Monday, 29 April 2019

ஒப்பிலா உயர் வாழ்வருள்வான் உப்பிலியப்பன்.!!

திருவிண்ணகரப்பனான ஒப்பிலா அப்பனின் பெருமையைக்கூற ஆயிரம் நாக்குடைய ஆதிசேஷனாலும் ஆகாது என பிரம்மன், நாரதரைப் பார்த்து உரைத்தார். ஆயினும், என் அறிவுக்கேற்றவாறு சொல்கிறேன் என்று அடக்கமாகப் பேசினார். அளவிலா ஆனந்ததை மனதில் தேக்கினார். எதை விடுவது, எதைச் சொல்வது என்று பிரம்மனே திக்கித் திணறி தல மான்மியத்தை திருவாய் மலர்ந்து சொல்லத் தொடங்கினார். அருகிலிருந்த துளசி வனம் சிலிர்த்தது. வீணையின் நாதமாக நாரதருக்குள் பிரம்மனின் வாக்குகள் அணிவகுத்துச் சென்றன. அமுதத் திவலையினின்று உதித்த திருத்துழாய் எனும் தேவி எம்பெருமானின் முன்பு கைகூப்பி நின்றாள். 

‘‘லஷ்மியை திருமார்பில் ஏற்ற நீர் என்னையும் தாங்கள் திருமார்பில் தரிக்க வேண்டும் என்று வேண்டினாள். ‘‘வைகுந்தனும் சரியான தருணம் உன்னை இங்கு கூட்டி வந்திருக்கிறது. பூமி தேவி காவிரியின் தென்புறத்தில் மார்க்கண்டேய முனிவருக்கு புதல்வியாக பிறக்கப் போகின்றாள். நீ அந்த முனிவரின் தவ வனத்திற்கு சென்று செடியுருவில் துளசி எனும் திருப்பெயர் கொண்டு தவம் புரிந்து வா. நானும், பூமி தேவியை மணம் புரியும்பொருட்டு அத்தலத்தில் வசிப்பேன். அப்பொழுது நீயும் ஏற்றம் பெறுவாய். உன் இதழ்களால் பூசனை செய்பவன் சகல செல்வங்களும் பெறுவான். ஒவ்வொரு இதழும் அசுவமேதயாக செய்த பலனை கொடுத்திடும். உன் இடத்தை வசிப்பவர்களுக்கு வைகுந்தம் உறுதி. நீ உறையும் வனம் திருத்துழாய்க்காடு என அழைக்கப்படும்’’ என்றார். 

திருக்குடந்தையில் வனங்களால் சூழப்பட்ட ஓர் தலத்தில் துளசி மாதா செடியுருவில் செழித்து வளர்ந்தாள். அந்தப் பிரதேசம் முழுவதும் தன் வாசத்தால் நிறைத்தாள். அருகே வருவோரின் உள்ளம் துளசி வாசத்தால் கமழ்ந்தது. வைகுந்தவாசனின் சாரல் அதில் வீசியது. மார்க்கண்டேய முனிவரையும் மாலவன் இத்தலத்தின்கண் ஈர்த்தார். துளசி வனத்தினடியில் தீவிர தவத்தில் மூழ்கினார் மார்க்கண்டேயர். எண்ணிக்கையை மறந்து ஆண்டுகள் நகர்ந்தது. மகாவிஷ்ணு பிராட்டியை பூவுலகு வந்து மணப்பதாக எண்ணினார். மார்க்கண்டேயர் தமக்கு பூமிதேவி போல ஒரு மகள் பிறக்க மாட்டாளா என்று ஆசையுற்றார். திருமால் இருவரின் பேரவாவையும் நிறைவேற்றும் காலமும் அருகி வந்தது. பிராட்டியார் குழந்தையானாள். துளசியின் நிழலில் தவழ்ந்தாள். அழகுத் திருவாயால் அழுதாள். மணியோசையொன்று செவியில் அசைந்தது போன்று உணர்ந்தார், மார்க்கண்டேயர். துளசிச் செடியருகில் சென்று பார்க்க ஈராண்டுக் குழந்தைபோல் வளர்ந்திருந்தாள், பிராட்டி. வா என்று அழைத்தார். உச்சி முகர்ந்து முகம் பார்த்து சிரித்தார். நீ யாரடி குழந்தாய் என்றார். 

அவள் பேசத்தொடங்கினாள். முனிவர் ஆச்சரியமானார். நான் யார் என்பதும், ஏன் இங்கிருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு அனைத்தும் தாங்களே என்றாள். ஆனந்தம் அவருக்குள் அளவிலாது பொங்கியது. பூமியிலிருந்து தோன்றியதால் பூமிதேவி என்று அழைத்தார். குழந்தை சிரித்தது. சிறு தூறல் துளசி வனத்தை நனைத்தது. முனிவரின் குடிலில் பூமிதேவி வளர்ந்தாள். கன்னிப் பருவமெய்தினாள். ஆனால், மார்க்கண்டேயர் கவலையுற்றார். தகுந்த மணவாளன் கிடைக்க வேண்டுமே என்று கலங்கினார். நாராயணன் அவரின் கவலைக்காக காத்திருந்ததுபோல களிப்புற்றார். முதியவர் வேடம் பூண்டார். சிறு கந்தையை துணியாக இடுப்பில் கட்டிக் கொண்டார். தள்ளாடி நடந்துவந்து குடிலில் நின்றார். கையில் கமண்டலமும், வாய் நிறைய சிரிப்புமாக இருந்தவரை பார்த்து மார்க்கண்டேயர் மிக்க சந்தோஷமுற்றார். அன்பாக வரவேற்று ஆசனத்தில் அமர்த்தினார். புனிதத் திருவடிகளை நீர் கொண்டு கழுவினார். 

தாங்கள் இங்கு எழுந்தருளிய காரணம் என்ன என்று வினவினார். முனிவர் கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு, எனக்கு மனைவியோ, புத்திரனோ, உற்றார், உறவினர் யாருமல்லர். என் சரீரம் முதிர்ந்ததாக காணப்படுகிறதே தவிர வயது அதிகமாகவில்லை. எனவே, எனக்கு தாங்கள் மகளை எனக்கு மணம் செய்வித்து தரவேண்டும் என்று சொல்லி முடித்து கூர்மையாகப் பார்த்தார். மார்க்கண்டேய முனிவர் குறுகிப்போனார். என்ன கேட்கிறார் இவர் என்று தலை சுற்றியது. இன்னொரு தடவை தெளிவாகச் சொல்லும் போதுதான் இன்னதென்று புரிந்தது.
 
‘‘அடியேன் எப்படி இளங்கன்னியை தாங்களுக்கு மணமுடித்துத் தரமுடியும். அது இருவருக்கும் பாபமாயிற்றே. இந்த வயதில் இளங்கன்னியா. அதை மறந்துவிடுங்கள் மார்க்கண்டேயர் கண்களில் நீர் பெருக அழுதார். மன்னியுங்கள் முனிவரே. தாங்கள் புதல்வியையே என் மனம் நாடுகிறது. நான் நினைத்து விட்டால் அது நடந்துவிட வேண்டும். இல்லையெனில் தர்மம் தலைகீழாகும் என்றார். மார்க்கண்டேய முனிவர் தொடர்ந்து உபதேசித்தார். எதுவும் செவியில் புகவில்லை. ‘‘இறுதியாக ஒன்றை சொல்கிறேன். இள நங்கையாகிய இவள் உணவின் சுவை கூட அறியாதவள். தங்களுக்குச் சமைக்கும், காய்கறிக்கும், அன்னத்திற்கும் உப்பு சேர்க்கக் கூட தவறிவிடக்கூடும்’’ என்றார். தாங்கள் கோபிக்கக்கூடும். நான் சினத்தில் ஏதேனும் சொல்ல வேண்டியது வரும்’’ என்றார். கிழவர் அசைந்து கொடுக்கவில்லை. ‘‘நாராயணா...இதென்ன சோதனை நீயே என்னை காத்தருள வேண்டும். இதெல்லாமே உன் லீலைகள்தானா’’ என்று வேண்டினார். நெடுநேரம் கண்கள் மூடி வேண்டினார். எம்பெருமானின் திருமேனியை உள்ளத்தில் நிறுத்தி தியானித்தார். 

உள்ளத்தில் ஏதோ தேன் பாய்ச்சியது போன்றதொரு இனிமையான உணர்வு. அருகிலேயே பேரானந்தப் பெருவெள்ளமொன்று பாய்வதுபோல் உணர்ந்தார். கண்கள் திறந்தார். எதிரேயிருந்த முதியவர் காணாது போயிருந்தார். எம்பெருமான் நிமிர்ந்தெழுந்தார்.  பேரழகான இளமையின் மொத்த வடிவம். அரையில் பொன்னாடை பளீரென்றிருந்தது. இரு திருக்கைகளில் திருவாழியும் திருச்சங்கும் ஏந்தியிருக்கிறான். திரு அரை எனும் இடுப்பில் ஒரு திருக்கையும்,  மற்றொன்று கன்னிகாதானத்தை ஏற்கும் திருக்கை; திரு முடியில் ஒளி உமிழ்ந்து நாற்புறமும் பரவும் கிரீடம். திருமேனியில் அலையாகப் புரளும் மணியிலான அணிகலன்கள். கார்முகில் நிறத்தினனாக ஓங்கி வளர்ந்திருந்தான். மார்க்கண்டேயர் தாங்கொணா மகிழ்ச்சியில் திளைத்தார். உடல் சிலிர்த்துப்போட்டது. காவிரியைப்போல பிரவாகமாகப் பாடினார். இதற்குமேலும் தாமதிப்பாரா என்ன. தமது அருமை மகளான பூமா தேவியை அவருக்கே மணமுடித்துக் கொடுத்தார். 

‘‘உம்முடைய மகளுக்கு உப்புகூட சேர்க்கத் தெரியாது என்றீர். அவளது கையால் உப்பின்றி சமைத்த உணவே மிகச் சுவையுடையதாக இருக்கும். எனவே, உப்பின்றி சமைத்த உணவை உண்டபின் எஞ்சியதை பக்தியோடு உண்பவன் என் அருளுக்கு பாத்திரமாவான்’’ என்றார். முனிவரும் ‘‘என் புதல்வியை மணந்து எந்நாளும் இத்தலத்திலேயே நீர் வாசம் செய்ய வேண்டுமென்றும், உப்பில்லாது அமுது செய்யும் உணவு உன் அடியார்களுக்கு மிக்க சுவையாக இருத்தல் வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார். பிரம்மன் விலாவரியாகக் கூறி நிறுத்தினார். திருவிண்ண கரப்பனாம் ஒப்பிலா அப்பன் உப்பிலியப்பனின் திருவுருவத் தியானத்தில் நாரதர் ஆழ்ந்தார். பிரம்மன் மீண்டும் சொல்லத் தொடங்கினார். ஒப்புயவற்ற புராணம் நீண்டு கொண்டேயிருந்தது. யுகம் தோறும் சொல்லச் சொல்ல தொடர்ந்தது. இருவரும் உப்பிலியானின் புராண பிரம்மானந்தத்தில் கரைத்துக் கொண்டனர்.  அவர்கள் கண்ட அந்த திருவுருவை நாமும் காண்போமா. கோயிலும், புராணமும் இரண்டுமே இத்தல தியானத்திற்குரிய விஷயங்கள். புராணமும், பெருமாளும் வெவ்வேறல்ல என்கின்ற பழம் நூல்கள்.  

ஆஹா... பிரமாண்டமான கோயில். நெய்யின் மணமும், பச்சைக்கற்புரத்தின் வாசமும் மனதை லேசாக்குகிறது. துளசி வனம் போல கொடிக்கொடியான பூக்களும், கூடை கூடையாக சிற்பங்களை வார்த்து அள்ளித் தெளித்திருக்கின்றனர். ஒரு புறம் தங்கத் தேர். அது போகப்பாதை செய்து சுற்றிலும் நூற்றியெட்டு திவ்யதேசத்தின் படங்களையும், பாசுரங்களையும் வைத்திருக்கிறார்கள். அஹோராத்ரி புஷ்கர்ணி எனும் அழகிய திருக்குளம். அந்த தீர்த்தத்திற்கே மாபெரும் புராணமுள்ளது. சாதாரணமாக பகலில் மட்டும்தான் திருக்குளத்தில் நீராட வேண்டும். ஆனால், இந்த அஹோராத்ரி தீர்த்தத்தில் இரவிலும் நீராடலாம் என்று தனிச்சிறப்பு பெற்றிருக்கிறது. தினமும் இத்தலத்தில் திருவிழாதான். ஆழ்வார்கள் தங்களையே இழந்து வேறெங்கும் நகர மனமின்றி இந்த ஒப்பிலா அப்பனின் அடிபரவிய திவ்யதேசம் இது. வெறும் வார்த்தைகள் இவனை விளக்கா. இதோ, நேரே உயரமான கருவறையில் நெடிதுயர்ந்து நிற்கிறான் ஸ்ரீநிவாஸன். திருவடியின் வலப்பக்கம் அகங் குழைந்து அதனால் முகம் மலர்ந்திருக்கிறாள் மகாலஷ்மி. திருமாலை மாப்பிள்ளையாகப் பெற்ற பாக்கியத்தை எங்ஙனம் விவரிப்பேன் என்று கைக்கூப்பி அமர்ந்திருக்கிறார், மாமனாரான மார்க்கண்டேயர். 

உச்சிச் சிகரத்தை அண்ணாந்து பார்க்கும் சிறுவன் போலத்தான் நம் நிலை அங்கிருக்கிறது. குழந்தைக்கு வேண்டியதை தாயாரே பார்த்துத் தருவதுபோல நமக்கு வேண்டியதை பெருமாளே பார்த்துப் பார்த்து செய்கிறார். ஒரு பெரும் வியப்பும், இதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாத ஒரு அசைவற்ற தன்மையிலும் மனம் சொருகிக் கிடக்கிறது. நடுக்கடலின் ஆழம் தேடும் பயணம்போல விக்கித்துப் போகிறோம். அகழ்ந்து பார்க்க நாம் யாரென அகந்தை தானாக கழன்று கொள்கிறது. உப்பிலியப்பனை அணு அணுவாக அனுபவிப்பதற்கு ஜென்மம் போதாது. அது முடிவற்ற ஆனந்தம், அனுபவம் தாண்டிய பேரறிவு என்று தெளிந்து, நகர மனமின்றி அவனருள் அகத்தில் தளும்பத் தளும்ப நகர்கிறோம். உயிரின் மையத்தை உரசிய ஆனந்த அதிர்ச்சி மனதைவிட்டு அகலாதிருக்கிறது... 



No comments:

Post a Comment