Friday, 19 June 2020

ஆனித் திருமஞ்சனம் ஸ்பெஷல்.!!

அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு ஆனி மாதம் உத்திரம் நட்சத்தித்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஆடல்நாயகனை அலங்காரங்கள் செய்து, அவருடைய நடனத்தை காணும் திருநாள்.

தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது.

ஆண்டுக்கு_ஆறு_அபிஷேகம்:

ஆடல் வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும்.

ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள்.

ஏன் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்த வேண்டும்… ஏழு நாட்களோ, 10 நாட்களோ, 70 நாட்களோ நடத்தலாமே என்ற கேள்வி எழுகிறதல்லவா! இதற்கு காரணம் உண்டு.

பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். அதாவது, அதிகாலை, 4:00 மணிக்கு, திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜையும், 6:00 மணிக்கு, காலசந்தி எனப்படும் காலை பூஜையும் நடக்கும். பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜையும், மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜையும், இரவு, 7:00 மணிக்கு ராக்காலம் எனப்படும் இரவு பூஜையும், 9:00 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜையும் நடக்கும்.
தேவர்களும் இதே போல, ஆறுகால பூஜையை நடத்துவர். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு. அவர்களுக்கு தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை காலப்பிரிவுகள் உண்டு.

தை முதல் ஆனி வரை (காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை) உத்ராயணம்; ஆடி முதல் மார்கழி வரை (மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை) தட்சிணாயணம்.

அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி. காலைப் பொழுதோ, மாசி மாதம்; மதியம் – சித்திரை திருவோணம்; மாலைப்பொழுது – ஆனி; ராக்காலம் – ஆவணி; அர்த்தஜாமம் – புரட்டாசி.

இதனால் தான், தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம்.

இதை, ஆருத்ரா தரிசனம் என்பர். அடுத்து, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசியன்று காலை, 6:00 மணிக்கும், சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மதியம், 12:00 மணிக்கும் அபிஷேகம் செய்வர்.
இதையடுத்து, ஆனி உத்திரத்தன்று மாலை, 4:00 மணியளவிலும், அடுத்து, ஆவணி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 7:00 மணிக்கும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 9:00 மணிக்கும் அபிஷேகம் செய்வர்.

இந்த அபிஷேக நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் தான்.மார்கழி காலைப்பொழுதில் அபிஷேகம் காண வாய்ப்பில்லாதவர்கள், ஆனி, மாலைப்பொழுதில் இந்த அபிஷேகத்தை தரிசிக்கலாம்.

பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா.எட்டாம் நாள் வரை உற்சவமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித்தனியாக வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். அன்று பஞ்சமூர்த்திகளும் ஐந்து தேர்களில் எழுந்தருளி உலா வருவார்கள். மேலும் அப்போது ஆடலரசனே தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் நடைபெறும். இதனைத்தொடர்ந்து நடராஜரையும், அன்னை சிவகாமியையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.

ஆனந்த நடனம்: சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு நடன தரிசனம் அருள சிவன் இசைந்தார். இதனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யுமுனிவர் என்று அனைவரும் கூடினர். அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்ததும் சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம்குவித்து நின்றனர். நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. அந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார். !

இதயம் என்னும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார். இதை கண்டு தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே.
பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபைகளில் இந்த அபிஷேகங்களைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு.

தில்லைக்கு செல்லமுடிந்தவர்கள் பாக்கியவான்கள் .இயலாதவர்கள் அருகில் உள்ள கோயில்களில் ஸ்ரீ நடராஜ பெருமான் அபிஷேகம் கண்டு களித்து வாழ்வில் வளம் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அனைவரும் கலந்துக் கொண்டு அம்பலக் கூத்தனின் அருளினை பெறுவோம். சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக

“ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.”

பொருள்: எனது உடலில் உயிர் இருக்கும் வரையிலும் நான் எனது உள்ளத்தில் தில்லைச் சிற்றம்பலவனாரின் நினைவுகள் நிலை பெற்றிருக்குமாறுச் செய்வேன்; எனக்குத் தேனாக இனிக்கும் சிவபெருமான், எனக்கு வீடுபேறு அளித்து, என்றும் பேரின்பத்தில் திளைக்க வைப்பார்..

அபிஷேக காலத்தில் அழகு கோலம் காட்டும் ஈசனே, உமக்கு நமஸ்காரம். அபிஷேகத்தால் சந்தோஷத்தை அடைகிறவரே, உலகத்தோர் அனைவரது மனக்கவலையையும் போக்கும் மஹாப் பிரதோஷ புண்ணிய காலத்து நாயகனே, உமக்கு நமஸ்காரம். பிரம்மா, நாராயணன், நந்திகேசர், நாரதமுனி இவர்களுடன் சேர்ந்து நர்த்தனம் செய்யும் நடராஜரே, சித்தபேசனே உம்மை வணங்குகின்றோம்.

கனகஸபாகத காஞ்சனவிக்ரஹ
காமவிநிக்ரஹ காந்ததனோ
கலிகலிதாகில பாபமலாபஹ
க்ருத்திஸமாவ்ருததேஹ விபோ
குவலயஸன்னிப ரத்னவிநிர்மித
திவ்யகிரீட ஸுபாஷ்டதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

பொதுப் பொருள்: தங்க மயமாக ஜொலிக்கும் சபையில் அழகுத் தோற்றம் காட்டுபவரே, பொன்போன்று தகதகக்கும் பேரெழில் கொண்டவரே, மன்மதனை வீழ்த்தியவரே, திடகாத்திரமான சரீரம் கொண்டவரே, கலியினால் ஏற்பட்ட எல்லாவிகையான பாபங்கள் என்கிற அழுக்கைப் போக்குகிறவரே, யானைத் தோலை அணிந்தவரே, உலகையே காக்கும் பிரபுவே, நீலோத்பல மலர் நிறம்கொண்ட ரத்தினங்களால் இழைக்கப்பட்ட திவ்ய கிரீடத்தைச் சூடியவரே, மங்களமாக விளங்கும் எட்டு தோற்றங்களைக் கொண்டவரே, உலகின் நாயகனே, மங்களமானவரே, நடராஜப் பெருமானே, நமஸ்காரம். தாங்கள் சிறந்து விளங்க வேண்டும், நிரம்ப பாக்கியங்களை எங்களுக்கு அளித்தல் வேண்டும்.

திருச்சிற்றம்பலம் !

ஈசனே சிவகாமி நேசனே !

எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment