சேலத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் வடமேற்கு திசையில் சரபங்கா நதியோரம் இருக்கிறது ஓமலூர் கோட்டை. 16ம் நூற்றாண்டில் கெட்டி முதலி வம்சத்து மன்னரான வணங்காமுடி என்பவரால் எழுப்பப்பட்ட, இந்த கோட்டையில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் வசந்தீஸ்வரர். விஜயராகவ பெருமாள், மாரியம்மன் கோயில்களும் இங்கு இருப்பது சிறப்பு. கி.பி.1641 முதல் கி.பி.1768 வரை நடந்த தொடர் போர்களால் கோட்டை சிதைவுற்றது. ஆனால் வசந்தீஸ்வரர் கோயிலும், விஜயராகவ பெருமாள் கோயிலும் இன்றுவரை கோட்டையின் சின்னங்களாக விளங்கிக்கொண்டிருப்பது வியப்பு. தாரமங்கலத்தில் கைலாசநாதருக்கு, சிவகாமி அம்மனை தாரை வார்த்துக் கொடுக்க, ஹோமம் வளர்த்த இடம் என்பதால் ‘ஹோமலூர்’ என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ஓமலூர் ஆனது.
இங்கு சரபங்கா முனிவர் வந்து வழிபட்டு நீராடிய நதி, அவரது பெயரிலேயே ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும் புராணக்குறிப்புகள் சொல்லும் தகவல்.
ஒரு சமயம் தொடர் போர்களால் இந்த பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மழை பொய்த்ததால் விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியானது. எங்கும் வறட்சி, பசி, பட்டினி. மக்களின் வறுமை நிலை கண்டு, கெட்டி முதலி மன்னர் பரம்பரையில் வந்த மங்கை நல்லாள் மனம் வருந்தினார். மீண்டும் இந்த பகுதியில் வசந்தம் வீசவும், மக்களின் வாழ்க்கை வளம் பெறவும் வேண்டி, இங்கு சுயம்புவாக எழுந்தருளி இருந்த இறைவனுக்கு கோயில் கட்டினார். இதையடுத்து எம்பெருமான் திருவுளப்படி வருண பகவான் மும்மாரி பொழிந்திட, எங்கும் பசுமை, செழுமை பரவியது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ‘வசந்தம்’ வீசத்தொடங்கியது. இதன்காரணமாக இந்த கோயிலில் உள்ள இறைவன் ‘வசந்தீஸ்வரர்’ என அழைக்கப்பட்டார் என்பது தலவரலாறு.
வசந்தீஸ்வரர் கோயில், ஓமலூர் கோட்டையின் உள்ளே வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மூலவரின் திருநாமம் வசந்தீஸ்வரர், அன்னையின் நாமம் அபிதகுசலாம்பிகை. தல விருட்சமாக வன்னிமரமும், தீர்த்தமாக சரபங்கா நதியும் உள்ளன. கோயிலின் வலதுபுறத்தில் சூரியனார், நடனமாடும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் ஆகியோர் சன்னதிகள் இருக்கின்றன. தனி சன்னதியில் வலம்புரி விநாயகர் வீற்றிருக்கிறார். கோயிலின் பின்புறம் அரசமரமும், வேப்பமரமும் ஒன்றிணைந்த அதிசய மரம் உள்ளது. இதன் அடியில் நாகர் சிலைகள் உள்ளன. திருமணம் ஆகாத பெண்கள், இந்த மரத்தை மூன்று முறை வலம் வந்து, மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி நாகரை வழிபட்டால் தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். நாகர் சிலைகளை அடுத்து பஞ்சலிங்க சன்னதி உள்ளது. இங்கு காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் (நிலம்), திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் (நீர்), திருவண்ணாமலை அண்ணாமலையார் (நெருப்பு), காளஹஸ்தி காளத்தீஸ்வரர் (காற்று), சிதம்பரம் நடராஜர் (ஆகாயம்) ஆகியோர் வீற்றிருந்து அருளாசி வழங்குகிறார்கள்.
இவர்களை ஒருசேர தரிசித்தால் பஞ்சபூத தலங்களுக்கு சென்று தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து நவக்கிரக சன்னதியும், சரபங்க முனிவரின் ஜீவசமாதியும் இருக்கிறது. கோயிலின் இடதுபுறத்தில் அபிதகுசலாம்பிகை தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். சரபங்க முனிவருக்கு, ராமபிரான் தரிசனம் கொடுத்ததன் நினைவாக, வசந்தீஸ்வரர் கோயிலின் தென்மேற்கே விஜயராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சீதா, லட்சுமணனோடு கோதண்டராமராக பெருமாள் வீற்றிருக்கிறார். கோட்டையின் தென்கிழக்கே காவல் தெய்வமான எல்லை முனியப்பன் கோயில் உள்ளது. இவர் ‘ராஜமுனியப்பன்’ என்றும் அழைக்கப் படுகிறார். வசந்தீஸ்வரர் கோயிலுக்கு செல்வதற்கு முன்னதாகவே, கோட்டை மாரியம்மன் கோயில் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி, ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், பவுர்ணமி, சஷ்டி, திருக்கார்த்திகை, சங்கடகர சதுர்த்தி, ராகுகால பூஜை, நவக்கிரக பூஜை, பைரவர் பூஜை, அன்னாபிஷேக விழா ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது. வசந்தீஸ்வரர் கோயிலின் இடதுபுறத்தில் அதிசய நவக்கிரக சன்னதி உள்ளது. பெரும்பாலான கோயில்களில் நவக்கிரகங்கள் தனித்து இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள், தங்கள் மனைவியருடன் தம்பதி சமேதராக வீற்றிருந்து அருள் வழங்குகிறார்கள். மேலும் சிறப்பம்சமாக, எந்த கோயிலிலும் இல்லாத வகையில் சூரியபகவான் நடுநாயகமாக, அழகிய 7 குதிரைகள் பூட்டிய ரதத்தில் தமது மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகியோருடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இங்குள்ள நவக்கிரகங்களை வணங்கினால் கணவன்-மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீரும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூட, இங்கு வந்து தரிசனம் செய்தால் ஒன்றுபடும் வாய்ப்பு உருவாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment