Monday, 2 July 2018

ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவில்

வேலூர் அடுத்த ரத்தினகிரி மலை மீது வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்து வருகிறார் முருகப்பெருமான். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்திருத்தலம் சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. உற்சவர் சண்முகர் என அழைக்கப்படுகிறார்.  மலையின் அடிவாரத்தில் துர்க்கையம்மன் தனி சந்நிதியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு நவராத்திரி, ஆடி, தை வெள்ளி மற்றும் ராகு காலத்தில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. மலை மீது 5 நிலைகளுடன் ராஜகோபுரம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தில் கற்பக விநாயகரும், உற்சவர் சண்முகர் சன்னதியும் உள்ளது. வாராஹி சன்னதியில் நந்தி, சிம்ம வாகனங்களுக்கு இடையே  அம்மன் அருள்பாலிக்கிறார். 

தல வரலாறு:

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை. ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை என்றார். பின்பு ஊதுபத்தி ஏற்றி வைக்கும்படி வேண்டினார் பக்தர். அதுவும் இல்லை என்றார் அர்ச்சகர். பரிதாப நிலையில் இருக்கும் கோயிலை நினைத்து வருத்திய பக்தர், தீபாராதனைகூட செய்யப்படாத முருகனுக்கு கோயில் தேவைதானா? என்று சிந்தித்தார். உடனே அவரது மனதில் முருகன் பிரசன்னமாக தோன்றவே, மயக்கமானார் பக்தர். இதைக்கண்ட அர்ச்சகர், ஆட்களை அழைத்து வர, மலையடிவாரத்திற்கு சென்றார். இதனிடையே எழுந்த பக்தர், “இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லை,’’ என மணலில் எழுதி வைத்துவிட்டு அமர்ந்து விட்டார். அதன்பின்பு அவர் யாரிடமும் பேசவும் இல்லை. பிற்காலத்தில் இங்கு குன்றிலேயே முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது.

தலபெருமை:

இத்தலத்து முருகனுக்கு பூஜையின்போது மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருக்கும். அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், “ஒப்பில்லாத மாமணி, வித்தகர்’’ என பாடியிருக்கிறார். ஆடி கிருத்திகையன்று சுவாமி, ரத்தினங்களால் ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது விசேஷம். இங்கு முருகன், பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த்தஜாம பூஜையில் பால் நிவேதனம் செய்யப்படுகிறது. அதேபோல் கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை. திருமணம், புத்திரதோஷம் உள்ளவர்கள் பாலமுருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமியில் இங்குள்ள வராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால், தடை நீங்கி திருமணம் கைக்கூடும் என்பதும் நம்பிக்கை முருகனை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வேலூர் சென்னை இடையே வேலூரில்  இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். சென்னையில் இருந்து வேலூர், பெங்களூர் செல்லும் அனைத்து பஸ்களும் இக்கோயில் வழியாகவே செல்கின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment