Friday, 30 August 2019

பிள்ளை வரமருளும் பிள்ளையார்பட்டி நாயகன்.!!

1600 ஆண்டுகளுக்கு முன் குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட பிள்ளையார்பட்டி ஆலயம், ஒன்பது நகரத்தார் ஆலயங்களுள் ஒன்று. எக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராசநாராயணபுரம், கணேசபுரம், கணேசமாநகரம், தென்மருதூர், பிள்ளைநகர் போன்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. கருவறையில் 6 அடி உயரத்தில் இரு கைகளுடன் அமர்ந்த வண்ணம் கற்பகவிநாயகர் அருள்கிறார். வலது கையில் சிவலிங்கம் 

காட்சியளிக்கிறது. இத்தலத்தில் விநாயகரின் துதிக்கை வலம்புரியாக உள்ளது. அர்த்தபத்மாசனத்தில் அமர்ந்து இடது கரத்தை கடிஹஸ்தமாக தொடையில் வைத்துள்ள தோற்றம். கஜமுகாசுரனைக் கொன்ற பாவம் தீர ஈசனை விநாயகர் இத்தலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி ஆலய உட்பிராகாரத்தை வலம் வருகிறார்.

ஒவ்வொரு மார்கழி மாதமும் இத்திருக்கோயிலுக்குரிய நிலபுலன்களின் கணக்கு வழக்குகள் விநாயகர் திருவுரு முன்னிலையிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் படித்துக் காண்பிக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் இத்தலத்தில் பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அதில் ஆறாம் நாள் கஜமுக சம்ஹாரம்வரை வெள்ளி யானை வாகனத்திலும், பின் தங்க மூஷிக வாகனத்திலும் விநாயகர் எழுந்தருள்வார். அந்த பத்து நாட்கள் சதுர்த்தி விரதமிருப்பவர்கள், தேசிக விநாயகன் திருமுற்றத்திலே நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து கும்ப ஜபம் நடத்தி அபிஷேகம் பெற்றுக் கொள்வதன் மூலம் விரதத்தை நிறைவு செய்வர். தேசிக விநாயகன் என்றால் ஒளி அழகு உள்ள ஒப்பற்ற தலைவனான மூத்த திருப்பிள்ளையார் எனப் பொருள்படும். விநாயகப் பெருமான் ஓங்கார வடிவில் அருள்புரியும் அதியற்புதத் தலம் இது. 

ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று இத்தல கற்பகவிநாயகரை தரிசித்தால் திருமணம் எந்தத் தடையுமின்றி எளிதாகக் கைகூடும் என்கிறார்கள். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கிராமதேவதை கொங்குநாச்சியம்மனுக்கு வைகாசி மாதம் ‘செவ்வாய்த் திருவிழா’ என்ற பெயரில் பத்து நாட்கள் உற்சவம் நடக்கிறது. கவிஞர் கண்ணதாசன் இந்த விநாயகரைக் குறித்துப் பாடிய ‘அற்புதக் கீர்த்தி வேண்டின்..’ எனத் துவங்கும் பாடல், திருத்தலப் பாடலாகவே பாவிக்கப்படுகிறது. இத்தல மூலவர் ஈசனுக்கு மருதீசர் என்று திருப்பெயர். இவருடைய கருவறை கஜப்ருஷ்ட அமைப்பில் குடையப்பட்டுள்ளது. அம்பிகை, வாடா மலர்மங்கை. மலையைக் குடைந்து பெருந் திருவுருவுடன் காட்சியளிக்கும் ஈசன் மகாதேவர் என்றும், சிறிய திருவுருவுடன் காட்சி தரும் ஈசன் நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் காட்சி தரும் சங்கரநாராயணருக்கு இருபுறமும் உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் தரிசனமளிக்கிறார்கள்.

மார்கழித் திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் திருவீதி பவனி வருவார். அன்று சிவகாமசுந்தரியின் ஊடலை நீக்க நடராஜப்பெருமான் கையாளும் வழிமுறைகள் காணக்கண் கொள்ளாதவை. ஈசன், அமர்ந்த கோலத்தில் லிங்கோத்பவ மூர்த்தியாய் இத்தலத்தில் காட்சியளிக்கிறார். கல், மரம், சுதை, உலோகம் இல்லாமலே பல்லவன் கோயில் சமைத்தான் எனும் கல்வெட்டைக் கொண்டு மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட முதல் கல்வெட்டுக் கோயில் இதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனாலும், பெருபரணன் எனும் மன்னனின் கல்வெட்டு அது. மகேந்திரவர்மனின் காலத்திற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தியது என்றும் சிலர் கூறுகிறார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment