இறைவன் பெயர்: துயரந்தீர்த்தநாதர், பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி பெயர்: பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என இரண்டு பதிகங்கள் உள்ளன.
எப்படிப் போவது
சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 31 கி.மீ. தொலைவு. காட்டுமன்னார்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக அணைக்கரை செல்லும் நகரப் பேருந்து எண் 41, இத்தலம் வழியாகச் செல்கிறது. கோவில் வாயிலில் இறங்கிக்கொள்ளலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்,
ஓமாம்புலியூர், ஓமாம்புலியூர் அஞ்சல்,
காட்டுமன்னார்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608 306.
இவ்வாலயம், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தல வரலாறு
உமாதேவி ஒரு முறை, கைலாயத்தில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்துகொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக்கொண்டிருக்கும்போது, உமையின் கவனம் திசை திரும்பியது.
சிவபெருமான், உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்துவிட்டார். அதன்படி உமையம்மை பூமிக்கு வந்தார். பூமிக்கு வந்த பார்வதிதேவி, ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள்.
அம்பாளின் தவத்தினை மெச்சி, இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக் கூடாது என்பதற்காக, நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார்.
அப்போது முருகப் பெருமான் அங்கு வர, நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன், அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக்கொண்டார்.
(சுவாமிமலையில் முருகப் பெருமான், தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது, ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும்போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்துகொண்டதால்தான்). இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது. இறைவனுக்கு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என்று பெயரும் ஏற்பட்டது.
ஓமம் என்ற சொல் வேள்வியைக் குறிக்கும். வேள்விச் சிறப்புடைய ஊர் என்பதாலும் இத்தலம் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்துவந்தது என்றும், ஹோமப் புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.
கோவில் அமைப்பு
கிழக்கு நோக்கிய இக்கோயில் மதில்சுவருடன் கூடிய ஒரு வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலுக்கு எதிரில் கௌரி தீர்த்தம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், பலிபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம். அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளை உடையது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. வலமுடித்து உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதி. சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்புமூர்த்தியாக இறைவன் காட்சி தருகின்றார். சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்புடையவர். இறைவன் சந்நிதியில் வலதுபுறம் தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி, உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார். ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள் பாலிப்பது இத்தலத்தில் மட்டும்தான். இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.
இத்தலத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனையும், குரு தட்சிணாமூர்த்தியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குரு பார்த்தால் கோடி நன்மை என்பது சொல் வழக்கு. குரு பரிகாரத் தலமாக இத்தலம் சிறப்புடன் வழிபடப் பெறுகிறது.
சிவபெருமான் குரு தட்சிணாமூர்த்தியாக அம்பாளுக்கு உபதேசம் செய்த தலமாதலால் கல்வியில் சிறந்து விளங்க மாணவ, மாணவிகள் பெற்றோருடன் இத்தலம் வந்து தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால் நல்ல பலன் பெறலாம்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், கருவறை கோஷ்டத்தில் காணப்படும் நடராசரின் சிலாரூபம். இது வியாக்ரபாதருக்குக் காட்சி தந்த வடிவம் என்று கூறப்படுகிறது. ஏனைய கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை முதலியோர் உள்ளனர். அம்பாள் சந்நிதி அழகாக உள்ளது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும். அம்பாள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்கி ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்ததன் அடையாளமாக, சரஸ்வதிக்கு இவ்வாலயத்தில் தனிச் சன்னதி உள்ளதும் ஒரு சிறப்பாகும்.
பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. மற்றவை - பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), கானாட்டம்புலியூர், எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர். இவற்றில் கானாட்டம்புலியூர் இத்தலத்துக்கு அருகில் உள்ளது. எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இரண்டும் நடுநாட்டுத் தலங்கள். பெரும்பற்றப்புலியூர், ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர் ஆகிய மூன்றும் காவிரி வடகரைத் தலங்கள். இந்த ஐந்து தலங்களிலும் வியாக்ரபாத முனிவர், ஈஸ்வரனை வழிபட்டுள்ளார்.
இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவக்கரசர் பதிகம் ஒன்றும் உள்ளன. ஞானசம்பந்தர் பதிகத்தில், இத்தலம் ஓமமாம்புலியூர் என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால், அப்பர் பாடலில் ஓமாம்புலியூர் என்று மருவி வருகிறது. இருவரும் தங்கள் பதிகங்களில் இத்தலத்தை வடதளி என்றும் கூறிப்பிட்டுள்ளனர்.
ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஒரு சிறிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீஸ்வரர். சோழ மன்னர் காலத்துக் கல்வெட்டில் இறைவரின் திருப்பெயர் வடதளி உடையார் என்றும், பல்லவர் காலத்துக் கல்வெட்டில் வடதளி உடைய நாயனார் எனவும், வடதளி உடையார் வரும் துயரம் தீர்த்த நாயனார் எனவும் கூறப்பெற்றுள்ளது.
ஞானசம்பந்தர் பதிகத்திலிருந்து ஒரு பாடல்
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.
திருநாவுக்கரசர் பதிகத்திலிருந்து ஒரு பாடல்
ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை
அலைகடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும்
ஏராரும் மதிபொதியும் சடையினானை
எழுபிறப்பும் எனையாளா உடையான் தன்னை
ஊராரும் படநாகம் ஆட்டுவானை
உயர்புகழ்சேர் தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீராரும் வடதளி எம் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment