சிவசக்தியை உலகெனச்சுற்றி
சீவர்களுக்கு அமையப்பர் தெய்வென
சீலத்தை உரைத்த கணபதியே!
செய்யுமென் தமிழ்கவிக்கு காப்பு நீயே!
காப்பான் நமை கணநாதன்-உமை
ஆனந்த நாயகன் மலரடிப்போற்றி!
கோடி சூரியர்ப்போல் ஒளிர்வான்!
வினைகள் தீர்க்கும் குருவே போற்றி!
செய்பவன் அவனே! செயலும் அவனே!
தடைகளில்லை! தஞ்சமுன் தாள் பணிந்தேன்!
மகாகணபதியை காலையில் தியானித்தால்
பாபம், வியாதி உடன் விடுபட்டு
நற்கவி, திறமை, நன்மக்கள், ஆயுள்
நற்தேக வலிமை செல்வங்கள் சேரும்!
சேரும் செல்வமிது செப்புவேன் கேள்!
கவலையிலா மனது! கட்டான உடலுறுதி!
நற்கேள்வி ஞானம்! இன்னும்
இவ்வைய இன்பமனைத்தும் நாடிவரும்!
நாடிய மாதரின்பம் நமக்குண்டு
நம்பிக்கையுடன் தும்பிக்கையான் மலரடி
நலமே போற்றி! ஆசை அறுமின்!
ஆன்மாவை உணர்! ஆக்கை பொய்யெனவறி!
பொய்யில் மெய்யும், மெய்யில் பொய்யும்
மறைந்து மறைந்த மாயை உலகில்
மயக்கம் சேர்க்கும் மனதுக்கு மருந்து
மலையுச்சிப் பிள்ளை யார்!
ஆர் அறிவார் கணபதி சக்தியை!
வேரின் சக்தி கிளை அறியுமோ!
போரின்றி உலகம் உய்ய-இப்
பாரில் வேண்டும் பக்தி!
பக்தியில் பூசித்தேன் சக்திநாதா!
பாரெங்கும் அமைதி; பால் மனது
படித்தவர்க்கு வேலை! பாமரர்க்கு வாழ்க்கை
பலதொழில் வளர்த்து பட்டினியின்றி
எவரும் நினை நிந்திக்கா வண்ணம்
எல்லார்க்கும் வரம் தருவாய்!
தந்த வரம் கொண்டு -நான்
வீரம் வளர்ப்பேன்! அடிமை அகற்றுவேன்!
வீரருக்கு ஒரு மரணம்! இங்கு
நடுங்கும் கோழைக்கு தினமும் மரணம்!
ஆண்கள் கண்ணியமொடு கற்புபேணின்!
பெண்கள் பிழையின்றி பிழைத்திடுவார்!
பிழைக்கும் வழி இவ்விதம் உரைப்பேன்
நற்சிந்தனை, நற்செயல்- தூய அன்பில்
மனதை மலர்கொண்டு பூசித்து-மக்கள்
மன்னரென சமமாய் வாழ்ந்தால்-இந்த
மண்ணில் பகையேது, துயரேது-தூய
மகாகணபதியின் துணை கொள்வோம்!
துணை வேண்டின் துணையாவான்
மனை வேண்டின் மனை தருவான்!
வினை வேண்டின் வினையாவான்
தனை வேண்டின், தடையகற்றி
தளரா மனயுறுதி தருவான்!
உறுதியான மனதால் உலகைநோக்கு
உமைபாலன் துணையுண்டு விடுதலையுண்டு
உறவுண்டு, வாழ்க்கையுண்டு உத்தமர்
ஆசியுண்டு, வழியுண்டு எல்லாமுண்டு!
எல்லாத்தொழிலும் சமமாய் காண்
எத்தொழிலாகினும் நடுநிலமை பேணு!
பணியை செய், பயன் கருதாதே!
பிறவியின் பயனை உலகில் தேடு!
பிறவா வரம் கணபதியை கேளு!
இறவா மனதில் இறைவனுள்ளான்!
அகரமுதலே போற்றி!
ஆனை முகனே போற்றி!
இடையூறின்றி இன்பம் தரும்
இசை வடிவோய் போற்றி!
ஈனப்பிறவி ஒழிப்பாய் போற்றி!
ஈகை மனதில் வளர்ப்பாய் போற்றி!
உயிரின் மூலமே போற்றி!
உண்மைப்பொருளே போற்றி!
ஊக்கம் அளிப்பாய் போற்றி!
எண்ணும், எழுத்தும் கருத்துமானாய் போற்றி!
ஏழைக்கருளும் எளியோன் போற்றி!
ஐயமில்லா ஜயம் தரும் ஐங்கரன் போற்றி!
ஒலி, ஒளி நாதா போற்றி!
ஓங்கார ரூபா போற்றி!
ஒளவைக்கு முதிர்ந்த ஞானமீந்த
கரிமுகனே போற்றி!
போற்றி வளர்த்த உடலால் பயனில்லை
போற்றி மனதை கணேசரிடம் கொடுத்திடு
பேச்சுக்கள் எத்தனை! ஏச்சுக்கள் எத்தனை
பொருள் சேர்த்தது எத்தனை -பூண்ட
நகைககள் எத்தனை; ஆடிய ஆட்டங்கள்
எத்தனை! செத்து வீழ்ந்த பிணத்தருகே
இனிச்சாகும் சடலங்கள் அழுவது எத்தனை!
அழுவது ஏன் மனமே!
அங்குச நாயகன் அருள்பெற்றிட
பிள்ளைக்கறி தர இயலாது!
மொட்டாடும் மங்கை சொற்கேட்டு
இளமை துறக்க இயலாது!
நாயன்மார் போல் தியாகம்
நான் செய்ய இயலாது! இனி
கணேசரருள் எப்படி பெறுவேன்!
செய்க தவம் நீ
சிந்தை செயல் இரண்டாலும்!
கலியுலகில் இது முடியாதெனில்
நாம ஜெபம் செய்திடுக!
நாளும் கோளும் அறிந்தவன்
விதியை மதியால் வென்றவன் நாமம் வாழ்க!
வாழ்க கஜமுகன் நாமம்
நமன் அஞ்சும் நாமம்!
நன்மை சேர்க்கும் நாமம்
தீமை ஒடுங்கும் நாமம்!
உலகம் உவக்கும் நாமம்!
உயிர்கள் புகழும் நாமம்!
வான்நின்று தேவர் வாழ்த்த
வாரனத்து நாயகனை பக்தியோடு
வையத்தில் வாழுமட்டும்-இதய
மையத்தில் வைத்து பூசிப்போம்!
பூசனை என்பது மலர்போடுதல்!
வாசனை திரவியம் தெளித்தல்!
யோசனை சிதறாமல் -அங்குசப்
பாசனை நினைத்து உருகுதல்!
அன்னையும் பிதாவும்
கண்ணெதிர் தெய்வம்!
ஆனைமுகன் அருளால்
அவனியிலே உருவெடுத்தேன்!
ஐயனை கருப்பொருள், தனிப்பொருள்
பரம்பொருளென உணரத்தானோ!
பணிந்தார் பாவம் போக்கும்
பஞ்சமுகன் தாள் வாழ்க!
துணிந்தார் மனதில் என்றும்
துணையாய் இருப்பான் வாழ்க!
கனிந்தார் மனதில்
கருணைக் கரிமுகன் வாழ்க!
விரிந்த மலரில் தேனாய்
மணமாயிருப்பவன் வாழ்க!
பரந்த உலகைக்காக்கும் நாயகன் வாழ்க!
காவிரித் தலைவன் வாழ்க!
காவிய மியற்றியவன் வாழ்க!
முப்பாலின் பொருளாய்
மூவுலகை ஆள்பவன் வாழ்க!
மூஞ்சுறு வாகனன் வாழ்க!
முத்தமிழ் நாயகன் வாழ்க!
அணுவில் அணுவாய்
கனவில் கனவாய்
வானகமாய், கானகமாய்
இயற்கை பெருநிதியாய்
இகம், பரம் ஆகிய
இன்ப, துன்ப கருவாய்
விளங்கும் வல்லப கணபதி
விக்ன விநாயகன் பாதம்
விரும்பி விரைந்து சரணடைவோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment