே சாலச்சிறந்தது’’ என்று பரமேஸ்வரன் சங்கரருக்கு ஆணையிட்டார். ‘‘பரமேஸ்வரா! எதைப் பாடி ஆனந்தலஹரியை இந்த ஏழை பூர்த்தி செய்வேன் ஒன்றும் விளங்கவில்லையே’’ என்று சங்கரர் மனமுடைந்து கலங்கினார்.
‘‘சங்கரா! தட்சிணாமூர்த்தியான என்னுடைய அவதாரமே நீ. ஆகவே நீ வேறில்லை நான் வேறில்லை. ஆகவே இதோ இந்த உமையம்மையின் அழகை வர்ணித்து 51 ஸ்லோகங்களைப்பாடு. அது உலகத்தில் உருவ வழிபாட்டின் மகத்துவத்தை ஸ்தாபிக்கும். இதன் மூலம் சங்கரன் அருருவவாதி இல்லை என்பதை இந்த வையகம் உணரும். பரம்பொருளை கல்யாண குணங்களோடு கூடிய சுகுணப் பிரம்மமாக தியானிப்பதே என்றும் மாற்றமில்லாமல் தனித்து நிற்கும் பரம்பொருளை அடைய வழி என்பதை இந்த வையகம் புரிந்து கொள்ளும். ஆகவே கவலை வேண்டாம். அம்பிகையின் அருள் வடிவை அழகாகப் பாடு. ஆசிகள்’’ என்று ஆள்காட்டி விரலால் அருகில் இருந்த அம்பிகையை காட்டியபடியே சங்கரருக்கு ஆறுதல் கூறினார் பரமன்.சங்கரரும் அம்பிகையின் அழகுருவைப் பாடத் தொடங்கினார். கவிதையை மழையாகப் பொழிந்தார். அம்பிகையின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையில் அனைத்து பாகங்களையும் ஒன்று விடாமல் வர்ணிக்கத் தொடங்கினார். நொடிகள் நிமிடங்களாகி உருண்டோடியது. அம்பிகையின் முலைப்பாலை வர்ணிக்கும் கட்டத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு அவர் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது.......
கேரளத்தில் உள்ள காலடி என்னும் அற்புதமான கிராமம். அந்த கிராமம் செய்த புண்ணியத்தின் பலனாக அங்கு ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதிகள் வசித்து வந்தனர். அவர்களுக்கு ஈசன் அருளால் சங்கரன் என்ற ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை வளர்பிறைபோல வளர்ந்து வந்தது. அப்போது ஒரு நாள் ஆரியாம்பாள் வீட்டிலிருந்து விலக்காக இருந்த சமயம். அப்போதெல்லாம் விலக்காக இருக்கும் பெண்கள் கொல்லைப் புறத்தில் தனியாக தங்குவது வழக்கம். ஆர்யாம்பாளும் அவ்வாறு கொல்லைப்புறத்தில் அமர்ந்திருந்தாள். சிவகுரு காலடி சிவன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்று விட்டார். வீட்டில் குழந்தை சங்கரன் தனியாக இருந்தான். திடீரென்று அவனுக்கு பசியெடுத்தது. பசியின் காரணமாக குழந்தை சங்கரன் ‘‘அம்மா.....’’ என்று அழத்தொடங்கினான். அந்தக் குழந்தையின் அழுகுரல் கொல்லையில் இருந்த ஆர்யாம்பாளின் செவிகளை எட்டியது. உடன் அவளது மனம் பதறத்தொடங்கியது. விலக்காக இருந்ததால் ஆரியாம்பாள் வீட்டிற்குள் வர இயலாது. அவளுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. கொல்லையிலிருந்தே குரல் கொடுத்தாள்.
‘‘சங்கரா! குழந்தை! அப்பா கோயிலுக்கு போவதற்கு முன்பு உனக்கு பாலன்னம் செய்து வைத்ததாக என்னிடம் சொன்னார். அது சமையல் அறையில் தான் எங்காவது இருக்கும். அதை சென்று எடுத்துக்கொள். ஆனால் ஒன்றை மட்டும் மறவாதே. உண்பதற்கு முன் சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு தான் உண்ண வேண்டும். ஆகவே சமையல் அறையில் இருக்கும் பாலன்னத்தை எடுத்துக் கொண்டு பூஜை அறைக்கு செல். உலகிற்கே உணவளிக்கும் அன்னபூரணி அம்பிகைக்கு அதை நிவேதனம் செய். பின்பு தாராளமாக அதை நீ உண்ணலாம். சரி தானே சங்கரா” என்று வீட்டிற்குள் இருந்த சங்கரனுக்கு கொல்லையில் இருந்த தாய் உபதேசம் செய்தார். அதைக்கேட்ட சங்கரன் ‘‘சரி அம்மா’’ என்று மழலைக் கொஞ்சும் குரலில் பதிலளித்தான். பின்பு தாயின் சொல்படி நடக்க ஆரம்பித்தான். பாலன்னத்தை எடுத்துக் கொண்டு பூஜை அறைக்கு விரைந்தான். பாலன்னம் அடங்கிய கிண்ணத்தை அம்பிகையின் திருமுன்பு வைத்தான். கை இரண்டையும் குவித்துக் கொண்டான் ‘‘அம்மா அன்னபூரணி எல்லாரையும் காப்பாத்து’’ என்று கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டான். பின்பு கண்களைத் திறந்து பார்த்த போது கிண்ணத்தில் அன்னத்தைக் காணவில்லை. குழந்தை சங்கரனின் பக்தியை மெச்சி தேவி அதை அருந்தி விட்டாள்.
அம்பிகையின் அருளின் திறன் புரியாத பால சங்கரன், உணவு காணாமல் போன வருத்தத்தில் அழத்தொடங்கினான். குழந்தையின் அழுகுரல் கேட்டு கொல்லையில் இருந்த தாய் ஆர்யம்பாளின் மனம் பதைப்பதைத்தது. ‘‘சங்கரா என்ன ஆச்சு? ’’ என்று கொல்லையிலிருந்தபடியே குரல்
கொடுத்தாள். ‘‘அம்மா.... பால்... சா... தம்... காணாமல்....’’ என்று அழுதபடியே மழலை மொழியில் தன்னுடைய அன்னைக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான் பால சங்கரன். அப்போது எதேச்சையாக சுவாமியிடம் வைத்த கிண்ணத்தை மறுபடியும். பார்த்தான். அதில் பாலன்னம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது அதைக் கண்டவுடன் குழந்தையின் அழுகை அடங்கியது. சந்தோஷமாக அதை அருந்தினான். ‘‘அம்மா பால் சாதம் சாப்பிட்டு விட்டேன்’’ என்று கொல்லையில் இருந்த தனது தாயை நோக்கி குரல் கொடுத்தான் பால சங்கரன். ஆர்யாம்பாளும் அதை கேட்டு இன்புற்றாள்.
ஆதி சங்கரர் பின்னாளில் செய்யப்போகும் காரியங்கள் ஏராளம். அதை செய்ய அவருக்கு சிறந்த ஞானம் தேவை என்பதை தேவி அறியாமலில்லை. அதற்கு அவருக்கு உதவும் விதமாக அவளது
முலையில் இருந்து வந்த ஞானப்பாலை குழந்தை சங்கரனுக்கு கொடுத்தாள். அதை பருகியவுடன் அனைத்து ஞானங்களும் பள்ளத்தைக் கண்ட நீரைப் போல் அவரிடம் வந்து குடிகொண்டது. அது மட்டுமில்லை. ஆதி சங்கரர் அந்த பரமேஸ்வரனுடைய அவதாரம். எனில் அவருக்கு அன்னமிடும் பொறுப்பு அவரது பத்தினியான பார்வதி தேவியையே சேரும். அன்னமின்றி தவித்த தனது கணவனுக்கு ஞானப்பால் தந்து ஞானம் புகட்டி, தனது பதி விரதத்தை நிலைநாட்டி விட்டாள் அம்பிகை. இந்த சம்பவம் பசுமரத்தாணி போல் சங்கரரின் மனதில் பதிந்தது. இப்போது தேவின் முலைப் பாலின் தன்மையை வர்ணிக்கும் போது இந்த சம்பவம் பசுமையாக அவரது நினைவிற்கு வந்தது. இந்த சம்பவத்தை தான் எழுதும் கவிதையில் குறித்து வைத்துவிட நினைத்தார் சங்கரர். அப்போது அவர் எழுதிய ஸ்லோகம் தான் இது.
“தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பயஃ பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீயஃ கவயிதா || 75 ||”
இமவானின் மகளே! உனது இதயத்தில் இருக்கும் ஞானம் உன் நகில்களின் வழியாக ஞானப் பாலாக வழிகிறது. அந்த அமிர்தத்தை பருகி திராவிடக் குழந்தை ஒன்று, கவிஞர்கள் வியக்கும் வண்ணம் கவி பாடியது அல்லவா?” என்பதே மேல் சொன்ன ஸ்லோகத்தின் திரண்ட பொருள்.
சௌந்தர்யலஹரிக்கு இப்போது நமக்கு கிடைக்கும் பாஷ்யங்களில் மிகவும் சிறந்த பாஷ்யம் லட்சுமிதரர் எழுதியதே. அன்னவர் இந்த ஸ்லோகத்தை விளக்கும் போது “திரவிட ஜாதி சமுத்பவ: பால: ஏதத் ஸ்தோத்திர கர்த்தா” என்று கூறுகிறார். அதாவது திரவிட சிசு என்று இந்த பாட்டில் சங்கரர் குறிப்பது வேறு யாரையும் இல்லை, இந்த கவிதையை இயற்றிய தம்மையே என்று சொல்கிறார். ஆகவே ஆன்மிக உலகத்திற்கு மேலும் ஒரு மகா ஞானியை தந்த பெருமை திராவிட நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் சேரும். ஈசன் சன்யாசியாக பூமியில் அவதரித்த போது சக்தி, தனது ஞானப் பாலின் வடிவமாக அவனால் பருகப்பட்டு அவனோடு இரண்டறக் கலந்து விட்டாள். அதன் பிறகு ஆதி சங்கரர் சிவ சக்தி ஐக்கிய சொரூபமாகவே சனாதன மதத்தை ஸ்தாபித்தார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment