ஊர்கண்ணு.. உறவுக்கண்ணு... நாய் கண்ணு.. பேய் கண்ணு.. நல்ல கண்ணு... கொள்ளிக்கண்ணு.. தாய் கண்ணு.. தகப்பன் கண்ணு.. எல்லா கண்ணும் போய் நல்ல கண்ணா வாழணும்.. திருஷ்டி சுத்தும்போது இதையெல்லாம் கேட்டிருப்போம். நல்லவர்கள் கண்ணும் பொல்லாதவர்கள் கண்ணும் நீங்கி நல்லவிதமாய் வாழணும் என்று திருஷ்டி கழிப்பார்கள். அதனால் தான் கல்லடி பட்டாலும் படலாம்... காயம் ஆறிவிடும். கண்ணடி மட்டும் படவேக்கூடாது.. நிலைகுலைந்து போய் மீண்டு வருவதே சிரமம் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். பிறந்த குழந்தை முதல்.. புகழின் உச்சியில் திளைக்கும் அனைவருக்குமே கண்திருஷ்டி ஏற்படுவது இயற்கைதான். இந்த திருஷ்டி சாமானிய மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. ஜோதிட ரீதியாக நமது நேரம் நல்ல நேரமாக இருந்து இறைவனது அருள்பார்வை முழுமையாக கிட்டும் சமயம் நம் மீதுபடும் எந்த திருஷ்டியும் நம்மை தாக்காது. ஆனால் கிரக நிலைகளின் பாதிப்பு ஜாதக ரீதியாக நம்மை பாதிக்கும்போது,இறைவனது அருளையும் பரிகாரம் செய்து நாடித்தான் பெற வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் கண்திருஷ்டி கண்டிப்பாக கடுமையான சோதனைகளைத் தான் தரும். வலிமை மிக்கவர்களையும் வலிமையற்று போகச்செய்யும் சக்தி கண் திருஷ்டிக்கு மட்டுமே உண்டு...
கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் எப்போதும் பிரச்னைகள் வரிசையில் வரிந்து கட்டி நிற்கும். குடும்பத்தில் உள்ளவர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை குறைவு இருக்கும். பொருளாதாரம் சீர்குலையும். பொருள்களின் இழப்புகள் தொடரும். உறவுகளுக்குள் பிரிவு ஏற்படும். செய்யும் தொழிலில் நஷ்டம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். உறவினர்களுடன் பகை ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் தடை உண்டாகும். எதிலும் நாட்டமில்லாமல் வாழ்க்கையில் பிடிப்பின்றி இருப்பது போல தோன்றும். கெட்ட கனவுகளும், எப்போதும் தூக்கமுமாகவே இருக்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் மறைந்து எதிர்மறை எண்ணங்கள் குடிகொள்ளும். இவ்வளவு பாதிப்பையும் கண் திருஷ்டி ஒன்றால் மட்டுமே தடையின்றி தரமுடியும். கிரகங்களின் ஆதிக்கங்கள் குறைந்துள்ள ஒருவனுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்த கண் திருஷ்டி செயல்படும்.
கண் திருஷ்டியை முன்னிறுத்திதான் ஆரத்தி சுற்றும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. குடும்பத்தில் நடக்கும் அனைத்து சுபநிகழ்வுகளிலும் அன்றைய விழா நாயகனுக்கு/ நாயகிக்கு ஆரத்தி சுற்றுவார்கள். உற்றார் உறவினர்களின் சந்தோஷத்திலும், சிலர் தங்கள் இல்லங்களில் இப்படியொடு விழா நடக்கவில்லையே என்ற சஞ்சலத்திலும் மனரீதியாக தங்கள் எண்ண அலைகளை கண்கள் மூலமாக வெளியேற்றுவார்கள். அப்போது எதிர்படும் அலைகள் எப்படியாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கக்கூடாது என்பதால் மங்கலப் பொருள்களைக் கொண்டு ஆரத்தி சுற்றும் வழக்கமும் ஏற்பட்டது எனலாம். தூய்மையான கங்கையின் வசிப்பிடமான நீரில் சிவத்தைக் குறிக்கும் குங்குமமும், பெண்களின் மங்கலச் சின்னமான மஞ்சளையும் இணைத்து,தூய்மையின் சின்னமான சுண்ணாம்பை சேர்ப்போம். வெற்றிலையுடன் கற்பூரம் இணைந்து தீபமாய் சுழலும்போது இவையெல்லாம் இணைந்து சுற்றியுள்ள தீயசக்திகளை விரட்டியடிக்கும். கண் திருஷ்டி போக்க என்ன செய்யலாம்? எளிய முறைபரிகாரங்களையும் இறைவனையும் வேண்டி கண்திருஷ்டியால் இழந்தவற்றை ஈடு கட்டலாம்.
எண்ணங்கள் நன்றாக இருந்தால் எல்லாமே நன்றாகவே இருக்கும். ஆனால் பெருந்தன்மை இல்லாதவர்களின் ஏக்க பார்வையும், நாம் எதிர்பார்த்தது நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆற்றாமையும், ஏமாற்றும், பொறாமையும் பொறுமலாகி நம் மீது திருஷ்டியாக விழும்போது நாமும் அதன் கடுமையான தாக்கத்திலிருந்து தப்பிக்கவே முடியாததாகிவிடுகிறது. இத்தகைய திருஷ்டியை வீசுபவர்களை எளிதில் அடையாளம் காணலாம். மனதில் எழும் தீய எண்ணங்களை இவர்களது முகமே காட்டிக்கொடுக்கும் என்பதால்தான் இவர்கள் நுழையும்போதே இவர்கள் முகம் பார்த்துக்கொள்ள வீட்டின் வாயிலில் நிலைஉயர கண்ணாடி மாட்டப்படுவது வழக்கம். வீட்டில் நுழையும் போதே வெளியிலிருந்து வருபவர்கள் தங்கள் முகம் பார்த்து நுழைந்தால் அவர்களது திருஷ்டிக்கான பலன் பலமிழந்து போகும். ஆளுயர கண்ணாடி இல்லையென்றாலும் அரை அடி கண்ணாடியாவது மாட்டுங்கள்.
வீடுகளில் உள்ளே நுழையும் போது கண் திருஷ்டி விநாயகரை மாட்டலாம். அமாவாசை, பெளர்ணமி, ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் சாம்பிராணி புகை போட்டு காட்ட வேண்டும். அன்றைய தினத்தில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி ஒவ்வொரு அரைப்பழத்திலும் பாதியளவு மஞ்சளும் பாதியளவு குங்குமமும் நிலைவாசல் படியின் இருபுறமும் வைக்கலாம். கண் திருஷ்டிகளிலிருந்து வெளிப்படும் தீயஅலைகளை கிரகித்துக்கொள்ளும் பண்பு எலுமிச்சைக்கு உண்டு.
அலுவலகங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும் மேஜையின் மீது கண்ணாடித் தம்ளரில் நீர்விட்டு சிட்டிகை மஞ்சளைத்தூவி எலுமிச்சையை மிதக்கவிட்டால் தீய சக்திகளையும் தீய அலைகளையும் அண்டவிடாது செய்யும் அனைத்திலும் ஜெயம் கிட்டும். எலுமிச்சையின் நிறம் கெட்டதை கிரகித்துக்கொள்ளும் தன்மையை அதன் நிறம் மாற்றத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். அப்போது மீண்டும் ஓர் எலுமிச்சையை மிதக்கவிடலாம். பணியிலும், தொழிலிலும் எப்போதும் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ளும் சக்தியை இந்தப் பரிகாரம் தருகிறது.

முந்தையக் காலங்களில் வீட்டின் வாசலில் மாடத்தில் விளக்குகள் ஏற்றி வைப்பார்கள்.இதிலிருந்து வெளிப்படும் தீபமானது இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சியாய் ஒளியேற்றத்தில் வைத்திருக்கும் என்பது ஐதிகம். வாசலில் கையகலத்தில் உள்ள கிண்ணங்களில் உப்பைக் கொட்டி வைக்கலாம். கண் திருஷ்டி உப்பைக் கடந்து வருவதற்குள் களையிழந்து போகும். பிறந்த குழந்தைக்கு உப்பை சுற்றி நெருப்பில் இடுவார்கள். இதிலிருந்து வெடித்து வரும் சத்தத்தை வைத்து குழந்தையின் மீது உள்ள திருஷ்டிய அறிவார்கள். சிலர் உப்பை ஓடும் நீரில் இடுவார்கள். திருஷ்டியினால் பட்ட துன்பங்களும், சோதனைகளும் கரைய வேண்டும் என்பதற்காக. வாசலில் கட்டப்படும் திருஷ்டி கயிறும், கற்றாழை, எலுமிச்சை, பச்சைமிளாகாயையும் வாடும்போதெல்லாம்மாற்றி அமைக்க வேண்டும். இவைகளெல்லாம் திருஷ்டியை கழிக்கும். ஒவ்வொரு அமாவாசையன்றும் பூசணியை வாசலில் கட்டிவைக்கலாம்.
ஆனால் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். கண் திருஷ்டி என்பது எப்போது வேண்டுமானாலும் நேரம் காலமின்றி படும். நமக்கான காலமும், கிரகமும் நமக்கு உறுதுணையாக இருக்கும்போது எந்த திருஷ்டியும் நமக்கு துரதிஷ்டத்தை ஏற்படுத்தாது.கிரகத்தின் ஆதிக்கம் குறைந்து துன்பம் தரும் வேளை வரும் போது, தூரநிற்கும் துஷ்டனை நெருக்கத்தில் அழைக்கும் வல்லமை திருஷ்டிக்கு உண்டு என்பதை மறக்காமல் இயலும் போதெல்லாம் பசியால் வாடும் முதியவர்களுக்கு உணவு வாங்கி கொடுங்கள்.தர்மம் தலைக்காப்பது போல் அவர்களது உண்மையான வாழ்த்து எத்தகைய திருஷ்டியின் பலத்தையும் குறைக்க செய்துவிடும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment