Saturday, 29 June 2019

கண் கொடுத்து காப்பாற்றிய அத்தி வரதர்.!!

ராமானுஜர் காலத்தில் சோழ வள நாட்டை ஆண்டுவந்த குலோத்துங்கச் சோழன் மாபெரும் சிவ பக்தன். நாட்டில் இருந்த சிவ பக்தர்கள் அல்லாதவர்களுக்கு ஒரு ஓலை அனுப்பினான். அதில் அவர்களை ஈசனே சிறந்த தெய்வம் என்று ஒப்புக் கொண்டு, கையொப்பம் இடும்படி ஆணையிட்டான். பலரும் மன்னனுக்குப் பயந்து, கையொப்பம் போட்டு விட்டனர்.மன்னனிடம் அமைச்சன் நாவலூரன், ‘‘மன்னா ராமானுஜர் மட்டும் கையொப்பம் இடவில்லை’’ என்றான். உடனே  மன்னன், ராமானுஜரை அரசவைக்கு அழைத்துவர ஆணையிட்டான்.


அவனது ஆணையேற்று காவலர்கள், ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரின் மடத்திற்கு சென்றனர்.அவர்களது குரல் கேட்டு மடத்தில் இருந்த கூரத்தாழ்வார் மற்றும் பெரிய நம்பிகள் என்ற ராமானுஜரின் சீடர்கள் வெளியில் வந்தார்கள். ( இருவரும் ராமானுஜரின் தலைமை சீடர்கள்.) மடத்திற்கு வெளியில் வந்த இருவரும், காவலர்கள் வந்ததன் நோக்கத்தை அறிந்தார்கள். உடனே கூரத்தாழ்வார், ராமானுஜரது தண்டத்தையும் கமண்டலத்தையும் எடுத்துக் கொண்டு, காஷாயத்தையும் உடுத்திக் கொண்டு, ‘‘நான் தான் ராமானுஜன் வாருங்கள் செல்லலாம்’’ என்று சொன்னார். சோழ வீரர்களும் அவரை அழைத்துக் கொண்டுச் சென்றனர். பெரிய நம்பியும் அவருடன் சென்றார்.இவர்களிருவரும் சோழப் பேரரசின் முன் நிறுத்தப்பட்டனர். ராமானுஜரை, தெரிந்திருந்த அமைச்சர் நாவலூரான் , வந்திருப்பது, ராமானுஜரின் பிரதம சீடர்களான கூரத்தாழ்வார் மற்றும் பெரிய நம்பிகள் என்று அரசனுக்குத் தெரிவித்தான். அதை அறிந்த அரசன் வெகுண்டு எழுந்தான். ‘‘எதிரிகளை சந்திக்க, தைரியமில்லாமல் பயந்து ஓடுவதும், இப்படி ஆள் மாறாட்டம் செய்வதும் தான் வைஷ்ணவர்களின் பிழைப்பா?’’ என்று வார்த்தையால் குத்தினான்.

‘‘ஓய் வைஷ்ணவப் புழுக்களே! என்னப்பன் ஈசனே உலகின் முதல் தெய்வம் என்று ஒப்புக் கொண்டு, இதோ இந்த பத்திரத்தில் கையெழுத்துப் போடுங்கள்’’ என்று கர்ஜித்தான் மன்னன்.‘‘முடியாது’’ தெளிவாகவும் தீர்க்கமாகவும் கூரத்தாழ்வார் மற்றும் பெரிய நம்பிகளிடமிருந்து வந்தது பதில். இதைக் கேட்ட மன்னன் ‘‘காவலர்களே! இவர்கள் இருவரது கண்களையும் பறித்து இவர்களைக் குருடாக்குங்கள்’’ என்று கொக்கரித்தான்.
‘‘ காவலர்கள்  பெரிய நம்பிகள் அவரை கொல்லைக்கு அழைத்துச் சென்று அவரது இரு கண்களையும் பிடுங்கினார்கள். நாராயணா என்ற அவரது ஓலம் கேட்டு அரசவையே  பதறியது.  நடந்ததை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கூரத்தாழ்வார், வெகுண்டு எழுந்தார்.‘‘அடேய் மூடனே! பரம வைஷ்ணவரான பெரிய நம்பிகளுக்கா தீங்கிழைத்தாய்? அவரையா புழு என்று ஏளனம் செய்தாய்.? விரைவில் புழு என்றால் என்னவென்பதை நீ பூரணமாக உணர்வாய். வைஷ்ணவருக்கு அபசாரம் செய்த உன்னை பார்ப்பதே மகாபாவம். உன்னைக் கண்ட இக்கண்கள் இந்த உடலில் இருக்க அருகதை அற்றது’’ என்று கர்ஜித்த படியே தனது நகங்களால் கண்களைப் பிடுங்கி அதை மன்னன் மீது விசி எறிந்தார்.

 உடனே கூரத்தாழ்வார் அங்கு ஒரு நொடி கூட நிற்கவில்லை. நம்பிகளின் முனகல் வரும் திசையை நோக்கி தத்தி தத்திச் சென்றார். அவரோ தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தார். ஆழ்வாரின் மடியில் தலை வைத்தபடியே வைகுண்டம் ஏகினார் அந்த மகான்.இது இப்படி இருக்க, சோழப் பேரரசின் மதவெறி அத்து மீறியது. சிதம்பரத்தில் இருக்கும் கோவிந்தராஜப் பெருமானின் மூல மூர்த்தியை கடலில் கரைத்தான். மேலும், பல விஷ்ணு தலங்களை இடிக்க ஆரம்பித்தான். இறுதியாக ஸ்ரீரங்கத்தையும் இடிக்கத் தனது படையோடு கிளம்பினான், அந்தக் கொடூரன். வழியில் அவனது தொண்டையில் ஒரு ரணம் ஏற்பட்டது. விரைவில் அது பெரிய ரணமாகி அதில் புழுக்கள் புழுத்து நெளிய ஆரம்பித்தது. அந்த ரணத்திலிருந்து புழுக்கள் வெளிப்பட்டு அவனது உடலெங்கும் நெளிந்தது. போதாக் குறைக்கு அவன் கொடும் வயிற்று வலியில் அவதிப்பட்டு உயிரை விட்டான். இப்படி அவனது கண்டத்தை (கழுத்தை) கிருமிகள் வியாபித்ததால் அவன், கிருமி கண்ட சோழன் என்று அழைக்கப்படலானான். உலகமே ஒரு உன்னதமான மகானின் வாக்கு எப்படி பலித்து விட்டது என்று அதிசயித்தது.

சோழர்களால் விஷ்ணு பக்தர்களுக்கு வந்த ஆபத்து கிருமி கண்ட சோழனின் மறைவிற்குப் பின் முற்றிலுமாக நீங்கியது. இதை அறிந்த ராமானுஜர் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பினார். ஊரே அவரது வரவைத் திருவிழாவாகக் கொண்டாடியது. அவரருகில் வந்து அவரை சாஸ்திர முறைப்படி வணங்கினார்  கூரத்தாழ்வார். தனது சீடர்கள் மூலமாக நடந்ததை முன்னமே அறிந்திருந்த ராமானுஜர், தனது சீடனின் நிலையைக் கண்டு பெரிதும் வருந்தினார். ‘‘ஏனப்பா! இழந்த கண்களை மீண்டும் தருமாறு வேத முதல்வன் நாராயணனைப் பிரார்த்திக்கவில்லை?’’ என்ற ராமானுஜரிடம், ‘‘என்னை இந்நிலையில் வைப்பதில் அவனுக்கு பரம சந்தோஷம் என்றால் இன்னும் ஏழேழு பிறவிக்கும் கூட குருடனாக இருப்பேன் ஸ்வாமி. மேலும் அவனிடம் வேண்டியதைக் கேட்டுப் பெற்றால் சாதாரண மனிதனுக்கும் ஸ்ரீ வைஷ்ணவரான நமக்கும் என்ன வித்தியாசம்?. தங்களுக்கு விருப்பமில்லாததை அடியேன் சொல்லியிருந்தால் தயை கூர்ந்து இந்த சிறியவனை மன்னித்து அருளுங்கள் ஸ்வாமி’’ என்றார் ஆழ்வார். ‘‘ உன்னை இந்நிலையில் பார்க்க என் மனம் சகிக்கவில்லை. ஆகவே உடன் காஞ்சிக்குச் செல். பேரருளாளன் வரதராஜன் வரப் பிரசாதி. கேட்டதையெல்லாம் தரும் கலியுக கண் கண்ட தெய்வம். அவனை சரணாகதி செய். உனக்கு நிச்சயம் மீண்டும் கண்ணொளி தருவான் அந்த மாயக்கண்ணன்’’ என்று வலது கையை உயர்த்தி அவருக்கு ஆசி வழங்கினார் ராமானுஜர்.

ஆச்சாரியரின் சொல்லைத் தட்டாத ஆழ்வார், காஞ்சிக்கு விரைந்தார். வரதராஜனைக் கண் குளிர சேவித்தார். ஒப்புவமை இல்லாத வரதராஜ ஸ்தவம் என்னும் கவிதையை அவன் மீது பாடினார். ஆழ்வார் பாடி முடித்ததுதான் தாமதம். சங்குசக்ர கதாதாரியாக , பூமகள் திருமகள் சமேதனாக திருக்காட்சி தந்தான் வரதன். அந்த அழகனைக் கண்ட ஆழ்வார் அளப்பறியா ஆனந்தம் அடைந்தார். ‘‘அப்பனே, தேவர் பெருமானே, வேத முதல்வனே, ஆதி மூலனே உன்னருளால் கண்ணொளி பெற்றுவிட்டேன். உன் கருணைக்கு எல்லையே கிடையாது. இருப்பினும் அப்பனே, நான் அடைந்த இந்த இன்பத்தை கிருமி கண்ட சோழனும் அவனது அமைச்சன் நாவலூரானும் பெற வேண்டும். அடியர்களைப் பகைத்தவர்கள் மீது நீ காட்டும் கோபத்தை, உக்கிரத்தை, கொடுமையையை, வேகத்தை தண்டனையை அவர்களிடம் காட்டாதே. இதுவே நான் உன்னைக் கேட்டுக்கும் வரம்’’ என்று கைகுவித்தபடியே வேண்டிய ஆழ்வாரின் கண்களில் நீர் தாரை தாரையாக வந்தபடி இருந்தது. ஆனந்தத்தின் உச்சியில் இருந்ததால் அவரது நாவும் தழுதழுத்தது. பகைவர்களிடம் கூட இப்படிப்பட்டக் கருணையை, அன்பே வடிவாகிய வரதனின் அடியவர்களைத் தவிர யார் செய்ய முடியும்?வரதன் ஆழ்வாரின் உத்தமமான தீதில்லா வார்த்தைகளைக் கேட்டு, அகமகிழ்ந்து அவருக்கு அருளி மறைந்தான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment