Sunday, 29 September 2019

நவராத்திரி பூஜை முறை மந்திரங்கள்.!!

29-09-2019 நவராத்திரி  உற்சவ ஆரம்பம்


அன்னை பராசக்திக்கு விருப்பமான வருடாந்திர விசேஷமே நவராத்திரி தான். சக்தியை நாயகியாகக் கொண்டு நடைபெறுவது நவராத்திரி விழா.  துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்னும் முப்பெருந்தேவியர்களை நோக்கிப்பூசை, வழிபாடு, விரதம் இருத்தல், விழா எடுத்தல் என்பன நவராத்திரி காலங்களில்  நிகழ்த்தப்படுகின்றன.ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் பங்குனி, புரட்டாசி மாத நவராத்திரிகள் மட்டுமே  கொண்டாடப்படுகின்றன. ஆனி அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்கள் ஆஷாச நவராத்திரி என்றும், புரட்டாசி அமாவாசைக்குப்பிறகு வரும்  ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்றும், தை அமாவாசைக்குப்பிறகு வரும். ஒன்பது நாட்கள் மகா நவராத்திரி என்றும், பங்குனி  அமாவாசைக்குப்பிறகு வரும் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நான்கு விதமான நவராத்திரிகளில் முக்கியமானது  சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் தான்.

மேலும் வசந்த நவராத்திரி என்பது கானகத்தில் கந்த மூலிகைகளைக் கொண்டு செய்யக் கூடியதாகும். இதை நாரத முனிவர் ராம பிரானுக்கு  கானகத்தில் இருந்து நடத்தி வைத்தார் என்று ராம சரிதம் சொல்கிறது. புராணத்தில் பங்குனியும், புரட்டாசியும் எமதர்ம ராஜனின் கோரைப்பற்கள்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலங்களும் தெய்வத்தின் அருள் மனிதருக்குக் கிடைக்காதவாறு தடை செய்யக் கூடியவை எனவே  இக்காலங்களில் நவராத்திரி பூஜை செய்து தேவியை பூஜிக்க வேண்டும்.நவராத்திரி பூஜைக்குரிய திரவியங்களை அமாவாசை நாளில் சேகரிக்க வேண்டும். புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசையை அடுத்து  முதலாவது நாள் பிரதமை தொடக்கம் நவமி ஈறாக உள்ள 9 நாட்கள் நவராத்திரி காலம் ஆகும். பத்தாம்நாள் தசமி திதி விஜயதசமி எனப்படும். 

விரதம் அனுஷ்டிப்பவர்கள் நவராத்திரி தொடங்குவதற்கு முதல் நாள் அம்மாவாசையன்று ஒரு நேரம் மட்டும் உணவுண்டு, தொடங்கிய நாளிலிருந்து  எட்டு நாட்கள் பழம் அல்லது பால் அருந்தி மகா நவமியன்று முழு நாளும் உபவாசம் இருந்து பத்தாம் நாள் விஜய தசமியன்று உணவு உட்கொண்டு  பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு மேற்கொள்ள இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு நேர உணவுண்டு, நவமியில் உபவாசம் இருந்து  மறுநாள் தசமியில் உணவு உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். விரத நாட்களில் அகர் தூய்மை, புறர் தூய்மையுடையவராய், கடவுள்  சிந்தையுடன், தூய எண்ணங்கள், பண்பான பேச்சு, நற்செய்கைகள் மூலம் தம்மை ஒரு சிறந்த மனிதனாக ஆக்கிக்கொள்வது விரதத்தின் நோக்கமாகும்.பூஜைக்குரிய மண்டப வேதிகைகளின் அளவுகளை, அமைப்புகளைச் சரியாகச் செய்ய ேவண்டும். மண்டபம் சமதளமாக இருக்கவேண்டும்.  பசுஞ்சாணத்தினால் மெழுகி, செம்மண் இடவேண்டும். நான்கு மூலைகளிலும் நான்கு தூண்களை நிறுத்தி அவற்றில் தோரணங்கள் கட்ட வேண்டும்.  ஆசாரம் மிக்க மந்திரங்களை நன்கு தெரிந்த அந்தணரைக் கொண்டு பூஜையை நடத்த வேண்டும்.

பிரதமை அதிகாலையில் நீராடி வேதிகை மீது வெண்பட்டுப் போர்த்திய சிம்மாசனம் அமைத்து சங்கு, சக்கரம், கதை, பத்மம் உள்ள நான்கு  திருக்கரங்களுடன் கூடிய தேவியை அலங்கரித்து வைக்க வேண்டும். சிம்மாசனம் அருகில் கலச் ஸ்தானஞ் செய்து புனித நீரை நிரப்பி மாவிலை உட்பட 5- வகை தளிர்களை வைத்து தங்கம், ரத்தினம் முதலியவைகளை  கலசத்தில் இட்டு வேத மந்திரங்களால் மந்திரித்து மங்கள வாத்தியம் முழங்க பூஜையைத் தொடங்க வேண்டும்,‘‘தாயே பராசக்தி, இணையற்ற இந்த நவராத்திரி விரதத்தை, பூஜையைத் தொடங்குகிறேன். தடங்கள் ஏதுமின்றி பூஜை நடக்க அருள்புரிவாய் தாயே!’’  என சங்கல்பம் எடுத்துக்கொண்டு அகில் சந்தனம், பச்சை கற்பூரம், கஸ்தூரி உட்பட பல நறுமணப்பொருட்களாலும், ஜாதி மல்லிகை போன்ற வாசனை  மலர்களாலும், வில்வ இலைகளாலும் தூப தீபங்களோடு பூஜை நடத்தி நவாரண பூஜை செய்து இளநீர், மா, பலா, வாழை மாதுளை போன்ற கனிகள்  படைத்து பழரசங்களால் அர்கயம் தந்து பூஜை முடித்து பல வகை அன்னங்களை நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு வழங்கவேண்டும். பூஜையை  மூன்று வேளையும் செய்ய வேண்டும். பூஜையை நடத்துபவர் உபவாசம் இருந்து, தரையில் மட்டுமே படுக்கவேண்டும்.

நவராத்திரி ஒன்பது நாட்களில் ஒன்பது விதமான மலர்கள், அன்மை என்று 9 என்ற எண்ணிக்கையில் பூஜை செய்வது மிகவும் சிறப்பாகும். 
ஒன்பது தினங்களிலும் 2 முதல் 10 வயது வரையுள்ள பெண் குழந்தைகளை நன்கு அலங்கரித்து ‘குமாரி பூஜை’ செய்யவேண்டும். ஆகம சாஸ்திர  விதிப்படி இந்த 9 நவசக்திகளின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம். அரை, வாமா, ஜயேஷ்டா, ரௌத்ரி, காளி, பலவிகரணி, கலவிகரணி,  பலப்பிரமதனி, சர்வ பூததமணி, மனோன்மணி என்பதாகும்.நவராத்திரியில் வரும் 9 நாட்களும் செய்யக்கூடிய குமாரி பூஜையின் பெயரும் பலன்களும் பின் வருமாறு:முதல் நாள் 2 வயதுள்ள குமாரிகா என்ற சக்திக்கும், 2-ம் நாள் 3 வயதுள்ள திரிமூர்த்தி என்ற சக்திக்கும். 3-ம் நாள் 4 வயதுள்ள கல்யாணி என்ற  சக்திக்கும், 4-ம் நான்கு 5-வயதுள்ள ரோகிணி என்ற சக்திக்கும், 5-ம் நாள் 6- வயதுடைய காளிகா என்ற சக்திக்கும், 6-ம் நாள் 7- வயதுடைய  சண்டிகை என்ற சக்திக்கும், 7-ம் நாள் 7- வயதுடைய சாம்பவி என்ற சக்திக்கும், 8-ம் நாள் 9-ம் நாள் 10- வயதுடைய சுபத்ரா என்ற சக்திக்கும்  முறைப்படி குமாரி பூஜை செய்து சிறப்பிக்க வேண்டும்.இந்த 9. சக்திகளுக்கும் ‘குமாரி பூஜை’ செய்வதால் 9- விதமான பலன்கள் ஏற்படுகின்றன. அவை முறையே தன தான்ய விருத்தி, பகை விலகல்,  கல்வி வளர்ச்சி, இன்னல் தீரும். செல்வம் சேரும், இன்ப வாழ்வு உண்டாகும். பயம் நீங்கும், சர்வ மங்களம் உண்டாகும் என்பனவாகும்.

இந்த அம்பிகையின் சந்நதியில் 9- வகை மாவுப் பொருட்களை உபயோகிக்கலாம். அவை. அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, பருப்பு மாவு,  நிலக்கடலை மாவு, பட்டாணி மாவு, பயிற்ற மாவு, பச்சரிசி மாவு  என்பனவாகும். இவற்றால் கோலமிடலாம்.மேலும் இந்த 9- நாட்களிலும் சுமங்கலிகள், கன்னிகள் மங்கல நீராடுதலின் போது 9- விதமான வாசனைத் திரவியங்களை உபயோகிக்கலாம். அவை  கோரோசனை, பச்சிலை, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, லாட்சாரஸம், செண்பக மொட்டு, கஸ்தூரி இலை, காசுக் கட்டி, திரவியப்பட்டை   என்பனாகும்.நீராடலுக்குப் பின் உடம்புக்குப் பூசுகின்ற வாசனைத் திரவியமாக பன்னீர், எண்ணெய், மஞ்சள், குண்டு மஞ்சள், சந்தனம், மருதாணி, குங்குமம்,  சந்தானாதி தைலம், வெட்டி வேர் நீர் போன்ற 9- திரவியங்களை உபயோகிக்கலாம்.உதவிக்கு வருகின்ற பெண்களையும், கொலுவிற்கும் ஆராதனைக்கும் வருகின்ற பெண்களையும் தேவியின் ஸ்வரூபமாகவே 9ஆக எண்ணி, சுமங்கலி,  தருணீ, மாதா, வதூ, பிரௌடா முத்து, பாலா, குமாரி, கன்னிகா என்று அழைத்தல் சிறப்பாக இருக்கும்.நவராத்திரி நாட்களில் 9 நவரத்தினங்களான பொன், பவளம், முத்து, வெள்ளி, வைரம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம் மரகதம்  போன்றவைகளை தானமாகவழங்கினால் மிகுந்த புண்ணியம் உண்டு.

பூஜை முறைகளில் இவைகளை தானம் தர இயலாத நிலையில் சோழி, குன்றி மணி, தட்டைப் பவளம், இளிஞ்சல், செப்பு, பதுமை, அம்மானை பந்து,  கழச்சிக்காய், சங்கு போன்ற 9- வகையான இயற்கை பொருட்களை வழங்கலாம்.9- நவராத்திரி நாட்களில் தினமும் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, அரகஜா, சந்தனம், குங்குமம், சாந்து, ஸ்ரீ  சூர்ணம்மை போன்ற 9- விதமான திலகங்களாக அளிக்கலாம் நெற்றியில் இடலாம்.அன்னை ஆசனத்தில் கொலு வீற்றிருக்கும் போது பிரீதி செய்வதற்காக காலையிலும் மாலையிலும் பல விதமான ராகங்களில் பாடவேண்டும்.  தேவியை துதி செய்து வணங்கும் பாடல்கள் உகந்தவை. அன்னைக்குப் பிடித்த 9 வகையான ராகங்கள் தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பந்து  வராளி, நீலாம்பரி, பிலஹரி, புன்னாக வரளி, வசந்தா போன்றவையாகும்.இப்பாடல்களைப் பாடும்போது அன்னைக்கு பிரீதியான 9 பின்னணி வாத்தியங்களை வாசித்தல் நன்று அவை மிருதங்கள், புல்லாங்குழல், வீணை,  கோட்டு வாத்தியம், ஜல்லரி, பேரி, படகம், கும்பி, கோலாட்டம்  என்ற 9 கருவிகளாகும்.

அன்னையை பூஜிக்கும் போது மாலை கட்டி அணிவிக்க வாசனை மிகுந்த மலர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் உகந்தது. அவை மல்லிகை, முல்லை,  சம்பங்கி, ஜாதிப்பூ, பாரி ஜாதம், செம்பருத்தி, தாழம்பூ, ரோஜா, தாமரை போன்ற 9 வகையான மலர்கள். இத்துடன் மாலைக் குகந்த தழைகள் வில்தும்,  துளசி, மரு, விபூதி பச்சை, கதிர்ப் பச்சை, சந்தன இலை, தும்பை, பன்னீர் இலை, மருக் கொழுந்து போன்றவைகள் சேர்ந்தால் மணம் மிகும்.அம்பிகையானவள் 9 நாட்களும் பெண் குழந்தை வடிவில் நம் இல்லங்களுக்கு வந்து செல்வதாக ஜதீகம். அப்போது வரும் பெண் குழந்தைகளுக்கு 9  வகையான பழங்கள் அளித்தால் நல்லது. அவை வாழை, மா, பலா, கொய்யா, நாரத்தை, பேரீட்டை, தீராட்சை, மாதுளை, நாவல் போன்றவை  வழங்குவது நல்லது.நவராத்திரி நாட்களில் நாள் தோறும் வருகை தருபவர்களுக்கு சுண்டல், வருவல், துவையல், பொறியல், அப்பளம், அபிம், சூர்ணம், முறுக்கு, திரட்டுப்  பால் என்று 9- வகையான உப பட்சணங்கள் தருவதும் சிறப்பு.

மேலும் புளியோதரை, வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கதம்பசாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், பாயசம், அக்கார வடிசில், தயிர்  சாதம் ஆகிய 9- விதமான நிவேதன அன்னங்களைப் படைத்து பூஜிக்க வேண்டும்.நாம் செய்த பாவங்கள் நீங்க அம்பிகையை ஒவ்வொரு நாளும் 9- விதமான நாமாக்கள் கூறி வழிபட வேண்டும். நீல தயாட்சி, காமாட்சி, மீனாட்சி , விசாலாட்சி, ஜல ஜாட்சி, இந்திராட்சி, பத்மாட்சி, வனஜாட்சி, பங்கஜாட்சி, ஆகிய 9- பெயர்களும் புனிதமானவை. 

கும்ப பூஜை முதல் யாக பூஜை வரை நடத்தி பிறகு கன்னிகையர்களை பூஜிக்க வேண்டும். இக்கன்னியர்களுக்கு குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி  ரோகிணி, காளி, சண்டிகா, ஸாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்று பெயர் சூட்டி ஸ்ரீரஸ்து, ஸ்ரீயுக்தம் என்ற சொற்களை முதலாகக் கொண்ட மந்திரங்களை கூறி பூஜிக்க வேண்டும்.கன்னிகைகளை, குமாரியை பூஜிப்பதால் வறுமை நீங்கும். பகை விலகும். ஆயுள் விருத்தியாகும். செல்வ செழிப்பு உருவாகும்.திரி மூர்த்தியை பூஜிப்பதால் தன, தான்ய விருத்தி, தர்ம சிந்தனை விருத்தி, புத்திர விருத்தி ஏற்படும். கல்யாணியைப் பூஜிப்பதால் கல்வியில் வெற்றி  அரச போகம் கிட்டும்.ரோஹிணியை பூஜிப்பதால் வியாதிகள் தீரும். 

காளியை பூஜிப்பதால் பகை அழியும்.சண்டிகையை பூஜிப்பதால் வெற்றியும். ராஜ போகமும் கிட்டும். துர்க்கையை பூஜிப்பதால் பகைவர் அழிவர். செய்ய முடியாத காரியங்கள் செய்யக் கூடியதாக மாறும்.சுபத்திரையை பூஜிப்பதால் மங்களம் உண்டாகும். மன நிம்மதி கிட்டும். லட்சியம் நிறைவேறும்.நவராத்திரி 9- நாட்களும் பூஜை நடத்த இயலாதவர்கள் அஷ்டமி நாளில் பூஜை செய்யலாம். வசதியில்லாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி  தினங்களில் பூஜித்தால். 9- நாட்கள் பூஜித்த பலன் கிட்டும்.நவராத்திரி பூஜை செய்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சகல சௌபாக்யத்துடன் வாழ்வார்கள்.

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment