Saturday, 6 October 2018

பயம், பிணி, கவலையில் இருந்து காக்கும் தெய்வம் காத்யாயினி.!!

கும்பகோணத்திலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் பந்தநல்லூருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது மரத்துறை. கொள்ளிடத்திற்கும், மண்ணியாற்றிக்கும் இடையே அமைந்துள்ள தலம். நீர் வளமும், நில வளமும் நிறைந்து, பச்சைப் பசேலென்று இருக்கும் அழகு கிராமம். இவ்வூரின் வடக்குத் திசையில் அமைந்துள்ளது, அருள்மிகு காத்யாயினி அம்மன் திருக்கோயில். கிழக்கு நோக்கி அமைந்த கோயில். எதிரே அழகிய திருக்குளம். கோயிலின் நான்கு புறமும் உயரமான மதில். மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. உள்ளே நுழைந்தால், எட்டு தூண்களை கொண்ட வசந்த மண்டபம். தெற்கு பிராகாரத்தில் திருமதிலையொட்டி மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் என கிராம தேவதைகள் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். 

மேற்கு பிராகாரத்தில் கிழக்கு நோக்கி மூன்று பச்சையம்மன் சிலைகள் உள்ளன. வடக்கு பிராகாரத்தில் சங்கிலிக் கருப்பன், வீரன், மாடன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. மகா மண்டபத்தின் பிரதான வாயிலின் தென்திசையில் பச்சையம்மன் மற்றும் பூங்குறத்தி, வடதிசையில் வள்ளித்தாய் மற்றும் குழந்தையை மடியில் அமர வைத்துள்ள காத்தாயி அம்மனின் சுதை வடிவங்கள் உள்ளன. கருவறையில் உள்ள காத்யாயினி அம்மன் இடக்காலை மடித்து, வலக்காலை தொங்க விட்டு, வலக்கையில் கிளியுடனும், இடக்கையில் தாமரை மலருடன், தீ ஜ்வாலை போன்ற கேசமுடையவளாக, ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அமர்ந்துள்ளாள். அர்த்த மண்டபத்தின் தென்திசையில் நின்ற கோலத்தில் காத்யாயினி உற்சவமூர்த்தி மற்றும் வடதிசையில் பச்சையம்மன் சிலை உள்ளன. அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தரும் பச்சையம்மாள், பார்வதி தேவியின் அம்சம்.

அது தவிர சப்த முனிகளும் சுதைச் சிற்பமாக அழகுற காட்சியளிக்கின்றனர். சில கோயில்களில் சப்த முனிகள் வாகனங்களுடன் இருப்பார்கள். அதாவது, முத்துமுனிக்கு குதிரை, செம்முனிக்கு சிங்கம், இலாடமுனிக்கு புலி, வேதமுனிக்கு காளை, கொடுமுனிக்கு யானை, கருமுனிக்கு செம்மறியாடு, வாள்முனிக்கு சிறுத்தை என்று வாகனங்கள் அமைந்திருக்கும். இதனையடுத்து இவர்கள் அமர்ந்திருக்கும் நிலைகள் யோக ரகசியங்களை உள்ளடக்கியது என்பார்கள். இந்த நிலைகளே அவர்களுடைய ஞான நிலையை விளக்கும். வாள்முனி, மற்ற முனிகளைவிட உயரமானவராக, இடக்காலை மடக்கி, வலக்கையில் நெடிய வாளுடன் அமர்ந்துள்ளார். இவரை வாழ்முனி என்றும் கூறுவர். செம்முனி இடக்காலை மடக்கி, வலக்காலை தொங்கவிட்டு, இடக்கையை தொடை மேல் வைத்து, வலக்கையில் வாளுடன் அமர்ந்துள்ளார். 

முத்துமுனி செம்முனியைப் போலவே இடக்காலை மடக்கி, வலக்காலை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளார். ஜடாமுனி இரு கால்களையும் குத்துக் கால்களாகக் கொண்டு அமர்ந்துள்ளார். இவர் இடக்கையால் வாளை ஊன்றியபடி உள்ளார். வலக்கை யோக முத்திரை காட்டுகிறது. பிற காத்தாயி கோயில்களில் இவர் வேதமுனி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். பாலக்காட்டு முனி, செம்முனி மற்றும் முத்துமுனி போன்று உருவமைப்பை கொண்டவர். சன்னியாசி முனியும் அவ்வாறே. இலாட முனியை லாட சன்னியாசி என்பார்கள். ஏழு முனிகளின் சுதை வடிவங்களும் இருக்கும். கஞ்சமலை ஈஸ்வரர் இடக்காலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டுள்ளார். இடக்கை தொடை மீதும், வலக்கை மலர்களை தாங்கியபடியும் உள்ளன. இவர் தனிக்கோயிலில் உள்ளார். இவருக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன.

மரத்துறை காத்யாயினி அம்மன் கோயில், ஆரம்பத்தில் காட்டுக்குள்ளே ஓலைக் குடிசையாக இருந்தது. பின்னர் ஓடுகள் வேயப்பட்ட சிறிய குடியாக மாற்றம் பெற்றது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அன்னை மீது பக்தி கொண்ட ஒரு அன்பர் அதைக் கற்கோயிலாகக் கட்டினார். 1964ம் ஆண்டில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவும் நடத்தினார்கள். காத்யாயினி என அழைக்கப் படும் காத்தாயி அம்மன் கோயில்கள் தமிழ்நாட்டில், குறிப்பாக அன்றைய சோழ நாட்டில் நிறைய இருந்தன அனைத்து காத்தாயி அம்மன்களும் பெரும்பாலும் ஒரே தோற்றத்தில்தான் இருந்தனர். பொதுவாக காத்தாயி அம்மன் கோயில்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியே இருக்கும். காத்தாயி அம்மனுடன் பச்சைவாழி அம்மனும் இருக்கும். சப்த முனிகளைத் தவிர கஞ்சமலை ஈஸ்வரர், மதுரைவீரன், காட்டேரி கருப்பன் போன்ற தெய்வங்களும் பிற்காலத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது.

காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வோர் அடைமொழி இருக்கும். உதாரணமாக, சில இடங்களில் நல்ல காத்தாயி என்றும், சில இடங்களில் சித்தாடி காத்தாயி என்றும் அழைக்கின்றனர். காத்யாயன மகரிஷிக்கு பிறந்தவளே காத்யாயினி. ஏழு முனிகளும், முருகன் துணைவி யான வள்ளியை வளர்த்த நம்பிராஜனின் பிள்ளைகள். அம்பிகையின் பணியே உயிர்களைத் தம் குழந்தைபோல் காப்பது. காத்த+ஆயி அவளே காத்தாயி என தமிழறிஞர்கள் சொல்கின்றனர். ‘காத்தாய்+நீ’ என்பதும் காத்யாயினி என மருவியிருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு. அனைத்து உயிர்களையும் தன் குழந்தையைப்போல் காத்து வரும் காத்யாயினி அம்மனை வழிபடுவோர் பயம், பிணி, கவலை ஆகியவற்றிலிருந்து காக்கப்படுவார்கள் என்பது உண்மை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment