Sunday, 8 July 2018

சீர்காழி சட்டைநாதர் கோயில் சிறப்புகள்

நாகை மாவட்டம், சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மூலவராக  சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
உற்சவராக சோமஸ்கந்தரும், தாயாராக  பெரியநாயகி, திருநிலைநாயகி உள்ளனர். தல விருட்சமாக பாரிஜாதம், பவளமல்லி உள்ளது.

22 தீர்த்தங்கள்:

பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், ராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கவுதம தீர்த்தம், வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி ஆகிய 22 தீர்த்தங்கள் உள்ளன.

வழிபட்டோர்:

பிரமன், குருபகவான், திருமால், சிபி சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமச முனிவர், ராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேடன், வியாசமுனிவர், முருகப் பெருமான், பந்தர், அப்பர், சுந்தரர் ஆவர். ஆகமமாக பஞ்சரத்திரமும், பாடல் வகையாக  தேவாரமும் உள்ளது. இதனை சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியதாக வரலாறு கூறுகிறது. இதன் தொன்மை  2000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். இத்திருத்தலம் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் 14வது தேவாரத்தலம் ஆகும். பிரம்மபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என பல்வேறு பெயர்களைத் தாங்கியதாக இந்தத் தலம் இருக்கிறது.

பிரம்மபுரம்:

படைப்புத் தொழிலைச் செய்வதற்காக சிவபெருமானின் அருளை வேண்டி பிரம்மன் தவம் செய்த திருத்தலம் இது. ஆகவே, ‘பிரம்மனது ஊர்’ எனும் பொருளில் ‘பிரம்மபுரம்’ என அழைக்கப்படுகிறது.

வேணுபுரம்:

வேணு’ என்றால் மூங்கில் என்று பொருள். ஒருகாலத்தில், அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தவித்த இந்திரன், மூங்கில்கள் நிறைந்த இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டான். அதன் மூலம் இழந்தவற்றை திரும்பப்பெற்றான். இவ்வாறு இந்திரன் பூசித்த மூங்கில்வனம் என்ற பொருளில் இவ்வூருக்கு ‘வேணுபுரம்’ என்ற பெயர் அமைந்தது.

புகலி:

இது ‘புகல்’, ‘புகுதல்’, அதாவது, உதவி கேட்டு வந்து சேர்தல் என்ற பொருளில் அமைந்தது. சூரபத்மனின் கொடுமைகள் அதிகரித்தபோது, அதனைப் பொறுத்துக்கொள்ள இயலாத தேவர்கள் இந்தத் திருத்தலத்துக்கு வந்து சிவபெருமானிடம் தஞ்சமடைந்தார்கள், ‘நீங்கள்தான் எங்களைக் காக்கவேண்டும்’ என்று அவர்கள் இவ்விடத்தைப் புகலிடமாக வந்தடைந்ததால், இது ‘புகலி’ என்ற பெயரை பெற்றது.

வெங்குரு: 

அசுரகுருவான சுக்கிரன் ஒருமுறை பிரம்மனின் சபைக்குச் சென்றிருந்தார். ஆனால், அங்கே அவருக்குச் சரியான மரியாதை கிடைக்கவில்லை. ஆகவே, அவர் தேவகுருவுக்குச் சமமான குருத்துவத்தைப் பெற விரும்பினார். அதற்காக இந்தத் திருத்தலத்தில் தவம் புரியும்படி நாரதர் அவரிடம் சொன்னார். அதன்படி, சுக்கிரன் சிவபெருமானை எண்ணித் தவமிருந்த இடம் இது. அவருக்குச் சிவன் குருத்துவத்தை அருளிய இடம் என்பதால், இத்தலம் ‘வெங்குரு’ என்று அழைக்கப்படுகிறது.

தோணிபுரம்:

‘தோணி’ என்பது, நீரில் மிதக்கும் படகு. பிரளயத்தின் போது, சிவபெருமான் சுத்தமாயையையே தோணியாக்கி, அதன் மீது உமையம்மையுடன் காட்சிதந்தாராம். அந்தத் தோணி தோன்றிய இடம் இது என்பதால், ‘தோணிபுரம்’ என்ற பெயர் அமைந்தது.

பூந்தராய்:

இது வராக அவதாரமெடுத்த விஷ்ணுவைக் குறிக்கும் ஒரு பெயராகும். இரணியாக்‌ஷன் என்ற அசுரன் தேவலோகம் மற்றும் பூலோகத்தின் செல்வங்களையெல்லாம் கவர்ந்துகொண்டான். அவற்றைப் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். இதனால், தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டார்கள். அவர் வராக அவதாரம் எடுத்து பூமியைக் கிழித்துச்சென்றார். அவனை வீழ்த்தி அனைத்து செல்வங்களையும் மீட்டார். அத்தகைய விஷ்ணு, தன்னுடைய வராக அவதாரத்தை விட்டு இயல்பான உருவத்தை பெற்ற திருத்தலம் இதுதான். ஆகவே, பூமியைக் கிழித்துச்சென்ற அவரது செயலைக் குறிப்பிடும் வண்ணம் பூந்தராய்’
என்ற பெயர் உண்டானது.

சிரபுரம்:

‘தலை’யின் ஊர். யாருடைய தலை? தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் கிடைத்தது, மோகினியாக வந்த திருமால் அதனைத் தேவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். அப்போது, அசுரர்களின் பக்கமிருந்த ஒருவருக்கு மட்டும் இதில் சந்தேகம் ஏற்பட்டது. தனக்கு அமுதம் கிடைக்காதோ என்ற கவலையில், தேவர்களில் ஒருவரை போல் வேடமிட்டுக்கொண்டு மறுபக்கம் சென்றுவிட்டார். மற்ற தேவர்களுடன் சேர்ந்து அமுதத்தை வாங்கி உண்டுவிட்டார். இது தெரிந்த விஷ்ணு கோபம் கொண்டார். அவரைத் தலை வேறு, உடல் வேறாக வெட்டிவிட்டார். அந்த இரு துண்டுகளும், ராகு, கேது ஆயின. இதில் தலைப்பகுதியான ராகு, இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானை வணங்கி அருள்பெற்றார். ஆகவே, இதற்குச் ‘சிரபுரம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

புறவம்:

இது ‘புறா’வைக் குறிக்கிறது. புறாவுக்காகத் தன்னுடைய தோலை அரிந்து கொடுத்த சிபிச்சக்கரவர்த்தியின் கதையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்நிகழ்வைக் குறிப்பிடும் பெயர்தான் இது. சிபியைப் பரிசோதிப்பதற்காக, இந்திரன் பருந்தாகவும், அக்கினி புறாவாகவும் வந்தார்கள், புறாவைத் துரத்தியது பருந்து, பயந்துபோன புறா, சிபியிடம் வந்து சேர்ந்தது. அந்தப் புறாவை காப்பாற்றுவதற்காக, தன்னுடைய சதையை அரிந்து தர முன்வந்தான் சிபி. பருந்தும் அதனை ஏற்றுக்கொண்டது. ஆனால், சிபி எவ்வளவுதான் சதையை அரிந்து தந்தபோதும், அது அந்தப் புறாவின் எடைக்குச் சமமாகவில்லை. நிறைவாக, சிபியே தராசில் ஏறி அமர்ந்தான். தராசு முள் நேராக நின்றது. இப்படி ஒரு புறாவுக்காகத் தன்னையே தரத் துணிந்தான் சிபி சக்கரவர்த்தி. அத்தகைய சிபி நற்கதியடைந்த திருத்தலம் இது. ஆகவே, ‘புறவம்’ என்று பெயர் பெற்றது.

சண்பை: 

இதன் பொருள், நாணல். யாதவ குலத்தைச் சேர்ந்த சிலர், விளையாட்டாக ஒரு வேலை செய்தார்கள், அது அவர்களுடைய குலத்துக்கே வினையானது. அவர்கள் ஓர் ஆணுக்குப் பெண்போல் வேடமிட்டார்கள். அவன் கர்ப்பமாக இருப்பது போல் நடித்தான். அவனை அழைத்துக்கொண்டு கபிலமுனிவரிடம் சென்றார்கள். ‘முனிவரே, இந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? அல்லது, பெண் குழந்தையா?’ என்று கேட்டார்கள். இதனால், முனிவர் கோபம் கொண்டார், ‘இவனுக்கு ஓர் உலக்கை பிறக்கும், அந்த உலக்கை உங்கள் குலத்தை நாசமாக்கும்’ என்று சாபம் கொடுத்தார். அவர் சொன்னபடி, அந்த ஆணுக்கு ஓர் உலக்கை பிறந்தது. பயந்துபோன யாதவர்கள் அதைத் தூளாக்கிக் கடலில் கரைத்தார்கள். அத்துடன் தங்கள் பிரச்னை தீர்ந்தது என்று நினைத்தார்கள். ஆனால், அந்த உலக்கைத்தூள்கள் அனைத்தும் நாணலாக முளைத்தன. பின்னர் ஒருமுறை யாதவர்களுக்கிடையே சண்டை வந்தபோது, இந்த நாணல்களைப் பறித்துக்கொண்டு அவர்கள் மோதினார்கள், முனிவரின் சாபப்படி எல்லாரும் இறந்துபோனார்கள். அப்போது, யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணர், இந்தப் பழி தன்னைத் தொடராதபடி இங்கே வந்து பூசித்தார். ஆகவே, இதற்குச் ‘சண்பை’என்ற பெயர் அமைந்தது.

காழி:

இதைத்தான் நாம் இப்போது ‘சீர்காழி’, சிறப்பு நிறைந்த காழி என்று அழைக்கிறோம். ‘காழி’ என்ற பெயர், காளிதேவியைக் குறிக்கிறது, அவர் சிவபெருமானுடன் வாதாடிய குற்றம் நீங்குவதற்காக இத்தலத்தில் வழிபட்டார், ஆகவே, இதன் பெயர் ‘காழி’ என்றானது. ‘ஸ்ரீகாழி’ என்ற பெயர்தான் பின்னர் ‘சீகாழி’ என்றாகி, இப்போது ‘சீர்காழி’ என்று அழைக்கப்படுகிறது.  காளிதன் என்ற பாம்பும் இங்கே சிவபெருமானைப் பூசித்திருக்கிறது. அதனாலும் ‘காழி’ என்ற பெயர் அமைந்திருப்பதாக சொல்கிறார்கள்.

கொச்சைவயம்:

இதில் ‘கொச்சை’ என்பது பழிச்சொல்லைக் குறிக்கிறது. யார் மீது பழிச்சொல்? ஏன் ஏற்பட்டது? அது எப்படித் தீர்ந்தது? பராசர முனிவர் மச்சகந்தியோடு கூடியபோது, மற்ற முனிவர்கள் அவரைத் தூற்றினார்கள். அதனால் வருந்திய அவர், அந்தப் பழி தன்னை நெருங்காதபடி இங்கே வந்து பூசித்தார், பெருமானின் அருள்பெற்றார். ஆகவே, இவ்விடத்துக்குக் ‘கொச்சைவயம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

கழுமலம்:

உரோமச முனிவர் தன்னைப்பற்றியிருந்த குற்றங்கள்(மலங்கள்) தொலைவதற்காக இங்கே வழிபட்டார். வேறு எங்கும் தீராத அந்தக் குற்றங்கள் இங்கே தீர்ந்தன. ஆகவே, இவ்விடத்துக்குக் கழுமலம் என்கிற பெயர் உண்டானது.இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment