தாமரங்கோட்டை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர்.
தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தாமரங்கோட்டை கிராமத்தில் காவல் தெய்வமாக அருட்பாலிக்கிறாள் நல்லம்மா. தாமரங்கோட்டை கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவைய வேளாளர், அவரது மனைவி அமிர்தம் இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. பல கோயில்கள் சென்றும் பயனற்று போக, சக்தியின் அவதாரமான லலிதாம்பிகைக்கு பல்வேறு விரதம் இருந்து பயபக்தியுடன் அமிர்தம், அம்பாளை மனமுருகி வழிபட்டதன் காரணமாக கர்ப்பமுற்றாள். இதையறிந்த அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்தார். உறவினர் மற்றும் ஊராரை அழைத்து விருந்து நடத்தினார். அம்பாள் அருளால் அமிர்தம் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அவைய வேளாளர் தன் தந்தையின் பெயரான நல்லதம்பியின் பெயரை நினைவூட்டும் விதமாக மகளுக்கு நல்லம்மா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். பெயருக்கேற்றபடி நல்லம்மா, நல்ல மனதுடன் திகழ்ந்தார்.
நல்லம்மாவுக்கு வயது பத்து நடந்துகொண்டிருக்கும் போது அவரது உறவுக்காரரான கட்டைய வேளாளர் மகன் வீரனுக்கு மண முடித்து வைத்தனர். அவரது பெற்றோர்கள். அப்போது பால்ய விவாகம் வழக்கத்தில் இருந்தது. நல்லம்மாவுக்கு பன்னிரெண்டு வயது முடியும் தருவாயில் பூப்பெய்தினாள். சடங்கு முறைகள் ஊரே வியக்கும் வண்ணம் இரு வீட்டாரும் செய்திருந்தனர். விருந்து உபசரனைகள் முடிந்தது. மறுநாள் பதிமூன்று வயது தொடங்கியது. குழந்தை பருவம் மாறி குமரியானாள் நல்லம்மா. நல்வாழ்வு மலரும் என நம்பி இருந்தாள். வாழ்க்கை நெறிமுறைகளையும், கணவனிடத்தும், புகுந்த வீட்டிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர் அவளது பெற்றோர். சடங்கு நடந்த பிறகு அடுத்து வந்தது ஆடி மாதம் இதனால் இரண்டு மாதங்கள் தாய் வீட்டில் இருந்தாள் நல்லம்மா.
ஆடி மாத இறுதி அன்று மகளுக்கும், மருமகனுக்கும் விருந்து கொடுத்து முறுக்கு, சீடை, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்கள் கொடுத்து குதிரை வண்டி பிடித்து நல்லம்மாவின் மாமனார் வீட்டுக்கு அவளது பெற்றோர்கள் கொண்டு விட்டனர். அன்று முன்னிரவு பொழுதில் நல்லம்மாவின் கணவன் பதினேழு வயது கொண்ட வீரன் நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்தான். தண்ணீர் கேட்ட வீரனுக்கு ஓடி சென்று தண்ணீர் எடுத்து கொடுத்து விட்டு, அவனது பெற்றோரை அழைத்து வந்தாள் நல்லம்மா. அதற்குள் வீரன் இறந்து போனான். குடித்த தண்ணீர் தொண்டைக்குள் இறங்கும் முன்னே, உயிரை விட்டு விட்டான் வீரன். இரவு முழுதும் அவனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அழுகையும் ஒப்பாரியுமாய் தொடர்ந்தது. பொழுது விடிந்தது. வெளியூரிலிருந்தும் உள்ளூரிலிருந்தும் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என வீட்டுமுன் பெரும் கூட்டமே கூடியது.
எல்லோரும் கண்ணீர் முகத்துடன் நிற்க, எந்த வித சஞ்சலமும் இன்றி எதையோ இழந்ததை போல அழாமல், கண்ணீர் சிந்தாமல் அமைதியாக வெளித் திண்ணையில் தன் தாயின் அருகே அமர்ந்திருந்தாள் நல்லம்மா. அவளது தந்தையின் அண்ணன் மனைவி, நல்லம்மாவின் பெரியம்மா வந்தாள். ‘‘அடிப்பாவி மகளே… உனக்கு புருஷன் செத்த சோகம் புரியலையோ… வெள்ளாந்தியா இருக்காளே…’’ என்று ஒப்பாரி வைத்தாள். அப்போது வீரனின் உடல் குளிப்பாட்டி மயானம் கொண்டு செல்லத் தயாரானது. மாண்ட சிறுவனுக்கு மாலையிட்டு அழகு படுத்திக்கொண்டிருந்தனர். மயானம் கொண்டு சென்றனர். ஆண்கள் மட்டுமே மயானம் செல்ல வேண்டும். என்ற எழுதப்படாத விதியின்படி அவர்கள் சென்று கொண்டிருக்க, குளித்து முடித்து நீராட்டி அழகுபடுத்தி பட்டு உடுத்தினர்.
மணக்கோலத்தில் கூட இந்தளவுக்கு அழகுபடுத்தவில்லை. கணவன் பிணக்கோலம் கண்ட பிறகு அளவுக்கு அதிகமாக அழகுபடுத்தியிருந்தனர் கன்னியவள் நல்லம்மாவை. அவளை, அவளது அப்பாவோடு பிறந்த அத்தையும், கணவரின் தாய்மாமன் மனைவியும் மயானத்துக்கு அழைத்து வந்தனர். மயானத்தில் வீரனின் உடலுக்கு அவனது தந்தை தீ மூட்டினார். அருகே புதுப்பெண்ணாக இருந்த நல்லம்மா நடக்கப்போகும் நிகழ்வை எண்ணாமல், என்ன நடக்கிறதே என்று தெரியாமல் கணவன் வீரன் மீது எரியும் நெருப்பை இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே நின்றவர்கள் முணுமுணுத்துக் கொண்டதை அவள் கேக்கலானாள். ஆம்…..‘‘உடன் கட்டை ஏறச் சொன்னா எங்க ஏறுவா, யாராவது பின்னாடி இருந்து தள்ளி விடுவோம்மா… அப்போது அவளது தந்தை வந்து என் பொண்ணுக்கு யாதும் அறியா வயசு, அவள அப்படியே கூட்டிட்டு போங்க… சம்பிராதயம் எல்லாம் எப்படியாம் இருந்துட்டு போட்டும்.
எனக்கு எதுவும் வேண்டாம். என் உசுரு இருக்கிற வரை என் மகள சாவு நெருங்கக் கூடாது’’ என்றார். முடிவில் அனைவரும் ஒரு மித்த கருத்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு புறப்படலானார்கள். ‘‘அப்போது நீங்க போங்க இப்ப வந்திடுறேன்’’ என்று வாய் திறந்தாள் நல்லம்மா. உடனே அவர்கள் திரும்பி இரண்டு எட்டு எடுத்து வைத்திருக்கும் நிலையில் வெட்டியான் கத்தினான். ‘‘ஐயோ… போச்சே... போச்சே…’’ என்று நல்லம்மா வீரனின் உடலில் பற்றி எரிந்த நெருப்பில் பாய்ந்தாள். தன் உயிரை மாய்த்தாள். அவளது தந்தை கத்தினார், கதறினார். அன்றிரவு அவளது தந்தையின் கனவில் தோன்றிய நல்லம்மா, ‘‘அப்பா கலங்காதீங்க, நான் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பேன்’’ என்றாள். மகளை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த அவளது தந்தை அவள் உருவில் சிலை அமைத்து கோயில் எழுப்பினார்.
அறியாத வயதில் மணமுடித்து கன்னியாகவே உயிரை மாய்த்த நல்லம்மா தாமரங்கோட்டை கிராம மக்களுக்கு காவல் தெய்வமானாள். அவள் இறந்த சித்திரை மாதத்தில் தீக்குதித்த அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெறுகிறது. நல்லம்மாவின் மறைவிற்கு பிறகு அந்தக் கிராமத்தில் பால்ய திருமண முறை நிறுத்தப்பட்டது. இப்போதும் அக்கிராமத்தில் நல்லம்மாவை குல தெய்வமாக வழிபட்டு வரும் மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் அம்மனுக்கு பூ கட்டி வைத்து பார்ப்பது, திருமாங்கல்யம் செய்ததும் அதை அம்மன் பூஜையில் வைத்து எடுப்பது என திருமணம் தொடர்பான அனைத்து செயல்களுக்கும் நல்லம்மாவை நினைத்தே செய்கின்றனர்.
கணவனின் சடலத்தில் வைக்கப்பட்ட தீயில் குதித்து உயிரை மாய்த்ததால் நல்லம்மா தீ குதித்த அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். தனது வாழ்க்கை தொடங்கிய நாளிலேயே முடிந்து போனதால் தன்னை நம்பி வணங்கும் பெண்களின் வாழ்க்கை நலமுடனும், வளமுடன் இருக்க தெய்வமாய் துணை இருந்து தீ வினைகளை வேரறுத்து நல்வாழ்வு அளிக்கிறாள், என்கின்றனர் அவ்வூர் பெண்கள். தீக்குதித்த அம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் முத்துப்பேட்டை ஊரிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ள தாமரங்கோட்டை கிராமத்தில் உள்ளது...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment