அண்ட சராசரங்களையும் காத்து ரட்சிக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை ஆதிபராசக்தியின் மற்றுமொரு அம்சமாம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் அவதார மகிமையை என்னவென்று சொல்வது! நாம் வாழுகின்ற கலியுகத்திற்கு ஏற்றவாறு அகிம்சா முறையில் எதிரியை வீழ்த்தி, பெண்களின் கௌரவத்தைக் காத்து, தர்மத்தை நிலைநாட்டிய வீராங்கனையாகவும், தான் உதித்த குலத்திற்கே குலதெய்வமாகவும் விளங்குகின்ற அன்னையைப் பற்றி அறிந்து கொள்வோமா! கி.பி. 11ம் நூற்றாண்டில் தற்போதைய ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பதினெட்டு பட்டிகளை உள்ளடக்கிய பெனுகொண்டா பகுதியை ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் குஸும ஸ்ரேஷ்டி குஸுமாம்பா தம்பதியருக்கு நீண்ட நாட்களாக புத்திர சந்தானம் இல்லை. மனம் வருந்திய குஸும ஸ்ரேஷ்டி தங்கள் குலகுரு பாஸ்கராச்சாரியாரின் ஆலோசனைப்படி தசரத சக்ரவர்த்தி செய்ததைப் போன்றதொரு புத்திர காமேஷ்டி யாகத்தினைச் செய்தான். யாகத்தின் பலனாக மறு வருடமே வைசாக சுத்த தசமி நாளன்று விரூபாட்சன் வாஸவாம்பா என இரட்டைக் குழந்தைகளை ராணி ஈன்றெடுத்தாள்.
விரூபாட்சன் அரசனுக்குரிய அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர மறுபுறம் வாஸவாம்பா இயல், இசை, நாடகத்தோடு, கல்வியிலும் சிறந்து விளங்கினாள். அதோடு நில்லாமல் இளம் வயதிலேயே வாழ்வியல் சிந்தனைகளையும் ஆய்ந்து சிறந்த தத்துவ ஞானியாகவும் விளங்கினாள். இந்நிலையில் பெனுகொண்டாவை உள்ளடக்கிய வேங்கி நாட்டை ஆண்டு வந்த விஷ்ணுவர்த்தனன் என்கிற விமலாதித்தன் தனது திக்விஜயத்தின்போது பெனுகொண்டாவில் வாசவியின் அழகைக் கண்டு மயங்கி அவளைத் தான் மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தான். குஸுமஸ்ரேஷ்டி தனது மகளின் விருப்பத்தைக் கேட்க, வாசவியோ தனக்கு மண வாழ்வினில் விருப்பம் இல்லை எனவும், ஆயுள் முழுக்க கன்னியாகவே இருந்து இறைப் பணியில் ஈடுபடவே விரும்புவதாகவும் தெரிவித்தாள். வாசவியின் எண்ணத்தினையும். வைஸ்ய தர்மங்களின்படி க்ஷத்ரியனான விஷ்ணுவர்த்தனனுக்கு பெண் கொடுக்க இயலாமையையும் பற்றி குஸுமஸ்ரேஷ்டியும், ஏனைய வைஸ்ய பிரமுகர்களும் அரசனுக்கு பணிவுடன் தெரிவித்தனர்.
ஆயினும், தான் என்ற அகங்காரத்தினாலும், படை பலத்தினாலும், அதிகார மமதையினாலும் தர்மநியாயங்களைப்பற்றி எண்ணாத விஷ்ணுவர்த்தனன் வன்முறையால் பலவந்தமாக வாசவியை அடைய எண்ணி தனது பெரும் படையுடன் கிளம்பினான். இக்கட்டான சூழ்நிலையில், சிற்றரசனான குஸும ஸ்ரேஷ்டி, குலகுரு பாஸ்கராச்சாரியாரின் தலைமையில் 18 பட்டிகளின் தலைவர்களும், வைஸ்ய குலத்தினைச் சார்ந்த 714 கோத்திரத்தைச் சார்ந்தவர்களின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளும் மஹா சபையைக் கூட்டினான். இக்கூட்டத்தில் 612 கோத்திரத்தார் விஷ்ணுவர்த்தனின் விருப்பத்திற்கு இணங்குவது என்றும் ஏனைய 102 கோத்திரத்தார் உயிரைவிட மானமே பெரிது என்றும், அரசனின் விருப்பத்திற்கு இணங்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர். 102 கோத்திரத்தாரின் கருத்தினை குலகுரு ஏற்றுக்கொள்ள, குலப்பெருமைக்கு மாறாக கருத்து தெரிவித்த 612 கோத்திரத்தாரும் நகரத்தைவிட்டு வெளியேறினர்.
இந்நிலையில் மஹாசபையினரின் மத்தியில் தோன்றிய வாசவிதேவி ஒரு பெண்ணிற்காக ரத்த ஆறு ஓடுவதை தான் விரும்பவில்லை என்றும்,
விஷ்ணுவர்த்தனனை அஹிம்சா முறையில் எதிர்க்க ஆத்ம பலிதான முறையைக் கையாளப் போவதாகவும் அறிவிக்க மஹாசபை ஸ்தம்பித்தது. தேச பக்தி, நீதி, நேர்மை, சமுதாயத் தொண்டு, சகிப்புத் தன்மை, தியாகம் ஆகியவற்றைப் பற்றி அன்னை விளக்கம் அளிக்க, அங்கிருந்த மக்கள், அன்னையே! நீ சாதாரண மானிடப் பெண்ணே அல்ல, நீ யார்? உனது உண்மை ஸ்வரூபத்தைக் காட்டி அருள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்தக் கலியுகத்தில் பெண்களின் கௌரவத்தையும், மானத்தையும் காத்து தர்மத்தை அகிம்சா முறையில் நிலைநாட்ட வந்த ஆதிபராசக்தியின் அம்சமே தான் என்பதை அன்னை அவர்களுக்கு உணர்த்தினாள். அதன்பின்னர் அன்னையின் ஆணைப்படி 103 அக்னி குண்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தவிர ஏனைய 102 கோத்திரக்காரர்களும் அன்னையும் அக்னிப்பிரவேசம் செய்தனர்.
பெனுகொண்டாவின் நுழைவு வாயிலை அடைந்த விஷ்ணுவர்த்தனனுக்கு இத்தகவல் சென்றடைய இந்த பேரதிர்ச்சியைத் தாங்க இயலாத அரசனின் தலை ஆயிரம் சுக்கலாக வெடித்துச் சிதறியது. இதனை அறிந்த விஷ்ணுவர்த்தனனின் மகன் ராஜராஜநரேந்திரனும், வாசவாம்பாவின் சகோதரன் விரூபாட்சனும் இணைந்து ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு பெனுகொண்டாவில் ஆலயத்தை எழுப்பினர். கோமுட்டி என்றழைக்கப்படும் ஆரிய வைசிய சமூகத்தினர் வைஸ்ய தர்மத்தைக் காத்த அம்பிகையை தங்கள் குல தெய்வமாக ஏற்று வழிபடத் துவங்கினர். ஒவ்வொரு வருடமும் நவராத்திரியில் அம்பிகையை ஆதிபராசக்தியாகக் கருதி முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்களில் மஹாலக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும், அலங்கரித்து வழிபட்டு வருகின்றனர். இன்று வரை வைஸ்யர்களின் காசியாக பெனுகொண்டா கருதப்பட்டு வருகிறது. அம்பிகை அவதரித்த வைசாக சுத்த தசமி திதி வருகின்ற நாளை ஸ்ரீவாசவி ஜெயந்தி திருநாளாக வைஸ்யர்கள் கொண்டாடி வருகின்றனர். தங்களது குலப்பெருமையைக் காத்த அம்பிகையின் ஜனன தினத்தை அபிஷேக அலங்காரத்துடன் மட்டுமல்லாது தங்கள் சமூகத்தின் அதிமுக்கியப் பண்டிகையாகவும் கொண்டாடி வருகிறார்கள்.
அதே போல அம்மன் அக்னி பிரவேசம் செய்த மாக சுத்த த்விதியை திதி (ஒரு சிலர் திருதியை என்கிறார்கள்) வருகின்ற நாளிலும் சிறப்பு வழிபாட்டினைச் செய்கிறார்கள். அக்னிப்ரவேச நாளன்று அன்னையை முழு நெத்துத் தேங்காயில் ஆவாஹனம் செய்வார்கள். ஹோம குண்டத்தில் நெத்துத்தேங்காய் ஸ்வரூபத்தில் இருக்கும் அன்னையை இறக்கிய பின்னர் மூலஸ்தான கருவறையை மூட்டை, மூட்டையாக வரும் பல்வகைப் புஷ்பங்களால் நிறைத்து கருவறையை மூடிவிடுவார்கள். மீண்டும் மாலையில் கருவறையைத் திறந்து புஷ்பங்களை களைந்து உஷ்ணத்தில் இருக்கும் அன்னையை ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் செய்து சாந்தி செய்வது வழக்கம். இந்த விசேஷ பூஜைகள் அனைத்து கன்னிகா பரமேஸ்வரி ஆலயங்களிலும் வெகுசிறப்பான முறையில் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரிய வைஸ்யர்களுக்கு குல தேவதையாக இருந்து காத்து ரட்சிப்பதோடு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் சர்வாபீஷ்டங்களையும், தர்ம சிந்தனையையும் அருள்புரிந்து காத்து வரும் தயாபரியின் பாதார விந்தங்களை இந்த வாசவி ஜெயந்தி நன்னாளில் போற்றி இன்புறுவோமாக...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment