நாச்சியார்கோவில், கும்பகோணம்
மேதாவி எனும் மகரிஷி திருமால் மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த திருமகள், ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு “வஞ்சுளாதேவி’ எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். திருமகளைத் திருமணம் செய்வதற்காக திருமால், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளைத் தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார்.
மேதாவி திருமாலிடம், “தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் படித்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்,’’ என நிபந்தனை விதித்தார். திருமாலும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது திருமால் கருடாழ்வாரிடம், “நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்’’ என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் “நாச்சியார் கோயில்’ என்ற பெயரும் பெற்றது.மூலவர் திருநறையூர் நம்பி என்றும் உற்சவர் இடர்கடுத்த திருவாளன் என்றும் தாயார் வஞ்சுளவல்லி எனும் திருப்பெயர்களுடன் வகுளம் (மகிழம்) எனும் மரத்தை தல விருட்சமாகக் கொண்டும், மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம், சாம்பதீர்த்தம் எனும் தீர்த்தங்களை தல தீர்த்தங்களாகக் கொண்டும் விளங்கும் திருத்தலம் இது.
இங்கு கருடாழ்வார் தனிச் சந்நதியில் உடலில் 9 நாகங்களுடன் அருள்கிறார். இவருக்கு ஆறுகாலங்களிலும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. பிற வைணவ ஆலய உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால், இங்கு கருடசேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும்போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிராகாரத்தில் அதற்கென தனிச்சந்நதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே பெருமாள் எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருட்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது. மூலவர் சந்நதியின் மேல் உள்ள விமானம் ஹேம விமானம் எனப்படுகிறது. இத்தலம் முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment