சேலத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் வடமேற்கு திசையில் சரபங்கா நதியோரம் இருக்கிறது ஓமலூர் கோட்டை. இது 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த கெட்டி முதலி வம்சத்தின் வணங்காமுடி மன்னரால் கட்டப்பட்டதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்த கோட்டையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் வசந்தீஸ்வரர். இங்கு விஜயராகவ பெருமாள், கோட்டை மாரியம்மன் கோயில்களும் இருப்பது கூடுதல் சிறப்பு. வசந்தீஸ்வரர் கோயில், கோட்டையின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. அன்னையின் அபிதகுசலாம்பிகை என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். தல விருட்சமாக வன்னிமரமும், தீர்த்தமாக சரபங்கா நதியும் உள்ளது. கோயிலின் வலதுபுறத்தில் சூரியனார், நடனமாடும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் சன்னதிகள் இருக்கின்றன. தனி சன்னதியில் வலம்புரி விநாயகர் வீற்றிருக்கிறார்.
ஒரு காலத்தில் போர்களால் இந்தப் பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மழை பொய்த்ததால் விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியானது. எங்கும் வறட்சி, பசி, பட்டினி. மக்களின் வறுமை நிலை கண்டு, கெட்டி முதலி மன்னர் பரம்பரையில் வந்த மங்கை நல்லாள் மனம் வருந்தினார். மீண்டும் இந்தப் பகுதியில் வசந்தம் வீசவும், மக்களின் வாழ்க்கை வளம் பெறவும் வேண்டி, இங்கு சுயம்புவாக எழுந்தருளி இருந்த இறைவனுக்கு கோயில் கட்டினார். இதையடுத்து வருண பகவான் மும்மாரி பொழிந்திட, எங்கும் பசுமை, செழுமை பரவியது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ‘வசந்தம்’ வீசத் தொடங்கியது. இதன் காரணமாக இந்தக்கோயிலில் உள்ள இறைவன் ‘வசந்தீஸ்வரர்’ என அழைக்கப்பட்டார் என்பது தலவரலாறு.
கோயிலின் பின்புறம் அரசமரமும், வேப்பமரமும் ஒன்றிணைந்த அதிசய மரம் உள்ளது. இதன் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. திருமணம் ஆகாத பெண்கள், இந்த மரத்தை மூன்று முறை வலம் வந்து, மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி நாகரை வழிபட்டால் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சூரியனின் ஒளிக்கதிர்கள், மூலவரின் மீது விழும் அதிசய நிகழ்வு நடப்பது விசேஷம். அப்போது திருமணம் ஆகாத பெண்கள், திருமணமாகி வாழ்க்கையில் துன்பப்படும் பெண்கள், இத்தல இறைவனை வேண்டிக்கொண்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பது நம்பிக்கை.நாகர் சிலைகளை அடுத்து பஞ்சலிங்க சன்னதி உள்ளது. இங்கு காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் (நிலம்), திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் (நீர்), திருவண்ணாமலை அண்ணாமலையார் (நெருப்பு), காளஹஸ்தி காளத்தீஸ்வரர் (காற்று), சிதம்பரம் நடராஜர் (ஆகாயம்) ஆகியோர் வீற்றிருந்து அருளாசி வழங்குகிறார்கள்.
இவர்களை ஒரு சேர தரிசித்தால் பஞ்சபூத தலங்களுக்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பதும் சிறப்பு. இங்கு பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், பவுர்ணமி, சஷ்டி, திருக்கார்த்திகை, சங்கடகர சதுர்த்தி, ராகுகால பூஜை, நவக்கிரக பூஜை, பைரவர் பூஜை, அன்னாபிஷேக விழா ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. ஓமலூர் கோட்டை வளாகத்தில் சரபங்கா நதிக்கரையில் விஜயராகவ பெருமாள் கோயில், ஆற்றங்கரை அதிசய விநாயகர் கோயில், கருமாரி அம்மன், நாகர் சன்னதி, பாலமுருகன் சன்னதி, அனுமன் சன்னதி, கோட்டை மாரியம்மன் கோயில், வசந்தீஸ்வரர் கோயில் ஆகியவை ஓமலூர் என்ற பெயருக்கேற்ப ‘ஓம்’ என்கிற வரி வடிவப் பாதையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment