வட தேசத்தில் சோம்நாத் அருகில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எழுந்தருளியிருக்கும் ஒரு ஷேத்திரத்தில் ஒரு பூக்காரி வசித்து வந்தாள்.அவள் கிருஷ்ண பரமாத்மாவிடம் மிகுந்த பக்தி கொண்டவள். அவள் பிரதி தினம் வாசனை மிகுந்த பூக்களைப் பறித்து தன் கூடையை நிரப்பிக் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலயத்திற்கு வந்து, அங்கு நுழை வாசலில் இருக்கும் படியில் கூடையை வைத்து விட்டு பகவானை வணங்கி பிரார்த்தனை செய்து விட்டு வியாபாரம் செய்யச் செல்வாள். அந்த ஆலயத்தின் சன்னதித் தெருவில் தன் கடையில் அமர்ந்து,தான் பறித்து வந்தபூக்களை மாலையாகக் கட்டி, கடை வாசலில் தொங்க விடுவாள். அவளுடைய மாலைகள் அழகுடனும், நறுமணத்துடனும் காணப் படும். அதனால் அவை வெகு விரைவில் விற்பனையாகி விடும்.
அந்த பூக்காரி , அனுதினமும், ஆலயம் மூடப்படுவதற்கு முன், ஒரு பூமாலையைக் கட்டி எடுத்துக் கொண்டு பகவானின் முன்னால் போய் நின்று விடுவாள். அர்ச்சகர் அந்த மாலையை வாங்கி பகவானுக்கு அணிவித்து தீபாராதனை செய்து, துளசி தீர்த்தம் கொடுப்பார். அனேகமாக பகவான் தரிசனத்திற்கு கடைசியாக வருபவள் அவளாகத்தான் இருக்கும். அவள் சென்ற பிறகு தான் ஆலயம் மூடப்படும்.
அன்று விசேஷ தினம். வழக்கத்தை விட பூ வியாபாரம் அதிகமாக இருந்தது. மும்மரமாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தபடியால் அவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஆலயத்திலிருந்து திடீரென்று வந்த மணி யோசையிலிருந்து விரைவில் ஆலயம் மூடப்படப் போகிறது என்பதை உணர்ந்தாள்.
“வியாபாரத்தில் கவனமாக இருந்து பகவானின் காணிக்கையை மறந்து விட்டோமே” என்று பரபரப்புடன், ஒரு மாலை கட்டினாள். அவள் சிறிதும் எதிர்பார்க்காதவாறு அந்த மாலை மிகவும் அழகாக அமைந்து விட்டது. அதை எடுத்துக் கொண்டு ஆலயத்திற்கு ஓடினாள் பூக்காரி. அர்ச்சகர்கள் இரவு பூஜையை முடித்துக் கொண்டு பகவானின் சன்னதியை மூடிவிட்டு வாசல் பக்கம் வந்து விட்டனர்.
ஸ்வாமி, இன்று எதிர்பாராத வகையில் தாமதமாகி விட்டது. வழக்கம் போல் இந்த மாலையை பகவானுக்கு அணிவித்து தீபாராதனை செய்யுங்கள்” என்று வேண்டினாள்.
” பூஜை முடிந்து யதாஸ் தானம் செய்து விட்டோம். இனிமேல் சன்னதியைத் திறக்க முடியாது. நாளை காலையில் கொண்டு வா, உன் விருப்பப்படியே பகவானுக்கு சாத்துகிறோம்” என்றார் அர்ச்சகர் .
“ஸ்வாமி, காலைக்குள் இந்த மாலை வாடிவிடும். தயவு செய்து இதை இன்றே பகவானுக்கு அணிவியுங்கள்” என்று மன்றாடினாள்.
” இதை யாருக்காவது விற்பனை செய்துவிடு. நாளை வேறு ஒரு மாலை கட்டிகொண்டு வா” என்றார் அர்ச்சகர் .
“பகவானுக்கு என்று படைக்கப்பட்ட ” காணிக்கை” இது. அவருக்கே போய்ச் சேர வேண்டும். தயவு செய்து மறுக்காதீர்கள்” என்று வேண்டினாள் பூக்காரி. அர்ச்சகர்கள் மறுத்துவிட்டு ஆலயத்தின் முன் வாசலை மூடிக் கொண்டு சென்று விட்டனர். பூக்காரி வாசல்படியில் அமர்ந்து கண்ணீர் விட்டாள். தன் மாலையை அணிவித்து தரிசனம் செய்ய முடியாமல் போய் விட்டதே என்று வருந்தினாள். மூடப்பட்ட ஆலயத்தின் கதவுகளில் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பூக்காரி , பகவானைப் பிரார்த்தனை செய்து விட்டு தான் கொண்டு வந்த மாலையை கதவில் இருக்கும் பகவானின் மீது அணிவித்து விட்டுத் தன் இருப்பிடம் சேர்ந்தாள்.
மறுநாள் விடியற்காலையில் அர்ச்சகர்கள் ஆலயத்திற்கு வந்து வழக்கம் போல் தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்தனர். ஒரு அர்ச்சகர் தீர்த்தம் கொண்டு வரச் சென்றார். மற்றொருவர் முன் தினம் திருமேனிச் சிலையில் அணிவித்த மாலைகளை எடுக்க ஆரம்பித்தார். அநேகமாக எல்லா மாலைகளையும் எடுத்து விட்டார். கடைசியாக ஒரே ஒரு மாலை மட்டும் பகவானின் திருக்கழுத்தில் இருந்தது. அர்ச்சகர் அதை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.இழுத்துப் பார்த்தார். அந்த மாலை அசைந்து கொடுக்கவில்லை.
” மாலையைக் கழற்றி, வஸ்திர, ஆபரணங்களை அகற்றிவிட்டு பிறகு தானே அபிஷேகம் செய்ய முடியும். ஆனால் ஒரு மாலையை மட்டும் கழற்ற முடியவில்லையே” என்று அர்ச்சகர் தவத்தார். தீர்த்தம் கொண்டு வரச் சென்ற அர்ச்சகரும் திரும்பி வந்து விவரம் அறிந்து செய்வதொன்றும் புரியாமால் நின்றார். அதற்குள் ஸ்வாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் பலர் ஆலயத்திற்கு வர ஆரம்பித்தனர்.
அபிஷேகம் தடைபட்டிருப்பதற்கான காரணத்தை அறிந்து அவர்கள் அதிசயத்தார்கள்.”ஏதோ அபசாரம் நடந்து இருக்கிறது. அதனால் தான் பகவான் சோதனை செய்கிறார். என்று எண்ணினார்கள். அர்ச்சகர்களுக்கு முதல் நாள் இரவு, காலதாமதம் செய்து வந்த பூக்காரியின் நினைவு வந்தது.
“அவள் நேற்று கொண்டு வந்த மாலையல்லவா இது? நாம் கதவை மூடிக் கொண்டு சென்று விட்டோமே, எப்படி இது பகவானின் திருக்கழுத்தில் வந்தது? என்று புரியாமல் தவித்தனர்.
ஆலயத்திற்கு வந்த பக்தர்கள், “அந்தப் பூக்காரியை உடனே அழைத்து வாருங்கள்” என்றனர். அர்ச்சகர் பூக்காரியை தேடிக் கொண்டு சென்றார். வழக்கம் போல் அவள் பூந்தோட்டத்தில் பூக்களைப் பறித்து கொண்டிருந்தாள். அர்ச்சகர் அவளைச் சந்தித்து, நடந்தவற்றைக் கூறி, “நீ உடனே ஆலயத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பகவானின் பூஜை அப்படியே நின்று விடும். என்றார்.
பூக்காரி ஆலயத்திற்கு ஓடி வந்து சன்னதியில் நின்றாள். முதல் நாள் இரவு ஆலயத்தின் வாசல் கதவில் மாட்டிவிட்டுப் போன மாலை எப்படி உள்ளே இருக்கும் பகவானின் திருக்கழுத்திற்கு வந்தது என்று புரியவில்லை.
” உண்மையான பக்தியுடன் செலுத்தப்படும் காணிக்கையை பகவானே தானே ஏற்றுக் கொண்டு விடுவார். அதை யாரலும் தடுக்க முடியாது” என்று அங்கு குழுமியிருந்த பக்தர்கள் கூறினார்கள். அர்ச்சகர் பகவானுக்கு அர்ச்சனை செய்தார். கற்பூரம் ஏற்றினார். அதன் ஒளியில் பகவானின் மார்பில் இருந்த மாலை மேலும் அழகாக ஜ்வலித்தது.தீபாராதனை செய்து பூக்காரிக்கு துளசி தீர்த்தம் கொடுத்தார்.
“பகவனே, இனிமேலாவது தடையின்றி அபிஷேகம் செய்ய அனுக்கிரகம் செய்” என்று அர்ச்சகர் பிரார்த்தித்தவாறு பகவானின் திருக்கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றினார். அது சுலபமாக அவர் கைக்கு வந்து விட்டது. பூக்காரியின் உண்மை பக்தியைக் கண்டு அனைவரும் பாராட்டினார்கள்.
உண்மை பக்தி எங்கு, எவரிடத்தில் இருந்தாலும் பகவான் அதை ஏற்றுக் கொள்வார் என்பதற்கு இந் நிகழ்வு சான்றாகும்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment