Sunday, 17 June 2018

துயரங்கள் தீர்த்து நலமருளும் தர்மராஜர் திரௌபதியம்மன்

எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து பரபரப்பாக காணப்படும் சேலம் சின்னக்கடை வீதியில் இருக்கிறது பிரசித்தி பெற்ற தர்மராஜர் திரௌபதியம்மன் கோயில். இதில் திரௌபதியம்மனை எல்லையம்மன் என்றும் போற்றுகின்றனர் மக்கள். பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலில் வடக்கு நோக்கி திரௌபதியம்மன் அருள்பாலிக்கிறார். அவரைச் சுற்றிலும் தருமன், பீமன், அர்ஜூணன், நகுலன், மகாதேவன் என பஞ்சபாண்டவர்களும் வீற்றிருக்கின்றனர்.‘‘பஞ்சபாண்டவர்களை நயவஞ்சமாக, துரியோதனன் நாட்டை விட்டு துரத்தினார். அப்போது 14 வருடங்கள் காட்டில் வாழ்ந்தார்கள். இதில் அஞ்ஞான வாசமாக, ஒருவருடம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.

அப்போது அடர்ந்த கானகமாக இருந்த சைலம் மலைப்பகுதிக்கு வந்து, இந்த இடத்தில் 15 நாட்கள் தங்கியிருந்து சென்றனர். பிற்காலத்தில் பஞ்சபாண்டவர்கள், தங்கிய இடத்தை மன்னர்கள் வழிபட்டனர்’’ என்பது தலவரலாறு. காலத்தின் சுழற்சியால் அங்கிருந்த சிறுகோயில் சேதாரமானது. அந்த இடத்தில் 1926ம் ஆண்டில் சென்னகிருஷ்ணன் என்பவர், திரௌபதியம்மனுக்கு கோயில் கட்டி, கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்தார். பஞ்சபாண்டவர்கள் தங்கியிருந்து வழிபட்ட இடம் என்பதால், அவர்களுக்கும் கற்சிலைகளை வைத்தார். நெருப்பில் பூத்த பூக்கொடியாய் திரௌபதிதேவிக்கு சிலை வடித்து, ஊர்காக்கும் எல்லையம்மனாக பிரதிஷ்டை செய்தார் என்று கல்வெட்டுக்குறிப்புகள் கூறுகிறது. இந்த கோயிலில் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நாட்களில் நடக்கும் பாரதம்படித்தல் என்னும் நிகழ்ச்சி, மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர்களும் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். இதேபோல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘தர்மர் பட்டாபிஷேகவிழா’ கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அப்போது ஏழை, எளிய மக்களுக்கு இலவச திருமணங்கள் செய்து வைக்கப்படுகிறது. இதே போல் அன்றைய தினம் காலையில் தொடங்கி, இரவுவரை திரளும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமும், தானதருமங்களும் வழங்கப்படுகிறது. தினசரி ஒரு கால பூஜை நடக்கும் இந்த கோயிலில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். கோயிலுக்குள் வற்றாத புனித தீர்த்தக்கிணறு ஒன்று உள்ளது. இதிலிருந்து நீரெடுத்து திரெளபதியம்மனுக்கும், தருமராஜருக்கும் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

பாஞ்சால நாட்டு இளவரசியாக திகழ்ந்த திரௌபதி, துருபதன் செய்த யாக அக்னியில் தோன்றியவள். அவள் நெருப்பில் குளித்து, வேள்வியில் இழைத்து திரௌபதியம்மன் என்னும் பரிசுத்தமாய் உருவானவள். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அம்மனை வழிபட்டால் துயரங்கள் யாவும், நெருப்பால் எரிந்து காற்றில் கலக்கும். தர்மராஜர், தர்மத்திற்காகவே பிறந்து, அதற்காகவே வாழ்ந்தவர். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து ஒப்பற்ற மன்னராக திகழ்ந்து தெய்வாம்சமாக மாறியவர். பக்தர்கள் என்னவரம் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்துக் கொண்டே இருப்பவர். இதேபோல் பஞ்சபாண்டவர்கள் ஐவரும் ஒவ்வொரு செயலில் தனிச்சிறப்பு கொண்டவர்கள். எனவே இங்கு தர்மராஜரையும், திரௌபதியம்மனையும், பஞ்சபாண்டவர்களையும் ஒருங்கே வழிபடும்போது நோய்நொடிகள் அண்டாது. துயரங்கள் பறந்தோடும். ஆரோக்கியம் நிலைக்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாய் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment