திருச்சி-ஸ்ரீரங்கம்
திருவரங்கம் மேலவாசல் அருகே சந்தன மேடை என்று ஓர் இடம் உள்ளது. அங்கே நெடிதுயர்ந்து, பரந்து விரிந்திருந்தது அரசு மற்றும் வேம்பு மரங்கள். தல விருட்சங்களாய் இணைந்து தழைத்தோங்கியிருந்த அந்த ஜோடி மரத்தின் அடியில் விளக்கேற்றி வணங்கி வந்தனர் பக்தர்கள். இந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்டினால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது. இத்தலத்தின் அறங்காவலர் காஞ்சி சென்று மகா பெரியவரை தரிசித்து அவருடைய அருளாசியைக் கோரினார். ஆசி கிடைத்ததோடு, பிரதிஷ்டை செய்யப்படப் போகும் ஈசனுக்கு சந்திரமௌலீஸ்வரர் என்ற நாமத்தை அதாவது, தான் தினமும் ஆராதனை செய்யும் ஈஸ்வரன் நாமத்தை சூட்டுமாறும் மகாப்பெரியவர் அறிவுறுத்தினார். அந்த ஆலயமே ஸ்ரீரங்கம் மேலவாசல் அருகே சந்தன மேடை பகுதியில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் ஆலயம். இறைவியின் பெயர் மங்கள கௌரி அம்பிகை. ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் சிறிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் பிராகாரம். எதிரே விநாயகரும், நந்தியும் கொலுவிருக்க, அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது.
இறைவன் சந்திர மௌலீஸ்வரர் கிழக்குநோக்கி அருள்பாலிக்க, அவரது வலதுபுறத்தில் இறைவி மங்களகௌரி அருள் பாலிக்கிறாள். இறைவிக்கு நான்கு கரங்கள். மேலிரண்டு கரங்களில் பத்மத்தை சுமந்து, கீழ் இருகரங்களில் அபயவரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். பொதுவாக சிவாலயங்களில் இறைவிக்குத் தனியே சந்நநிதி அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் இறைவன் இறைவி இருவரும் ஒரே கருவறையில் அருள்பாலிக்கிறார்கள். தவிர, பொதுவாக இறைவனுக்கு இடதுபுறம் இருக்கும் அன்னை இங்கு வலதுபுறமாய் நின்று அருள்ட்பாலிப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத பௌர்ணமியில் இறைவனுக்கு பல நூறு பக்தர்கள் சூழ அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மாதப் பிரதோஷம் இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்று பிரதோஷ நாயகனின் உற்சவ விக்ரகம் கோயிலின் உட்பிரகாரத்தில் உலா வருகிறது. மகாசிவராத்திரியின் போது ஒருவார காலம் இறைவன் இறைவிக்கு கோடி அர்ச்சனை நடைபெறுகிறது.
அஷ்டவில்வங்களான வில்வம், துளசி, விபூதி பச்சை, நாயுருவி, விளா இலை, வன்னி, நெல்லி, அறுகம்புல் ஆகியவற்றால் இந்த அர்ச்சனை நடைபெறுகிறது. அன்று இரவு நான்கு கால பூஜையும் மிச்சிறப்பாக நடைபெறும். விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு தயிர்சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என பிரசாதம் வழங்குகின்றனர். தங்கள் வழக்குகளில் வெற்றி பெறவும், விரைந்து தீர்வு காணவும் இறைவன் சந்திரமௌலீஸ்வரர் அருட்பாலிப்பதாக பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர். அர்த்த மண்டப நுழைவாயிலின் வலதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதியும், இடதுபுறம் பாலசுப்ரமணிய சுவாமி சந்நதியும் உள்ளன. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கும், தைப்பூசம், கந்தசஷ்டி, கார்த்திகை நாட்களில் முருகபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தேவகோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் விஷ்ணு துர்க்கையும் அருட்பாலிக்கின்றனர். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் விஷ்ணு துர்க்கைக்கு நடைபெறும் அபிஷேகத்தைக் காண ஏராளமான பெண்கள் வருவதுண்டு. கன்னிப் பெண்களின் திருமணத்தை, தடைகள் விலக்கி அம்பிகை நடத்தி வைப்பதாக உளங்கசிந்து பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். திருச்சுற்றில், தென்திசையில் வரசித்தி ஆஞ்சநேயருக்குத் தனி ஆலயம் உள்ளது. ஆலயத்தில் சுற்றித் திரிந்த குரங்கு ஒன்று இங்கேயே முக்தி அடைந்ததால் அதன் நினைவாக இந்த அனுமன் ஆலயம் கட்டப்பட்டதாம். அனுமத் ஜெயந்தி இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேற்கில் தலவிருட்சமாக நூறாண்டுகளைக் கடந்த அரச மரமும், வேப்ப மரமும் உள்ளன. அதன் அடியில் நாகம்மா, கஜலட்சுமி திருமேனிகளும் மற்றும் ஏராளமான நாகர் சிலைகளும் அந்த தல விருட்சங்களை சுற்றி அமைந்துள்ளன. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நாகம்மாளுக்கும் நாகர்களுக்கும் மஞ்சள் பூசி அபிஷேகம் செய்கின்றனர். இதனால் அவர்களது தோஷம் விலகுவதாக நம்பிக்கை. நாகபஞ்சமி அன்று இங்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிராகாரத்தின் வடதிசையில் சொர்ண ஆகாஷ்ண பைரவர் சந்நதியும் சண்டிகேஸ்வரர் சந்நதியும் உள்ளன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
பில்லி, சூன்யம், ஏவல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் பைரவருக்கு ஆராதனை செய்து வணங்கி, பாதிப்புகள் நீங்கப் பெறுகின்றனர். காணாமல்போன பொருள் திரும்பப் பெறவும் பக்தர்கள் பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள், உடைமைகள் மிட்கப்படுகின்றன! பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருட்பாலிக்கின்றனர். கிரகப் பெயர்ச்சி நாட்களில் இவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினசரி இரண்டு கால ஆராதனை நடைபெறும் இந்த ஆலயம், நான்கு புறமும் திருமதிற்சுவர்களால் சூழப்பட்டுள்ளது. காலை 7 முதல் 11 மணி வரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். திருவரங்கப் பெருமானை நாம் தரிசிக்க செல்லும்போது அருகே நினைத்ததை நினைத்தபடி முடித்து தரும் இறைவன் சந்திரமௌலீஸ்வரரையும், இறைவி மங்கள கொளரியையும் ஒரு முறை தரிசித்து வரலாமே! திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் மேலூர் செல்லும் சாலையில் மேலவாசல் சமீபம் சந்தன மேடை பகுதியில் உள்ளது இந்த ஆலயம். பேருந்து, ஆட்டோ வசதிகள் உண்டு...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment