Saturday, 2 June 2018

தெற்கு மேட்டாள் வரலாறு

நெல்லை மாவட்டம் - ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட தனக்கர்குளத்தில் தெற்குமேட்டாள் கோயில் அமைந்துள்ளது. சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. தனக்கர்குளம் ஊரிலும் இதே நிலை இருந்ததால், அப் பகுதியைச் சேர்ந்த பெரிய அணஞ்சி கோனார் மிகவும் வருந்தினார். அவர் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். தம்பி சின்ன அணஞ்சியின் ஆலோசனைப்படி, ஆடுகளை உறவினர் ஒருவரிடம் மேய்க்கச் சொல்லிவிட்டு, அண்ணன், தம்பி இருவரும் மேய்ச்சலுக்கான பசுமையான இடம் தேடி, மலையாள நாட்டுக்கு வருகிறார்கள்.

தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புதூர், அழகிய பாண்டிபுரம் பகுதிகளைச் சுற்றி மேய்க்கலாம் என முடிவு செய்து, அங்கிருந்து புறப்பட்டு தனது ஊருக்கு வருகின்றனர். மறுநாள் அதிகாலைப் பொழுதில் ஆடுகளை ஓட்டிச் சென்றனர். இரண்டு நாள் நடைப் பயணத்திற்கு பின்னர் கேசவன் புதூர், சூட்சணை அருகேயுள்ள கோணத்தில் பட்டி அடித்து (ஆட்டு கிடை) அமைத்து ஆடுகளை அடைத்தனர். பகலில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு வந்தனர். தம்பி சின்னஅணஞ்சியோடு ஒருநாள் வந்து ஆடு கிடை போடப்பட்டிருக்கும் இடம் பார்த்துச் சென்ற இருவரது மனைவிமார்களும், இரண்டு வாரம் கடந்த பின்பு தனது கணவன்மார்களை பார்க்க, வருகிறார்கள். பெரிய அணஞ்சியும், சின்ன அணஞ்சியும் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றிருந்தனர்.

ஆட்டுக்கிடையில் தனது கணவனுக்கும், கொழுந்தனுக்கும் நாக்குக்கு ருசியாக சமைத்து கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட பெரிய அணஞ்சி மனைவி அருகே கிடந்த கற்களை எடுத்து கூட்டி அடுப்பாக்கி சமையல் செய்து முடித்தாள். அந்த கற்கள் அங்கே உடைந்து கிடந்த இசக்கியம்மன் சிலையின் துண்டுகளாகும். இதை அவர்கள் உற்று நோக்கி பார்க்கவில்லை. சமையலை முடித்தனர். அண்ணன் தம்பி இருவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உணவு உண்டு சென்றபின் இருவரது மனைவியரும் அருகே இருந்த சூட்சணைக்கு குளிக்கச் சென்றனர். பெரிய அணஞ்சி மனைவி மாடத்திக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருந்தது. பெரிய அணஞ்சி மனைவி குளித்துக்கொண்டிருக்கும் போது அணையின் படியில் உரசிய மஞ்சள் அடுப்புக்கரியாக மாறியது. மஞ்சள் நிறத்துக்கு பதில் கருப்பு நிறமானது. திடுக்கிட்ட மாடத்தி, தங்கையிடம் இதுபற்றி கூறினாள். ‘அக்கா, படித்துறையில இருந்த அழுக்கா இருக்குமோ!’’ என்று பதிலுரைத்தாள் தங்கை. உரசிய மஞ்சள் கரியானதால், அதை விட்டு விட்டு அணைக்குள் இறங்கி குளிக்கிறாள். முங்கி எழுகையில் அணையின் தெற்கு பகுதி வெடிக்கிறது. வெள்ளம் வழிந்தோடுகிறது. அதிர்ச்சியுற்ற அக்கா தங்கை இருவரும் உடனடியாக ஆட்டுக்கிடைக்கு வருகின்றனர். வந்த இருவருக்கும் அந்த நிமிடத்திலிருந்தே உடல் நலம் குன்றியது. மாலையில் மேய்ச்சலுக்குச் சென்ற அண்ணன் தம்பி இருவரும் ஆடுகளுடன் ஆட்டுக்கிடைக்கு வருகின்றனர். நடந்த சம்பவங்களை அறிகின்றனர். உடனே, அண்ணன் பெரிய அணஞ்சி ‘‘ ஏலே, சின்னவனே, மைனி கையில உங்கிட்ட இருக்க அருவாவ கொடு, ராவோடு ராவா நாம உருப்படிகளோடு (ஆடுகளை அவர்கள் வழக்கப்படி இப்படி சொல்வதுண்டு) ஊரு போய் சேந்திருவோம். கிளம்புங்க… கிளம்புங்க’’ என்று குரல் கொடுக்கிறார்.

சில நிமிடங்களில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். கேசவன்புதூர், அழகியபாண்டியபுரம், குறத்தியறை விலக்கு, கடுக்கரை, இரவிபுதூர், தெள்ளாந்தி, சீதப்பால், காட்டுமடம் கடந்து வருகிறார்கள். கட்டரக்குளம் அருகே வரும்போது பெரிய அணஞ்சியின் மனைவியால் நடக்க முடியவில்லை. மயக்கம் அடைகிறாள். உடனே அங்கிருந்த ஆலமரத்தில் கம்பு வெட்டி தொட்டில் போல கட்டி சுமந்துகொண்டு செல்கிறார்கள். கருமேனி சாஸ்தாங்கோயில் கடந்து மரப்பாலம் தாண்டி ஆரல்வாய்மொழி வருகிறார்கள். மனைவி மாதவிலக்குடன் இருப்பதால் முப்பந்தல் வழியாகச் செல்ல வேண்டாம் என்றெண்ணி குமாரபுரம், வடக்கன்குளம், ராமலிங்கபுரம், உப்புஓடை, கீநேரிக்குளம் தாண்டி தனக்கர்குளம் வந்து சேர்கிறார்கள்.

அன்றிலிருந்து உடல்நிலை மேலும் குன்றிப்போக பல வைத்தியர்களை வரவழைத்து பார்க்கிறார் பெரிய அணஞ்சி கோனார். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. பெரிய அணஞ்சியைப்போன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு பசுமாடுகளை வளர்த்து வந்த குத்தால நம்பியாரும், அவரது தம்பி வேலு நம்பியாரும், அதே ஊரைச்சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு பசுமாடுகளையும், காளைகளையும் வளர்த்து வந்த பெரிய பண்ணையாரின் மாடுகளை சம்பளத்துக்கு மேய்த்து வந்தனர். கடுக்கரை மலையில் மாடுகிடை வைத்திருந்த போது அருமநல்லூர் அருகேயுள்ள ஞாலத்தைச் சேர்ந்த திரவியம் என்பவரோடு பழக்கம் ஏற்படுகிறது.

கடுக்கரை மலையில் கடுவா(புலி) தொல்லை இருந்ததால் வேலு நம்பியார் பண்ணையார் வீட்டு மாடுகளை ஊருக்கு ஓட்டி வந்து விடுகிறார். குத்தால நம்பியார் தனது மாடுகளையும், திரவியம் அவரது மாடுகளையும் பத்திக்கொண்டு காக்காச்சி மலையிலுள்ள குன்னிமுத்து சோலையில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றனர். காக்காச்சி மலையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தைக்கண்ட குத்தால நம்பியார் தனது தோட்டத்து கிணற்றில் திலாம் போட்டு நீர் இறைக்க பயன் படுத்தலாம் என்று கருதி திரவியத்திடம், அந்த மரத்தை வெட்டச் சொல்கிறார். திரவியம் அந்த மரத்தை வெட்ட முற்படும்போது கோடாரி கை நழுவி விழுகிறது. மீண்டும் வெட்டும் போது அந்தக் கோடாரி அவனது வலது காலில் வெட்டிவிடுகிறது.

ரத்தம் பீறிட்டு வந்ததும், காலில் ஒரு துணியால் கட்டிக்கொண்டு அவன் ஒதுங்கி விட, குத்தால நம்பியார் மரத்தை வெட்டி முறித்து விடுகிறார். பின்னர் ஊருக்கு வந்து ஏழு வண்டி கட்டிச்சென்று மரத்தை கொண்டு வருகிறார்கள். பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம் வழியாக விசாடிகுளம், கீநேரிக்குளம் கடந்து தனக்கர்குளம் செக்கடி வட்டம் வரும் போது முதலில் வந்த வண்டியின் அச்சு முறிந்து விடுகிறது. பின்னர் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் துணையோடு மரத்தை சுமந்து கொண்டு தோட்டத்தில் சேர்க்கின்றனர். திலாம் போடுவதற்காக சண்முக ஆசாரியை மரத்தை வெட்டி வடிவமைக்க சொல்கிறார் குத்தால நம்பியார்.

அப்போது அவரது வீட்டருகே இருந்து வந்தவர் ஓடி வந்து பதற்றத்துடன் ‘‘மாமா, உங்க மக பாப்பா தலப்புள்ள ஏழுமாத சூலி உடம்புக்கு சரியில்லாம அழுது துடிக்கிறா, அத்தை உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க’’ என்றதும்  உடனே வீட்டுக்கு புறப்பட்டார் குத்தால நம்பியார். வீட்டிற்கு வந்து வைத்தியச்சி வரவழைத்துப் பார்த்தார். சரியாகவில்லை. தலப்பிள்ளை கர்ப்பிணியான பாப்பா இறந்தாள். வருந்தி நின்ற குத்தால நம்பியாரிடம், பெரிய அணஞ்சி கோனாரும், சின்ன அணஞ்சி கோனாரும், என்ன, ஏதுன்னு குறி கேட்டு வாரும் என்று கூற, அவரும் சரி என்று ஒப்புக்கொண்டு பணகுடி சென்று வள்ளி குறத்தியிடம் குறி கேட்கின்றனர். அவள் ஆடுகளோடு இசக்கி வந்ததாகவும், மரத்தோடு மாயாண்டி சுடலை வந்ததாகவும் அவர்கள் ஊருக்கு தெக்கே, செக்கடி வட்டத்திலே உலாவுவதாகவும் கூறுகிறாள்.அவர்களுக்கு நிலையம் இட்டு கோயில் கட்டி வழிபட்டால்தான் இனி வரும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு வரும். இல்லையென்றால் பேராபத்து நிகழக்கூடும் என்று எச்சரிக்கிறாள். அதைக்கேட்டு ஊருக்கு வந்தவர்கள், செக்கடிக்கு தெற்குப்புறம் மேடான பகுதியில் இசக்கி அம்மனுக்கும், சுடலை மாடன், முண்டனுக்கும் பீடம் அமைத்து கோயில் கட்டி, பூஜை செய்து வழிபட்டு வந்தனர். தெற்கு மேட்டில் அமைந்ததால் இக்கோயிலின் அம்மன் தெற்குமேட்டாள் என்று அழைக்கப்பட்டாள். சின்ன அணஞ்சி கோனாரின் வம்சா வழியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், பங்காளி சண்டையில் தனது சொத்துகளை இழந்துவிடுகிறான். அதனால் அவரது உறவுகளும் அவரை மதிக்காமல் ஒதுக்கி விடுகிறது.

வாழ வழியின்றி திக்கற்ற நிலையில் இருந்த அவன், கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்றெண்ணி, தெற்கு மேட்டம்மன் கோயிலுக்கு வருகிறான். கோயிலை சுற்றி வந்து வணங்கிவிட்டு சாவதற்காக கோயில் முன் உள்ள பாதை வழியாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ‘‘அய்யா, நில்லு’’ என்று பின்னாடி யிருந்து ஒரு குரல், திரும்பி பார்க்கும்போது நீண்ட சடைமுடியும் கொண்டு சிவப்பு சேலை கட்டி வயது முதிர்ந்த பெண் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். ‘‘சங்கநேரிக்கு போகணும், பொழுது சாயுமுன்ன போயி சேந்திரலாமா’’ என்று கேட்க, ‘‘ஆத்தா, கொஞ்சம் விருசில நடந்தீங்கண்ணா, உச்சி வெயிலுக்கு முன்னாடி போய் சேந்திரலாம்’’ என இளைஞன் கூறியதும், ‘‘நீ எங்கப்பா போற’’ என்றதும், அவன் நடந்ததை கூறுகிறான்.

உடனே அந்த மூதாட்டி, ‘‘அய்யா, நீ வடநாடு போயி சேரு, வாழ வழி கிடைக்குமுன்னு சொல்ல,’’ ‘‘வடக்கன்குளத்துக்கு போவதுக்கே துட்டும் இல்ல, வழியும் இல்ல, இதுல வடநாடு எங்க போக’’ என்று கூற, சோளம் ஏத்திட்டு மாட்டுவண்டி வரும் அந்த வண்டிக்காரனே உன்னை கூட்டிட்டு போவான் என்று கூறி, கைச்செலவுக்கு இந்த துட்ட வச்சுக்கோ என்று தனது இடுப்பில் சொருகி வச்சிருந்த சுருக்கு பையை எடுத்து கொடுத்தாள். மரணத்தை தழுவச் சென்றவன் மனம் மாறி மகிழ்ச்சியுடன் வண்டியை எதிர் நோக்கினான். வண்டியும் வந்தது. அந்த மூதாட்டி கூறியபடியே எல்லாம் நடந்தது.

மும்பை சென்று சாலையோரக்கடை நடத்தி இட்லி வியாபாரம் செய்தார். பின்னர் பெரும் செல்வந்தராகி சொந்த சொத்துகளை மீட்டார். புதிதாக வீட்டையும் கட்டினார். தனது சொந்த செலவில் கோயில் விழா நடத்தினார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கோயில் புனரமைக்கப்பட்டு இசக்கியம்மனுக்கும், சுடலைமாடன் மற்றும் முண்டனுக்கும் கற்சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோயில் வடக்கன் குளத்திலிருந்து 4 கி.மீ தொலைவிலுள்ள தனக்கர்குளத்தில் அமைந்துள்ளது...

“ 🌺 *ஓம் நமசிவாய* 🌺 “
🚩🕉 _வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்_ ..🕉🚩
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
என்றும் இறைப்பணியில்🚩🚩🕉

*சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்*

_வாட்சப் குழுமம் 🕉_ 
📲 +91 9486053609

Share to all📢📢📢

No comments:

Post a Comment