Sunday, 8 July 2018

காஞ்சி மாமுனிவர் அருளிய சங்கர விஜயம்

கலிதான் அதர்ம யுகமென்றால் நாம் அதர்மமாகத் தான் இருந்துவிட்டுப் போவோமே!’ என்று சொல்வது தப்பு. “திருடர்கள் ஆபத்து ஜாஸ்தி இருக்கிறது” என்று போலீஸ் தண்டோராப் போட்டால் என்ன செய்வோம்? திருடர்கள் வந்து எடுத்துக்கொண்டு போகட்டும் என்று நாமே உடைமைகளைத் தெருவில் போட்டுவிட்டா உட்கார்ந்து கொண்டிருப்போம்? ‘காப்பாற்ற முடிகிறவரையில் காப்பாற்றிக் கொள்வோம்’ என்று தானே ஜாக்ரதை செய்து கொள்வோம்? போலீஸ் தண்டோராப் போட்டதன் நோக்கமும் இப்படி ஜாக்ரதை செய்து, முடிந்தமட்டும் ரக்ஷித்துக் கொடுப்பதற்குத்தானே? “கலி அதர்ம ஆட்சியை ஆரம்பித்துவிட்டான்” என்று சாஸ்த்ரங்கள் தண்டோராப் போடுவதற்கும் தாத்பர்யம், கூடிய மட்டும் தர்மத்தை ஜாக்ரதையாக ரக்ஷித்துக் கொள்வதற்குத்தானே ஒழிய, ‘ஒன்றும் பண்ணிக்கொள்வதற்கில்லை’ என்று, இருப்பதையும் விட்டுவிட்டு வீணாகப் போவதற்கல்ல. இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மாநுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம்.

எதிர்ப்பு உண்டான ஸமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம். மற்ற யுகங்களில் ரொம்பப் பேர் ஈஸ்வரனிடம் போய்ச் சூழ்ந்து கொண்டிருப்பார்கள். அவருக்கு ஸாவகாசமாக ஒவ்வொருவரையும் விசாரித்து அநுக்ரஹம் செய்ய முடியாமலிருக்கும். கலியில், ‘யார் வருவா? யார் வருவா?’ என்று பார்த்துக் கொண்டிருப்பார். அதனால் நாம் கொஞ்சம் யத்னம் பண்ணினால்கூடக் கோடியாக நினைத்துக் கூப்பிட்டு வைத்துக்கொண்டு நன்றாக அநுக்ரஹம் பண்ணிவிடுவார். ஒரேயடியாக பயமுறுத்திப் “போச்சு, போச்சு” என்று சொல்வதாலேயே சிலர், ‘நம்முடைய தடுப்பு முயற்சி நிஷ்பிரயோஜனமாகத்தான் போகும்’ என்று சோர்ந்து விழுந்துவிடப் போகிறார்களே என்று, இந்த யுகத்திற்கே உள்ள சில ப்ரத்யேக அநுகூலங்களையும் சாஸ்த்ரங்களில் சொல்லித் தெம்பூட்டியிருக்கிறார்கள்.

க்ருத யுகத்தில் மனோ நிக்ரஹம் என்ற சிரம ஸாத்யமான கார்யத்துடன் கூடியதான த்யானம் செய்தும், த்ரேதாயுகத்தில் சரீரத்தைக் கஷ்டப்படுத்திக்கொண்டு யாகங்கள் செய்தும், த்வாபர யுகத்தில் விஸ்தாரமாக அர்ச்சனை பூஜை என்று செய்துமே பெறக்கூடிய அநுக்ரஹ பலனை இந்தக் கலியில்தான் ஸுலபமாக பகவந்நாமத்தைச் சொல்லியே பெற்றுவிடலாமென்றும் சொல்லியிருக்கிறார்கள்பயமுறுத்திய அதே சாஸ்திரங்களிலேயே ரொம்பவும் ஆறுதலாகச் சொல்லியிருக்கிறார்கள். “கலியா அஸத்தான யுகம்? அதுதான் ஸத்தான யுகம். கலி: ஸாது:, கலி: ஸாது:” என்று வ்யாஸாசார்யாள் இரண்டு தரம் உறுதிப்படுத்திச் சொல்லியிருக்கிறார்! அதை ரொம்பவும் அஸாதுவாக இழுத்துவிட்டுக் கொண்டிருந்த காலத்தைப் பற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். 72 துர்மதங்கள் அப்போது ஜனங்களைக் கலக்கிக் கொண்டிருந்ததாகப் புஸ்தகங்களில் சொல்லியிருப்பதைச் சொன்னேன்.

எந்தப் புஸ்தகங்கள் என்றால் ஆசார்யாளின் சரித்ரத்தைச் சொல்வதான புஸ்தகங்கள். அவற்றுக்கு ‘சங்கர விஜயம்’ என்று பேர். ‘விஜயம் செய்தார்’ என்று ஒரு பெரிய மநுஷ்யர் ஒரு இடத்துக்கு ‘விஸிட்’ செய்தால் சொல்கிறோம். ‘விஜயம்’ என்றால் ‘விசேஷம் வாய்ந்த ஜயம்’. அதாவது, சிறப்பான வெற்றி. ராஜாக்கள் திசைதோறும் சென்று மற்ற ராஜாக்களை ஜயிப்பது ‘திக்விஜயம்’. இப்படியே ஜனங்களுடைய ஹ்ருதயங்களை ஒருவர் ஒரு இடத்துக்குப் போய் அன்பினால் வெற்றி கொள்கிறார் என்ற அர்த்தத்திலேயே ‘விஸிட்’ செய்வதை விஜயம் என்பது. வாழ்நாள் முழுவதும் தங்களுக்குள் தப்பான எண்ணங்கள் என்ற எதிரிகள் தலையெடுக்க முடியாதபடி ‘ஆத்ம ஜயம்’ என்ற பெரிய வெற்றியை ஸாதித்துக் கொண்டு, அதோடு லோக ஜனங்கள்பண்டித, பாமரர்கள் அனைவர்மனசுகளையும் அன்பினாலும் அறிவினாலும் வென்ற நம் ஆசார்யாள் போன்ற மஹாத்மாக்களின் சரித்ரம் ‘விஜயம்’ என்று பேர் பெறுகிறது. இப்படிப் பலபேர் பல சங்கர விஜயங்கள் செய்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றில் இந்த 72 மதப் பிரஸ்தாவம் வந்திருக்கிறது.

ஆசார்யாளின் அஷ்டோத்தர (சத)த்திலும் (அர்ச்சனைக்கான 108 நாமங்களிலும்) த்விஸப்ததி மதோச்சேத்ரே நம: என்று வருகிறது. ‘எழுபத்திரண்டு மதங்களை நிர்மூலம் செய்தவர்’ என்று அர்த்தம். எத்தனை ஆராய்ச்சி செய்து பார்த்தும் அந்த எழுபத்திரண்டில் பலவற்றுக்குப் பெயர்கூடத் தெரியவில்லை! இப்படிச் சொன்னவுடனேயே, ‘பார்த்தேளா? இந்த மாதிரிதான் ஆதாரம் காட்டமுடியாமலே கதை கட்டுவது நம் வழக்கம். இப்படிப் பண்ணித்தான் ‘ஹிஸ்டரி’ என்பதேயில்லாமல் எல்லாம் ‘மித்’ (myth) ஆக எழுதிவைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று ஆக்ஷேபிக்க வேண்டாம்! எழுபத்திரண்டு மதத்திற்கும் பெயர் தெரியாவிட்டாலும், நாற்பது நாற்பத்தைந்தை நன்றாகக் கண்டுபிடிக்க முடிகிறது. இவற்றில் பலவற்றுக்கு ஆதாரப் புஸ்தகங்களும் ஏராளமாக உள்ளன.
ஆசார்யாளின் ஸமகாலத்தியவை என்றே சொல்லக்   கூடிய அவரது சரித்ர புஸ்தகங்களில் அநேக மதங்களின் பெயர்களைச் சொல்லி அவற்றையெல்லாம் அவர் நிராகரணம் செய்தார் (நிராகரித்தார்) என்று விவரித்திருக்கிறது.

சிவ மதங்கள், விஷ்ணு மதங்கள் மாதிரி ப்ரஹ்மாவையே குறித்ததாக ‘ஹைரண்யகர்ப்ப மதம்’ என்றுகூட இருந்திருக்கிறது! இந்த்ர மதம், குபேர மதம், இன்னும் மன்மத மதம், யம மதம் என்றெல்லாங்கூட இவர்கள் ஒவ்வொருவரையும் முழு முதல் தெய்வமாக வைத்து மதங்கள் இருந்திருக்கின்றன. இப்படியே பித்ருக்களைக் குறித்து மதம், பூத வேதாளங்களைக் குறித்துக்கூட மதம், குணங்களே கடவுள் என்று வழிபடுவது, காலமே கடவுள் என்று வழிபடுவதுஎன்றெல்லாம் விசித்ரமாக அந்தப் புஸ்தகங்களில் பார்க்கிறோம். அதிக விவரம் தெரியாத இவை தவிர, இன்னதுதான் ஸித்தாந்தம் என்று பூர்ணமாகத் தெரிந்த ஒரு இருபது, இருபத்தைந்து மதங்கள் இருந்திருக்கின்றன. என்னென்ன என்றால்: ஆசார்யாள் புது ஜீவனோடு ஸ்தாபித்த வேதாந்தம் தவிர ஷட்தர்சனம் என்ற ஆறில் மீதியுள்ள ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேஷிகம், மீமாம்ஸை என்ற ஐந்து; பாசுபதம், காலாமுகம், பாகவதபாஞ்சராத்ரம் (இந்த இரண்டையும் ஒன்றுபடுத்தியே ஆசார்ய பாஷ்யங்களில் சொல்லியிருக்கும்) ஆகிய நாலு;

தப்பான முறையில் அவைதிகமாகப் பின்பற்றப்பட்ட காணபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம், ஸெளரம் என்ற ஆறு (இந்த ஆறையே வைதிகமான ஷண்மதங்களாக ஆசார்யாள் ஸ்தாபித்தார்) ; வேத ஸம்பந்தமே கூடாது என்று அடியோடு ஆக்ஷேபித்து எழும்பிய பௌத்தம், ஜைனம்; அப்பட்டமான நாஸ்திகமாக, ஆத்ம விஷயமாகவே போகாமல் முழு ‘மெடீரியலிஸ’மாக இருந்த சார்வாகம் என்ற லோகாயத மதம் (பார்ஹஸ்பதம் என்று சொன்னேனே, அது) என்று, ஒரு இருபது, இருபத்தைந்து மதங்கள் இருந்திருக்கின்றன. எல்லாவற்றையும் கூட்டினால் நாற்பது, நாற்பத்தைந்து தேறலாம். (எழுபத்திரண்டில்) பாக்கியுள்ள சுமார் முப்பதுக்குப் பேர்கூடத் தெரியவில்லை! பேர் தெரிந்தவற்றில் சிலவற்றுக்கு மூலப் புஸ்தகங்கள் கிடைக்கவில்லை. அதெல்லாம் எப்படியானாலும், அந்த எழுபத்திரண்டில் எதுவுமே இன்று நம் தேசத்தில் அநுஷ்டானத்தில் இல்லை! இப்போது நம் தேசத்தில் சைவமாகவும் வைஷ்ணவமாகவும் பல மதங்கள் இருக்கின்றனவென்றாலும், ஆசார்யாள் அவர் காலத்தில் கண்டனம் செய்த சைவவைஷ்ணவ மதங்கள் வேறே, தற்போது இருப்பவை வேறே.

அவர் கண்டனம் செய்து, வழக்கற்றுப் போய்விட்ட மதங்களில் சில அம்சங்களை மாத்திரம் பிற்கால சைவவைஷ்ணவ மத ஸ்தாபகர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம். ராமாநுஜாசார்யாரின் வைஷ்ணவத்தில் ஆசார்யாள் கண்டித்த பாஞ்சராத்ரக் கொள்கைகள் கலந்திருக்கின்றன. ஸித்தாந்த சைவம் (ஆசார்யாள் கண்டித்த) பாசுபதத்தை அங்கங்கே தழுவிக்கொண்டு போகலாம். எப்படியானாலும், இந்த மதங்களெல்லாம் ஆசார்யாள் அவர் காலத்தில் கண்டனம் செய்த அந்த மத ரூபங்களிலிருந்து மாறுபட்டு, அவருக்குப் பிற்காலத்தில் வந்த மத ஸ்தாபகர்கள் கொடுத்த புது ரூபங்களில்தான் இருந்து வருகின்றன. ந்யாயம், மீமாம்ஸை போன்றவற்றுக்கு நிறையப் புஸ்தகம் இருந்து, இவற்றைப் படிப்பவர்களும் இன்றுவரை இருந்து வந்தாலும், ‘ந்யாய மதஸ்தர்’, ‘மீமாம்ஸை மதஸ்தர்’ என்றெல்லாம் அவற்றையே மதமாக எடுத்துக் கொண்டு அநுஸரிப்பதென்பது ஆசார்யாளுக்கு அப்புறம் இல்லை. இன்றைக்கு யோக மார்க்கங்கள் நிறையத் தோன்றிப் பல பேர் அவற்றின்படிப் பண்ணிப் பார்த்தாலும்கூடத் தங்களை ஹிந்துமதத்திலிருந்து பிரித்து ‘யோக மதஸ்தர்’ என்று சொல்லிக் கொள்ளவில்லை அல்லவா? எழுபத்திரண்டில் பல, பேர்கூடத் தெரியாமல் ஓடிவிட்டிருக்கின்றன என்றால் ஆசார்யாள்தான் ஓட்டியிருக்கிறார்!

சிலவற்றைப் புஸ்தகங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். சில, தேசாந்தரங்களில் வழக்கத்தில் இருப்பதால் தெரிகிறது. இடிந்த சிலைகள், மண்டபங்களிலிருந்தும், “ஓஹோ! முன்னே இன்ன மதம் இருந்திருக்கிறது” என்று கண்டுபிடிக்கிறோம். ஆசார்யாள் ஒருத்தர் மட்டும் வந்திருக்காவிட்டால் அவற்றைக் கண்டுபிடிக்க இத்தனை கஷ்டப்படவே வேண்டாம்! ஹிந்து மதத்தைத்தான் தேடிக் கண்டுபிடிக்க நேர்ந்திருக்கும்! அதாவது, அந்த எழுபத்திரண்டு மதங்களையும் இந்த தேசத்தில் வழக்கற்றுப் போகும்படியாக அந்த ஒரு மூர்த்தி செய்திருக்கிறார்! நினைத்து நினைத்து ஆச்சர்யப்படும்படியாக இப்படி ஒரு ஸாதனை செய்திருக்கிறார்! தம்முடைய ஆத்ம சக்தி, அறிவு சக்தி, வாத சக்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு ஆண்டி இப்படிச் செய்திருக்கிறாரென்றால் அவர் அவதாரபுருஷராக இல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்? அதுவும் அவர் பூலோகத்தில் வாஸம் பண்ணியது முப்பத்திரண்டே வருஷங்கள்தான்! இன்றைக்கு இந்த தேசத்திலுள்ள எல்லோருமே அவரைப் பின்பற்றும் அத்வைத ஸம்ப்ரதாயஸ்தர்கள் இல்லைதான்.

ராமாநுஜாசார்யார், மத்வாசார்யார், ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர், வல்லபாசார்யார், ஸ்ரீகண்டசார்யார், மெய்கண்டார் என்று பலர் ஏற்படுத்திய ஸம்ப்ரதாயங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இருந்தாலுங்கூட, இந்த ஆசார்யர்கள் எல்லோரும் நம்முடைய ஆசார்யாளுக்குப் பிற்பாடு நூற்றாண்டுகளுக்கு அப்புறம்தான் இந்த மதங்களை ஸ்தாபித்தார்கள். இன்று அத்வைதம் தவிர இங்குள்ள மதங்களெல்லாம் ஆசார்யாளுக்குப் பிற்காலத்தில் உண்டானவையே. அதுவரை ஆசார்யாளின் மதமே தனக்கு முந்தி இருந்த அத்தனை மதங்களையும் இல்லாமல் செய்துவிட்டு, தான் மாத்திரமே கொடிகட்டிப் பறந்திருக்கிறது! பின்னால் வந்த எந்த மதமும் அதற்குப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்த முடியவில்லை. எத்தனை புது மதம் வந்தாலும் ஆசார்யாளைப் பின்பற்றும் ஸம்ப்ரதாயஸ்தர்களும் நிறைய இருந்துகொண்டேதான் வந்திருக்கின்றனர்.

ஆசார்யாளின் ஸித்தாந்தம் முன்னாலிருந்த எல்லா மதங்களையும் இல்லாமல் செய்த மாதிரி பின்னால் வந்த எந்த ஸித்தாந்தமும் செய்யவில்லை. ராமாநுஜர் வந்ததனால் அத்வைதம் இல்லாமல் போய்விடவில்லை. அதற்கப்புறம் மத்வர் வந்ததனால் அத்வைதம், விசிஷ்சாத்வைதம் இரண்டும் இல்லை என்று ஆகவில்லை. இப்படியே ஒவ்வொரு புது மதமும் வந்த போதும் அதற்கும் மநுஷ்யர்கள் சேர்ந்தார்களென்றாலும், அதிலேயே எல்லாரும் சேர்ந்து மற்ற எந்த மதமுமே இல்லை என்று ஆகிவிடவில்லை. ஆசார்யாள் ஒருத்தர் காலத்தில்தான் அவருடைய மதத்தையே அத்தனை பேரும் ஏற்றுக்கொண்டிருந்தது. அவருக்குப் பிற்பாடும் சில நூற்றாண்டுகள்வரை அப்படித்தான் இருந்தது. அதனால்தான் அவருக்கு ‘ஜகத்குரு’ என்றும் ‘ஜகதாசார்யாள்’ என்றும் தனியானதொரு கௌரவம் ஏற்பட்டது.

‘ஜகத்குரு’ என்பது அவரொருவருக்குத்தான் உபசாரத்திற்காக உயர்த்தி வைத்துக் கொடுத்த விருதாக இல்லாமல் வாஸ்தவமான உண்மையைச் சொல்வதாக இருக்கிறது!‘ஜகத்’ என்று சொன்னதால் தேசாந்தரங்களைப் பற்றி நினைக்க வேண்டியதில்லை. வைதிக அநுஷ்டானத்துக்குரிய கர்ம பூமியாகவுள்ள நம்முடைய தேசம்தான் ஜகத்துக்கே உயிர் மாதிரி, ஹ்ருதயம் மாதிரி இருப்பதால் இது முழுதற்கும் ஆசார்யாள் என்றால் ஜகதாசார்யாள்தான். பாரத தேசம் என்று நாம் சொல்வதையே பூர்வ காலத்தில் இன்னும் விசாலமாக பரத கண்டம் என்று சொல்லி அதில் 56 தேசங்கள் — அங்கம், வங்கம், கலிங்கம் என்றெல்லாம் 56; தற்கால மாகாணங்கள் (மாநிலங்கள்) மாதிரியானவை இருப்பதாகச் சொல்லி வந்தார்கள். அந்த ஐம்பத்தாறிலும் ஆசார்யாள் திக் விஜயம் செய்து எல்லா பரமதங்களையும் நிராகரணம் செய்து அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்டினாரென்றால் அதுதான் ஜகத்குருத்வம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment