Saturday, 27 July 2019

மனக்குறையை நீக்கிடுவாள் மகமாயி.!!

திருச்சி - சமயபுரம் 


சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத்தக்கது திருச்சி அருகேயுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில். உரிய காலத்தில் தேவையான- கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், ‘சமயபுரத்தாள்’ என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே  மாரியம்மன் என்றும் சொல்லப்படுகிறது. வசுதேவர்- தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன்- யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, ‘உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!’ என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. அவளே மாயாதேவி என்றும், மகமாயி என்றும் அழைக்கப்படுகிறாள் என்றும் கூறப்படுகிறது. அந்த மகமாயி தான் சமயபுரத்தில் அருளாட்சி புரிகிறாள் என்கின்றனர்.

சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகவும், அம்பாள், கோரைப்பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் திகழ்ந்ததால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.அதன்படி, சிலர் அந்தத் திருச்சிலையை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் எனப்படுகிறது).அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட்டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், ‘கண்ணனூர் அம்மன்’ என்றும், ‘கண்ணனூர் மாரியம்மன்’ என்றும் அழைக்கப்பட்டாள்.அதன் பிற்பாடு தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜய நகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றதால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

தற்போதைய ஆலயம் கி.பி. 1804-ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.மாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984-ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று காஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் வலப்புறத்தில், ஒரே சந்நதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங்களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப்பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970-ல் கும்பாபிஷேகம் செய்தனர்.அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு. சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. உள்ளே அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்கவிட்டுள்ள வலக்காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.சமயபுரம் கோயிலின் தல விருட்சம் வேப்ப மரம். இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர்.

சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் - தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும் பஞ்சப் பிரகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் விழா.பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.பங்குனி- சித்திரையில் 13 நாட்களுக்கு சித்திரைப் பெருவிழா நடக்கும். சித்திரை மாதம் முதல் செவ்வாய் தேரோட்டமும், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை தெப்பமும் நடைபெறும். இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே, கண்ணனூர் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத்துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment