Saturday, 7 September 2019

வாழ்விற்கு வளம் சேர்க்கும் வசந்தப் பெருவிழா.!!

பனிக்காலத்திற்கும் வேனிற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தினைத் தமிழர்கள் இளவேனிற்காலம் அல்லது வசந்த காலம் என்று அழைத்தனர்.  இந்தக் காலத்தில்தான்  இலையுதிர்ந்து போன மரங்கள் தளிர்க்கும். புது மலர்கள் மலர்ந்து மணம் பரப்பும். இது இயற்கையின் காதல் காலம்.  இக்காலத்தினை காமன் விழா, உள்ளி விழா, வில்லவன் விழா, வசந்த விழா என்னும் பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். 


வசந்த விழாக்காலமான இளவேனிற் பருவத்தின் வருகையினைப் பல்வேறு இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. நுண்ணிய கூந்தலையும்  அழகிய அணிகலன்களையும் உடைய மகளிர்பால் காதலை உடையவனாகிய கரும்புவில் தாங்கிய மன்மதனின்  இன்பந்தரும் இளவேனிற்பருவம்  வந்து பரவியது. அவ்வாறு வந்த வசந்தத்தின் மன்னனை வாகை மரங்கள்  தம் மலர்களாகிய பொற்குடைக்கொண்டு வரவேற்றன. மரங்கள் தங்கள்  மலர்கள் என்னும் வளைந்த அழகிய சாமரம் கொண்டு வீசின. 

வண்டினங்களோடு, தேனீக்களும் சேர்ந்து கூவும் குயில் கூட்டத்தின் ஓசையை இனிய முழவாகக் கொண்டு பாடின. வசந்த காலத்தில் கோங்கும்  வாகையும் மலர்தலும், மலர்த்தேனைத் தேனினமும் வண்டினமும் உண்ணுதற்கு ஒலித்தலும், குயில்கள் இனிமை தோன்றக் கூவுதலும் இயல்பு.   இவ் இயற்கையை வசந்த காலம் அரசனாகவும், கோங்கமலர் முதலியவை அவ் அரசச் சின்னமாகவும் இருப்பதாக உருவகித்துப் பாடியுள்ளார் யசோதர  காவியத்தின் ஆசிரியர். அப்பாடல், 

கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன
 வாங்கு வாகை வளைத்தன சாமரை
 கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி
 பாங்கு வண்டொடு பாடின தேனினம் 

என்பதாகும்.  “குடைமாக மெனவேந்திக் கோங்கம் போதவிழ்ந் தனவே”  எனவும் தோலாமொழித்தேவர் கூறியிருப்பதும் ஈண்டு சுட்டுதற்குரித்தாம்.  காஞ்சி புராணம் வசந்த விழா கொண்டாடப்படும் வசந்த காலத்தின் வருகையினைப் பின்வருமாறு சிறப்பித்துக் கூறும். திருக்கயிலையில்  சிவபெருமானும் தேவியும் வீற்றிருக்க வசந்த காலமாகிய இளவேனிற் பருவம் வந்தது. பிரிந்துள்ள காதலர்க்கு வருத்தமும் இணைந்துள்ள காதலர்க்கு  இன்பமும் தரும் பருவம் அன்றோ வசந்தகாலம். 

சோலையில் தென்றல் காற்று தவழ்ந்தது. அகத்தியரால் பெறப்பட்ட தமிழ்ச்சுவையினை அறிந்த தமிழ்மாருதம்  ஆகிய மலைய மாருதம் குளிர்ச்சியும்  வெப்பமும் மணமும் கொண்டு வந்தது. அதனை அங்குள்ள பூஞ்சோலைகள் மரங்களின் அசைவு என்னும் கூத்தினைக் கொண்டு வரவேற்க  உலாவியது. பனியால் பொலிவிழந்த அந்த பூஞ்சோலையானது தென்றலின் வருகையால் முன்போல் பொலிவு பெற்றது. சோலையின் அழகினைப்  பனிப்பருவம் என்னும் கொடுங்கோலன் அழித்து வனப்பினை இழக்கும்படி கொடுமை செய்தான். 

அக் கொடுங்கோலனை, புலவர் பலரும் புகழ்ந்து பாடும் சிறப்பினை உடைய மன்மதன் (வேனிலான்) தன் மலர்க்கணைகளை எய்து அழித்தான்.  கணைகள் தைக்கப்பெற்ற அக்கொடுங்கோலனின் உடம்பினின்று பரவிய செங்குருதியைப் போன்று சோலையில் புத்தழகு பரவியது. சோலையில்  தளிர்த்த மென் தளிர்கள் செவ்வொளி பரப்பின. செவ்வொளி பரந்த பூஞ்சோலையின் தோற்றம் தன்பகைவனாகிய இருள் புறத்தே வெளிப்படாமல்  மறைந்து வாழ்கிற இடம் இப் பூஞ்சோலை என்று கண்டு கதிரவன் செவ்வரி ஊட்டியதைப் போல் புறத்தே செவ்வொளி பரவியது. பூஞ்சோலையில் பல  மலர்கள் நிறைந்து காணப்பட்டன. 

அக்காட்சியானது மன்மதன் காமுகர்களின் மேல் மலர்க்கணை சொரியும் காலம் இது என்று தனது பாசறைக்கண் மலர்களாகிய கணையைத் திரட்டி  சேமித்து வைத்துக் கொண்டது போல் இருந்தது. போருக்கு முன் மன்மதன் தன் கணைகளுக்கு நெய்தடவி ஒளியூட்டியதைப் போன்று கட்டுடைந்து  விரிந்த மலர்த் திரள்களினால் தேன் ஒழுகியது. மன்மதனின் காமநோன்பாகிய வசந்தவிழாவிற்கு சோலை ஆயத்தம் செய்தது. 

தேனாகிய நீரினைத் தெளித்து நுண்ணிய மகரந்தத்தூளை மேல் தூவி மலர்களாகிய தவிசுகளை உள்ளிடங்களெல்லாம் இட்டு வசந்தவிழாவிற்கு வரும்  மாந்தர் யாவரும் தங்கி மகிழுமாறு பூஞ்சோலை அழகு செய்தது. குயில்கள் கூர்வேல் நிகர்த்த கண்களை உடைய  மகளிரின் குரல்போல் காஞ்சி  மலரைக் குடைந்து அகவியது. அக்காஞ்சி மலர்களின் கருநிற மகரந்தத் தூள்கள் கரிய ஆகாயத்தை மறைத்து மேலும் இருள் செய்தன. அதனைக் கார்  மேகம் என எண்ணி மயில்கள் மகிழ்ந்து ஆடின.கோங்கை, வேங்கை, கொன்றை பூக்களின் மகரந்தங்கள் எங்கும் பரவி இருந்தமையால்  அப்பூஞ்சோலையில் எப்பொழுதும் பகல் நிலவியது.

 எப்பொழுதும் ஒளியில் இருப்பதனை விரும்பும் சக்கரவாளப்பறவை தன் பெடையோடு அங்கிருந்து இன்புறுகிறது. இள மகளிரை போட்டிக்கு  அழைப்பனபோல் சோலை தளிர், அரும்பு, பூ, காய், கனி, மென் தாது முதலியவற்றைத் தாங்கி அழகுறப் பொலிவதனை உலகிற்குத் தெரிவிப்பதுபோல்  குயில்கள் மென் தளிரினைக் கோதி ஆர்ந்து கூவின.யாக குண்டத்தைப் போன்று தடாகத்தில் மலர்ந்திருந்த செந்தாமரை மலர்களின் சிவந்த இதழ்கள்  நெருப்பை ஒப்பதாய் அமைந்திருந்தன. 

தாமரைத் தடாகத்தின் கரைகளில் உதிர்ந்து கிடந்த மகரந்தத் துகள்கள் வேள்விக்குண்டத்தின் முன் பலநிறப் பொடிகளால் இடப்பெற்றிருந்த  இழைக்கோலங்களை ஒத்திருந்தன. தென்றலாகிய தன்னுடைய தேரில் வந்து இறங்கிய மாம்பூ, அசோகப்பூ, தாமரைப்பூ, முல்லைப்பூ, குவளைப்பூ  என்னும் ஐங்கணைகளைக் கொண்ட மன்மதனைக் காண விரும்பியதனைப் போன்று மிக்க இன்பத்தினை விரும்பிய மக்களெல்லாம் அக்குளிர்  சோலையை அணுகினர் என்பதாய் காஞ்சிபுராண வருணனை அமையும். 

சீவகசிந்தாமணி என்னும் காப்பியம்,  இளி என்னும் பண்ணையிசைக்கும் வண்டினை யாழாகவும் கரிய கண்களையுடைய தும்பியைக் குழலாகவும்,  களிப்பையுடைய குயில்களை முழவாகவும் மணமுறும் மலர்ப் பொழில்களை அரங்காகவும்   கணவரைப் பிரிந்த பெண்களின் துயரினைக் கணவன்  உணரத் தூது சென்ற பாணன், யாழ்மேல் வைத்துப் பாடும் பாட்டைப் பாட்டாகவும் கொண்டு இப்போது இளவேனில் புதியதாக ஆடலைத்  தொடங்கினான் எனக் குறிப்பிடுகிறது. 

“இளிவாய்ப் பிரசம் யாழாக விருங்கட் டும்பி குழலாகக்
களிவாய்க் குயில்கண் முழவாகக் கடிபூம் பொழில்க ளரங்காகத்
தளிர்போன் மடவார்தணந்தார்தந் தடந்தோள் வளையு மாமையும்
விளியாக் கொண்டிங் கிளவேனில் விருந்தா வாட தொடக்கினான்.”
என்பது அப்பாடல் ஆகும். இத்தகைய வசந்தகாலத்தின் நாயகனாகிய காமவேளை,
“எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்” 
( பரிபாடல் 18 : 28 - 29 ) 

எனப்  பரிபாடல் போற்றி உரைக்கிறது. ஆணுக்குப் பெண் நிகரெனக் கொண்ட சங்க காலச் சமூகத்தில் இவ்விழாவானது ஆணும் பெண்ணும் தங்கள்  மனதுக்கு இயைந்த துணையைத் தேர்ந்து கொள்ளும் விழாவாகவும் அமைந்திருந்தது. இவ்விழாவினில் ஆணும் பெண்ணும் ஒருவர்மேல் ஒருவர்  சாயநீரைத் தெளித்துக் கொண்டும் மகிழ்வான குரல்களை எழுப்பிக்கொண்டும் காதல் தொடர்பான மொழிகளைப் பேசிக்கொண்டும் விளையாடி  மகிழ்ந்தனர். கொங்கு மக்கள் இவ்விழாவினை ஒலி எழுப்புகின்ற மணிகளைத் தங்கள் இடுப்பில் கட்டிக்கொண்டு தெருக்களில் ஆடிப்பாடிக்  கொண்டாடினர் என்பதனை, 

“கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் 
உள்ளி விழவின் அன்ன” (அகம்:368: 17 - 18 ) 

என அகநானூறு குறிப்பதனால் அறிய இயலும். இவ்விழா கொங்குப் பகுதிகளில் ‘உள்ளிவிழா’ என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. தமிழர் விழாவின்  இப்பெயரே  வடநாட்டிற்குச் செல்லும் பொழுது ‘உள்ளி’ என்னும் சொல் மருவி ‘ஹோலி’ எனலாயிற்று. கலித்தொகையில் இவ்விழாவானது, மல்கிய  துருத்தியுள் மகிழ் துணைப்புணர்ந்து அவர் “வில்லவன் விழுவினுள் விளையாடும் பொழுதன்றோ” ( கலி:35: 13 - 14 ) என ‘வில்லவன் விழவு’ என்று குறிப்பிடப்படுகிறது. பிறிதோர் பாடல் இந்த  விழாவின் பொழுது ஆடவர் கணிகையருடன் சேர்ந்தும் ஆடுவர் என்பதனைக் குறிப்பிடும். அப்பாடல் வரிகள், 

“உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரோடு விளையாடு வான்மன்றே” ( கலி:30 : 13 - 14 )

என்பதாய் அமையும். கலித்தொகையின் மற்றொரு பாடல்,

“வையைவார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்? என வாங்கு 
நாம் இல்லாப் புலம்பாயின் நடுக்கம் செய் பொழுதாயின் 
காமவேள் விழாவாயின் கலங்குவள் பெரிதென 
ஏமுறு கடுந்திண்தேர் கடவி
நாம்அமர் காதலர் துணைதந்தார் 
விரைந்தே” (கலி: 27: 20 - 26 ) 

என வையை ஆற்றங்கரையில் வசந்த விழா நடந்ததைக் குறிப்பிடும். கரிகாலன் என்னும் சோழ மன்னனின்  மகள் ஆதிமந்தி  புனலிடை காணாமல்  போன தன் காதலனைத் தேடிச்செல்லும் வேளையில், செல்லும் இடங்களில் எல்லாம் நடைபெறும் இவ்விழாவினைக் கண்டும் தான் காதலனை நீங்கி  இருப்பதை நினைத்தும் வருந்தினாள் எனக் குறுந்தொகை  பதிவு செய்கிறது.

“மள்ளர் குழீஇய விழவினானும் 
மகளிர் தழீஇய துணங்கையானும் 
யாண்டும் காணேன் மாண்தக் கோனை” ( குறுந்தொகை:31 : 1 - 3 ) 

என்பது அப்பாடல்ஆகும். சிலப்பதிகாரம் இளவேனில் காலத்தில் கோவலனைப்பிரிந்து வருந்திய மாதவியின் நிலையினை எடுத்துரைக்கும்.  பெருமைமிக்க மதுரை, உறையூர், வஞ்சிமாநகர்,புகார் என்னும் நான்கு பேரூர்களிலும் ஆட்சி செய்யும் மாரவேள் என்னும் மன்மதன் புகார் நகருக்கு  வந்தனன் என்பதனை இளவேனிற் பருவமும் இளந் தென்றலும், குயிலின் கூவுதலும் அறிவித்தன. 

“மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய
இன்னிள வேனில் வந்தனன் இவணென
வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தன னாதலின.”

என சிலப்பதிகாரம் குறிப்பிடும். அதனை அறிந்த, கோவலன் பிரிவினால் வருந்திய மாதவி, கோவலனுக்கு தாழை மடலில் கடிதம்  எழுதத்  துணிந்தாள். அதில், இளவேனில் என்பான், முறை செய்ய அறியாத இளவரசன். திங்கட் செல்வனும் சிறந்தவன் அல்லன். ஆதலால் தம்முள்  புணர்ந்த  காதலர் சிறுபொழுதினைக் கூட்டமின்றிக் கழிப்பினும் பிரிந்து சென்றோர் தம் துணையினை மறந்து வாராது போயினும் மலரம்புகளால் தாக்கி அவரது  நல்ல உயிரினைக் கைக்கொள்பவன் அந்த மாரன். இதுவும் நீர் அறிந்தது. எனவே உடனே வந்து அருள்வீராக! என வேண்டி எழுதினாள். இதனை,

“மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை 
புணர்க்கும்
இன்னிள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய
திங்கட் செல்வனுஞ் செவ்விய னல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் 
படுப்பினும்
தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்
இறும்பூது அன்று: இஃது அறிந்தீமின்”

என்ற அடிகள் விளக்கும். இதன்வழி, இளவேனிற்காலம் என்பது சேர்ந்திருக்கும் காதலர் விழாக் கொண்டாடும் காலம் என்பதும் பிரிந்திருக்கும் காதலர்  வருந்தியிருக்கும் காலம் என்பதும் பெறப்படும். இவ்வாறு கொண்டாடப்பெற்ற காமன் விழா நாளடைவில் இந்திரவிழாவாகப் செல்வாக்குப் பெற்றது.  இவ்விழா கொண்டாடப்படும் காலங்களில் செய்யவேண்டிய செயல்களை எல்லாம் சோழ மன்னன் தெரிவித்ததாய் மணிமேகலை குறிப்பிடுகிறது: 

“காதலர்கள் கூடிக்களிக்கும் பந்தல்களில் மணலை நிரப்புங்கள். ஊர்அம்பலங்களை மரங்களினால் மறைத்து நிழல் பரப்புங்கள். விழா நடக்கும்  அரங்கங்களில் நல்ல உரையை நிகழ்த்துங்கள். சமயத் தத்துவங்களை காதலருக்கு உரையுங்கள். சமயக் கருத்துகள் குறித்து வாதம் செய்து  நிறுவுங்கள். பகைவர்களைக் காணின் அவர்களுடன் பூசல் கொள்ளாது அவர்கள் இருக்கும் இடம் விட்டு அகலுங்கள்.

நீர்த்துறைகளில் கூடும் மக்கள் நீராடுவதற்கேற்ற பாதுகாவலைச் செய்யுங்கள்.”  என்றெல்லாம் ஆணையிடுகிறான். இத்தகைய சிறப்புடைய  விழாவானது சோழன் நெடுமுடிக்கிள்ளி காலத்தில் கொண்டாடாது விடப்பட்டதாக மணிமேகலை மூலமாக அறியமுடிகிறது. தன் குழந்தையைத்  தொலைத்த அவ் அரசன் அதன் வேதனையில் மூழ்கி இருந்தமையால் இவ்விழாவினைக் கொண்டாடாது விடுத்தான் என்பதனையும் அதனாலே புகார்  நகரம் அழிந்தது என்பதையும் அறவண அடிகள் மணிமேகலையிடம் எடுத்துரைக்கின்றார்.

தமிழர்தம் இயற்கை சார்ந்த விழாவான இவ் விழா, சைவ வைணவ சமயங்களால் ஏற்றிப் போற்றப்பெற்றது.பெரியபுராணத்துள் திருவாரூரில் நிகழும்  வசந்தப்பெருவிழா குறிக்கப்படுகிறது. திருவாரூரில் பரவையாரைத் திருமணம் செய்து வாழ்ந்திருந்த சுந்தரர், சிவபெருமான் உறையும்  திருத்தலங்களைப் பாடிப் பணிந்து வரும் நாளில், திருவொற்றியூரில் சங்கிலியாரைப் பார்த்து காதல் கொள்கிறார். 

சுந்தரர் சங்கிலியாரை வேண்டி இறைவனிடம் முறையிடச் சங்கிலியாரோ தன்மைவிட்டுப் பிரிதல் கூடாது என்று சத்தியம் வேண்ட, சிவபெருமான்  உறைந்த மகிழ மரத்தடியில் சத்தியம் செய்து மணந்து கொள்கிறார் சுந்தரர். ஆனால் சிறிது காலம் கழிந்த பின், தமிழ் மென்மேலும் தழைத்து  வளருகின்ற பொதிய மலையில் தோன்றி, பூக்கள் மலரும் சந்தன மரங்களின் இடையே அணைந்து, குளிர்ந்த மலைச்சாரலிடை வளர்ந்து வரும்  மிருதுவாகிய தென்றல் காற்று திருவொற்றியூரிடை வீசியது. 

அக்காற்றானது திருவாரூரின் அழகிய வீதிகளில் வசந்தவிழாப் பெருநாளில் எழுந்தருளி உலாப்போகும் பெருமான் எதிராக, வசந்தகாலக் காற்று உலாப்  போகும் தன்மையைச் சுந்தரருக்கு  நினைவுறுத்திற்று. எனவே திருவாரூர்ப் பெருமானுக்கு நிகழும் வசந்தப் பெருவிழாக் காணும் ஆவல் மீதூற, தான்  செய்தளித்த சத்தியத்தினை மறந்து திருவாரூர் புறப்படுகிறார் சுந்தரர். இதனைச் சேக்கிழார்,

பொங்குதமிழ்ப் பொதியமலைப் பிறந்துபூஞ் சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்சாரல் இடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர் அணிவீதி அழகரவர் 
மங்கலநாள் வசந்தமெதிர் கொண்மடருளும் வகைநினைந்தார் 

என விளக்குவார். சங்கிலியார்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து புறப்பட்டமையால் இரு கண்களையும் இழந்து துன்புற்றார் சுந்தரர். பின்  திருக்கச்சி இறைவனை ‘ஆலந்தான் உகந்து அமுது செய்தானை’ எனத்தொடங்கும் பதிகம் பாடி வேண்டி இடக்கண் பெற்றார். அதனுடன் திருவாரூர்  வந்தடைந்த ஆரூரர் திருவாரூர் இறைவனைப் பாடிப் பிறிதோர் கண்ணையும் பெற்று வசந்த விழாவினைக் கண்டு மகிழ்ந்தார். இதனை,

பு+த முதல்வர் புற்றிடங் கொண்டிருந்த புனிதர் வன்தொண்டர்
காதல் புரிவே தனைக்கிரங்கிக் கருணை திருநோக்களித்தருளிக் 
சீதமலர்க்கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகமலர்ந்து 
பாதமலர்கள் மேற்பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய் எனக் குறிப்பிடுகிறார் சேக்கிழார். 

திருஞானசம்பந்தருக்கு மணம்முடித்துக் கொடுப்பது என்று மயிலை சிவநேசச்செட்டியார் பூம்பாவை எனும் பெண்ணை வளர்த்து வந்தார். அப்பெண்  பாம்பு தீண்டி இறந்துவிட, சிவநேசச்செட்டியார் அந்தப் பெண்ணின் சாம்பலைப் ஒரு கலயத்தில் பாதுகாத்து வைத்திருந்து திருமயிலை வந்த  திருஞானசம்பந்தரிடம் ஒப்படைத்தார். அச்சாம்பலில் இருந்து பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகமே ‘மட்டிட்ட  புன்னையங்கானன் மடமயிலை’ எனத் தொடங்கும் பதிகம் ஆகும். 

இதில் திருமயிலையில் நடைபெறும் திருவிழாக்களை எடுத்துரைப்பார் திருஞானசம்பந்தார். திருவாதிரை,திருவோணம், பங்குனி உத்திரம், தைப்பூசம்,  கார்த்திகை விளக்கீடு போன்ற திருநாள்களைக் குறிக்கும் பொழுது வசந்தவிழாவின் ஊஞ்சலாட்டையும் விளக்கிடுவார். இதில் ஊஞ்சலாட்டு என்பதற்கு  ‘பொற்றாப்பு’ என்ற சொல் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாம். அப்பாடல், 

“நற்றாமரை மலர்மே னான்முகனு நாரணனும்
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ 
பூம்பாவாய்”

என்பதாய் அமையும். இவ்வாறு சங்ககாலம் தொடங்கி தமிழர்தம் மரபுடன் தொடர்புடைய வசந்தவிழா என்பது இன்றளவும் தமிழகத்தின் சைவ,  வைணவத்திருத்தலங்களில் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெறும் வசந்தவிழாவின் போது மீனாட்சி  அம்மையும் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி அருட்பாலிக்கவென்று கட்டப்பெற்றதே வசந்த மண்டபம் என்னும் புதுமண்டபம் ஆகும். 

இம்மண்டபம் 370 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலைநாயக்கரால் கட்டப்பெற்றதாகும். இது திருமலைநாயக்கர் காலக் கட்டடக் கலையின் சிறப்பிற்கு  ஒரு சிறந்த சான்றாய் அமையும். இது போன்றே பல்வேறு திருக்கோயில்களிலும் வசந்தவிழாவிற்கென்றே மண்டபங்கள் அமைக்கப்பெற்றிருப்பது  இவ்விழாவின் சிறப்பினை எடுத்துரைக்கும். எனவே இத்தகைய சிறப்புடைய வசந்தத் திருநாளில் திருக்கோயில் சென்று இறைவனையும்,  இறைவியையும் வணங்கி அருள்பெற்று உய்வோமாக...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment