பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம். சிவமும், சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் கிரிவலத்தை தொடங்கும் பக்தர்கள், அடிஅண்ணாமலை வந்து, மீண்டும் மலைப்பாதை வழியாக ஈசான்ய லிங்கத்தை அடைந்து பின்னர் சின்னக்கடைதெரு வழியாக மீண்டும் ராஜகோபுரத்தில் கிரிவலத்தை முடிப்பார்கள்.
இவ்வாறு பக்தர்கள் கிரிவலம் செல்லும்போது கிரிவல பாதையில் இந்திரநந்தீஸ்வரர், இந்திர லிங்கம், கற்பகவிநாயகர் கோயில், காமாட்சியம்மன் கோயில், பாணிபத்திரர் கோயில், அக்னி தீர்த்தக்குளம், அக்னிலிங்கம், காளியம்மன் கோயில், தட்சிணாமூர்த்தி கோயில், ரமணாஸ்ரமம், ஆறுமுகப்பெருமாள் கோயில், சிங்கமுக தீர்த்தம், எமலிங்கம், எமநந்தீஸ்வரர், துர்வாசகோயில், துர்வாசநந்தி, சோணாநந்தி, சோணாதீர்த்தம், ஜோதிவிநாயகர் கோயில், மாரியம்மன் கோயில், ஈஸ்வர தொண்டு செய் நந்தி, நிருதிலிங்கம், அருட்பெருஞ்ஜோதிகோயில், திருநேர் அண்ணாமலை, வீரஆஞ்சநேயர் கோயில், ராகவேந்திரா கோயில், கண்ணப்ப நாயனார் கோயில், பழனிஆண்டவர் கோயில், சூரியலிங்கம், வருணலிங்கம், காசிநந்தீஸ்வரரர், ஆதிஅருணாசலம் அபிதகுஜாம்பாள் கோயில், சூழமணிவிநாயகர், மாரியம்மன்கோயில், வாயுலிங்கம், அதிகார நந்தி, குபேரலிங்கம், இடுக்குபிள்ளையார் கோயில், சீனிவாசபெருமாள் கோயில், ஈசான்யலிங்கம், பச்சையம்மன் கோயில், வடவீதிசுப்பிரமணியர் கோயில், துர்க்கையம்மன் கோயில், துர்காநந்தி, பெரிய ஆஞ்சநேயர் கோயில், பவளக்குன்று கோயில், அருணைநாயகி அம்மன் கோயில், பூதநாராயணன் கோயில், வீரபத்திர கோயில், இரட்டைபிள்ளையார் கோயில் உள்பட 54 கோயில்கள் உள்ளன.
இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்றது. இதில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் காளியம்மன் கோயில். திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் காளியம்மனை வழிபட தவறுவதில்லை. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள ரமணாஸ்ரமம் அருகே இக்கோயில் உள்ளது. கருவறையில் காளியம்மன் மட்டுமின்றி முருகர், விநாயகரும் வீற்றிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு. கோயிலில் அர்த்த மண்டபத்தின் முன் பகுதியில் எருமை தலையுடன் கூடிய மகிஷாசூரனை, காளியம்மன் தனது காலால் மிதித்து வதம் செய்யும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்றும் இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காளியம்மன் காட்சி தருவார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் இக்கோயிலில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு இன்று காளியம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும். அன்னையை மனமுருகி வழிபடும் பக்தர்கள், எலுமிச்சை கனியால் தங்களது தலையை வலம் மற்றும் இடப்புறமாக 3 முறை சுற்றி கோயிலுக்கு முன்பு உடைக்கின்றனர். மேலும் கோயிலுக்கு முன்பு உள்ள திரிசூலத்தில் எலுமிச்சை கனியை வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் தங்களது உடலில் உள்ள பிணிகள், எதிரிகள் செய்துள்ள பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி போன்றவை நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை கனிவோடு கேட்டு, கஷ்டங்களை அழிக்கும் காளியாக வீற்றிருக்கிறாள் அன்னை...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment