Tuesday, 2 July 2019

மகத்துவமிக்க மரகத நடராஜர்.!!

சிவபெருமான், மங்கைக்கு (பார்வதி தேவிக்கு) வேத ஆகமங்களின் ரகசியங்களை உபதேசித்ததால் இத்திருத்தலத்துக்கு ‘உத்திர கோச மங்கை’ என்ற பெயர் ஏற்பட்டது. உத்திரம்-உபதேசம். கோசம்-ரகசியம். மங்கை-பார்வதி தேவி. எனவே உத்தர கோச மங்கை.‘தட்சிண கயிலாயம்’ என்று அழைக்கப்படும் இந்த பழமையான சிவத்தலத்தில் 6 அடி உயரத்தில் ‘மரகத நடராஜர்’ ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காணப்படுவார். இவர் ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டும் மரகத வடிவத்தில்-பச்சை வண்ணத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

முன்னொரு காலத்தில் ஆயிரம் முனிவர்கள் அருந்தவமியற்றுவதற்காக இந்த உத்தர கோச மங்கைக்கு வந்தனர். அப்போது இத்தல சிவபெருமான், மங்கள நாதர், அவர்களை நோக்கி, ‘இலங்கையின் மங்கை நல்லாள் மண்டோதரி என்னைக் குறித்து தவமியற்றுகிறாள். நான் அங்கு சென்று வருகிறேன். அதுவரையில் இந்த வேத ஆகம நூலை நீங்கள் பத்திரமாக பாதுகாத்து வரவேண்டும். என் திருமேனியை எப்பொழுது ராவணன் தீண்டுகிறானோ அப்போது நான் இங்குள்ள அக்னி தீர்த்த குளத்தில் அக்னிப் பிழம்பாக தோன்றுவேன். அப்போது என்னை வழிபடுங்கள்” என்று கூறி மறைந்தார்.

தவமியற்றும் மண்டோதரியின் முன்பு சிவபெருமான் குழந்தை வடிவில் காட்சி தந்தார். அங்கு வந்து குழந்தையை கண்டு மெய்மறந்த ராவணன், அன்பு மேலிட குழந்தையை எடுத்துக் கொண்டான். அந்தக் கணமே உத்தர கோச மங்கை அக்னி தீர்த்தத்தில் ஒரு ஜோதி பளிச்சிட்டது. அதைக் கண்ட முனிவர்கள் ஓடிச்சென்று ஜோதியின் நடுவில் விழுந்து நீரில் மூழ்கினர். ஆனால் அந்த ஆயிரம் பேரில் ஒருவர் மட்டும் நீரில் மூழ்காமல் சிவபெருமான் அளித்த சிவாகம நூலை கைவிடாமல் அந்த புண்ணிய தீர்த்தக் கரையில் அமர்ந்து விட்டார்.ஜோதியினூடே குதித்த ஆயிரம் முனிவர்களுக்கும் சிவபெருமான் தேவியுடன் காட்சி தந்தார். முனிவர்கள் அனைவரும் லிங்கமாக இங்கு நிலைக்க வேண்டுமென்றும், அவர்கள் நடுவே தானும் ஒரு லிங்கமாக அமர்வதாக அருளினார். அதன்படி திருஉத்தரகோசமங்கை அக்னி தீர்த்தக் கரையில் ஸஹஸ்ர லிங்கமாக மாறிவிட்டார். பின்பு தீர்த்தக் கரையில் அமர்ந்திருந்த முனிவரை நோக்கி ‘நான் அளித்த சிவாகம திருமுறையை உன் உயிரினும் மேலாக பாதுகாத்தாய். நீ இந்த பூவுலகில் பாண்டி நாட்டு பழம்பதி ஒன்றில் மறையவர் குலத்தில் அவதரித்து ‘மாணிக்க வாசகர்’ என்று அழைக்கப்படுவாய். உன்னால் சைவமும் தமிழும் தழைத்தோங்கும்’ என்று வரமும் அருளினார். கரையில் ஸஹஸ்ரலிங்கேஸ்வரர் சந்நதியும், மாணிக்க வாசகருக்கென்று தனியாக ஒரு சிறு கோயிலும் இருப்பதை இன்றும் காணலாம்.

பாதாள லிங்கேஸ்வரராக எழுந்தருளியுள்ள மங்கள நாதரையும், இறைவி மங்களேஸ்வரியையும் ஒரு இலந்தை மரத்தினடியில் இருந்து தவம் செய்து நான்கு வேதங்கள் முழுவதையும் ஓதியதால், வியாசர் அன்றுமுதல் வேதவியாசர் என்று அழைக்கப்பட்டார். தன்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இத்தலத்தை தன் திருவாசகத்தில் 38 இடங்களில் பாராட்டியுள்ளார், மாணிக்க வாசகர். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் அவரவர் காலங்களில் திருப்பணிகளைச் செய்து இக்கோயிலைப் பராமரித்துள்ளனர். தற்போதும் இந்த ஆலயம் ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது.
மங்கலபுரி என்று அழைக்கப்படும் இந்த உத்திர கோச மங்கை திருத்தலத்தில் பார்வதி தேவி தவமேற்கொண்டு சிவபெருமானை திருமணம் செய்துகொண்டதால் இது ஒரு திருமண பரிகாரத் தலமாகவும் வழிபடப்படுகிறது. இறைவன் பெயர் கல்யாண சுந்தரன் என்றும், இறைவி பெயர் கல்யாண சுந்தரியென்றும் இவ்வூரின் பெயர் கல்யாணபுரம் என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.திரு உத்திரகோசமங்கை திருத்தலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு தென்மேற்கே சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment