Saturday, 3 August 2019

திருமண வரம் தருவாள் திரௌபதி.!!

வீமக்கவுண்டர் பாளையம், திலாசுப்பேட்டை, புதுவை


மகாபாரத்தில் இருந்து போற்றி வணங்கப்பட வேண்டிய தெய்வம் ஸ்ரீ திரௌபதி. ஸ்ரீ பாஞ்சாலி என நாம காரணத்திற்கு மூலமாக விளங்குவது ஐந்து சக்திகளும் ஒரு சேர அமைந்த சக்தி அவள். இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, மாயா சக்தி, ஆதி சக்தி இவைகளின் சங்கம ரூபமுமாவாள் திரௌபதி. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரி மாநிலம் திலாசுப்பேட்டை, வீமக்கவுண்டர் பாளையத்தில்  விவசாயமே பிரதான தொழிலாகும். அதோடு அவ்வப்போது மீன் பிடித்து வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தினர் அப்பகுதி மக்கள். இந்த இரண்டிற்கும் தாயாக விளங்கி வந்தது ஏற்றங்குளம் ஆகும். அக்குளத்தில் இருந்து ஏற்றம் இரைத்து நீர் பாய்ச்சுவது இருவரது வழக்கம். விவசாய அறுவடை முடிந்த காலத்தில் மீன் பிடிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். 

என்றோ ஒரு காலத்தில் அங்கு வணங்கப்பட்ட பாஞ்சாலியம்மன் திருமேனி அக்குளத்திற்குள் கால மாற்றத்தில் புதையுண்டு இருப்பது யாருக்கும் தெரியாமலிருந்தது. ஒரு நாள் அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த இருவர், மீன பிடிக்க வலைபோட்டு முயற்சித்த போது வலையில் அன்னையின் திருமேனி சிக்கியது. ஏதோ ஒரு கனமான பொருள் தட்டுப்படுவதை உணர்ந்த அவர்கள் இறங்கி பலமாக முயற்சித்து இழுக்க வந்ததோ அம்பாளின் திருமேனி. பயபக்தியுடன் வணங்கிவிட்டு. அன்னையின் திருமேனியை சுமந்தபடி ஊருக்கு கொண்டு வந்தனர். ஆனால் பாதி வழியிலேயே திருமேனி கனம் தாங்காமல் தற்போது திருக்கோயில் கொண்டிருக்கும் மூலவர் சந்நதியுள்ள இடத்தில் வைத்து விட்டனர்.
 
பிறகு ஊருக்குள் எடுத்து செல்ல முயன்றபோது திருமேனியை அசைக்க கூட முடிய வில்லை. அதற்குள் விடிந்து ஊருக்குள் விஷயம் பரவி பலரும் வந்து முயற்சித்தும் முடியாமல் போக, ஒருவர் மீது அம்பிகை வந்து இறங்கி, தான் இங்கேயே ஊருக்கு வெளியே காவலாய் இருந்து விடப்போவதாகவும், தனக்கான இடம் இதுவே என்று உணர்த்தியமையால் அங்கு அம்பிகைக்கு ஊர் மக்கள் சேர்ந்து சிறிய கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். பல்வேறு ஆண்டுகளில் திருப்பணிகள் நடைபெற்று படிப்படியாக தற்போதுள்ள பெரிய கோயிலாக வளர்ச்சியடைந்துள்ளது.
இரண்டு அடிக்கும் குறைவான அழகு ததும்பிய மூர்த்தம், இரண்டு திருக்கரங்களில் வலக்கரத்தில் மலருடன் பச்சைக்கிளி அமர்ந்திருக்க இடது கரம் திருவடியை காட்டி தொங்கிய பாவனையில் தாமரை போன்று மலர்ந்துள்ள கண்களுடன் திருக்காட்சியளிக்கிறாள்.

புதுச்சேரியில் பாஞ்சாலியம்மனுக் கென மிகப் பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும் திருக்கோயில் இதுவே. அம்பிகை அவதரித்த திதியான வளர்பிறை பஞ்சமியில் சித்திரை மாதத்தில் கொடியேற்றி திருவிழா தொடங்குகிறது. திருவிழா நிறைவில் திருக்கல்யாண வைபவமும் அர்ச்சுனன் வில் வளைத்து, மாலை மாற்றுதல் நடைபெற்று பூப்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சியுடன், அறுசுவை விருந்துடன் களை கட்டுகிறது. தீமிதி விழாவன்று சரியாக மதியம் 12 மணிக்கு திருக்கோயிலிலிருந்து அன்னையின் மரத்திருமேனி கோயில் அருகேயுள்ள மைதானத்திற்கு கொண்டு வரப்படும். படுகளத்தில் துச்சாதனன், துரியோதனன், கர்ணன், சகுணி போன்றவர்கள் சார்பில் ஐந்து பேர் விரதமிருந்து அன்னையை பிரார்த்தித்துக் கொண்டு மரப்பலகைகளில் படுக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தப்பித்துப் போகாத வண்ணம் நான்கு திசைகளின் வாசலிலும் பாண்டவர்கள் காவலிருப்பார்கள். 

தேவி பாஞ்சாலி கோட்டைக்குள் ஆவேசமாக எழுந்தருள்வாள். அவள் முன் குங்குமக் கரைசல் (குருதியாக பாவித்து) உடைக்கப்பட்டு அதை அன்னையின் கூந்தலில் தடவி மல்லிகைப்பூ சூட்டி சபதம் நிறைவேற்றப்படும். மாலை தீ மூட்டப்பட்டு அன்னை தீமிதி திடலுக்கு எழுந்தருள்வாள். சக்தி கரகம் புறப்பாடாகி பக்த கோடிகள் அனைவரும் தீமிதிப்பார்கள். மறுநாள் காலை தேர் நிலைக்கு வந்த பின்னர் அம்பிகை தேரடித்தடம் தரிசிக்கும் நிகழ்வும், மாலை மகாபாரதத்தை நடத்தி கொடுத்த கண்ணனுக்கு அர்ச்சுனர் திருவடியை அழுத்தி விட, அன்னை அவரது தலை அருகில் அமர்ந்து மஞ்சள் நீர் குடம் சுமந்து தெளிக்க வீதி உலா காண்கிறார்கள். போரில் உதவிய போத்திராஜனுக்கு பள்ளயம் போட்டு நன்றி தெரிவித்து மாலை ஸ்ரீ தருமருடன் பாஞ்சாலியம்மன் ஊஞ்சலில் எழுந்தருளியிருக்க, ஏனையோர் தொண்டுகள் புரிய, ஸ்ரீ குந்தி, ஸ்ரீ கண்ணபிரான் முன்னிலையில் தருமருக்கு பட்டாபிஷேகம் செய்வித்து செங்கோல் வழங்கி அனைவருக்கும் அட்சதை வழங்கி விழா நிறைவடைகிறது. மகாபாரதத்தை அப்படியே நம் கண் முன் நிகழ்த்தும் ஒரு அற்புத விழாவாகும்.

ஆவணி பூரட்டாதியில் திரௌபதி அவதார உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தியும் சிறப்புற நடைபெறுகின்றன. ஒரு பிராகாரம் கொண்ட திருக்கோயிலில் தென் திசை நோக்கி. குரு அம்சமாக ஸ்ரீ கண்ணபிரான் எழுந்தருளியுள்ளார். பூரண, புஷ்கலையுடன் ஐய்யனாரும், முத்தால் ராவுத்தரும், பெரியாண்டவரும், கங்கையம்மனும் பிராகாரத்தில் எழுந்தருளியுள்ளனர்.பாஞ்சாலியம்மனின் சந்நதியில் வழங்கப்படும் அருட்பிரசாதம் வீரகாந்தம் என்று அழைக்கப்படுகிறது. விரலிமஞ்சளுடன், அரிசி மாவு, வெட்டிவேர், வேப்பிலை இன்னும் பிற மூலிகை பொருட்கள் சேர்த்து காய இதை அணிந்து கொள்பவர்களை தீய சக்திகள் அண்டுவதில்லை. காரிய தடைகளும் அகன்று விடுகிறது.இக்கோயில் புதுச்சேரி, ராஜீவ் காந்தி சிலையிலிருந்து வழுதாவூர் செல்லும் காலையில் திலாசுப்பேட்ட, வீமக்கவுண்டர் பாளையத்தில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment