Saturday, 7 September 2019

திருவோணம் (ஓணம்) பண்டிகையின் சிறப்பு.!!

ஆவணி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். திருவோணம். என்றதுமே இது கேரளத்துக்கு மக்களுக்கு உரிய பண்டிகை  என்று எண்ணுகிறார்கள். திருவாதிரையை போன்று இந்தத் திருவோணம் என்னும் பண்டிகையும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பண்டிகை ஆகும். புத்தாடை  உடுத்தி புதுப்பொலிவுடன் தமிழகத்தில் கொண்டாடி வந்த காலம் ஒன்று இருந்ததை வரலாறு கூறும். இப்போது இது கேரளத்தின் முக்கியப் பண்டிகையாக  திகழ்ந்து வருகிறது. ' அத்தம் பத்து ஓணம்' என்று பத்து நாட்கள் கொண்டாடப்படுவது இந்த பண்டிகை ஆகும்.


திருமாலின் பிறந்தநாளான இந்த ஓணம் நாளில் தமிழர்கள் சிறப்புற வழிபட்டு வந்தார்கள். ஆனால், இப்போது மலையாளத்திற்கும் சொந்தமாகிவிட்டது.  பத்துப்பாட்டில் ஒன்றான மதுரை காஞ்சியிலும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும் திருவோண விழா சிறப்பித்து போற்றப்படுகிறது. தேவாரத்திலும் இவ்விழாவின்  சிறப்பு எடுத்துரைக்கப்படுகின்றது. திருவோணப் பண்டிகை மலையாள நாட்டில் ஒரு தேசிய பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவோணப் பண்டிகை  பற்றி கதை ஒன்று சொல்லப்படுகின்றது.

மாபலிச்சக்கரவர்த்தி என்ற புகழ்¢ பெற்ற மன்னன் மலை நாட்டை ஆண்டு வந்தான் .இவன் யாரையுமே மதிக்காமல் ஆணவமுடன் ஆட்சி புரிந்து வந்த போது  இவன் ஆணவத்தை அடக்குவதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்து மாபலிச்சக்கரவர்த்தியிடம் வந்த தனக்கு 3 அடி நிலம் வேண்டும் என்று கேட்டார்.  அவனும் வந்திருப்பது யாரென்று தெரியாமல் இசைவு தெரிவித்தான். பின்னர் தனது பேருருவத்தை காட்டி முதல் அடியில் இந்த உலகம் அனைத்தையும்,  இரண்டாவது அடியில் வானத்தையும் அளந்துவிட்டு தனக்கு முன்றாவது அடிக்கு இடத்தைக் காட்டக் கூறினார்.

வேறு வழியின்றித் தனது தலையைக் காட்டினான் .அவனுடைய தலையில் கால் வைத்து அவனை கீழ் உலகத்திற்குச் செல்லுமாறு கூறினார். ஆணவம்  அடங்கிய மாபலிச்சக்கரவர்த்தி திருமாலை வணங்கி, ' ஐயனே, என்னை மன்னித்துவிடுங்கள். நான் உன்மையில் பெரியதோர் பாக்கியத்தைச் செய்துள்ளேன்.  தங்கள் திருவடி என் தலையில் படுவதற்கு நான் என்ன தவம் செய்தேனோ! தங்கள் ஆணைப்படி நான் எங்கு வேண்டுமானாலும் செல்லத் தயார். ஆனால்,  என்னுடைய ஆணவம் அழிந்த இந்த நாழில் -ஆண்டு தோறும் நான் இங்கு வந்து என் நாட்டையும், மக்களையும் பார்த்து மகிழ்வதற்கு அருள்புரிய வேண்டும் '  என்று கேட்டுக்கொள்ள அதற்குத் திருமாலும் இசைந்தார்.

மாபலிச்சக்கரவர்த்தியின் வேண்டுதலின் பேரில் ஆண்டிற்கு ஒருமுறை அவன் மீண்டும் வந்து தன் நாட்டைக் காணும் நாள் தான் திருவோணம் ஆகும்.  இத்திருவோண விழா அன்று தான் கேரளத்து மக்கள் அரிசி மாவினால் தங்கள் வீட்டு வாயில்களில் கோலம் போடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத்  திருவோண விழா ஆவணி மாதம் வயல் அறுவடைக்கு பின்னர் நடைபெறுவதாகும். எனவே இதை 'அறுவடை விழா' என்றும் கூறலாம்.  புத்தாடை உடுத்திச்  சிறப்புடன் கொண்டாடப்படும் இவ்விழாவில் நேந்திரப்பழப் பாயாசம் சிறப்பானதாகும்.

பொதுவாகக் கேரளாவில் நேந்திரம்¢பழம் நிறைய அளவில் கிடைக்கும் ஆதலால் நேந்திரம் பழத்தில் பக்குவமாகச் செய்யப்படும் பாயாசத்திற்கு 'நேந்திரப்பழப்  பிரதமன்' என்பார்கள். இதன் சுவை அலாதியாகும். தமிழகத்தில் உள்ள பண்டிகையாக இந்த ஓணம் பண்டிகை இருந்து வந்தாலும் கேரளத்துடன் கன்னியாகுமரி  மாவட்டம் இருந்து வந்தாலும், இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் திருவோணத்தைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். திருவோணத்தன்று உடுக்கும் புத்தாடைக்கு  'ஓணக்கோடி' என்பது பெயராகும். ' கோடி ' என்றால் புத்தாடை என்று பொருள்படும்.

எனவே, தமிழ்நாட்டில் தீபாவளிக்குப் புத்தாடை வாங்குவது போலத் திருவோணத்திற்கும் புத்தாடை உடுத்தி மகிழும் வழக்கம் இப்போதும் கன்னியாகுமரி  மாவட்டதிலும் இருந்து வருகிறது. ஆவணி மாதம் பிறந்ததுமே வீட்டை ஒட்டிய வெளிப்புறத்தில் உள்ள மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள்.  திருவோணத்தன்று ஊஞ்சல் ஆடி மகிழ்வது கண்கொள்ளாக் காட்சியாகும். அதிலும் பருவப்பெண்களுக்கு இந்த ஊஞ்சல் ஆட்டம் இன்பம் தரும் விளையாட்டாகும்.  மலையாள ஆண்டின் தொடக்க மாதம் ஆவணி என்பதால் இந்த மாதம் ஓணத்திருவிழாவுடன் ஆரம்பிக்கப்பட்டுச் சிறப்படைகிறது.

இதே -ஆவணி மாதம் தமிழ் மக்களின் முதல் மாதமாகவும் முன்னாள் இருந்திருக்கிறது. எனவே தான், முழு முதற் கடவுளின் சதுர்த்தியும் - ஆமாம்  பிள்ளையார் சதுர்த்தியும் இந்த ஆவணி மாதத்தில் வருகிறது. மலையாள நாடு முழுவதையும் முன்னாள் தமிழ்தான் அரசாட்சி செய்து வந்தது என்பதை  அறிவோம். தமிழர்களின் பண்டிகையே திருவோணம் ஆகும். இந்தப் பண்டிகையை நாம் மறந்துவிட்டாலும் நமது சகோதரர்கள் ஆகிய கேரளத்து மக்கள் மிகவும்  சிற்ப்புடன் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஏழைகளுக்கு உடையும், உணவும் கொடுத்துச் சிறப்பிப்பதும், ஏழை மக்கள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி வகைகள், பழ வகைகள் இவைகளை  எடுத்துக்கொண்டு தம் மீது அன்பு செலுத்தும் பணம் படைத்தவர்களை இந்தத் திருவோண நாளில் கண்டுகளிப்பதும் சிறப்பாகும். ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு  ஆண்டுகளுக்கு முன்னரே சம்பந்தர் இந்தத் திருவோண விழாவை வியந்து பாடி மகிழ்ந்துள்ளார். நாம் எவ்விதம் பொங்கல் பண்டிகையைச் சிறப்புறக் கொண்டாடி  மகிழ்கிறோமோ இதைப் போன்று திருவோணப் பண்டிகை இப்போது கேரளத்து மக்களால் கொண்டாடப்படுகிறது.

திருமாலுக்குத் 'திருவோண பிரான்' என்ற பெயரும் உண்டு. திருவோண நட்சத்திரத்தில் பிறந்ததால் இந்தப் பெயரை பெற்றதாகக் கூறுகிறார்கள். கேளிக்கைகள்,  களியாட்டங்கள் இவை இந்தத் திருவோணத்தன்று நடைபெறுகின்றன. சில இடங்களில் திருமாலின் உருவத்தைப் பல விதமாக வண்ண அலங்காரம் செய்து  ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வழக்கம் உண்டு. ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் பல வண்ணப் பூக்களால் பெரிய அளவில் கோலம் போட்டு மகிழ்வார்கள்.  இதற்கு 'அத்தப்பூ' என்கிறார்கள்.

இந்தக் கோலத்தின் நடுவே குத்துவிளக்கை ஏற்றி வைத்து அதைச் சுற்றிப் பெண்கள் ஆடிப்பாடி மகிழ்வார்கள். திருவோணத்திற்கு முன் பத்து நாட்களும், பின்  பத்து நாட்களும் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தாலும் திருவோணத்தன்று தான் சிறப்பாக இருக்கும். பொதுவாக 25 நாட்கள் இந்த ஓண விழா நடைபெறும்.  வைணவம் சம்பந்தமாகத் திருவோண விழா நடைபெறுகிறது என்பதை போலச் சிவத் தொடர்புடைய வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது.

திருவிதாங்கூரில் வடபகுதியில் உள்ள 'திரிகாகரா' என்ற நகரத்தில் மாபலிச்சக்கரவர்த்தி சிறப்புடன் தலைநகரை அமைத்து ஆண்டு கொண்டு இருந்த போது  ஒவ்வொரு ஆண்டும் சிவபெருமானுக்கு ஓண நட்சத்திரத்தன்று விழா நடத்திக் கொண்டிருந்தான். இந்த விழாவைக் கண்டு களிப்பதற்கு மலையாள நாட்டு மக்கள்  அனைவரும் திரள்திரளாகச் செல்வார்கள். நாளடைவில் மக்கள் அனைவரும் சிரமத்துடன் குறிப்பிட்ட ஓண நாளில் வந்து கூடுவது என்பது இயலாது என்பதை  உணர்ந்த மன்னன் ஒவ்வொருவரும் திருவோண நட்சத்திரத்தில் சிவபெருமானுக்கு தங்கள் வீட்டில் விழா கொண்டாட ஆணையிட்டான்.

எனவே, அன்று முதல் இன்று  வரை சிறப்புடன் சிவ பக்தர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. 'ஓணம்' என்ற சொல்லுக்கு ' ஆறு ' என்ற  பொருளும் உண்டு. இந்த நன்னாளில் புனித நதிகளில் நீராடிச் சிவபெருமானையே வழிபடுவார்கள். சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இந்தப் பண்டிகை  சிறப்புடன் நடைபெற்று வருகிறது. பசி, பிணி, பகை உணர்வு இவை மூன்றிலும் நீங்கி அனைவரும் சேர்ந்து இனிதாக விருந்து உண்ணும் பண்டிகையாக இவ்விழா  கொண்டாடப்பட்டு வருகிறது என்று பெருமையுடன் கூறலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment