Saturday, 30 May 2020

பிள்ளைப்பேரு பார்த்த பேச்சி மகன் மாயாண்டி.!!

தனக்கர்குளம், நெல்லை

நெல்லை மாவட்டம் தனக்கர்குளத்தில் பெரிய குளத்தாங்கரையில் கோயில் கொண்டுள்ள ஆலமூட்டு சுடலை தன்னை நம்பி வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் உருவம் கொண்டு பிள்ளைப்பேறு பார்த்தார்.
ஆங்கார வடிவமாக திகழும் என் அப்பன் மாயாண்டி தஞ்சம் என்று தன்னிடம் வரும் அடியவர்களுக்கு எந்த ரூபத்திலாவது வந்து காத்தருள்வார் என்பது உண்மையிலும் உண்மை. அந்த வகையில் இந்த ஆலமூட்டு சுடலையின் மகிமையை என் தாத்தா சொல்லி செவி வழி கதையாக கேட்டதை இந்த ஆன்மிக மலரில் பதிவு செய்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த எங்கள் நிறுவனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை கூறுகிறேன்.
நெல்லை மாவட்டம் உதயத்தூரில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு  முன்பு நிலச்சுவந்தாராக இருந்தவர் சொக்கலிங்கம் பிள்ளை. இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உண்டு. கடைசிப்பிள்ளை பெண் குழந்தை என்பதால் ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார். அண்ணன்களும் தங்கையை பாசமாக போற்றி வளர்த்து வந்தனர்.
சொக்கலிங்கம்பிள்ளை தோட்டத்தில் முத்தையன் வேலைப்பார்த்து வந்தான். இருபத்தைந்து வயது நிரம்பிய வாலிபன். ராஜேஸ்வரிக்கு இளநீர் மீது அதிக நாட்டம் உண்டு. அதனால் முத்தையனிடம் உரிமையோடு தினமும் இளநீர் கொண்டு வரவேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தாள். ஒரு நாள் இளநீர் கொண்டு வர மறந்து விட்டான் முத்தையன். அன்றைய தினம் கடும் சினம் கொண்டாள். மறுநாள் அவளை சாந்தப்படுத்துவதற்காக பல விதமான பழ வகைகள், இளநீர் கொண்டு வந்து கொடுத்தான். இந்த உரிமைப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒரு நாள் இருவரும் தொழுவத்தில் நின்று பேசிக்கொண்டிருந்ததை வண்டிக்காரன் ராமையா பார்த்து விடுகிறான். எங்கே தந்தையிடம் சொல்லி பிரச்சனையாகி விடுமோ அதனால் முத்தையன் உயிருக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று அச்சம் கொண்ட ராஜராஜேஸ்வரி மற்றும் முத்தையன் இருவரும் அன்று இரவே வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள்.

எங்கு தேடியும் கிடைக்காததால் ராஜேஸ்வரியின் தாயார் காமாட்சி, மற்றும் தந்தை சொக்கலிங்கம்பிள்ளை கவலையுற்றனர். மாதம் பத்து கடந்த நிலையில் ஒரு நாள் வண்டிக்காரன் ராமையா வேகமாக ஓடி வந்து சொக்கலிங்கம்பிள்ளையிடம்
‘‘ஐயா...’’
‘‘சொல்லு ராமு’’
‘‘அம்பட்டையன் இசக்கி உங்கள பார்க்கணுமுன்னு சொல்லுதான்’’
‘‘அப்படியா பின் பக்கமா வரச்சொல்லு’’
‘‘சரிங்க ஐயா’’
இசக்கி பின்பக்கமாக வர, சொக்கலிங்கம்பிள்ளை பின் வாசல் வழியாக தொழுவத்தின் அருகே வருகிறார். அப்போது
‘‘என்னல இசக்கி...’’
‘‘ஐயா,  சங்கநேரி பக்கம் ஒரு ஜோலியா போயிருந்தேன், அப்போ நம்ம ஆத்தா ஊர் பொதுகிணத்தில தண்ணி எடுத்திக்கிட்டு இருந்தாங்க, புள்ளதாச்சியா இருந்தாங்க..’’
‘‘ஏலே, நிசமாத்தான் சொல்லுதியா..’’
‘‘ஆமாங்கய்யா...’’ உடனே சொக்கலிங்கம்பிள்ளை தனது மூத்த மகன் சட்டநாதனை அழைத்தார்.
‘‘இசக்கி நல்ல சேதி கொண்டு வந்திருக்காம்ல அவனுக்கு பத்துமரக்கா நெல்லை கொடுத்து அனுப்பு..’’ என்று கூறுகிறார்.

மாலையில் மகனை அழைத்த சொக்கலிங்கம்பிள்ளை
‘‘நாதா, மேலத்தெரு கொம்பய்யாகிட்ட நான் சொன்னேன் சொல்லி இந்த பணத்தை கொடுத்து கூட நாலுபேர கூட்டிட்டுப்போய் ராத்திரியோட ராத்திரியா ஓடு காலி நாயையும், அந்த பண்டார பயலையும் கண்டதுண்டமா வெட்டிப்போடச் சொல்லு. நீ போகாத சொல்லிட்டு வந்திரு. நாளைக்கு சூரியன் உதிக்கும் போது அதுங்க செத்துட்டுண்ணு சேதி வரணும். போ..’’
என்று கூறி அனுப்பி வைக்கிறார். சட்டநாதன் மேலத்தெரு கொம்பைவிடம் சொல்ல, கொம்பை நான்கு பேரை துணைக்கு அழைத்துக்கொண்டு சங்கநேரி செல்கிறார்கள்.
அங்கே மறுநாள் நடக்க இருக்கும் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக ராஜேஸ்வரி முத்தையா வசித்து வந்த தெருவிலுள்ளவர்கள் ஆதரவற்ற புள்ளைங்களுக்கு நாம செய்வோம் என்று எண்ணி வளைக்காப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லா பொருட்களையும் வாங்கி வைத்துவிட்டு அவரவர்கள் வீடுகளுக்கு சென்றனர். எல்லோரும் போன பின்பு அந்த வீட்டிற்குள் அருவா, கம்புகளுடன் கொம்பையாவும், அவர் கூட்டாளிகளும் செல்கின்றனர். வீட்டிற்கு தகராறு நடக்கிறது. பின்வாசல் வழியாக ராஜேஸ்வரியை அழைத்துக்கொண்டு முத்தைய்யன் ஓடினான். இருவரும் சங்கநேரி கடந்து கோலியான்குளம் நான்கு முக்கு பாதை கடந்து தனக்கர்குளம் நோக்கி வருகிறார்கள்.

பின்னாடி அவர்களும் துரத்திக்கொண்டு வருகிறார்கள். பாதை வழியே போனால் விரைந்து வந்து பிடித்துவிடுவார்கள் என்று எண்ணிய முத்தையன் தோட்டக்காடுகள் வழியே வருகிறார்கள். அங்கே செம்மறி ஆட்டுக்கிடை மறிக்கப்பட்டிருந்தது. குட்டி ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் ஆட்டுக்கூடு(பனை ஓலையால் செய்யப்பட்டிருக்கும்) பெருங்கூட்டுக்குள் ராஜேஸ்வரியை இருக்கச் சொல்லி மூடிவிட்டு துரத்தி வந்தவர்கள் பார்க்கும்படி ஓடுகிறான் முத்தையன். ஓடும் சத்தம் கேட்டு அவர்கள் போய்விட்டார்கள் என்றெண்ணி கூட்டை திறந்து வெளியே வருகிறாள் ராஜேஸ்வரி. வந்தவள் நள்ளிரவு நேரம் நடந்த பெரியகுளத்தாங்கரை வந்து ஆலமரத்தின் கீழ் அமருகிறாள். நிமிர்ந்து பார்த்தாள் சுடலைமாடசுவாமி பீடம்.
அழுதாள்...
நாலு மாசம் ஆன நடை தாண்டக்கூடாது. ஆனா நிறைமாச கர்ப்பிணியா உன்கிட்ட வந்திருக்கேன். எனக்கு தெரிஞ்சு போச்சி இனி உசுரோடு இங்கிருந்து போக முடியாதுண்ணு. நீ பேயா இருந்தா என்ன சாப்பிட்டுவிடு... தெய்வமா இருந்தா என்னைக் காப்பாத்து என்றாள்....
மையான அமைதி, பட்சிகளின் சத்தம் நடு சாமப்பொழுது. அச்சமே ராஜேஸ்வரிக்கு பிரசவவலியை கொடுத்து விட்டது. அழுது புரண்டாள். அப்போது என் அப்பன் மாயாண்டி சுடலை. ஐம்பது வயது மதிக்கத்தக்க சுமங்கலி பெண் உருவம் கொண்டு வந்தார். ஏம்மா இப்படி அழுகிற வா அந்த வேப்பமரத்துக்கிட்ட போவோம் என்று கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வருகிறார். அங்கே வயதான பெண் உருவம் கொண்டு இரண்டு பாட்டிகள் நிற்க, அவர்கள் துணியைக் கொண்டு நாலாபுறமும் சுத்திக்கட்ட துணியால் செய்யப்பட்ட கூரையை தயாராக்கினார்கள். துணியெல்லாம் வேட்டியாக இருப்பதை கண்ட ராஜேஸ்வரி காரணம் கேட்டாள், அதற்கு அந்த வயதான பெண்மணிகள் இது ஆம்பளை மட்டும் குடித்தனம் பண்ற இடம். அதனால் வேட்டி மட்டும் தான் உண்டு. அதப்பத்தி உனக்கென்ன.. உனக்கு மறப்பு இருக்கா பாரு. என்றனர். துணி கூடாரத்திற்குள் பிரசவம் பார்க்கப்பட்டது. வந்தவர்கள் யார்? என் அப்பனை தில்லையில் ஆதரித்தார்களே தாயான பேச்சியும், பிரம்மசக்தியும் தான்.
ராஜேஸ்வரி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தையின் சத்தம் கேட்டு அவ்விடம் வந்தான் முத்தையன். குழந்தையோடு இருவரும் இருக்க. குளத்தின் மறுகால் பக்கம் ஓடி வந்துக்கொண்டிருந்த கொம்பையா முன்னாடி போய் நின்றார் என் அப்பன் சுடலை. எப்படி தெரியுமா அவனது சித்தப்பா சுந்தரபாண்டி ரூபத்தில். சுருட்டி பிடித்தபடி ஒத்த கரை வேட்டியைக்கட்டிக்கொண்டு நின்றார் சுடலை. ஏலே... இந்த நேரத்தில இங்க உனக்கென்ன வேலை,
சித்தப்பு அத நான் கேக்கணும்
மறவனுக்கு ராத்திரியும் பகலும் ஒண்ணு தான சித்தப்பு
உன் மகனுக்கு வாந்தி பேதியாகி மூச்சில்லாம கிடக்கான் போய் பாருல அத சொல்லத்தான உன்ன பார்க்க வந்தேன் என்று கூற.. உடனே பதறிய கொம்பையா தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டான். வீட்டில் அவன் அவ்வாறிருக்க தனது தெய்வத்தை வேண்ட அவனது தெய்வமான தூசிமாடன் அசிரிரீயாக நடந்ததை சொல்ல தவறை உணர்ந்தான்.

முத்தைய்யா, ராஜேஸ்வரியிடம் வந்த மாயாண்டி சுடலை, நீங்க எங்கும் போக வேண்டாம், பொழுது விடியப்போகுது ஊருக்குள்் இருக்கிற பெரிய பண்ணையார் வீட்டுக்கு போங்க...அவரு உனக்கு வேலை கொடுப்பாரு. தங்கிக்க வீடும் கொடுப்பாரு. இனி எந்தக்கவலையும் வேண்டாம் என்று கூறி அனுப்பினார் என் அப்பன் மாயாண்டி சுடலை.
உடனே பெரிய பண்ணையார் (ராமச்சந்திர ரெட்டியார்) (அந்தக்காலத்தில் ரெட்டிமார்கள் பண்ணையார் என்று அப்பகுதிகளில் அழைக்கப்பட்டனர்.) கனவில் தோன்றிய என் அப்பன் மாயாண்டி சுடலை நடந்ததை கூறி உதவி செய்யும்படி சொன்னார். மறுநாள் காலை பண்ணையார் அவர்களை வரவேற்று உங்களால் தான் என்் சாமி என்னிடம் பேசினார் என்று மெய்யுருகி கூறியதோடு ராஜேஸ்வரியை மகளாகவும், முத்தைய்யனை மருமகனாவும் நடத்தி வந்தார்.
சுடலைமாடசுவாமியால் பிரசவம் பார்க்கப்பட்ட ராஜேஸ்வரியின் வம்சா வழிகள் இப்போது அமெரிக்காவில் குடியுரிமையே பெற்றுள்ளனர். அந்த அளவிற்கு செல்வ செழிப்பு, கல்வியில் மேன்மையும் பெற்று திகழ்கின்றனர்.
என் அப்பன் மாயாண்டி சுடலைக்கு கோயில் ெபரிய அளவில் கட்ட முன் வந்தனர். என் அப்பன் மழை பெய்தால் நனைவேன். வெயிலடிச்சா காய்வேன் இதுவே இந்த மரத்து மூடே போதும் என்று சொல்ல கோயில் கட்டப்படாமல் உள்ளது. செல்வச்செழிப்பில் கட்டியே தீருவேன் என்று இறங்கியவர் பணி தொடங்கும் முன்னே மாரடைப்பால் இறந்து போக,, கவனிப்பாரின்றி கோயில் இருந்தது. கொம்பையாவின் வம்சா வழியினர் மாதக்கடைசி வௌ்ளிக்கிழமை எண்ணெய் மஞ்சனை சாத்தி விளக்குப் போட்டு வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொடை நடந்ததாக சொல்கிறார்கள்.
நம்பி வந்தவர்களுக்கு வாழ்வு தருவார் என் அப்பன் மாயாண்டி சுடலை. அவருக்கு பிடிக்காதபோது அதை செய்யக்கூடாது. நம் வீட்டு விளக்கானாலும் கை வைத்தால் சுடத்தான் செய்யும்...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment