பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம். இதுவே திருவரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. சைவர்களுக்கு பெரிய கோயில் என்றால் சிதம்பரம். வைஷ்ணவர்களுக்கு பெரிய கோயில் என்றால் அது திருவரங்கம்தான். ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் கொண்ட கோவில் இது. 21 கோபுரங்களையும், 7 பிராகாரங்களையும், 42 உப சன்னதிகளையும் 8 உப கோபுரங்களையும் உடைய கோவில் இது. வைணவத் திருப்பதிகளில் முதல் இடம் வகிப்பது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது. விபீஷணனுக்காக தென் திசை நோக்கி படுத்த கோலத்தில் அரங்கநாதர் இங்கு அருட் பாலிக்கிறார். இரண்டு ஆறுகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு அரங்கம் என அழைக்கப்படும். இங்கு கொள்ளிடம் ஆற்றுக்கும் காவிரி ஆற்றுக்கும் இடையே உள்ள தீவில் அமைந்த ஊர் என்பதால் இந்த ஊர் திருவரங்கம் என்றும் ஸ்ரீரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆட்சி செய்யும் பெருமான் அரங்கநாதர் என அழைக்கப்படுகிறார்.
தென்திசையான திருவரங்கத்தில் அரங்கநாதர் அருட்பாலிப்பது போல் வடதிசையிலும் அரங்கநாதர் அருட்பாலிக்கிறார்.
இது திருவரங்கம். அது வடரங்கம். ஆம். மேற்கில் இருந்து கிழக்காக ஓடும் கொள்ளிடம் ஆறு இங்கு வடக்கு தெற்காக ஓடுகிறது. இங்கு இந்த நதிக்கு
உத்திரவாஹினி என்று பெயர். ஊரின் தெற்கில் கொள்ளிடம் நதி பெருக்கெடுத்து ஓட வடக்கில் ராஜா வாய்க்கால் எனும் நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட தீவான வடரங்கத்தில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அரங்கநாதர். இங்கேயும் அரங்கநாதர் திருவரங்கத்தைப் போல் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு இந்த ஆலயம் உருவான தலவரலாறு என்ன? புதல்வனை இழந்த வசிஷ்ட மகரிஷி அவனுக்கான கர்ம காரியங்களைச் செய்ய காசிக்குச் சென்றார். அங்கு அனைத்தையும் முடித்து விட்டு சேது சமுத்திரக் கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். வழியில் உத்திர வாஹினியில் நீராடினார். நீராடி அவர் கரை ஏறியபோது இலேசான மழைத்தூறல் விழுந்தது.
அண்ணாந்து வானத்தை பார்த்தார் முனிவர். வானம் கருமேகங்களுடன் கர்ஜித்தது தொடர்ந்து இடி இடித்தது. மின்னல் வெட்டியது. பேய் மழை பொழியத் தொடங்கியது. மகரிஷிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பயணம் தடைபட்டதில் அவருக்கு மனமெங்கும் வேதனை. அதே வேதனையுடன் விஷ்ணுவை நோக்கி முறையிட்டார்.அவரது வேதனையைக் குறைக்க எண்ணிய விஷ்ணு நேரில் தோன்றி அவருக்கு காட்சி அளித்தார். இந்தப் பகுதி இரண்டு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி என்பதால் வடரங்கம் என அழைக்கப்பட்டது. வசிஷ்ட மகரிஷி விஸ்வகர்மா எனும் தேவதச்சனை அழைத்தார். அரங்கநாதருக்கு ஆலயம் கட்டும்படி பணித்தார். ஆலயம் உருவானது. அதுவே வடரங்கம் அரங்கநாதர் ஆலயம். திருவரங்கத்தில் விபீஷணன் விட்டுச்சென்ற விமானத்திற்கு தர்மவர்மசோழன் கோயில், கோபுரம், மண்டபங்களைக் கட்டி வழிபட்டான். ஆனால், அது மண்மாரியாலும், காவிரியின் வெள்ளப்பெருக்காலும் புதைந்து போனது. அரங்கனும் தாயாரும் பூமிக்குள் மறைந்தனர்.
பல ஆண்டுகளுக்குப்பின் வேட்டைக்கு வந்த சோழ மன்னனான கிள்ளிவளவன் கிளி சொல்லிய மந்திரத்தின் பொருள் உணர்ந்து புதையுண்ட விமானத்தை கண்டெடுத்து புதிதாக கோயில் எழுப்பினான். அதன்பின் வந்த சோழ, பாண்டிய, ஹொய்சால, விஜயநகர, மதுரை நாயக்க மன்னர்களால் ஆலயம் பொலிவு பெற்று அழகுற விளங்கத் தொடங்கியது. வடரங்கத்தில் உள்ள அரங்கநாதரும் இந்த இயற்கை சீற்றத்திற்கு தப்பவில்லை. வானுர உயர்ந்து நிற்கும் ஆலய
கோபுரம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருக்க அரங்கனின் ஆலயம் உள்ளே அழகுற அமைந்திருந்தது. 1924ம் ஆண்டு கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவந்தது. அசுர வெள்ளம். கட்டுப்படுத்த முடியாத வெள்ளம். தன் கரத்தில் பட்ட பொருட்கள், வீடுகள், மரங்கள் என அனைத்தையும் தனது ராட்சஸ கரத்தால் இழுத்துச் சிதைத்து பெரும் இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தது வெள்ளம். அதன் கோர கரங்களுக்கு அரங்கனின் ஆலயம் மட்டும் விதி விலக்கல்லவே.
கோபுரத்தைத் தவிர அரங்கன், அரங்கநாயகி, பரிவார தெய்வங்களின் திருமேனிகள், ஆலயச் சுவர், மகா மண்டபம், கருவறை, தேர் என அனைத்தையும் பாசத்துடன் தன்னுள் இழுத்து அரவணைத்துக் கொண்டது கொள்ளிடம். ராமர் சந்நதி மட்டுமே எஞ்சி நின்றது. ஊர் மக்கள் தவித்தனர். வேதனைப்பட்டனர். நம்மை காத்து வந்த அரங்கனுக்கா இந்தக்கதி என பதறினர். வெள்ளம் வடிந்தது. மக்கள் யாவரும் ஒன்று கூடி அரங்கனையும் அரங்கநாயகியையும் தேடினர். மணலில் புதைந்திருந்த இருவரையும் கரையேற்றி, கரையின் கீழ்புறமுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். அதுவே தற்போதுள்ள புதிய வடரங்கம் ரங்கநாதர் ஆலயம். திருவரங்கம் அருகேயுள்ள திருவானைக்காவல் சிவாலயத்தில் ஜம்புகேஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும் அருட்பாலிக்கின்றனர். அதேபோல் வடரங்கம் அரங்கநாதர் ஆலயத்திற்கு அருகே ஒரு சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அருட்பாலிக்கும் இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். இறைவியின் பெயர் அகிலாண்டேஸ்வரி. வடரங்கம் அரங்கநாதர் ஆலயம் தென்திசை நோக்கி அமைந்துள்ளது.
முகப்பில் அழகிய நுழைவாயில். கருடாழ்வார் சந்நதி. வெளிச் திருச்சுற்றில் இறைவன் முன்னேயிருக்க அடுத்து மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் மேல் திசையில் தனிச் சந்நதியில் ராமபிரான், லட்சுமணன், சீதா பிராட்டியார், அனுமன் சூழ அருட்பாலிக்கிறார். அவரெதிரே கீழ் திசையில் ஆஞ்சநேயர் சந்நதி உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சந்நதிகள் உள்ளன. கருவறையில் இறைவன் அரங்கநாதர் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஆலய திருச்சுற்றின் கீழ் திசையில் தாயார் ரங்கநாயகியின் தனிச் சந்நதி உள்ளது. சுற்றிலும் திருமதிற்சுவர்களால் சூழப்பட்டுள்ளது இந்த ஆலயம்.
புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, மார்கழி 30 நாட்களும் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் கலந்து பயன் பெற நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு.
மாலையில் பெருமான் மோகினி அலங்காரத்தில் திருச்சுற்றில் மட்டும் உலா வருவதுண்டு. வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள், தாயார் வீதி யுலா வருவதும் உண்டு. எதிர்மறைச் சக்திகளால் பாதிக்கப்பட்டோர், பில்லி, சூன்யம் விலக சக்கரத்தாழ்வாருக்கு ஒன்பது வாரங்கள் வியாழக் கிழமைகளில் கல்கண்டு பேரீச்சை வைத்து ஆராதனை செய்து வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். அகஸ்திய முனிவரின் சாபத்தால் அவரது கமண்டலத்தில் சிறைபட்டு துன்பப்பட்டாள் காவிரித்தாய். இங்கு இந்த உத்திர வாஹினியில் நீராடி தன் கணவனான சமுத்திரராஜனை சென்றடைந்ததாக செவி வழித் தல வரலாறு கூறுகிறது. எனவே, இத்தலத்து பெருமானையும் தாயாரையும் வணங்குவதால் பிரிந்து நிற்கும் கணவன், மனைவி, பிற உறவுகள் ஒன்றுபடுவர் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது வடரங்கம். நகரப் பேருந்துகள் நிறைய உள்ளன. ஆலயத்திற்கு அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment