Tuesday, 2 July 2019

அனுமன் கால் பதித்த இலங்கை ரம்போடா அனுமன் ஆலயம்.!!

இலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது.


லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை, தன் சூழ்ச்சி வலையால் ராவணனுக்கு சீதையின் மீது அளவுகடந்த விருப்பம் ஏற்படும்படிச் செய்தாள். பெண் பித்து தலைக்கேறிய ராவணன், சீதையை தந்திரமாக கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான்.

இதையடுத்து சீதையைத் தேடும் பணியில் ராமனும், அவருக்கு உதவிய சுக்ரீவனின் படை வீரர்களும் ஈடுபட்டனர். அப்போது சடாயுவின் சகோதரர் சம்பாதியின் மூலமாக, சீதை இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அங்கு செல்ல அனுமனால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த ராமபிரான், தன்னிடம் இருந்த மோதிரத்தை அடையாளமாக சீதையிடம் காட்டும்படி கூறி அனுமனிடம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

இலங்கைக்கு பறந்து சென்ற அனுமன், இலங்கையில் அசோகவனம் அருகே உள்ள ரம்போடா என்ற இடத்தில், தன் பாதங்களை வைத்து, அன்னை சீதையைத் தேடினார். ஒரு வழியாக அசோக வனத்தில் அரக்கியர்கள் காவலில் இருந்த சீதையைக் கண்டுபிடித்தார். பின்னர் அரக்கியர்களை மயங்கச் செய்து, ராமன் தந்த மோதிரத்தைக் காட்டி, தான் ராமனின் தூதன் என்று தன்னை அறிமுகம் செய்தார்.

அதன்பிறகே ராமபிரான், ராவணனுடன் போர்புரிந்து வதம் செய்ததாகவும், சீதை மீட்கப்பட்டதாகவும் ராமாயண இதிகாசம் எடுத்துரைக்கிறது.

இந்த வகையில், இலங்கையில் அனுமன் முதன் முதலில் தன் காலடித் தடத்தை பதித்த இடமாக, இலங்கையில் உள்ள ரம்போடா மலைமுகடு பகுதி நம்பப்படுகிறது. இந்த இடத்தில் இலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது.

இந்த வரலாற்றை உறுதிப்படுத்தும் விதமாக சீதை சிறையிடப்பட்ட அசோகவனம், தற்போது ‘சீதா எலியா’ என்று வழங்கப்படுகிறது. சீதை அக்னிப் பிரவேசம் செய்த இடம், ராவணன் மாளிகை, கோட்டை என பல்வேறு பகுதிகளும் இந்தப் பகுதிகளில் நிறைந்துள்ளன.

ஆலய அமைப்பு

கொழும்பில் இருந்து, மலைகள் நிறைந்த நுவரெலியா செல்லும் சாலையில், சாலையோர மலை முகட்டில், ரம்போடா அனுமன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல சாலை வசதி இருக்கிறது. எழிலான தனிக்கோவிலில் அனுமன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் இடது மற்றும் வலது புறங்களில் மலைகள் நிறைந்துள்ளன. நேர் எதிரே பதினாறு அடி உயர பக்த அனுமன் கைகூப்பி வணங்கிய கோலத்தில், ராம பக்தனாகப் பணிவுடன் நிற்பது நம்மைப் பரவசப்படுத்துகிறது. ஆலயத்தின் பின்புறம் உயரமான மலைகள் பசுமைப் போர்வையைப் போர்த்தியபடி, கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.

ஒரே கல்லால் ஆன பதினாறு அடி உயர பக்த அனுமன் சிலை, 2001-ம் ஆண்டில் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டின் முக்கியமான வழிபாட்டுத் தலம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றிருக்கிறது. இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆலயமாகவும் இது விளங்குகிறது. அடித்தளத்தில் பிரமாண்ட தியான மண்டபம் அமைந்துள்ளது. இலங்கையில் சின்மயா மிஷன் கோவில் எழுப்ப, 1980-ல் பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தேர்வு செய்த இடம் இது. இதன்பின் 2001-ம் ஆண்டில்தான் பக்த அனுமன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் பவுர்ணமி நாளன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று மட்டும் சுமார் மூவாயிரத்திற்கும் மேலான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். ரம்போடா அனுமன் கோவிலை, இலங்கை நாட்டின் சின்மயா மிஷன் நிர்வாகம் செய்து வருகிறது.

அமைவிடம்

இலங்கை நாட்டின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில், பெரதெளியா- நுவரெலியா நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும், பெரதெளியாவில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் அனுமன் ஆலயம் இருக்கும் மலைப் பகுதி அமைந்திருக்கிறது. இம்மலைகளின் வடபகுதி ‘ரம்போடா’ என்றும், தென்பகுதி ‘ராவணா போடா’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள், ‘ராமன் படைவீரர்கள் பகுதி’, ‘ராவண படைப்பிரிவு பகுதி’ என்பதாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment