தமிழகத்து கிராமங்களில் வழிபடப்படும் ஒரு நாட்டார் தெய்வமாகவே பெரும்பாலும் நாம் கருப்ப சாமியை பார்க்கிறோம், அதிலும் சிலநேரங்களில் “பதினெட்டாம்படி கருப்பு” என்று நாம் கேள்விப் படும் இந்த தெய்வத்தின் பெயரை கேட்டதும் இது ஏதோ சைவநெறிக்கு புறம்பான ஒரு தெய்வ வழிபாடு, இவரை வணங்குபவர்கள் எல்லாம் விவரம் இல்லாத பாமரர்கள் என்று கூட நினைக்கின்றோம்,
ஆனால் இந்த “கருப்ப சாமியை கந்தபுராணத்தின் ஒருபகுதியில் கச்சியப்ப சிவாச்சார்யார் மிகவும் புகழ்ந்து பாடுகின்றார்”
ஆச்சர்யமாக இருக்கின்றதா!? சூரபத்மனுக்கு பயந்த தேவேந்திரன் சீர்காழியில் மறைந்திருந்த காலத்தே இந்திராணியை தனியாக விட்டுவிட்டு வானுலகம் செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டாகின்றது, ஆனால் இந்திராணிக்கு அசுரர்களால் பயம் இருப்பதால் தனியே விட்டு செல்ல முடியாது ஆகையால் அவளுக்கு மிக்க பலம் வாய்ந்த காவல் ஒன்றை வைத்து செல்ல வேண்டும் என்று இந்திரன் எண்ணுகின்றான்.
அப்பொழுது இந்திரன் நினைவுக்கு வருபவர்தான் “சிவக்குமாரர்களில் ஒருரான ஸ்ரீ ஹரிஹர புத்ரரான மகா சாஸ்தா” ஆவார்
இறைவனது ஐந்து குமாரர்கள் அல்லது ஐந்து பேத வடிவங்களாக சொல்லப் படுபவர்கள் விநாயகப்பெருமான், முருகப்பெருமான், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்பவர்களாவார்கள்
இந்த ஐந்து திருவடிவங்களும் இறைவனது மகன்களாக அல்லது இறைவனது மாற்று வடிவங்களாக பார்க்கப் படவேண்டியவர்கள் ஆவார்கள், இவர்களில் ஒருவரான “மகா சாஸ்தா என்னும் ஐயனை இந்திரன் நினைத்து அவர்தம் பெருமையை இந்திராணிக்கு கூறும் பகுதியை “மகா சாஸ்தா படலம்” என்று தனிப்பகுதியாக விரிக்கிறார் கச்சியப்ப சிவாச்சார்யார்”,
“இந்த வண்ணம் இருக்க முராரியும் அந்தி வண்ணத்து அமலனும் ஆகியே முந்து கூடி முயங்கிய எல்லையில் வந்தனன் எம்மை வாழ்விக்கும் ஐயனே!!” என்று கந்தபுராணம் சாஸ்தாவாகிய ஐயப்ப சுவாமியினை போற்றுகின்றது
“மைக்கருங்கடல் மேனியும் வானுலாஞ் செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய் உக்கிரத்துடன் ஓர்மகன் சேர்தலும் முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்” என்று சாஸ்தாவின் கோலத்தினை இந்திரன் இந்திராணிக்கு கூறி அவரை பிரார்த்திக்கின்றான்.
உடனே மகாசாஸ்தாவான ஸ்ரீ ஐயனார் தோன்றி தாம் இந்திராணிக்கு அசுரர்களிடம் இருந்து அபயம் அளிப்பதாக கூறி மறைகிறார் இந்திரனும் வானுலகம் செல்கின்றான்
அச்சமயத்தில் அஜமுகி என்னும் சூரபத்மனின் தங்கை, இந்திராணி தனித்திருப்பதனை கண்டு அவளை தன் தமயனுக்காக கடத்த முற்பட்டு பலவந்தமாக இழுக்கின்றாள், பயந்த இந்திராணி தன்னை காப்பதாக வாக்களித்த ஐயப்ப சுவாமியை எண்ணி ஓலமிடுகின்றாள்
“பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும் ஐயனே ஓலம்!! விண்ணோர்க்கு ஆதியே ஓலம்!! செண்டார் கையனே ஓலம்!! எங்கள் கடவுளே ஓலம்!! மெய்யர் மெய்யனே ஓலம்!! தொல்சீர் வீரனே ஓலம்!! ஓலம்!!”
“ஆரணச் சுருதியோர்சார் அடல் உருத்திரன் என்று ஏத்தும் காரணக் கடவுள் ஓலம்!! கடல் நிறத்து எந்தாய் ஓலம்!! பூரணைக்கு இறைவா ஓலம்!! புட்கலை கணவா ஓலம்!! வரணத்து இறைமேல் கொண்டு வரும்பிரான் ஓலம்!! என்றாள்” என அவள் பலவாறும் ஐயனை நோக்கி ஓலமிடுவதனை கேட்டு
ஐயனின் பரிவாரத் தலைவனும் உருத்திரர்களில் ஒருவனுமான “மையினை தடுத்துச் சிந்து மருந்தென வந்தான் என்ப வெய்யரில் பெரிதும் வெய்யோன் வீரமாகாளன் என்போன்” வந்தான் என்கிறது கந்த புராணம்
அதாவது மையை கரைத்து விட்டார் போல கரிய நிறத்தில் ஒருவன் வந்தானாம் அவன் வலிமையானவர்களினும் வலிமையானவனாம் அவன் பெயரே “கருப்பன், மகா கருப்பன், வீரமகா கருப்பன்” என்பதாம்,
காளம் என்பதற்கு கருப்பு என்று பொருள்,
எங்கள் ஐயனின் பெயரை இத்தனை முறை கூவி ஓலமிடும் இந்த பெண்ணை நாம் காக்க வேண்டும் என்று வந்த அந்த கருப்பனின் வருகை எப்படி இருந்ததாம்!?
“இருபிறை நெலிந்திட்டன்ன இலங்கெழில் எயிற்றன்” அவனுக்கு இரண்டு பிறைகளை செருகியது போல இரண்டு கோரைப்பற்கள் இருந்ததாம், “ஞாலம் வருமுகில் தடிந்தால் என்ன வாள் கொடு விதிர்க்கும் கையன்” அவனது கையில் உள்ள பெரிய அரிவாள் மேகத்தை பிளந்து செய்தது போல கரிய நிறத்தில் இருந்ததாம், “உரும் இடிக் குரல்போல் ஆர்க்கும் ஓதையன்” அவனது குரல் வானத்தில் இடி இடிப்பது போல இருந்ததாம்
“உந்தி பூத்தவன் முதலோர் யாரும் புகழ வெவ்விடத்தை உண்டு காத்தவன் நாமம் பெற்றோன் காலர்க்கும் காலன் போல்வான்” என்று அந்த மாகாளரை கச்சியப்ப சிவாச்சார்யார் அறிமுகம் செய்து வைக்கின்றார்.
வந்த மாகாளர் அசமுகியின் கரங்கள் மூக்கு காது முதலிய அங்கங்களை சேதித்து அனுப்பி இந்திராணியை காக்கின்றார் என்பது கந்தபுராணத்தில் விரிவாக காணக்கிடைக்கும் செய்தியாகும்.
அப்பர் சுவாமிகள் “அந்தகனை அயில் சூலத்தழுத்தி கொண்டார்” என்னும் பொதுத் தாண்டகப் பாடலில் “மாகாளன் வாசல் காப்பாகக் கொண்டார்” என்று பாடுவதனை எண்ணி மகிழலாம்
சிவபூசையில் ஆவாகனத்தில் துவாரபாலகராக மாகாளரையும் தாபித்து வழிபடுவதனை சிவபூசை செய்வோர் அறியக்கூடும்.
இந்த மாகாளர் ஸ்ரீ சாஸ்தாவின் பரிவார கணங்களில் தலைமையானவர் ஆதலால் இவரை “ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் கொள்ளும் இடங்களில் பரிவாரமாக ஸ்தாபிப்பர்”
இது பற்றியே சபரிமலையிலும் பதினெட்டு படிக்கு முன்பு “ஸ்ரீ கருப்பசாமி” என்ற பெயரில் ஸ்தாபனம் ஆகியிருக்கிறார் இவர்.
இவரே பதினெட்டாம்படி கருப்பு, கருப்பன், கருப்பசாமி, கருப்பண்ணன் என்றெல்லாம் தமிழக கிராமங்களில் பலவாறும் வழிபடப் படுகின்றார்
தமிழக கிராம தெய்வங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் சிவபரம்பொருளுடன் சம்பந்தப் பட்டுதான் இருக்கும், அவர்கள்தம் கதைகளில் நிறைவில் இறைவன் இறைவியோடு வந்து வரம்பல தந்து அருளளித்து செல்லும் தொடர்பு இருக்கும்
அதில் கருப்ப சாமிக்கு நேரடியாக ஆகமப் பிரமாணம், திருமுறை பிரமாணம், கந்தபுராணப் பிரமாணம் என்று அனைத்தும் இருப்பது எண்ணி இன்புறத்தக்கதாம்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment