Sunday, 2 December 2018

ராமா ....இதுவும் உன் விளையாட்டா .?

ராவண வதத்திற்குப் பிறகு அயோத்தியா திரும்பிய ராமருக்கு சீரும் சிறப்புமாக பட்டாபிஷேகம் நடந்தது. அண்ணல் ராமருக்கு சேவை செய்வதையே தங்களது வாழ்நாள் பாக்கியமாக கருதினர் இளவல்களும், சீதா பிராட்டியும். அவருக்கு செய்யக்கூடிய ஒரு கைங்கர்யம் கூட விடாமல்  ராமனின் இளவல்களும், சீதையும் சேர்ந்து ஒரு பட்டியலை தயாரித்து ராமரிடம் கொடுத்தனர்.  
அனைவரும் அண்ணலுக்கு செய்யக்கூடிய கைங்கர்யத்தை அவர்கள் விருப்பப்படி எடுத்துக்கொண்டனர். அதில் விடுபட்ட கைங்கர்யத்தைத் தான் செய்வதற்கு அனுமதி கேட்டார் ஹனுமான்.அனைவருக்கும் ராம சேவையில்,அனுமானை விட தங்களின் பங்கும்,மகத்துவமும் அதிகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அந்தப் பட்டியலில்  அதிகம்  எதையும் விட்டுவிடவில்லை என்ற தைரியத்தில் அவர்களும் ஒப்புக்கொள்ள, ஹனுமானின் உற்சாகம் அவர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. மீண்டும் பட்டியலை வாங்கிச் சரிபார்த்துவிட்டுக் கேட்டான் இலக்குவன்.
“இவற்றில் எந்த சேவை விடுபட்டு விட்டது என்று நினைக்கிறாய் ஹனுமான்?”

“பிரபு கொட்டாவி விடும்போது அவர் வாய்க்கு நேராக சொடக்கு போடுவதுதான்” என்று வினயமாக சொன்னார் அனுமான். 
“அது ஒரு வேலையா?” என்று நகைத்தார் இளவல்.
“ஆமாம். இல்லையென்றால் ப்ரபுவுக்கு வாய் வலிக்காதா?” என்றார் ஹனுமான்.
ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டதால், அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அங்கே தான் ஆரம்பித்தது இறைவன் திருவிளையாடல். முதலிலாவது எல்லா சேவைகளையும் செய்தபோதும், வேலை முடிந்தால், ஹனுமான் ஒரு இரண்டடிகளாவது ராமனை விட்டுத் தள்ளி நிற்பார். இப்போது, எப்போது பார்த்தாலும் ராமனின் வெகு அருகில் அல்லது காலடியிலேயே இருக்க ஆரம்பித்தார். கேட்டால் ராமன் எப்போது கொட்டாவி விடுவாரென்று தெரியாது. அதனால் எப்போதும் தயாராக அருகிலேயே இருக்க வேண்டுமே என்பார்.
கொட்டாவிக்கு சொடுக்கு போடுவதெல்லாம் ஒரு வேலையா என்றுஆரம்பத்தில், நினைத்தவர்கள் கூட இப்போது ஹனுமானைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். ஏனெனில் ஒரு கணம் கூட ராமனை விட்டு கண்ணை எடுக்காமல் அவரது அழகிய கமல திருமுகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யம் கிடைக்கிறதே.

பகலில் தான் இப்படி என்றால்,இரவிலும், ராமன் உறங்கும் வரை கொட்டாவிக்கு சொடுக்கு போடுகிறேன் என்று அருகிலேயே ஹனுமான் நிற்பார். ராமன் உறங்கிய பின் அறை வாசலில் நிற்பார். முன்பாவது சீதை பள்ளியறைக்குள் வந்ததும் வெளியே செல்வார். இப்போது சீதையாலும்கூட ராமனிடம் தனிமையில் பேச இயலவில்லை. 

ஒரு கட்டத்தில், ஹனுமானுக்கு ஏதாவது வேலை கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு நாளாவது ராமனோடு சற்று அளவளாவலாம் என்று நினைக்கும் அளவிற்குப் போய் விட்டனர்.அனைவரும் ஒன்றுகூடிப்பேசியபின், கௌசல்யையிடம் சொன்னார்கள்.

“அம்மா, நாளை காலை ஹனுமானிடம் எதையாவது கொடுத்து உங்களிடம் கொடுத்துவிட்டு வரச் சொல்லி அனுப்புகிறோம். நீங்கள் அவரைப் பிடித்து மாற்றி மாற்றி உச்சி வேளை வரை ஏதாவது வேலை வாங்குங்கள்.  நாங்கள் சற்று நேரமாவது ராமன் அண்ணாவோடு பேசுகிறோம்” என்றனர்.
அவர்களைப் பார்த்தால் மிகவும்  பரிதாபமாய் இருந்தது கௌசல்யைக்கு. சரியென்று ஒப்புக்கொண்டாள். சொன்னபடி மறுநாள் ஏதோ ப்ரசாதங்களையெல்லாம் போட்டு ஒருமூட்டை கட்டி,இது பிரசாதமாதலால், பணியாளிடம் கொடுத்தனுப்ப வேண்டாமென்று பார்க்கிறேன். நீதான் என் கணவருக்கு மிகவும் பிரியமானவன். உன் மூலம் கொடுத்தனுப்பினால் ‌மிகவும் மரியாதையாய் இருக்கும். ராஜமாதாவிடம் கொடுத்துவிட்டு வா”என்று சொல்லி ஹனுமானை சீதை  அனுப்பிவிட்டாள்.

ராமன் எழுந்திருப்பதற்குள் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடலாம் என்று சீதை போனாள். நேரமாகிக்கொண்டே இருந்தது.வழக்கமாய் அதிகாலை எழும் பழக்கமுள்ள ராமன் இன்று படுக்கையை விட்டு  எழவேயில்லை. சுப்ரபாதம் இசைப்பவர்கள் ஸ்ருதி சேர்க்கும்போதே எழுந்து  பாட்டுக்கள் முழுவதையும் கேட்பார். 
இன்று அவர்கள் பாடி முடித்தாயிற்று. ஸ்நானம் செய்துவிட்டு வந்து பார்த்த ஸீதைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்னாயிற்று? உடம்பு சரியில்லையா?
அருகில் சென்று பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. ராமன் வாயைத் திறந்துகொண்டு, ஆனால் விழித்துக்கொண்டு தான் படுத்திருந்தார். 
என்னவாயிற்று ஸ்வாமி? ஆதவன் வந்துவிட்டான். எழ மனமில்லையா?

பதிலில்லை. பதில் சொல்லாமல் ராமன் திருதிருவென்று விழிப்பதைப் பார்த்தால் சீதைக்கு பயமாய் இருந்தது. 
“எழுந்திருங்கள் ஸ்வாமி” தோளைப் பிடித்து உலுக்கினாள். ம்ஹூம் பதிலில்லை.
வாய் திறந்தே இருந்தது. அவளையே ராமன் விழித்துப் பார்க்க மிகவும் பயந்து போன சீதை இளவல்களுக்கு அவசரச் செய்தி அனுப்பினாள்.
மூன்று தம்பிகளும் ஓடிவந்து முடிந்தவரை முயற்சி செய்தனர்.

ராமன் எழவும் இல்லை. வாயை மூடவும் இல்லை. பற்றாக்குறைக்கு காது வரை நீண்ட அவரது தாமரைக் கண்களை வைத்துக்கொண்டு பரிதாபமாக கண்களை உருட்டி உருட்டி விழித்துப் பார்த்தார். என்னவோ உடம்புதான் சரியில்லை போலும் என்று நினைத்து ராஜ வைத்தியருக்குச் சொல்லியனுப்பினார்கள்.
அவர் வந்து தலையைப் பிய்த்துக் கொண்டார்.நாடி நன்றாய் இருக்கிறது. கழுத்தை ஆராய்ந்து பார்த்தார். தாடையிலும், கழுத்திலும் ஒரு ப்ரச்சினையும் இல்லை. பின் ஏன் வாய் மூடவில்லை? 
“எனக்குத் தெரியவில்லை. குலகுருவைக் கூப்பிடுங்கள்”.கையை விரித்து விட்டார்.
வசிஷ்டர் வந்தார். குருவுக்குத் தெரியாதா சீடனின் நிலைமை? கண்டதும் சிரித்தார்.

ராமா இது உன் விளையாட்டா?என்று  மனதிற்குள் நினைத்தவர், கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு,“ஹனுமான் எங்கே”?என்றார்.
சேதி வந்ததும்,காற்றென பறந்து வந்தார் ஹனுமான். “மன்னித்துவிடுங்கள் ப்ரபோ”என்று சொல்லிக்கொண்டே திறந்திருந்த ராமனின் வாய்க்கு நேராக இரண்டு சொடக்குகள் போட, ராமன் வாயை மூடிக்கொண்டார். இதற்குள் மாலையாகிவிட்டது. கிட்டத்தட்ட  ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
கொட்டாவிக்கு சொடக்கு போடுவதெல்லாம் ஒரு வேலையா என்று நினைத்தவர்களுக்கு, அதையும் ஒரு கைங்கர்யமாக மதித்து ஏற்றுக்கொண்ட ராமன் அதற்காக ஒரு நாளெல்லாம் வாயைத் திறந்துகொண்டே இருந்தார் என்றால், அண்ணலின் கல்யாண குணத்தை விவரிக்கவும் இயலுமா ?
ஸ்ரீ ராம ஜெய ராம ...ஜெய ஜெய ராம

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment