நெடுவயல், கடையநல்லூர், திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ளது நெடுவயல். இவ்வூரில் அமைந்துள்ளது உத்தமி அம்மன் கோயில்.
தென்காசியிலிருந்து தெற்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது அச்சன்புதூர் கிராமம். இங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த அக்கா தங்கை இருவரும் அடுத்த, அடுத்த ஊர்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இதில் அக்காவிற்கு குழந்தை இ்ல்லை. தங்கைக்கு ஆறு குழந்தைகள். தங்கையின் குழந்தைகள் மேல் அதிகம் பாசம் வைத்திருந்த அக்கா, வாரம் தவறாமல் செவ்வாய் கிழமை தோறும் தங்கை வீட்டுக்கு வகை, வகையாய் பலகாரம் செய்து கொண்டு சென்று குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு மகிழ்ச்சியோடு தன் வீட்டிற்கு வருவாள். இது சில மாதங்கள் தொடர தங்கையின் வீட்டு அருகே வசித்து வந்த மூதாட்டி ஒருவர் ‘‘புள்ள இல்லாத உங்க அக்கா மலடி வந்து உம்புள்ளங்கள கொஞ்சுறதும், ஊட்டுறதும் உனக்கு வேணுமுன்னா நல்லா இருக்கலாம். ஆனா குழந்தைங்களுக்கு கண்ணு விழுந்திரும். அதனாலதான் நீ என்ன ஊட்டம் கொடுத்தாலும் உன் புள்ளங்க சத்து புடிக்காம இருக்குதுங்க’’ என்று கூற, மனம் மாறினாள் தங்கை.
அந்த வாரம் செவ்வாய் கிழமை வந்தது. அக்கா வரும் நேரமாயிற்றே என்று எண்ணிய தங்கை, தனது குழந்தைகளுக்கு உணவு கொடுத்து, கோழி அடைக்கும் கூடைக்குள் குழந்தைகளை அடைத்து விட்டாள். அதிரசம், வடை, முருக்கு உள்ளிட்ட பலகாரங்களோடு அக்கா வந்து, குழந்தைகளை எங்கே என்று தங்கையிடம் கேட்க, இரண்டு தெரு தள்ளியிருக்கும் உன் கொழுந்தனாரு(தனது கணவன்) சொந்தத்தில உள்ள பெண் வந்து குழந்தைகளை அழைத்து சென்றிருப்பதாக கூறிவிடுகிறாள். மாலை வரை காத்திருந்த அக்கா, ‘‘சரி, பொழுது சாய்ந்திட்டு, புள்ளைங்ககிட்ட இந்த பலகாரங்கள கொடு’’ என்று கூறி, தான் கொண்டு வந்த பலகாரங்களை தங்கையிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறாள். அக்கா சென்றதும் தங்கை குழந்தைகளை அடைத்து வைத்திருந்த கூட்டை திறந்து பார்க்கிறாள். அங்கே குழந்தைகள் உயிரற்று படுத்த நிலையில் இருந்தன. கத்தினாள், கதறினாள். அக்கா வை தேடி ஓடினாள். நடந்ததை கூறினாள். உடனே தங்கையோடு விரைந்து வந்த அக்கா, தண்ணீர் தெளித்து, தான் கொண்டு வந்த பிரம்பால் லேசாக தட்ட, குழந்தைகள், தூங்கி விழித்தது போல் எழுந்து இருந்தன.
தவறு இழைத்த தங்கையை மன்னித்து குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த உத்தமியே என்று அக்காவின் கையை பிடித்து கண்கலங்கி நன்றி தெரிவித்தாள் தங்கை.
இது நடந்து முன்னூறு ஆண்டுகளுக்கு பின் அப்பகுதியில் வேளாண்மை செய்வதற்காக, உழவர் ஒருநாள் உழுது கொண்டிருக்கும் போது அதே வயலின் வடகிழக்கு மூலையில் உழும்போது மாடு இரண்டும் நகரவே இல்லை, உழவர் அடித்தும் மாடுகள் நகராதது கண்டு, மண் வெட்டியோடு வந்து அந்த இடத்தை தோண்டி பார்க்கும் போது அமர்ந்த நிலையில் அழகான அம்மன் சிலை இருந்தது. அந்த சிலையை எடுத்த உழவர். தனது வயிலின் ஒரு பகுதியில் ஓலை கீற்றால் கூரை அமைத்து கோயில் கட்டினார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அம்மன் தான் யார் என்பதையும், தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் கூறியது. அதன்பின்னர் இக்கோயில் அம்மன் உத்தமி அம்மன் என்ற பெயரோடு அழைக்கப்பட்டாள். அக்கா முப்பிடாதி என்றும் தங்கை வடக்கு வா செல்வி என்றும் கூறப்படுகிறது.
நாளடைவில் ஊரார்கள் ஒன்று கூடி கோயில் பெரிதாக கட்டினர். நித்ய பூஜைக்காக பூசாரி ஒருவரையும் நியமித்திருந்தனர். ஆற்காடு நவாப் ஆட்சியின் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரப்பகுதியிலுள்ள வேளாண்மை நிலங்களை ஒருங்கே இணைக்கும் பொருட்டு முடிவு செய்த நவாப், இந்த கோயிலை இடிக்க திட்டமிட்டார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையறிந்த நவாப் நாளை நானே வருகிறேன். எவன் எதிர்க்கிறான் பார்ப்போம் என்று கூறி, மறுநாள் கோயிலுக்கு படை வீரர்களுடன் வருகிறார்.
நவாப் முன்னிலையில் வீரர்கள் நிற்க, வெளியூரைச் சேர்ந்த கூலியாட்கள் கோயிலை இடிக்க முற்படுகின்றனர். அப்போது கோயில் பூசாரியும், நிர்வாகியும் ஓடிச்சென்று நவாப்பிடம், கோயிலை இடிக்க வேண்டாம் என்று மன்றாடினர். அதற்கு செவி சாய்க்காமல் நவாப் இடிக்க உத்தரவிட்டார். ஒருவர் முதலில் இடிக்க முயல்கையில் சுவரில் கீறல் விழுந்த இடத்திலிருந்து ரத்தம் கொட்டியது. அந்த நேரம் ஒரு பெண்ணின் குலவைச்சத்தம் ஓங்கி ஒலித்தது. அதுவே மறுவிநாடி ஒப்பாரி சத்தம் ஆனது. மீறி இடிக்க முற்படும்போது நவாப் மற்றும் அவரது வீரர்கள், கூலியாட்கள் என அங்கே இருந்த முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு அந்த நிமிடமே கண் பார்வை தெரியாமல் தவித்தனர்.
உடனே கோயில் இடிப்பு பணியை நிறுத்த உத்தரவிட்டார் நவாப், பூசாரியை அழைத்து பேசினார். பூசாரியின் வேண்டுதலுக்குப்பின் அவர்கள் கண்பார்வை பெற்றனர். அதன் பின்னர் பேசிய நவாப், பூசாரியிடம் கோயிலுக்கு என்ன வேண்டும் கேள் என்றார். அப்போது பூசாரி கோயிலுக்கு விளக்கு எரிக்க எண்ணை வேண்டும் என்றார். அதன்படி நவாப் எண்ணையை தானமாக அளித்து வந்தார். நாளடைவில் இந்த கோயிலுக்கு வடக்கே குடியிருப்புகள் தோன்றின. அங்கே உருவாக்கப்பட்ட கோயில் புதுவீட்டம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இது தங்கை கோயிலாகவும், ஊருக்கே தெற்கே உள்ள உத்தமி அம்மன் கோயில் அக்கா கோயிலாகவும் சொல்லப்படுகிறது. முப்பிடாதி அம்மன் தான் உத்தமி அம்மனாகவும், செல்வி அம்மனே புதுவீட்டம்மனாகவும் இருப்பதாக கூறுகின்றனர்.
உத்தமி அம்மனுக்கு தை மாதம் முதல் செவ்வாய் கொடியேற்றி, இரண்டாவது செவ்வாய் திருவிழா நடக்கிறது. 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் போது புதுவீட்டம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, அக்காவிடம் மன்னிப்பு கோரும் பொருட்டு உத்தமி அம்மனை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது பார்க்கும் பக்தர்களை பரவசப்படுத்துகிறது. விழாவை ஐந்து சமுதாயத்தினர் முன்னின்று நடத்துகின்றனர். நெடுவயல், அச்சன்புதூர் கிராம மக்களின் குலத்தெய்வமாக உத்தமி அம்மன் திகழ்கிறாள். உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களுக்கு உயர்வான வாழ்வு அளிக்கிறாள் உத்தமி அம்மன். இக்கோயில் கடையநல்லூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது...
சு.இளம் கலைமாறன்
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment