புகழ்பெற்ற நிர்ஜலா ஏகாதசி
2.6.2020 செவ்வாய்க்கிழமை
அந்தி சாயும் பொழுதில், அழகிய நந்த வனத்தில் பஞ்ச பாண்டவர்களும், அவர்களது மாமன் மகன் கண்ணனும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார்கள் .‘‘நாளை ஏகாதசி! விரதம் இருப்பது முக்கியம். விரதம் இல்லாமல் உண்பவர்கள், பாவத்தையே உண்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே நாளை நாம் விரதம் கடைபிடிக்க வேண்டும்’’ சொன்னது தர்மத்தில் சிறந்த யுதிஷ்டிரர் தான்.‘‘கவலை படாதே யுதிஷ்டிரா! நான் ஆயற்பாடியில் இருக்கும் போதே ஒவ்வொரு ஏகாதசியும் நிச்சயம் விரதம் இருப்பேன்! அன்று வெறும் வெண்ணெய் மட்டும் தான் உண்பேன் தெரியுமா உங்களுக்கு?’’ கண்ணன் பெருமிதத்தோடு மார்தட்டிக் கொண்டான்.
‘‘உன்னை பற்றி எங்களுக்கு தெரியாதா கண்ணா! ? ஏகாதசி அன்று உனது பல்லில் பச்சை தண்ணீர் கூட படாதே! காரணம் நீ தின்பது பன்னிரண்டு பானை வெண்ணெய் மட்டும் தானே மாயவா!’’ கண்ணனின் தோளில் கைபோட்ட படியே அர்ஜுனன் கண்ணனை நகைத்தான்.‘‘ஆம் கண்ணா! அதுவும் திருடித் தின்ற வெண்ணெய் ஆயிற்றே? சுவை அதிகமாகத்தான் இருக்கும்? திருடித் தின்றதெல்லாம் நீ, ஆனால் பழி என்னவோ பாவம் அந்த ஸ்ரீ ராமச் சந்திர மூர்த்திக்குத் தான். ஆம் யாரும் சாப்பாட்டு கிருஷ்ணன் என்று சொல்வதில்லையே.? சாப்பாட்டு ராமன் என்று தானே சொல்கிறார்கள்.’’ என்றபடி சகாதேவனும் அர்ஜுனனோடு சேர்ந்துக் கொண்டான்.
‘‘ஆமாம், ஆமாம், உலகில் நல்லவனாக வாழ்வதே ஒரு குற்றம் தான்.’’ நகைத்தபடி யுதிஷ்டிரரும் கண்ணை வாரினார். கண்ணன் கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தான். அப்போது தான் அவனது கண்களில் ஒரு ஓரமாக சோகமே வடிவாக அமர்ந்திருக்கும் பீமன் பட்டான். அவன் அப்படி அமர்ந்திருப்பது கண்ணனின் மனதை நெருடவே அவனது அருகில் சென்று அமர்ந்தான் கண்ணன். ஆதரவாக அவனை அணைத்தபடியே ‘‘என்ன பீமா ஏன் சோகமாக இருக்கிறாய்?’’ என்று வினவினான்.
‘‘ஒன்றுமில்லை கண்ணா! நான் உண்டு, உண்டு பழக்கப்பட்டவன். என்னால், உண்ணாமல் ஒரு நாளில்லை ஒரு பொழுது கூட இருக்க முடியாது. உனக்கே தெரியும் நான் வாயு குமாரன் என்று. வாயுவுக்கு சாமானன் என்று ஒரு பெயர் உண்டு. அந்த சாமானன் என்ற வாயு தானே உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளின் வயிற்றிலும் ஜீரண சக்தியாக இருக்கிறது. உலகிற்கே ஜீரண சக்தியாக இருக்கும் வாயுவின் மகன் நான். ஆகவே எனக்கு எவ்வளவு உண்டாலும் நிறைவு என்பது வருவதே இல்லை. ஆகவே, ஏகாதசி விரதம் என்னை பொறுத்த வரையில், குதிரை கொம்பு தான் கண்ணா!’’ சற்று இடைவெளி விட்டு கண்ணனின் முகத்தை கவனித்தான் பீமன். அது என்றும் போல அன்றும் ஒரு மாறாப் புன்னகையை பிரதிபலித்தது. அந்த புன்னகையின் நடுவே பீமனுக்கான கரிசனுமும் இழை ஓடுவது அவனுக்கு புரிந்தது. கண்ணனின் புன்னகை தந்த மன நிறைவில் விசும்பிய படியே தொடர்ந்தான் பீமன்....
‘‘ஏகாதசியன்று, நானும் விரதம் இருக்க, ஒரு வழி சொல்லேன் கண்ணா’’ கெஞ்சினான் பீமன். பீமனின் நிலை பரந்தாமனுக்கு நன்கு விளங்கியது. அவனுக்கு அருள் செய்ய மனதால் முடிவெடுத்து விட்டான் அந்த மாயவன். அவன் முடிவெடுத்த இரண்டொரு நொடிகளில், பாண்டவர்களின் இல்லத்திற்கு வியாச முனிவர் விஜயம் செய்தார்.பரந்தாமனின் அவதாரம், வேதத்தை நன்கு அறிந்து, அதை உலகிற்கு வகுத்து தந்தவர், பரம பாகவதரான, சுக பிரம்ம மகரிஷியின் தந்தை, பராசர முனிவரின் தவப் பயன், இவை எல்லாவற்றையும் விட பாண்டவர்களுக்கு அருமையான பாட்டன், வியாச முனிவர். எனில் வரவேற்பை பற்றி சொல்ல வேண்டுமா? தடபுடலாக இருந்தது. பஞ்ச பாண்டவர் ஐவரும், பாஞ்சாலியும், குந்தியும் அவரை வணங்கினார்கள். கண்ணனும் தான்.
அமைதியாக வியாசரை வணங்கிய கண்ணன், பீமன் அருகில் சென்றான் ‘‘பீமா! உனது சந்தேகத்தை வியாச முனிவரிடம் கேட்டு தெளிவு பெற்றால் என்ன? எப்படி என் யோசனை?’’ என்று பீமனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுத்தான். பீமனுக்கும் அது சரி என்று படவே, தனது கண்களாலேயே கண்ணனுக்கு நன்றிகள் தெரிவித்துவிட்டு பவ்யமாக வியாசரின் அருகில் சென்று அடக்கத்தோடு நின்று கொண்டான்.‘‘பீமா! உன் மனதில் ஏதோ வினா ஒன்று இருப்பது போல தெரிகிறதே!’’ வியாசரே மவுனத்தை கலைத்தார். அவரே பேச்சை தொடங்கியதால் தயக்கமின்றி பீமனும் தனது வினாவை கேட்க ஆரம்பித்தான்.‘‘சுவாமி, எமது சகோதரர்களும் திரௌபதியும் மாதா குந்தி தேவியும், ஏன்? கண்ணனும் கூட ஏகாதசிக்கு ஏகாதசி தவறாமல் விரதம் இருக்கிறார்கள். ஆனால் என்னால் இந்த சான் வயிற்றை கட்டுப்படுத்த முடியவில்லை சுவாமி..’’
‘‘பீமனுடைய வயிறு சான் வயிறாம்’’ அர்ஜுனன், கண்ணனின் காதுகளில் கிசுகிசுக்க இருவரும் கண்களாலேயே நகைத்தார்கள். அதை கண்ட வியாச முனிவர், அதை பொருட்படுத்தாமல் பீமனின் உரையில் கவனத்தை செலுத்தினார்.‘‘நான் ஏகாதசி விரதம் இருந்தே ஆகவேண்டுமா?. அந்த விரதத்தை கடைபிடிக்காவிட்டால் என்ன ஆகும்?’’‘‘பீமா! நீ மோட்சத்தையும் உயர்ந்த மேல் லோகங்களையும் விரும்புபவனாக இருந்தால் அந்த விரதம் மிகவும் முக்கியம். ஏகாதசி தேவதைக்கு அந்த ஸ்ரீமன் நாராயணன் கொடுத்த வரம் அது. அதுமட்டுமில்லாமல் ஏகாதசி அன்று உண்பவன் பாவத்தை மட்டுமே உண்கிறான் என்று வேதங்கள் சொல்கிறது. ஆகவே நீ அதை கடைபிடித்தே தீர வேண்டும். புரிகிறதா!’’ பரிவோடு சொன்னார் வியாசர்.
‘‘அனைவரின் உடலின் உள்ளும் ஒரு அக்னி இருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. அதற்கு ஜடராக்னி என்று பெயர். அந்த அக்னியே பசியாக அடிவயிற்றில் கொழுந்து விட்டு எரிகிறது. அந்த அக்னியை தனிக்கவே நாம் உண்கிறோம். ஆனால் நான் உண்ணாமல் போனால் அந்த (பசி) அக்னி என்னை எரித்தே விடும் சுவாமி. அதிலிருந்து என்னை காக்க ஏதாவது வழியை சொல்லுங்கள்.‘‘கெஞ்சினான் பீமன்.
‘‘பீமா! நீ சொன்னாயே “ஜடராக்னி” ஒவ்வொரு ஜீவனின் உள்ளேயும் அந்த ஜடராக்னியாக இருந்து உயிர்களை இயக்கும் அந்த மாயவனை வணங்குவது மனிதர்களான நமது கடமை இல்லையா? ( அஹம் வைஷ்வானரோ பூத்வா - நான் பிராணிகளின் வயிற்றில்ஜடராக்னியாக இருந்து அவர்கள் உண்பதை ஜீரணம் செய்கிறேன் என்று கண்ணன் கீதையில் சொல்வது நினைவு கூறத்தக்கது.)ஆகவே, கடமையில் வழுவாதவனாக விரதம் இரு!’’‘‘என்னால் ஒரு வேளை உணவு இல்லாமல் இருப்பதையே நினைத்து பார்க்க முடியவில்லை சுவாமி நான் எப்படி வருடத்தின் எல்லா ஏகாதசியிலும் விரதம் இருப்பேன்!’’ வெதும்பிய படி பீமன் கேட்டான்.‘‘போகட்டும் பீமா! நீ மற்ற ஏகாதசியில் விரதம் இருக்க வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு நாளாவது விரதம் இருப்பாயா?’’‘‘ஒரு நாள் என்றால் முயற்சிக்கிறேன் சுவாமி’’ யோசித்தபடி பகர்ந்தான் பீமன்.
‘‘நல்லது! எனில் நாளையே ஏகாதசி தான். அதுவும் நிர்ஜலா ஏகாதசி. ஏகாதசிகளில் சிறந்தது நிர்ஜலா ஏகாதசி. ஜேயேஷ்ட மாதம், சுக்ல பக்ஷ ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி என்பார்கள். அந்த நன்னாளில் நீ விரதம் இருந்தால் மற்ற எல்லா ஏகாதசியிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கும் பீமா!’’ என்ற வியாசரின் மொழியை கேட்டு பீமன் சந்தோஷத்தில் துள்ளினான். மற்ற பாண்டவர்களின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.‘‘எனில், குருதேவா அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை கூறுங்கள்’’ இடையிட்டான் தர்மன். அதைக் கேட்ட வியாசர் புன்னகைத்த படியே தொடர்ந்தார்.‘‘நிர்ஜலா ஏகாதசி நன்னாளில் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும் குழந்தைகளே. இந்த நியதியை நிர்ஜலா ஏகாதசி அன்று சூரியன் உதிப்பது முதல் மறுநாள் துவாதசி அன்று சூரியன் உதிக்கும் வரை கடைபிடிக்க வேண்டும்.’’
‘‘எனில், குருவே நித்ய கர்மங்களை செய்யும் போது ஆசமனம் செய்ய வேண்டி இருக்கும். (தெய்வீக காரியங்களை செய்வதற்கு முன்னால் உடலையும் மனதையும் தூய்மை படுத்திக்கொள்ள, இறைவனின் நாமத்தை கூறி மூன்று முறை நீர் அருந்துவது வழக்கம். இதையே ஆசமனம் என்று சொல்லுவார்கள்.) பிறகு எப்படி இந்த விரதத்தை கடைபிடிப்பது.?’’ பீமனும் தருமனும் ஒரே குரலில் கேட்டார்கள். அதை கேட்ட வியாசர் அருள் பொங்க புன்னகை பூத்தார்.‘‘நல்ல கேள்வி குழந்தைகளே! நிர்ஜலா ஏகாதசி அன்று ஆசமனம் செய்யும் போது, கைகளில் இறைவனின் நாமத்தை கூறி மந்திரிக்க நீர் எடுப்போம் இல்லையா? அப்போது நாம் கைகளில் எடுக்கும் நீரின் அளவு, ஒரு கடுகை, முழுகடிக்கும் அளவுக்கு மேல் இருக்கக் கூடாது புரிகிறதா?’’ சிக்கலான கேள்விக்கு சாதாரணமாக பதில் சொல்லிவிட்டு மர்மப் புன்னகை பூத்தார் வியாசர்.‘‘சுவாமி இந்த விரதம் இருப்பதன் பயன் என்னவோ?’’ பணிவோடு பீமன் கேட்டான்.
‘‘இந்த ஏகாதசியில் நான் கூறியவாறு விரதம் இருப்பவன், வருடத்தின் அனைத்து ஏகாதசியிலும் விரதம் இருந்த பயனை அடைவான். அவன் செய்த அனைத்து பாவங்களையும், இந்த ஏகாதசி விரதத்தின் பலன் என்னும் தீ, நொடியில் சாம்பலாக்கி விடும். நிர்ஜலா என்பதன் பொருளே - நீர் கூட இல்லாமல் என்பது தான். ஆகவே நீர் கூட அருந்தாமல் இந்த நன்னாளில் விரதம் இருப்பது உத்தமம். (முடியாதவர்கள், அவரவர்களின் உடல் நிலையை மனதில் கொண்டு உணவு அருந்தலாம்) இந்த ஏகாதசியில் விரதம் இருந்து மாயவனை வழிபட்டால், அந்த கோவிந்தனின் கருணையால் அனைத்து வரங்களும் கிடைக்கும். மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் எளிதில் அடையலாம். பொதுவாக ஒரு ஜீவன் இறந்ததும் அவனது ஆத்மாவை, எம பட்டர்கள் எமனின் முன்னிலையில் நிறுத்துவார்கள்.
எமன் அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப, தக்க நரகத்தில் அடைப்பான். ஆனால், நிர்ஜலா ஏகாதசி விரதத்தை கடை பிடித்தவனுடைய ஆத்மாவை, எம பட்டர்களால் தீண்ட முடியாது. அந்த ஆன்மாவை நேரிடையாக விஷ்ணு தூதர்கள், வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள். நிர்ஜலா ஏகாதசி அன்று மாலவனை வணங்கி, அவன் அடியவர்களுக்கு உணவு, நீர், பசுகள், இப்படி முடிந்ததை தானம் செய்ய வேண்டும். இப்படி நான் சொன்னது போல், தானம் செய்தவன், ஒரு கோடி தங்கத்தை ஒரே நாளில் தானம் செய்த பலனை அடைகிறான். இன்னும் நிர்ஜலா ஏகாதசியின் மகிமைகள் ஏராளம் மகனே, அவற்றை எல்லாம் சொல்லி மாளாது.’’ பெரிய உரையை நிகழ்த்தி முடித்தார் வியாச பகவான்.
அதை கேட்ட பீமனுக்கு பரம சந்தோஷம். நாளை நிச்சயம் விரதம் இருந்தே தீர வேண்டும் என்று முடிவு கட்டினான். தனது முடிவை முதலில் தனது தாயான குந்தி தேவியிடம் சொன்னான். அதை கேட்ட குந்தி ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனாள். இல்லாமல் போகுமா? பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் சேர்ந்து முதல் முறையாக ஏகாதசி விரதம் இருக்கப் போகிறார்கள். இதுவரை வயிற்றை கட்டுப் படுத்த முடியாமல் தவித்த பீமனும் நாளை அவர்களோடு சேரப் போகிறான். அவளது மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா? ஆனந்தக் கண்ணீர் வழிய தனது மகனை (பீமனை) ஆரத் தழுவிக்
கொண்டாள்.
‘‘பீமா! பஞ்ச பாண்டவர்களான நீங்கள் ஐவரும், நாளை சேர்ந்து முதல் முறையாக விரதம் இருக்கப் போவதால் இந்த ஏகாதசி இனி ‘‘பாண்டவ ஏகாதசி’’ என்று உங்கள் நினைவோடு அழைக்கப்படட்டும்! ஆசிகள்! ’’ என்று தனது அன்பை மொத்தம் கொட்டி பீமனுக்கு ஆசி வழங்கினாள். அதை கண்ட கண்ணன் மர்மப் புன்னகை பூத்தான். இந்த நாடகத்தை நடத்தியதே அவன் தானே. பீமனுக்காக வியாசரின் வடிவில் வந்து ஒரு தீர்வு சொல்லிவிட்டான் அந்த கோவிந்தன். ஆம் வியாசரும் அவனுடைய ஒரு அவதாரம் தானே? அதனால் தானே வியாசரை விஷ்ணு என்றும், விஷ்ணுவே வியாசர் என்றும் புராணங்கள் சொல்கிறது. (வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே.....).மேலே நாம் கண்ட சரிதம் பிரம்ம வைவர்த்த புராணத்தில் இருக்கிறது. அந்த புராணம் நமக்கு காட்டும் வழிமுறைகளை பின் பற்றி, வரும் நிர்ஜலா ஏகாதசி அன்று ( ஜூன் இரண்டாம் தேதி) விரதமிருந்து மாதவனை வணங்குவோம்...
தொகுப்பு: ஜி.மகேஷ்
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment