Tuesday, 4 December 2018

விநாயக சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி? களிமண் பிள்ளையார்தான் சரியா?

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் தான் விநாயகர் யானைமுகனாக அவதாரம் பெற்ற நன்னாள் என்கிறது நமது புராணங்கள். விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, மனதையும் உடலையும் சுத்தி செய்துக்கொண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். கணேசனை வரவேற்க வீட்டு வாசலில் மாவிலைத் தோரணத்தோடு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்க வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட பூஜையறையில் ஒரு மணையின் மேல் கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை நுனி வடக்கு பார்த்ததுபோல வைக்க வேண்டும். இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். களிமண் பிள்ளையார் தான் என்றில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைத்து வழிபடலாம். ஆனால் களிமண் பிள்ளையாரை வைத்து வழிபடுவதன் தத்துவம், பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்பது தான். கணபதி எளிமையின் அவதாரம் என்பதால் அவருக்கு ஆடம்பரமான அலங்காரங்கள் கூட தேவைப்படுவதில்லை. நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்காத எருக்கம்பூ மாலையே கூட அவருக்கு விருப்பமான ஒன்றாகும். சாதாரண புல் என்று நாம் நினைக்கும் அருகம்புல்லில் தொடுக்கப்பட்ட மாலையை சாற்றினாலே மகிழ்ந்து வரமருளும் கருணாமூர்த்தி. எனவே பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கலந்த கொத்து, சாமந்தி, மல்லி என நம்மால் இயன்றதை அவருக்கு சமர்ப்பிக்கலாம். பிள்ளையாரின் தொப்புளில் ஒரு ரூபாய் நாணயம் வைக்க வேண்டும். அதன்பின் பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து, அவரவர் வசதிக்கேற்ப முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கி படைக்கலாம். நைவேத்தியமாக விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை எள்ளுருண்டை, பாயசம், வடை செய்து தீபாராதனை காட்ட வேண்டும். அன்றைய தினம், அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டித்தால் மிகவும் விசேஷம்.வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் உண்ணா நோம்பு இருந்து,விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பது வழக்கம். இவ்விதமான விரதங்களால் உள்ளம் மேன்மைஅடைவதோடு, உடல் ஆரோக்கியம் பெருகும். வீட்டில் எல்லா வளங்களும் நிறையும். இதனால் விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகரின் நல்லாசி கிடைக்கும். நல்லன எல்லாம் அருள்வார் நம் கணபதி. பூஜை முடித்த மூன்றாம் நாளில் இல்லத்தில் கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சி பொங்க மனதார வேண்டி பிரார்த்தனை செய்து களிமண் விநாயகரை நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். விநாயகரை நீர் நிலையில் கரைக்க விடுவதற்கு முன் அவருக்கு மறுபடியும் ஆரத்தி காட்டி, என்றும் இன்புற்றிருக்க வேண்டி வழி அனுப்பி வைக்க வேண்டும். எளிமையான இந்த விரதத்தை நாம் கடைப்பிடித்து வேழமுகத்தானின் அருளைப் பெறுவோம்...


🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment