Friday, 2 November 2018

இல்லறம் செழிக்க துணை நிற்கும் வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர்.!!

நாமக்கல்லில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் இருக்கிறது பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் உடனுறை வேதநாயகி அம்மன் கோயில். மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் குழந்தை வடிவத்தில் பாலசுப்ரமணியர் ‘சோமஸ்கந்தராக’ அருள்பாலிப்பது வியப்பு. இதேபோல் தமிழகத்தில் சைவக்கோயில்களை பொறுத்தவரை, சிவனை வழிபட்ட மறுநொடியில் திருமாலை துதிப்பது என்பது மிகவும் அரிது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே இது போன்ற அமைப்பு உள்ளது. அதேநேரத்தில் வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோயிலிலும் சிவனை தரிசித்து விட்டு, இடப்புறம் திரும்பினால் திருமாலையும் தரிசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த கோயிலில் வேதநாராயணப் பெருமாள் என்ற பெயரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயில் மட்டுமே பிரசித்தி பெற்ற சிவத்தலமாக திகழ்கிறது. ஆனால் நாமக்கல் நகரில் எங்குமே சிவன் கோயில்கள் இல்லை. இந்த குறையை போக்கும் வகையில் நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளிபுரத்தில் தான்தோன்றீஸ்வரராக அமர்ந்து, சுவாமி அருள்பாலிக்கிறார் என்கின்றனர் சிவனடியார்கள். இதேபோல் பெரும்பாலான சிவன் கோயில்களில் லிங்கம் உருண்டை வடிவிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்கு கூம்பு வடிவில் சுவாமியை தரிசிக்கலாம் என்பதும் வியப்புக்குரிய தகவலாகும்.பக்தர்களை காக்க சுயம்புவாய் அவதரித்ததால் இங்குள்ள இறைவன் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். 

அதேபோல் வேதநாயகி அம்மனும் இஷ்டப்பட்டு இங்கு சுவாமியுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார் என்கின்றனர் அடியார்கள். நாமக்கல்லில் உள்ள கூலிப்பட்டி யில் வேதநாயகி அம்மனுக்கு சிலை வடிக்கப்பட்டது. இதனை பவானியில் பிரதிஷ்டை செய்வதற்கான பூஜைகளை மேற்கொண்டு, அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். வள்ளிபுரம் வந்தபோது, அங்குள்ள மக்கள் வழிபடுவதற்காக அம்மன் சிலை கீழே இறக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அதை அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியவில்லை. வள்ளிபுரத்தில் சுவாமியுடன் அமர்ந்து அருள்பாலிக்க அம்மன் விரும்புவதை அசரீரியாக உணர்ந்த பக்தர்கள் இங்கேயே பிரதிஷ்டை செய்தனர் என்ற செவிவழித் தகவல்களும் உள்ளது.

கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய மன்னர்கள் கட்டிய தான்தோன்றீஸ்வரர் கோயிலை, பின்னர் முத்துகாப்பட்டி ஜமீன் பரம்பரையினர் நிர்வாகித்துள்ளனர். தற்போதுள்ள கிரீஷ்அய்யர் குடும்பத்தினரே பல தலைமுறைகளாக பூஜை செய்து வருகின்றனர். பிரதோஷம், கிருத்திகை, மகாசிவராத்திரி என்று அனைத்து விழாக்களும் இங்கு களை கட்டும். இதில் இங்கு நடக்கும் அரூத்ரா தரிசனவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின்போது, கோயிலின் உற்சவ மூர்த்தியான நடராஜர், ஒருநாள் முழுவதும் நாமக்கல் நகரில் வலம் வருவார். இரவில் நடக்கும் அரூத்ரா அபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். 

இதைதொடர்ந்து திருமாங்கல்யதாரம் என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த விழாவில் திருமணமாகாதவர்கள் கலந்து கொண்டு மலர்தூவி சுவாமியை வழிபட்டால் உடனடியாக திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாய் தொடரும் நம்பிக்கை. இதே போல் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள், திருமணத்திற்காக பெண், மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சிகளை இந்த கோயிலில் வைத்தே நடத்துகின்றனர். இப்படி செய்வதால் இல்லற வாழ்வு இனிதாக தொடர்ந்து, சுவாமியையும், அம்பாளையும் போல் மனமொத்த தம்பதிகளாக பல்லாண்டு வாழ்வார்கள் என்று நெகிழ்கின்றனர் பக்தர்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment