Wednesday, 28 August 2019

ராஜயோகம் தரும் நாகராஜா.!!

நாகர்கோவில், குமரி


நாகர்கோவிலில் வீற்றிருந்து அருள் பாலிக்கும், நாகராஜர் கோயில் ராகு கேது தோஷம் போக்கும் மிகப்பெரிய பரிகார ஸ்தலமாகும். நாக தோஷ நிவர்த்திக்கு பெயர் பெற்ற இந்த ஆலயத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் ஊற்றி வழிபாடு நடத்துவதன் மூலம் ராகு, கேது தோஷம் நீங்கி திருமண தடை நீங்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பேறும் கிடைக்கும். இந்த கோயிலில் மூலவரே நாகராஜர் என்பது மிகப்பெரிய சிறப்பாகும். நாகருக்கு என்று அமைந்துள்ள முக்கிய கோயில் இதுவாகும். சரும வியாதி போக்கும் ஸ்தலமாகவும் நாகராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலில் புற்று மண் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி உடலில் தேய்த்தால், நமக்கு எல்லா விதமான சரும நோய்களும் நீங்கி, சரும புதுப்பொலிவு பெறும் என்பது ஐதீகம் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாக இந்த ஆலயம் விளங்கி வருகிறது. இந்த கோயிலின் தீர்த்தம் நாக தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் மூலவர் தெய்வமான நாகராஜர், சுயம்பு வடிவானவர் என்பது சிறப்பாகும். 

இந்த நாகராஜர் கோயிலில், தர்னேந்திரன் என்கிற ஆண் நாகமும், பத்மாவதி என்கிற பெண் நாகமும் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். கோயில் மூலஸ்தானத்தில் பாரம்பரிய ஓலை கூரைக்கு அடியில் தான், மூலவரான நாகராஜர் வீற்றிருக்கிறார். இந்த கோயிலை இன்றும் தெய்வீக நாகங்கள் பாதுகாப்பதாகவும், அதனாலேயே நாகங்களின் மூலஸ்தானத்தில் ஓலை கூரைகள் வேயப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள். பாற்கடலில் மகா விஷ்ணுவின் படுக்கையாக இருக்கும், நாகராஜனான ஆதிசேஷனின் ஜென்ம நட்சத்திரம், ஆயில்யம் நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு மாதமும், ஆயில்ய நட்சத்திரத்தில் இக்கோயிலின் மூலவரான நாகராஜருக்கு விஷேச பூஜைகள் செய்து, பால் அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. இங்கு நாகராஜர் கோயில் ஏற்பட்டதற்கு பல கர்ண பரம்பரை கதைகள் கூறப்படுகின்றன. 

புல், புதர்களுடன், செடி, கொடிகள் என்று இருந்த இந்த காட்டில் புல் அறுக்கும் பெண் ஒருவர், மாட்டுக்கு புல் அறுக்கும் போது, அந்த பெண் கையில் இருந்த அரிவாள் ஐந்து தலைநாகம் ஒன்றின் தலையில் பட்டு, ரத்தம் பீறிட்டது. இதை கண்டு பயந்து நடுங்கிய அந்த பெண், பக்கத்தில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்தார். அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும் போது, அந்த ஐந்து தலைநாகம் சிலையாக காணப்பட்டதாக கூறுகிறார்கள். ஒரு சிறிய தென்னங்கீற்று கொட்டகை அமைத்து அந்த நாகரை வழிபட்டு வந்தனர். நாளடைவில் அக்கம் பக்கத்தில் இருந்தும் கிராம மக்கள், கூட்டம், கூட்டமாக வந்து சென்று இருக்கிறார்கள். கேரளாவை ஆண்ட உதயமார்த்தாண்ட வர்மா மன்னர், இந்த கோயிலை புதுப்பித்து கொண்டிருந்த போது, ஒரு நாள் அவரது கனவில் நாகராஜர் தோன்றி, ஓலைக்கூரையான இருப்பிடத்தையே நான் விரும்புகிறேன். முதன் முதலில் அந்த கூரையில் தான் வாசம் செய்தேன். எனவே எனது இருப்பிட கூரையை மாற்ற வேண்டாம் என கூறி உள்ளது. இதனால் தான் கோயில் கட்டுமான பணி நடந்த போது கூட, சந்நதியின் மேற்கூரை மாற்றப்பட வில்லை. 

வருடந்தோறும் கூரை வேயப்படும் போது, பாம்புகள் வந்து செல்வதாக கூறுகிறார்கள். மூலஸ்தானம் அமைந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருக்கும். இங்கு வழங்கப்படும் புற்று மண் 6 மாதம் (ஆடி முதல் மார்கழி மாதம் வரை) கருப்பு நிறமாக இருக்கும். 6 மாதம் (தை முதல் ஆனி வரை) வெள்ளை நிறமாகவும் இருக்கும். எவ்வளவு காலம் எடுத்தாலும் இந்த மண் அப்படியே குறையாமல் இருப்பது, கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலில் அர்ச்சகர்கள் கேரளாவில் உள்ள பாம்பு காட்டு இல்லம் என்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள். பரம்பரை பரம்பரையாக நாகத்தை வழிபடுகிறவர்கள் ஆவர். இந்த கோயிலில் கூரை வேயப்பட்டு இருக்கும் மூலஸ்தானத்துக்கு பின்னால், தொழுநோய் போன்ற பதினெட்டு நோய்களை குணப்படுத்தும் ஓடவள்ளி என்ற பச்சிலைக்கொடி படர்ந்திருந்ததாகவும், அதன் அடியில் தன் இனத்துடன் குட்டி குஞ்சுகளுடன் நாகங்கள் குடியிருந்ததாகவும் கூறுகிறார்கள். அந்தகாலத்தில் பிரசாதம் கூட வள்ளி இலையில் தான் கொடுத்து உள்ளனர்.

அனந்த கிருஷ்ணருக்கே தேரோட்டம்

நாகராஜர் கோயிலில் நாகராஜர் சந்நதிக்கு வலதுபுறம் சிவன், அனந்தகிருஷ்ணன் சந்நதிகள் உள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் முடிந்த பின், இவர்களுக்கு பூஜைகள் நடக்கும். அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்தகிருஷ்ணருக்கு முதல் பூஜை நடக்கும். இந்த கோயிலின் பிரதான மூலவர், நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணருக்கே கொடி மரம் உள்ளது. தை மாதம் 10 நாள் திருவிழா அனந்த கிருஷ்ணருக்கே நடைபெறும். 
இந்த கோயிலில் தெற்கு வாசலே பிரதான வாசல் ஆகும். இந்த வாசலை தான் மகாமேரு மாளிகை என்று அழைக்கிறார்கள். 

ஆவணி ஞாயிறு

நாகராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆவணி மாதம் மழைக்காலம் ஆகும். இந்த காலத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் அமையும். இவற்றால் விவசாயிகளுக்கு எந்த வித துன்பமும் ஏற்படாமல் இருக்கவே, ஆவணி மாதம் நாகராஜரை வழிபாடு நடத்துவது சிறந்ததாகும். ராகு வழிபாட்டுக்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதாலும், மலையாள ஆண்டில் முதல் மாதம்  ஆவணி என்பதாலும் இந்த மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிக சிறந்ததாகும். எனவே ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். இந்தமுறை ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று தான் பிறக்கிறது. எனவே இந்த மாத ஞாயிற்றுக்கிழமை, மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

அம்மச்சி துர்க்கை

நாகராஜர் ஆலயத்தில் துர்க்கை சந்நதி உள்ளது. இந்த சிலை இங்குள்ள நாக தீர்த்ததில் கிடைத்ததால், தீர்த்த துர்க்கை என்று அழைக்கிறார்கள். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகராஜரையும், துர்க்கையையும் வழிபட்டால் தோஷம் நீங்கும். கேரளாவில் வயது முதிர்ந்த பெண்களை அம்மச்சி என்று அழைப்பார்கள். அது போல் இந்த துர்க்கையையும் அம்மச்சி துர்க்கை என்று அழைக்கிறார்கள். பாலமுருகன் சந்நதியும் உள்ளது. இது தவிர சாஸ்தா, இடும்பன் சந்நதிகளும் உள்ளன. இங்குள்ள நாக சிலைகள் அமைந்துள்ள இடத்தில் அரசமரத்துடன், வேப்பமரமும் இணைந்து வளர்ந்து வருகிறது. இதை சுற்றி வழிபட்டால் குழந்தை பேறு நிச்சயம் கிடைக்கும். பரிகார ஸ்தலமாகவும் இருப்பதால், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், நாக சிலைகள் செய்து பக்தர்கள் வைக்கிறார்கள். நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து, தலைமை தபால் நிலையம் செல்லும் ரோட்டில் நாகராஜா கோயில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment