வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் - வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை.
திரேதா யுகத்தில் திருமால் ராமனாக அவதரித்த போது, அவருக்கு அனைத்துப் பணிவிடைகளும் செய்வதற்காக ஆதிசேஷன் லட்சுமணனாக அவதரித்தார். அநுஜன் என்றால் தம்பி என்று பொருள். ராமனுக்குத் தம்பியானபடியால் லட்சுமணனை ராமாநுஜன் ராமாநுஜன் என்று அழைப்பார்கள். லட்சுமணனாக அவதரித்த ஆதிசேஷனே மீண்டும் கலியுகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் ராமாநுஜராக அவதரித்தார்.
“அனந்த: ப்ரதமம் ரூபம் த்விதீயஸ்து லக்ஷ்மணம் |
பலபத்ர: த்ருதீயஸ்து கலௌ ராமாநுஜ: ஸ்ம்ருத: ||”
என்று பவிஷ்ய புராணத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது. கிருத யுகம் தொடக்கமாகத் திருமாலுக்குத் தொண்டு செய்யும் ஆதிசேஷன், திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துவாபர யுகத்தில் பலராமனாகவும், கலியுகத்தில் ராமாநுஜராகவும் அவதரிப்பதாக இந்த ஸ்லோகம் கூறுகிறது.
அந்த வகையில், ராமாநுஜனான லட்சுமணனுக்கும், ராமாநுஜருக்கும் உள்ள ஒற்றுமைகளை இக்கட்டுரையில் காண்போம்.
1. வேள்வியினால் தோன்றியமை
தசரதன் செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தின் விளைவாக ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகிய நான்கு பிள்ளைகள் அவதரித்தார்கள் என்பதை நாம் அறிவோம். அதுபோல், கேசவ சோமயாஜி திருவல்லிக்கேணியில் செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தின் விளைவாகவும், பார்த்தசாரதிப் பெருமாளின் திருவருளாலும் அவருக்கு மகனாக ராமாநுஜர் ஸ்ரீபெரும்புதூரில், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். எனவே ராமாநுஜன், ராமாநுஜர் - இருவருமே வேள்வியின் விளைவாகத் தோன்றியவர்கள்.
2. வேள்வியைக் காத்தவர்கள்
விஸ்வாமித்திரர் செய்த வேள்வியை ராமனோடு இணைந்து லட்சுமணனும் காத்தான் என்பதை நாம் அறிவோம். அதுபோல் அன்றாடம் நாம் வீட்டில் இறைவனுக்குச் செய்யும் நித்திய பூஜை மிகச்சிறந்த வேள்வியாகக் கூறப்படுகிறது. தாம் இயற்றிய ‘நித்திய கிரந்தம்’ என்ற நூலில் தினமும் இறைவனுக்குப் பூஜை செய்யும் முறையை விளக்கி, இறைவனுக்குச் செய்யப்படும் பூஜையாகிய வேள்வியைக் காத்துத் தந்தார் ராமாநுஜர்.
3. சேர்த்தியில் சரணாகதி
ராமனும் சீதையும் வனவாசம் புறப்பட்ட போது, சீதையைப் புருஷாகாரமாக முன்னிட்டுக் கொண்டு, ராமபிரான் திருவடிகளில் சரணாகதி செய்தான் லட்சுமணன். வனவாசத்தில் தானும் உடனிருந்து அவர்களுக்கு அனைத்து விதமான தொண்டுகளும் செய்ய விழைவதாகக் கூறினான். அதை ஏற்று ராமனும் அவனுக்கு அருள்புரிந்தான். பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீரங்கநாச்சியாரோடு ஸ்ரீரங்கநாதன் சேர்த்தியில் எழுந்தருளியிருந்தபோது, நாச்சியாரைப் புருஷாகாரமாக முன்னிட்டுக் கொண்டு அரங்கன் திருவடிகளில் சரணாகதி செய்தார் ராமாநுஜர்.
தமக்கு மட்டுமின்றி, தமது திருவடி சம்பந்தம் பெற்ற அனைத்து உயிர்களுக்கும் வைகுந்தத்தில் இறைவனுக்குத் தொண்டு செய்யும் பேற்றை அருள வேண்டும் எனப் பிரார்த்தித்தார். அதை ஏற்று அரங்கனும் அருள்புரிந்தான். ஆகவே ராமாநுஜன், ராமாநுஜர் - இருவருமே பெருமாளும் தாயாரும் சேர்த்தியில் இருக்கையில் சரணாகதி செய்து, தொண்டு செய்யும் பேற்றைப் பிரார்த்தித்துப் பெற்றார்கள்.
4. தீர்த்த கைங்கரியம்
வனவாச காலத்தில் சித்திரகூடத்தில் ராமன் எழுந்தருளியிருந்தபோது, லட்சுமணன் அருகிலுள்ள பொய்கையில் இருந்து தினமும் ராமனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துக் கைங்கரியம் செய்து வந்தான். அதுபோலவே ராமாநுஜரும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் பூஜைக்காகச் சாலைக் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து சமர்ப்பித்துக் கைங்கரியம் செய்தார்.
5. பிரணவ வடிவில் நடை
தண்டகாரண்ய வனத்துக்குள் ராமன் நுழையும் போது,
“அக்ரத: ப்ரயயௌ ராம: மத்யா ஸீதா ஸுமத்யமா
ப்ருஷ்டதஸ்து தநுஷ்பாணி: லக்ஷ்மணோ ஆஜுஹாவ ஹ”
- என்ற வால்மீகியின் ஸ்லோகத்துக்கு ஏற்ப, ராமன் முன்னே செல்ல, லட்சுமணன் பின்னே செல்ல, சீதை இருவருக்கும் நடுவே நடந்து சென்றாள். ஓம்காரமாகிய பிரணவத்தை அ-உ-ம என்று பிரிப்பார்கள். அதில் ‘அ’ என்பது திருமாலையும், ‘உ’ என்பது மகாலட்சுமியையும், ‘ம’ என்பது ஜீவாத்மாவையும் குறிக்கும். அ (திருமாலாகிய ராமன்) முன்னேயும், உ (மகாலட்சுமியாகிய சீதை) நடுவிலும், ம (ஜீவாத்மாவாகிய லட்சுமணன்) பின்னேயும் செல்வதைக் காணும் போது, ஓம்காரமே நடந்து செல்வது போல இருந்ததாம்.
ராமாநுஜரின் ஆரம்ப கால குருவான யாதவப் பிரகாசர் ராமாநுஜர் மேல் பொறாமை கொண்டு அவரைக் கங்கையில் தள்ளி மாய்க்க எண்ணினார். ஆனால் அவரது திட்டத்தை அறிந்து கொண்ட ராமாநுஜர் அவரிடமிருந்து தப்பித்துக் காஞ்சியை நோக்கி நடந்து வரத் தொடங்கினார். விந்திய மலை அடிவாரத்துக்கு அருகிலுள்ள காட்டில் வழி தெரியாமல் ராமாநுஜர் தவித்தபோது, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும் வேடுவன்-வேடுவச்சி வடிவில் வந்து ராமாநுஜருக்கு வழிகாட்டி அவரைக் காஞ்சிக்கு அழைத்து வந்தார்கள்.
அப்போது அ (வேடுவன் வடிவில் வரதராஜப்பெருமாள்) முன்னேயும், உ (வேடுவச்சி வடிவில் பெருந்தேவித் தாயார்) நடுவிலும், ம (ஜீவாத்மாவாகிய ராமாநுஜர்) பின்னேயும் நடந்தார்கள். அதுவும் ஓம்காரமே நடந்து செல்வது போல் இருந்தது.
6. திருமாலின் தாசர்கள்
ரிஷ்யமுக மலையில் முதன்முதலில் அனுமனைச் சந்திக்கையில், லட்சுமணன், “அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர்தாஸ்யம் உபாகத:” - “நான் அவருக்குத் தம்பி என்று ராமன் கருதுகிறார். ஆனால் என்னைப் பொறுத்த வரை, நான் அவருக்குத் தொண்டு செய்யும் தாசன்!” என்று தன்னைச் சொல்லிக் கொண்டான். ராமாநுஜரும், சரணாகதி கத்யம் எனும் துதியில், “சரணாகதோஸ்மி தவாஸ்மி தாஸ:” - “நான் எப்போதும் உனக்குத் தொண்டன்!” என்று அரங்கனைப் பார்த்துச் சொல்கிறார்.
எனவே ராமாநுஜன், ராமாநுஜர் இருவரும் தங்களை இறைவனின் தாசர்கள் தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொண்டார்கள்.
7. இறைவனின் கண்ணழகில் ஈடுபாடு
லட்சுமணனுக்கு ராமனின் கண்ணழகில் விசேஷ ஈடுபாடு உண்டாம். “லேகன நின்னு…” என்ற கீர்த்தனையில் தியாகராஜர், “ஸௌமித்ரிகு கணுல ஜாடல ஸுகமு” - ராமனின் கண்ஜாடையைப் பார்த்துப் பார்த்து லட்சுமணன் கைங்கரியங்களைச் செய்வதாகக் குறிப்பிடுகிறார். அதுபோலவே திருமாலின் கண்ணழகில் விசேஷ ஈடுபாடு கொண்டவர் ராமாநுஜர். “தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ” என்ற வேத வாக்கியத்துக்கு, “இறைவனின் கண்கள் குரங்கின் பின் பகுதியைப் போல் சிவந்திருக்கும்!” என்று யாதவப் பிரகாசர் பொருள் உரைத்தபோது, அதை மறுத்து, “இறைவனின் கண்கள் சூரியனால் மலர்த்தப்படும் தாமரையைப் போல் இருக்கும்!” என்று பொருள் உரைத்தார் ராமாநுஜர். இதிலிருந்து ராமாநுஜன், ராமாநுஜர் இருவரும் இறைவனின் கண்ணழகில் மிகவும் ஈடுபட்டார்கள் என்பதை உணர முடிகிறது.
8. பரந்த உள்ளம்
ராமனைச் சந்திக்க முனிவர் வேடத்தில் யமன் வந்தார். ராமனின் அறைக்குள்ளே செல்லும் முன் லட்சுமணனிடம், “நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது யாரும் உள்ளே வரக் கூடாது. யாரேனும் உள்ளே வந்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்!” என்று சொல்லி விட்டுச் சென்றார் யமன். அச்சமயம் அங்கு வந்த துர்வாச முனிவர், வெளியே காவல் இருந்த லட்சுமணனிடம், “நான் உடனடியாக ராமனைச் சந்திக்க வேண்டும்!” என்றார். “ராமபிரான் முக்கியமான சந்திப்பில் உள்ளார். சற்றுநேரம் காத்திருங்கள்!” என்றான் லட்சுமணன்.
ஆனால் கோபமே வடிவெடுத்த துர்வாசரோ, “இப்போது என்னை உள்ளே அனுமதிக்காவிட்டால், இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் சபித்து விடுவேன்!” என்று எச்சரித்தார். அப்போது சிந்தித்த லட்சுமணன், “துர்வாசரை உள்ளே அனுமதித்தால் அவருக்கு மரண தண்டனையை யமன் வழங்குவார். அனுமதிக்காவிட்டால், நாட்டு மக்களைத் துர்வாசர் சபித்து விடுவார். நமக்கு மரணம் உண்டானாலும் பரவாயில்லை. துர்வாச முனிவருக்கோ நாட்டு மக்களுக்கோ எந்த ஆபத்தும் நேரக்கூடாது!” என்று கருதினான். “நீங்கள் அமர்ந்திருங்கள். நான் தங்கள் வருகையை ராமபிரானிடம் கூறிவிட்டு வருகிறேன்!” என்று சொல்லி லட்சுமணன் அறைக்குள்ளே நுழைந்தான். துர்வாசரின் வருகையை ராமனுக்கு அறிவித்தான். அறைக்குள் நுழைந்ததற்காக மரண தண்டனையை ஏற்று, சரயூ நதியில் இறங்கி வைகுண்டத்தை அடைந்தான் என்பது வரலாறு.
“ஏகஸ்ய மரணம் மேஸ்து மாபூத் ஸர்வ விநாசநம் |
இதி புத்த்யா விநிச்சித்ய ராகவாய ந்யவேதயத் ||”
“நாட்டு மக்கள் அனைவரும் துர்வாசரின் சாபத்துக்கு ஆளாவதை விட நான் ஒருவன் மரணம் அடைவதே மேல்!” என்று லட்சுமணன் சொன்னதாக வால்மீகி கூறும் ஸ்லோகம் இது. அதுபோலவே ராமாநுஜரும், திருக்கோஷ்டியூர் நம்பியிடம் இருந்து கீதையில் கண்ணன் கூறிய “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய…” எனத் தொடங்கும் சரம ஸ்லோகத்தின் பொருளை அறிவதற்காகப் பதினெட்டு முறை திருவரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தார்.
பதினெட்டாம் முறை அந்த ஸ்லோகத்துக்கான பொருளைத் திருக்கோஷ்டியூர் நம்பி ராமாநுஜருக்கு உபதேசித்தார். அடுத்த நொடியே திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள தெற்காழ்வான் எனப்படும் நரசிம்மர் சந்நதிக்கு அருகே, அவ்வூரில் உபதேசம் பெற ஆசை உள்ளவர்களை அழைத்து, சரம ஸ்லோகத்தின் பொருளை அவர்களுக்கு உபதேசம் செய்து விட்டார் ராமாநுஜர்.
இச்செய்தியை அறிந்து கோபத்துடன் வந்த திருக்கோஷ்டியூர் நம்பி, “ராமாநுஜா! குருவின் கட்டளையை மீறித்தகுதி இல்லாதவர்களுக்கு நீ உபதேசித்து விட்டாய்! இது பெரும் தவறு!” என்றார். ராமாநுஜரோ, “சுவாமி! தகுதி இல்லாதவருக்கு அடியேன் உபதேசம் செய்யவில்லை. குலம், கல்வி, செல்வாக்கு உள்ளிட்டவற்றை எல்லாம் தகுதியாக வைப்பதற்குப் பதிலாக ஆசையையே தகுதியாக வைத்துவிடலாமே! ஒருவனுக்கு அறியவேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அதையே தகுதியாகக் கொள்ளலாம் என்று எண்ணியே உபதேசம் செய்தேன்!” என்றார். “நீ என்ன சமாதானம் சொன்னாலும் நீ செய்தது தவறு! உனக்கு நரகமே கிட்டும்!” என்றார் திருக்கோஷ்டியூர் நம்பி. அப்போது ராமாநுஜர்,
“பதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே குருபாதகாத்
ஸர்வே கச்சந்து பவதாம் க்ருபயா பரமம் பதம்”
“சுவாமி! நான் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை. தாங்கள் உபதேசித்த இந்த விஷயத்தைக் கேட்டு இத்தனை பேர் முக்தியடையப் போகிறார்களே! அதுவே அடியேனுக்குப் போதும்!” என்றார் ராமாநுஜர். ராமாநுஜரின் கருணையை எண்ணி வியந்து ‘எம்பெருமானார்’ என்னும் பட்டத்தை அவருக்கு அளித்தார் திருக்கோஷ்டியூர் நம்பி.
“நான் ஒருவன் மரண தண்டனை பெற்றாலும் பரவாயில்லை, அயோத்தி மக்கள் துர்வாச சாபத்துக்கு ஆளாகக் கூடாது!” என்று லக்ஷ்மணனும், “நான் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மக்கள் முக்தியடைய வேண்டும்!” என்று ராமாநுஜரும் கருதியதில் இருந்து அவர்களின் பெருந்தன்மையையும் பரந்த உள்ளத்தையும் அறியமுடிகிறது. இதுபோன்ற பல ஒற்றுமைகளைக் கொண்டு, திரேதா யுகத்தில் ராமாநுஜனாக அவதரித்த ஆதிசேஷன் தான் கலியுகத்தில் ராமாநுஜராக அவதரித்தார் என்பதை அறியமுடிகிறதல்லவா? லட்சுமணனுக்கு ராமாநுஜன் என்று பெயர் இருப்பது போல், ராமாநுஜருக்கு லட்சுமண முனி என்ற பெயரும் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இத்தனை பெருமைகள் பெற்ற ராமாநுஜர் அவதரித்த சித்திரைத் திருவாதிரை, இந்த வருடம் மே மாதம் 9-ம் தேதி வருவதை ஒட்டி ராமாநுஜரின் அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் உட்பட, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரை பத்து நாட்கள் ‘ராமாநுஜ ஜயந்தி உற்சவம்’ கொண்டாடப் படுகிறது. ராமாநுஜரைத் தரிசித்து, “ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ:” என்று சொல்லி அவரது திருவடிகளைப் பணிந்து உய்வோமாக!
இன்றுலகீர் சித்திரையில் ஏய்ந்த திருவாதிரை நாள்
என்றையினும் இன்றிதனுக்கு ஏற்றம் என்தான் - என்றவர்க்குச்சாற்றுகின்றேன் கேண்மின் எதிராசர் தம்பிறப்பால்நாற்றிசையும் கொண்டாடும் நாள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment