உலகப்பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும், திரிசடை விரிகடவுளைத் தனியன்பினால் தொழுது, முக்திப்பேற்றை எய்திய வாயலார் நாயனாரும், திராவிட வேதம் என்று கூறப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும் தோன்றிய அற்புதத் தலம் சென்னை மயிலாப்பூர். இங்கே துயர் துடைக்கும் தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் தனிக்கோயிலில் அருட்பாலிக்கிறாள். தம் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்கு முதல் பிரார்த்தனையை இந்த அம்பிகைக்குச் செலுத்துவது மக்களிடையே இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆண்டு முழுவதும் இக்கோயிலில் தினசரி அம்பாளுக்கு உச்சிகால பூஜை முடிந்ததும் 100 நபர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடதிசையிலும், அருள்மிகு மாதவப்பெருமாள் கோயிலுக்கு மேற்குப் பகுதியிலும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது இக்கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக அம்பாள் தோன்றினாள்.
சுயம்புவான அருவுருவ தோற்றத்தின் மேல்பகுதி தாமரை மொட்டு வடிவிலும், முகப்பில் நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டும் அருட்காட்சியளிக்கின்றாள். தாமரையின் மறுபெயரே முண்டகம் என்பதால் மக்கள் இந்த அம்மனை ‘முண்டகக் கண்ணியம்மன்’ என அழைக்கின்றனர். அம்மனின் பின்புறம் இருந்த பெரிய புற்றிலிருந்து தினசரி நாகம் அம்பாளை வந்து வழிபட்டு சென்று வந்ததால் அம்பாளுக்கு ஓலைகூரை அமைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். வெப்பத்தை தான் தாங்கி குளிர்ச்சியை மக்களுக்கு அளிக்கும் பேரன்பு கொண்டவளாக ஓலைக்கூரையில் தங்கி அருட்பாலிக்கின்றாள் அன்னை. கூரையை இன்றளவும் அந்த நாகம் காவல் காப்பதாக ஐதீகம். ஆண்டிற்கு ஒருமுறை ஓலைகளை மாற்றிப் புதுப்பிக்கிறார்கள். தேவியின் கருவறையின் முகப்பில் அற்புத வடிவில் சப்தகன்னியர்கள் சுதை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் ஈசனுக்கு நடக்கும் அன்னாபிஷேக வைபவம் இத்தலத்தில் அம்பிகைக்கு நடப்பது தனிச் சிறப்பு.
காலை 6 மணியிலிருந்து 11.30 மணிவரை அபிஷேகத்தின்போது மட்டுமே அம்மனின் சுயம்பு வடிவை தரிசனம் செய்ய முடியும். சுயம்புவின் நடுவில் அம்பிகையின் அம்சமான சூலவடிவம் இருப்பது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இந்த அம்பிகைக்கு பொங்கல் வைக்க, பசும் சாணத்தாலான வறட்டியில் தீயிட்டுப் பயன்படுத்துகின்றனர். பின் அந்த சாம்பல். திருநீறு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கருவறையில் அம்மனுக்கு சமர்ப்பித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தம் ஆகியவை பிரசாதங்கள். கருவறை சந்நதியின் முகப்பில் சப்த மாதர்களும் தத்தமது வாகனங்களுடன் வண்ணச் சுதை வடிவில் அருட்காட்சியளிக்கின்றனர். நவராத்திரி ஒன்பதாவது நாள் மகிஷாசுரமர்த்தனி அலங்காரத்தில், முண்டகக்கண்ணியம்மன் திருவீதியுலா செல்வது வழக்கம். திருமணத் தடைகள் விலகவும், கண் நோய்கள் நீங்கவும் இந்த அன்னை அருள் புரிகிறாள். கல்வியில் சிறக்க இறைவியின் சந்நதியில் 23 விளக்குகளை ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த அம்பிகை மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்குவதாக ஐதீகம்.
நாகபிரதிஷ்டை செய்தும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனையாக வேப்பஞ்சேலை அணிந்து சந்நதியை வலம் வருதல், தங்கரதம் இழுத்தல் போன்ற பரிகாரங்களை மேற்கொள்கிறார்கள். எதிரிகளிடமிருந்து ஊரைக் காப்பதற்காக ஒரு இளம்பெண் கிணற்றில் இறங்கி அப்படியே ஜலசமாதி கொண்டதாகவும் அந்தப் பெண்ணே முண்டகக் கண்ணியாக அருட்பாலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இத்தலத்து இறைவியின் பின்புறம் நாகப்புற்றும், ஒரு ஆலமரமும் உள்ளன. நாகம் இரவில் அம்மனை வழிபடுவதால் ‘நாகதோஷம்’ உள்ளவர்கள் புற்றுக்கு வழிபாடு செய்தும், நாகர் சந்நதியில் வழிபட்டு நாகதோஷ நிவர்த்தியும் அடைகின்றனர். சிலர் நாக பிரதிஷ்டையும் செய்கிறார்கள். அன்னை வீற்றிருந்து அருட்பாலிக்கும் கர்ப்பக்கிரகத்தையடுத்து வடபுறம் தனிக்கோயிலில் உற்சவர், சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
இதன் வடபுறம் பிராம்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, கௌமாரி, ஐந்த்ரீ, சாமுண்டி ஆகிய சப்தகன்னியர்கள் ஒருங்கே லிங்க வடிவில் வீற்றிருக்கும் சந்நதியும், அதன் இருபுறமும் ஜமதக்னி முனிவர் மற்றும் பரசுராமர் சிலைகளும் உள்ளன. இந்த சப்தகன்னியர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக பக்தர்களால் கருதப்படுகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இத்தேவியர்கள் பக்தர்களால் விசேஷமாக வழிபடப்படுகின்றனர். அதனால் அவர்கள் சங்கடங்கள் சடுதியில் மறைவதாக அவர்கள் நம்புகின்றனர். இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிப் பெருவிழா வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதத்தில் மூலவர் அம்பாளுக்கு 10 வாரமும், வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் மிகச்சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. 1008 பூக்கூடைகளை 1008 பெண்கள் சுமந்து வீதிவலம் வந்து ஆடி கடைவெள்ளியில் பூச்சொரிதல் உற்சவமும், தை கடைவெள்ளியில் 108 பெண்கள் பங்கேற்கும் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
ஆண்டில் ஐந்து முறை (ஆடிபூரம், விஜயதசமி, தை கடைவெள்ளி, சித்ரா பெளர்ணமி, வருடபிறப்பு) உற்சவர் திருவீதியுலா வெள்ளி சிம்மவாகனத்தில் வெளியே சென்று வருவது வழக்கமாக உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அம்மனை வழிபடுபவர்கள் கண் ஒளிபெற்றும், நோயற்ற உடலும், அம்மை போன்ற நோய், பில்லி சூன்யம், பேய் பிடித்தல், நாகதோஷம், கிரகதோஷம் நிவர்த்தி, திருமணத்தடை நீக்கம், கல்வியில் மேம்பாடு மற்றும் இதர பலன்களை அடைகின்றனர். அங்கபிரதட்சணம், வேப்பிலை பாவாடை அணிந்து வலம் வருதல், உண்டியலில் வெள்ளி, பொன் உடல் உருவம், கை, கால், கண்மலர் பிரார்த்தனை செலுத்துதல் என்று நேர்ந்துகொண்டு உடல் நோய் நீங்கப் பெறுகிறார்கள்.
நாகதோஷம் உள்ளவர்கள் வெள்ளியில் நாகம் செய்தும், மாங்கல்ய தோஷ நிவர்த்திக்கு மாங்கல்யம் தயாரித்தும் உண்டியலில் செலுத்துவதும், இறைவியிடம் கோரிய வரம் கிடைத்தவுடன் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதும், நேரடியாக பக்தர்களே கோயில் வளாகத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடுவதும் நடைபெறுகின்றன. முற்றிலும் பக்தர்கள் நன்கொடை மற்றும் உண்டியலில் வந்த காணிக்கையை கொண்டு ஒருகோடி மதிப்பில் தங்கரதம் செய்யப்பட்டு 03-06-2007 அன்று முதன்முதலாக அம்பாள் தங்கரதத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சியளித்தாள். பக்தர்கள் தங்கள் முக்கிய தினங்களுக்கு பிரார்த்தனைக்கும், திருமண நாள், பிறந்த நாளுக்கு குறிப்பிட்ட தொகைகட்டி தங்கரதம் இழுத்து வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையிலிருந்தும் மயிலாப்பூர் குளம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும், லஸ் முனையிலிருந்தும், கச்சேரி ரோடு போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கலங்கரை விளக்கம் வழியாகவும் இத்திருக்கோயிலுக்கு எளிதாக வரலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment