சிறு தொண்ட நாயனார் குருபூஜை - 5-5-2019
காவிரி பாயும் நன்னாடு சோழவளநாடு. அந்நாட்டில் சிறந்து விளங்கிய திருச்செங்காட்டங்குடியில் சிவபெருமானது திருநீற்றின் துணையினாலே உலகிற் பிறந்து வளர்கின்ற அனைத்து உயிர்களுக்கும் உயர்வாகிய காவல் தொழிலை மேற்கொண்ட மாமாத்திரர் குலம் சிறக்கும்படி வந்து அவதரித்தவர் பரஞ்சோதியார் ஆவார். இதன்வழி உலக உயிர்களை எல்லாம் காக்கின்ற வலிமை சிவபெருமானது திருநீற்றாலே வந்தமைந்தது என்பது பெறப்படும். இதனை,
நிலவிய அத்திருப்பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால் உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு
‘‘மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார்
பலர் புகழும் திருநாமம் பரஞ்சோதியார் என்பார்.’’
என்ற பாடல் விளக்கி நிற்கும்.
பரஞ்சோதியார் தமது உள்ளம் நிறைவு பெறும் வண்ணம் கலைத்துறைகளை எல்லாம் இடையறாது பயின்று தேர்ந்தார். தான் கற்ற கலை எல்லாவற்றிலும் சிறந்தது சிவன்திருவடியில் வைக்கும் அன்புடைமையாகிய ஒழுக்கமேயாம் எனத் தெளிந்து இயமனை உதைத்த சிவனின் திருவடியினிடத்தே பள்ளத்தில் நீர் ஓடுதல் போலத் தடையில்லாது அன்பினைச் செலுத்தி வழிபட்டு வரலானார். உலகின்கண் காணலாகும் பிற கலைத்துறைகள் எல்லாம் மனித உடலையும் உலகினையும் பற்றியவை. ஆனால் பரஞ்சோதியார் பயின்றவையோ உயிரினையும் அதன் உள் பற்றாகிய இறைவனையும் பற்றியவை. எனவே இவை புறத்திலன்றி உள்ளத்தினுள் ஆராய்ந்து தெளிதற்கு உரியனவாதலின் ‘உள்ள நிறை கலைத்துறைகள்’ என்றார் சேக்கிழார். சேக்கிழாரின் இத்தகைய கூற்றினை,
‘‘உள்ளம் நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி பயின்று அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு
பள்ளம் மடையாய் என்றும் பயின்று வரும் பண்பு உடையார்.’’
என்ற பாடலானது விளக்கி நிற்கிறது.
இத்தகைய சிறப்புடைய கலைகள் எல்லாம் அறிந்த பரஞ்சோதியார் நரசிம்மவர்ம பல்லவன் என்னும் அரசனிடம் படைத்தளபதியாய் இருந்து வாதாபி என்னும் நகரைத் தலைநகராகக் கொண்ட சாளுக்கிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்று அந்நகரை தீக்கிரையாக்கி வெற்றியோடு மீண்டார். இந்நகரம் சாளுக்கிய அரசன் புலிகேசியினுடைய தலைநகரமாயிருந்த தென்றும், அவனுக்கும் பல்லவ மன்னன் நரசிங்கவர்மனுக்கும் நேர்ந்த போரில் பரஞ்சோதியாரால் வென்று தகர்க்கப்பட்டதென்றும் கல்வெட்டுக்களால் அறியமுடிகின்றது. பரஞ்சோதியாரின் இத்தகைய சிறப்புமிக்க வெற்றியை,
‘‘மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
தொன் நகரம் துகள் ஆகத் துளைநெடும் கை வரை உகைத்துப்
பன் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்
இன்னை எண் இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்.’’
எனப் பதிவு செய்வார் சேக்கிழார்.
பரஞ்சோதியாரின் வெற்றித்திறம் கண்டு மகிழ்ந்த மன்னன் அவரின் பக்தித்திறமும் கண்டு, உம் உள்ளம் விரும்புமாறு செம்மையுடைய சிவபெருமான் திருத்தொண்டினைச் செய்வாய்! எனப் பணித்து விடைகொடுத்து அனுப்பிவைத்தார். மன்னனின் இத்தகைய செயலினை,
‘‘உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்
எம் உடைய மனக் கருத்துக்கு இனிது ஆக இசைந்து உமது
மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச்
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தார்.’’
என்ற பாடல் விளக்கிடும். சிவபெருமான் திருவடிக்கே மனம் வைத்து வழிபட்ட வந்த பரஞ்சோதியார்க்கு மனையறத்தின் வேராய் திருவெண்காட்டு நங்கை என்னும் தகைமையார் அமைந்தார். பரஞ்சோதியார் உலகில் வாழும் மக்கள் போல் உலகியல் இன்பத்திற்காகவோ குழந்தைப்பேற்றிற்காகவோ இல்லற வாழ்வினை மேற்கொண்டு வாழ்ந்தார் இல்லை. அடியார்க்குத் தொண்டு செய்வதற்கே மேற்கொண்டார் என்பார்சேக்கிழார். இதனை ‘வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்ய’ என்ற அடிகள் விளக்கிநிற்கும். இதனை,
‘‘வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத்
தீது இல் குடிப்பிறந்த திருவெண்காட்டு நங்கை எனும்
காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார்.’’
என்ற பாடல் எடுத்துரைக்கும்.
சிவபெருமானது அடியார்களுக்கு விருப்பத்துடன் செய்யும் வழிபாட்டுச் சேவையில், மேன்மையுடை யோராகிய அவ்வடியார்களின் முன்பு தம்மை மிகவும் சிறியராய் நினைத்துவழிபட்டு வந்தார். ஆதலாலே ‘சிறுத்தொண்டர்’ என்ற பெயரால் உலகில் அறியப்பட்டார். ‘பலர்ப்புகழுந் திருநாமம் பரஞ்சோதியார் என்பார்’ என முன் குறித்த சேக்கிழார், இங்கு ‘சிறுத்தொண்டர்’ எனக் குறித்தது திருத்தொண்டத் தொகையினுள் போற்றப்பட்ட பெயராதலானும், சிறப்புடையது என்பதாலும் நாயனாரது விருப்பத்துக்கு இணங்கிய பெயர் என்பதாலுமே ஆகும். இதனை,
‘‘சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்தநாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால்
மே தகையார் அவர் முன்புமிகச் சிறியர் ஆய் அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல்.’’
என்ற பாடல் வழி அறிய முடிகிறது. இவ்வாறு அடியவர் முன் தன்னை எளியராய்க் கருதித் தொண்டு செய்து வந்த சிறுத்தொண்டருக்கும் திருவெண்காட்டு நங்கைக்கும் சிவபெருமான் திருவருளாலே சீராள தேவர் என்னும் திருமகனார் வந்து அவதரித்து அருளினார். சிறந்த சிறுத்தொண்டர் வரலாற்றுக்கு மூலமாய், இறைவர் தாமே விரும்பிய உணவெனச் சொல்லப்பெறும் பேறுபெற்றவராய், சீராளன் சிறுத்தொண்டன் என்று திருஞானசம்பந்தரால் சிறப்பிக்கப்படும் பேறுடையவராய் முருகப் பெருமானுடன் வந்து இறைவர் ஆட்கொள்ளும் தனிச் சிறப்புடைய பேறுபெறுபவராய் உள்ள அனைத்துப் பெருமைகளையும் உடையவர் எனக் குறிக்கவே இங்கு சேக்கிழார் ‘சீராள தேவர் எனும் திருமைந்தர்’ எனக் குறித்தார். இத்தகைய நுட்பம்,
‘‘நீர் ஆரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப்
பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின்
வேர் ஆகி விளங்கு திரு வெண்காட்டு நங்கைபால் சீராள தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார்.’’
என்ற பாடலால் வெளிப்பட்டு நிற்கும். சிறுத்தொண்டரும் திருவெண்காட்டுநங்கையும் தமக்குத் திருமகனாய் வந்து அவதரித்து தம் பந்தம் அறுதற்குக் காரணமாய் இருக்கப்போகிற சீராளதேவனை பள்ளியில் சேர்த்தனர். இதனை பந்தம் அற வந்து அவரைப் பள்ளியினில் இருத்தினார்.
எனக் குறிப்பால் உணர்த்தினார் சேக்கிழார். சிறுத்தொண்டர் அடியார்க்கு உணவிட்டுப் பின் தான் உண்ணும் வழக்கத்தினை மேற்கொண்டு வரும் நாளில், அவரின் பக்திச் சிறப்பினை உலகிற்கு உணர்த்த வேண்டி இறைவன் தணியாத பெரும் பசியினையுடையவர் போல, வழியில் கண்டவர்களிடம் சிறுத் தொண்டரது மனையைக் கேட்டறிந்து விரைவில் அங்கு வந்து சேர்ந்தார். மேலும் சிவபெருமானது தொண்டர்களுக்கு எந்நாளும் சோறு அளிக்கின்ற திருத்தொண்டராகிய சிறுத்தொண்டர் இம்மனைக்கண் உள்ளாரோ? எனக் கேட்டு நின்றார். அவரைக் கண்ட திருவெண்காட்டுநங்கை வீட்டினுள் வந்து உணவுண்டு அருள் செய்ய வேண்டும் என வேண்ட, மாதரார் தனித்திருக்கும் வீட்டினுள் புக மாட்டோம்! என செல்வார் போல் காட்ட அம்மையார் விரைந்தெய்தி வீட்டிற்குப் புறத்தே போயிருந்த சிறுத்தொண்டரை அழைத்து வந்தார். அம்மையாரின் இவ் அரிய செயலைச் சுட்டும் பாடல்,
‘‘வண்டுஆர் பூந் தாரார் இம் மனைக்கு உள்ளாரோ? என்ன.
மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த
இடவகையில் தனி புகுதோம் என்று அருள அதுகேட்டு
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனைக்
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி.’’
என்பதாம்.
திருவெண்காட்டுநங்கை அழைக்க உடன் வந்த சிறுத்தொண்டர் அடியேனது மனையில் தேவரீர் எழுந்தருளி வந்து திருவமுது செய்தல் வேண்டும் என்று வேண்ட சிவனடியாரோ உம்மைக் காணும் பொருட்டாக வந்தோம். வடநாட்டில் உள்ளோம், எம்மை அன்புடன் அமுது ஊட்டுவதற்கு உமக்கு முடியாது, அச்செய்கை செய்தல் அரிதாகும், ஆதலின் உம்மால் செய்ய இயலாது! என்று மொழிந்தருளினார். இதனை, அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும் என
‘‘நெடியோன் அறியா அடியார்தாம் நிகழும் தவத்தீர்! உமைக் காணும்
படியால் வந்தோம், உத்தரா பதியோம்; எம்மைப் பரிந்து ஊட்ட
முடியாது; உமக்குச் செய்கை அரிது; ஒண்ணாது என்று மொழிந்து அருள.’’
என்ற பாடலால் உய்த்துணர முடிகிறது.
பரிந்தூட்ட உமக்கு முடியாது, செய்கை அரிது, ஒண்ணாது என மும்முறை சிவனடியார் உரைத்தது செயலின் அருமை கருதியாம். அதற்குச் சிறுத்தொண்டர் தன்னால் யாதும் அரியது இல்லை அருளிச் செய்வீர்! என வேண்டி நிற்க,பைரவராக வந்த இறைவன் அடியவர்பால் அன்பு மிகுந்தவரே! நாம் உண்பதற்கு உரிய பசுவும் மானிடப்பசுவாகும். அது அஞ்சு வயதுடையதாயும் உறுப்பில்மறு இல்லாததாயும் இருத்தல் வேண்டும் என்றார். துன்பம் செய்யும் புண்ணிலே வேலினைப் பாய்ச்சியது போல மேலும் ஒன்று சொல்லலானார். ஒரு குடிக்கு நல்ல சிறுவனாய் ஒரே மகனாயுள்ள அவனைத் தந்தை அரியவும் அப்போது தாய் பிடிக்கும் பொழுதில் மூவரும் தம்மில் மனமகிழ்ந்தே குற்றமின்றி அமைத்த கறியே நாம் இட்டு உண்பதாம் என்று மொழிந்தருளினர். மேற்கண்ட செய்திகளுக்குச் சான்றாதாரங்களாய்,
‘‘பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர்! நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசு ஆம்
உண்பது ஐஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறு இன்றேல் இன்னம்
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார்.’’
‘‘யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் என
நாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்
தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே
ஏதம் இன்றி அமைத்த கறி ஆம் இட்டு உண்பது என மொழிந்தார்.’’
என்ற பாடல்கள் அமையும்.
சிவனடியாரின் உரைகேட்ட சிறுத்தொண்டர் அடியார் விரும்பியவண்ணமே அமுதுசெய்விப்போம் என்று கூறித் தன் மனையினை அடைந்தார். திருவெண்காட்டுநங்கையிடம் அடியார் கூறியதனைத் தெரிவித்து ஒரு குடிக்கு ஒரு மகனாய் உள்ளவனை பொருள் கொடுத்தாலும் தருவார் உண்டோ? நேர் நின்று தம் மகனை தாமே அரியும் தந்தை, தாய் இருக்கமாட்டார்கள். எனவே நீ பெற்ற மகனையே இங்கு அழைப்போம்! என்றார். உடன் காதல் மனைவியாரும் பள்ளியில் சென்று அழைத்து வாரும் என்றார். சிறுத்தொண்டரும் பள்ளி செல்லச் சீராளதேவன் ஓடிவந்து தந்தையை அணைத்துக் கொண்டான். சிறுத்தொண்டர் தன் மகனை வீட்டிற்கு அழைத்து வரத் திருவெண்காட்டுநங்கை குழந்தையின் தலைமயிரினைத் திருத்தி, முகத்தைத் துடைத்து, அரைஞாணில் படிந்த துகளை நீக்கி, கண்ணில் அணிந்த மையினையும் கண்ணிற் படாமல் ஒழுங்காகப் பக்கத்தில் நிற்கும்படி ஒதுக்கி, பஞ்சினும் மென்மையுடைய அடியினையுடைய அம்மையார், அன்புடனே திருமஞ்சனம் ஆட்டுவித்துக் குறைவில்லாத கோலத்தினைச் செய்து எடுத்து, கணவர் கைகொடுத்தார். இவ்வாறு குறைபாடில்லாக் கோலஞ் செய்ததனை இங்கு இவ்வளவு சேக்கிழார் விரித்துக் கூறியதற்குக் காரணம் இக்கோலத்தோடும் குறையாத வனப்பில் தனிப்புதல்வர் உயிர் பெற்று மீள வருதலை உயர்த்துதற்கும் இத்திருக்கோலத்துடனே என்றும் பிரியாதே இறைஞ்சி, இறைவர், இறைவி, முருகன் இவர்களுடனே திருக்கயிலையில் வீற்றிருக்கப் பெறுவாராதலும் குறித்தற்கும் ஆகும். இத்தகைய சிறப்பமைந்த பாடல்,
‘‘குஞ்சி திருத்தி முகம் துடைத்துக் கொட்டை அரை ஞாண் துகள் நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும்
கண்ணின் மருங்கு ஒதுக்கிப்
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திருமஞ்சனம் ஆட்டி
எஞ்சல் இல்லாக் கோலம் செய்து எடுத்துக்
கணவர் கைக் கொடுத்தார்.’’
என்பதாம்.
பள்ளியினிற் சென்று கணவனாற் எடுத்துக் கொண்டுவந்த பிள்ளையை அம்மையார் தாமே அவரிடமிருந்து எதிர் வாங்கினார். அலங்காரம் செய்தார். மீளக் கணவர் கையில் கொடுத்தார் என்றது அம்மைந்தன் உடலினைக் கழுவித் திருவமுதாக்குதற்குத் தக்கபடி செய்யவேண்டியது மனைவியாராகிய தமது கடமை என்றதனாலும், அமுதுக்குத் தக்கதாக ஆக்க வேண்டுமென்ற தமது அன்பினாலும் இவ்வாறு செய்தார் என்பதனைக் குறித்தற்கே ‘எடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்’ என்று குறித்தார் சேக்கிழார். இவ்வாறு கோலஞ்செய்து எடுத்துக் கணவர் கைக்கொடுத்தது அம்மையாரது உலகியல் கடந்த சிவனடிமைத்திறம் பற்றிய பேரன்பின் நிலை குறித்ததே ஆகும்.
திருத்தொண்டர்க்கு ஆக்கும் அமுதுக்காக உதவும் உணவு என்றதனால் பயமெய்தி திருவெண்காட்டுநங்கை புதல்வனை உச்சிமோந்தார் இல்லை. மார்பில் அணைத்து முத்தந்தந்தார் இல்லை. குற்றமற்ற திருத்தொண்டராம் நாயனார் புனிதராகிய அடியவருக்குக் கறியாக்குதற்கு விரும்பும் மனத்தாலே அடுக்களையில் மேவாராகி வேறு தனியிடத்திற் கொண்டு சேர்ந்தார். இதனை,
‘‘அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன்
உச்சி மோவார். மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார்.
பொச்சம் இல்லாத் திருத்தொண்டர் புனிதர்
தமக்குக் கறி அமைக்க
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார்.’’
எனக் குறிப்பார் சேக்கிழார்.
அவ்வாறு கொண்டு சென்ற மகனைத் தாய் திருவெண்காட்டுநங்கை பிடித்துக்கொள்ள சிறுத்தொண்டர் அரிய முற்பட்டார். அதனைக் கண்ட சீராளதேவன் சிரித்தான். சிறுத்தொண்டர் குழந்தையை அரிந்ததும் தலைக்கறி உணவிற்கு ஆகாது என நீக்கி சந்தனத்தாதி கையில் கொடுத்து பிறவற்றைச் சமைத்து அடியாரை உணவுண்ண அழைத்தனர். வந்த அடியவரை வரவேற்று அவர் பாதங்கழுவி மனையிடத்து இருத்தி உணவு படைத்தனர். உடன் அடியவர் நான் கூறியவண்ணம் அனைத்து உறுப்புகளையும் சேர்த்து கறி சமைத்தீரா? என வினவ தலைக்கறி ஆகாது என நீக்கினோம் என்றார் திருவெண்காட்டுநங்கை. அடியவரோ அதுவும் கூட நாம் உண்பது என்றார்.
அதுகேட்டு சிறுத்தொண்டரும் திருவெண்காட்டுநங்கையும் திகைத்து நிற்க, தாதி சந்தனத்தாதி தான் அதனையும் சமைத்து வைத்திருப்பதாய் எடுத்து வந்து வைத்தார். உடன் அடியவர் நாம் தனித்து உண்பதில்லை. எனவே அருகே இருக்கும் வேறு ஓர் அடியவரை அழைத்துவாரும் என்றார். சிறுத்தொண்டர் அடியவர் உணவு உண்ண இது தடையாயிற்றே என வருந்தினார். வெளியே தேடி யாரும் இல்லாமல் வருந்தினார். உடனே சிறுத்தொண்டரை உடன் உண்ண அமருமாறு கூறினார் சிவனடியார். அடியவர் உணவு உண்ண காலதாமதம் ஏற்படக் கூடாது என்பதற்காக விரைவாக உண்ணமுற்பட்டார் சிறுத்தொண்டர். அதனைக்கண்ட சிவனடியார், ஆறுமாத காலம் இடைகழிய நாம் ஒருமுறை உண்போம். நீர் ஒவ்வொரு நாளும் சோறு உண்பீர். அப்படியிருந்தும் நாம் உண்ணுமுன் நீர் உண்ணப்புகுந்தது என்னை? நம்முடனே இருந்து உண்பதற்கு ஒப்பற்ற மகனைப் பெற்றீரானால் அம்மகனை அழையும்! என்றார். அதற்குச் சிறுத்தொண்டர் அவன் இப்போது உதவமாட்டான் என்று விடை கூறினார். இதனை,
‘‘ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என்? நம் உடன் துய்ப்ப
மாறுஇல் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும் என
ஈறும் முதலும் இல்லாதாக்கு ‘இப்போது உதவான் அவன் என்றார்.’’
என்ற பாடல் விளக்கி நிற்கும்.
அதனைக் கேட்ட சிவனடியார் நாம் இங்கு உண்பது அவன் வந்தால்தான்! நாடி அழையும் என்றார். உடன் சிறுத்தொண்டர் மைந்தா! வருவாய்! என்று கூவி அழைத்தார். அம்மையாரும், செம்மையுடைய மணியே! சீராளா! சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உண்பதற்கு அழைக்கின்றார், வாராய்! என்று அழைத்தார்.
வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார்
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார்
‘‘செய்ய மணியே! சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம்
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட.’’
அப்போது இறைவன் அருளினாலே அழைக்கும் குரல் கேட்டுப் பள்ளிக்கூடத்தினின்றும் ஓடிவருபவன் போல சீராளன் எதிரே ஓடிவந்தான். ஒப்பற்ற அழகுடன் விளங்கிய அவனை திருவெண்காட்டுநங்கை எடுத்துத் தழுவிக்கொண்டு தமது கையால் முன்பு அணைத்துக் கணவனாரது கையிலே கொடுத்தார். சிறுத்தொண்டர் திரிபுரங்களையும் எரித்த இறைவர் திருத்தொண்டர் அமுது உண்ணும் பேறுபெற்றோம்! என்ற மகிழ்ச்சியாலாகிய துணிபினாலே மிகவும் மகிழ்ந்தார். இதனை,
‘‘பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்த
தரம் இல் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்து தழுவித் தம்
கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கெடுப்பக் களி கூர்ந்தார்
புரம் மூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம்’’
எனும் பொலிவா என்ற பாடல் எடுத்துரைக்கும்.
மகனுடன் வீட்டினுள் வந்த சிறுத்தொண்டர் சிவனடியாரைக் காணாது திகைக்க அவரோ அடியார் வடிவம் நீங்கி சிவபெருமானாய் முருகப்பெருமானுடன் காட்சி தந்து அருளினார். தொண்டர்க்கு அருளத் தாமும், நங்கைக்கும் தாதியார்க்கும் அருள அம்மையாரும், சீராளதேவருக்கு அருள முருகனுமாய் எழுந்தருளினர் இறைவன். இறைவனின் அருட்திறத்தினை,
‘‘செய்ய மேனிக் கரும் குஞ்சிச் செழும் கஞ்சுகத்துப் பயிரவர் யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே ? எனத் தேடி
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த
தைய லோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார்.’’
என்ற பாடலால் அறியமுடிகிறது.
சிறுத்தொண்டரையும் திருவெண்காட்டுநங்கையாரையும் நீடும் மகனாராகிய சீராள தேவரையும் சந்தனத்தாதியாரையும் என்றைக்கும் தம்மைப் பிரியாதே வணங்கி யிருக்கும்படி தமது சிவலோகத்துக்குத் தம்முடனே அழைத்துக் கொண்டு சென்றருளினார் இறைவன்.
‘‘கொன்றை வேணி யார்தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும்
வென்றி நெடுவேன் மைந்தருந்தம் விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியா தேயிறைஞ்சி யிருக்க வுடன்கொண்டேகினார்.’’
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனாகிய சிவபெருமான்மேல் கொண்ட பக்தியின் மேம்பாட்டினால் இறைவனை அம்மையோடும் அருள்முருகனோடும் கண்டு இன்புறும் பேறுபெற்ற சிறுத்தொண்டரின் குருபூஜையானது வருகின்ற சித்திரை மாதம் 22ம் தேதி (05 - 05 - 2019) அன்று பரணி நட்சத்திரத்தில் வருகின்றது. அன்றைய தினம் திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரருக்கு அமுது படையல் விழா மிகச் சிறப்பாக
நடைபெறும். இதில் பங்குபெற்று அமுது வாங்கி உண்போருக்கு குழந்தைப்பேறு வாய்க்கும் என்பது இன்றளவும் நடந்து வரும் உண்மை. எனவே நாம் திருச்செங்காட்டங்குடி சென்று சிறுத்தொண்டரையும் சிறுத்தொண்டருக்கு அருள் செய்த சிவபெருமானையும் அம்பாளையும் முருகப்பெருமானையும் வணங்கி அருள்பெற்று உயர்வோமாக...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment