Wednesday, 24 April 2019

காலமெல்லாம் காத்தருள்வார் கருடாழ்வார்.!!

இறைவன் படைத்த உயிரினங்களில் பறவைகளும் ஒரு வகை. ஒற்றுமை என்ற குணம் மட்டும் எல்லாப் பறவைகளுக்கும் உண்டு. பறவைகளில் உயர்வு, தாழ்வு என்ற பேதம் கிடையாது. அவைகளுக்கு மரம் தெரியும். மதம் தெரியாது. பழம் தெரியும், பணம் தெரியாது. இப்படிப்பட்ட சிறப்புக்களை பறவைகள் பெற்றிருப்பதாலோ, என்னவோ, திருமால் தனக்கு வாகனமாக ‘கருடன்’ என்ற பறவையை வைத்துக்கொண்டுள்ளார். எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடி கருடன் மீது படுவதால் கருடனுக்குப் பெரிய திருவடி என்ற பெயர் உண்டு. எப்பொழுதெல்லாம் திருமால் அவதாரம் செய்கிறாரோ அப்பொழுதெல்லாம் கருடன் உடன் இருப்பார். இப்படிப் பல ஊர்களில் கருட சேவை உற்சவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றாலும், தை அமாவாசைக்கு மறுநாளன்று, சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் நடைபெறும் 11 கருட சேவை உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. 


சுமார் 125 வருடங்களுக்கு முன்பு திருநாங்கூரில் வாழ்ந்த திருநாராயணப் பிள்ளை, இன்ஸ்பெக்டர் சுவாமி ஐயங்கார் போன்ற பெரியோர்கள் இந்த உற்சவத்தைத் தொடங்கி வைத்தார்கள். அன்று தொட்டு இன்று வரை வருடந்தோறும் இவ்வுற்சவம் செவ்வனே நடந்து வருகிறது. ஆழ்வார்களால் பாடப் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களுள் சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர் எனும் ஊரைச் சுற்றி 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. தட்சனின் யாகத்துக்குச் சென்ற சதிதேவியை தட்சன் அவமானப் படுத்திய செய்தியைக் கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்ட பரமசிவன், சீர்காழிக்கு அருகிலுள்ள உபயகாவிரி எனும் இடத்தில் ருத்திர தாண்டவம் ஆடத் தொடங்கினார். அவரது ரோமம் விழுந்த இடங்களில் எல்லாம் புதிய ருத்திரர்கள் தோன்றத் தொடங்கினார்கள். சிவபெருமானின் கோபத்தை அடக்க வழிதெரியாது தேவர்கள் தவித்தபோது, திருநாங்கூரில் பதினொரு வடிவங்களோடு திருமால் வந்து காட்சி கொடுத்து, பதினொரு வடிவங்களில் இருந்த பரமசிவனின் கோபத்தைத் தணித்தார். 

கருடாழ்வார்  ஸத்யன், ஸுபர்ணன், விஹேச்வரன், பந்தகாசனன் பதகேந்திரன் என்ற ஐந்து மூர்த்திகளை உடையவர் என்றும், உயர்ந்த பூதங்களைத் திருமேனியாகக் கொண்டவர் என்றும், ஆற்றலில் அனுமனைப் போன்றவர் என்றும், வேதத்தின் உட்பிரிவுகள் ஐந்தினையும் தனது அவயவங்களாகக் கொண்டவர் என்றும், இதுபோல ரிக், யஜுர், சாம வேதங்களையும் தனது திருமேனியாக உடையவர் என்றும் பத்மபுராணம் கூறுகிறது. கருடாழ்வார் ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி திதி ஸ்வாதி நட்சத்திரத்தில் காஸ்யப முனிவரின் மனைவி வினதைக்கு மகனாக அவதரித்தார். கருடாழ்வார்  ஒன்றைபடி நீளமுள்ள சிவப்பு நிறத்தையும், தலை முதல் பாதம் வரை உடல் வெண்மையாகவும், மேற்புறம் செம்மையுடனும் காணப்படுவார். சாமுத்திரிகா லட்சணப்படி கருடனுக்கு முக அழகு வசீகரிக்கும் பார்வை உள்ளவர் என்பதால் ‘செம்பருந்து’ என்று அழைப்பார்கள்.

திருவேங்கடப் பெருமாளுக்குக் கருடன் கொடியாக இருக்கிறார். இதையே ஆண்டாள் ஒரு பாசுரத்தில் ‘ஆடும் கருடக் கொடியார்’ என்று பாடுகிறார். ‘கருட ஸ்கந்தவாகினி ஸ்ரீவேங்கடேசாய நமஹ’ என்பது திருவேங்கடவனின் நூற்றி எட்டுத் திருநாமங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எனவேதான் கருடாழ்வாரின் செயற்கறிய செயலைக்கண்ட திருவேங்கடவன் திருவோணத் திருவிழாவில் ‘கருட வாகனம் கொண்டு காட்சி தருகிறார். மணவாள மாமுனிகள் ஒரு பாசுரத்தில் பெரிய திருவடியை பண் செய்து ஏறப்பெறாமல் வெம்புறத்திலே மேற்கொண்டான் என்று கஜேந்திரனைக் காப்பாற்ற அவர் வரும் வேகம் போதாமல் கருடாழ்வாரையும்  இறுகக் கட்டிக்கொண்டு திருமால் பறந்து வந்தார். அப்போது பகவானின் வேகத்தைவிட கருடாழ்வார் மேலும் வேகமாய் பறந்து வந்தார் என்று மிக அழகாகப்பாடுகிறார்.

ராவணனுக்கு முன்பு வாழ்ந்த ‘மாலி’ முதலான அரக்கர்களைக் கொன்று முடிசூட்டிக்கொண்டவர் கருடாழ்வார். இதை ‘‘இலங்கை பதிக்கு இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர் மாள கொடிபுள் திருத்தாய்’’ என்று திருமங்கை ஆழ்வார் ஒரு புராண காவியம் பாடியுள்ளார். இந்திரஜித்தின் ‘நாகாஸ்திரத்தில்’ மயக்கமுற்றுக்கிடந்த ராமலட்சுமணரை உயிர்ப்பித்தவர் இந்த கருடாழ்வார். விஷ்ணு புராணத்தில் ஒரு பகுதியாக கிருஷ்ணனின் கதை வருகிறது.  கிருஷ்ணர் ஒருசமயம் பசுக்களை மேய்க்கக் காட்டிற்குள் சென்றபொழுது கடுமையான வெயில் காய்ந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வெப்பம் தாங்காமல் அவதிப்பட்டான். அப்போது ஆகாயத்தில் தன் சிறகுகளைப் பரப்பி நிழல் தந்து கிருஷ்ணனை காத்தருளினார். கருடன் என்று கூறுகிறது. இதையே ஆண்டாளும் தன் பாடல்  ஒன்றில் மேலாற் பறந்த வெயில் காப்பு வினதைச் சிறுவன் சிறகென்னும்,  மேலாப்பில் வருவானை விருந்தாவனத்தே கண்டோம்’’ என்று பாடுகிறாள்.

ஒருசமயம் பிரகலாதனுடைய மகன் விராசணன் பாற்கடலிலிருந்த மகா விஷ்ணுவின் கிரீடத்தைத் திருடிக்கொண்டு சென்று விட்டான். இதை அறிந்த கருடன், அந்த விராசணனைத் தேடி, பாதாள உலகத்தில் வெள்ளையம் என்ற தீவில் அவன் இருப்பதைக் கண்டறிந்து அவனுடன் போரிட்டு கிரீடத்தை மீட்டு வந்தபோது, பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் ஒரு மேடையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். உடனே கிரீடத்தை அவர் தலையில் சூடிவிட்டார். இந்த நிகழ்ச்சி இன்றும் பல விஷ்ணு ஆலயங்களில் ‘வைரமுடி சேவை’ என்று கொண்டாடப்படுகிறது. குறிப்பாக திவ்ய க்ஷேத்திரமான திருநாராயண புரத்தில் இது விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

மகாவிஷ்ணுவின் சங்கர்ஷண அம்சமே கருடன். கருடன் ஞானத்தையும், வீரியத்தையும் அள்ளிக் கொடுக்கக் கூடியவர். கல்வியில் தேர்ச்சியையும், பேசும் திறமையையும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் தரவல்லவர். காற்றை அடக்கி ஆளும் சக்தியுள்ளவர். இவர் மகாவிஷ்ணுக்கு வாகனமானவர் மட்டுமல்ல உற்ற தோழனாகவும் கொடியாகவும் விளங்குகிறார். நித்ய சூரிகளில் ஒருவரான கருடன் எப்பொழுதும் மகாவிஷ்ணுவை வைகுண்டத்தில் அவருக்கு எதிரே கண்ணாடிபோல் நின்று அவரை தரிசித்துக்கொண்டே இருக்கிறார். நமது உடலிலுள்ள பிராணன், அபானன், ஸமானன், உதானன், பியாணனன் என்ற ஐந்து வாயுக்களால் துன்பம், துயரம் வராமலிருக்க ‘நம பிராண்திவாயுஞாம்; ஈசானாய கருத் மஹே!’’ என்று ஜபித்தால் நல்ல பலன் உண்டாகும். சபரி மலையில் மகர ஜோதியின்போது ஆகாயத்தில் பறக்கும் கருடனை ‘கிருஷ்ணப்பருந்து’ என்றழைப்பார்கள். வீட்டுக்குள் பாம்பு தென்பட்டால், 

அப ஸர்ப்ப ஸர்ப்ப பத்ரம்
கேதூரம் கட்டமஹாசய’’

என்னும் மந்திரத்தை ஜபித்தால் பாம்பு ஓடிவிடும். கருடன் நிழல் பட்ட வயல்களில் விளைச்சல் அதிகமிருக்கும். கருடன் எடுத்து வந்த அமிர்த கலசத்தில் ஒட்டியிருந்த தேவலோகப்புல்லே பூமியில் விழுந்து தர்ப்பைப்புல்லாக விளைந்தது. கருடக்கிழங்கு என்ற கிழங்கை வாசலில் கட்டினால் விஷப்பூச்சிகள் வராது. மெளரியர்கள் கருடனை அதிர்ஷ்டம் நிறைந்த கடவுளாகத் துதித்தனர். புத்தர்களுடைய நாட்டு நாணயத்தில் கருட முத்திரையைப் பதித்திருந்தார்கள். சந்திரகுப்த விக்கிரமாதித்தன் டெல்லியில் நாட்டின் நலம் காக்க முதல் முதலாகக் கருட கம்பத்தை நாட்டினான். தேவகிரி யாதவர்களின் கொடி ‘கருடன்’ கொடியாகும். இலங்கை எனும் நாடு கருடன் தகர்த்த மேருமலையின் ஒரு தீவாகும். 

இந்தோனேஷியா விமானத்திற்கு ‘கருடன்’ பெயரே சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் சின்னம் ‘ராஜாளி’ கருடனாகும். ஸ்ரீரங்கத்தில் கருடனை பெரிய வடிவிலும், திருவெள்ளியங்குடி கோயிலில் கோலவில்லிராமன் சந்நதியில் கருடனே சங்கு சக்கரமுடனும் காணலாம். மிகவும் சுமை கொண்ட ‘கல் கருடன்’ நாச்சியார் கோயிலில் உள்ளது. வானத்தில் கருடனை ஞாயிற்றுக்கிழமையில் தரிசித்தால் நோய் தீரும். திங்கள், செவ்வாயில் தரிசித்தால் அழகு கூடும். துன்பம் நீங்கும். துயரம் அகலும். புதன், வியாழனில் தரிசித்தால் பகைவர்கள் வைத்த சூன்யம் அகலும். வெள்ளி சனிக்கிழமையில் தரிசித்தால் ஆயுள் கூடும். செல்வம் பெருகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment