தூத்துக்குடி, ஏரல்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஏரலில், நட்டாற்று அம்மன் கோயில் உள்ளது. முன்னொரு காலத்தில் கொற்கை மாநகரம் சிறப்புற்று விளங்கியது. இம்மாநகரத்தில் வசித்து வந்த கோவிந்தன் மனைவி நம்பி அம்மாள், அப்பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றை கடந்து அக்கரையிலுள்ள பெருங்குளத்தில் வசிக்கும் அந்தணர்களுக்கு பால், தயிர் மோர், வெண்ணெய், நெய் ஆகியவற்றை விற்பனை செய்துவந்தாள். ஆற்றின் ஒரு பகுதியில் ஓரமாக முழங்காலளவில் ஓடும் தண்ணீரில் இறங்கி சென்று வந்தனர். காலங்காலமாக இவ்வாறு அவர்கள் சென்றுவந்த நிலையில் ஒரு நாள், ஆற்றின் நடுவே இருந்த கல் தட்டி, கால் இடறி நம்பி அம்மாள் தலையில் இருந்த பால் பானை கீழே விழுந்து கல்லில் பட்டு உடைந்தது. பானையிலிருந்த பால் முழுவதும் அந்த கல்லை அபிஷேகித்தபடி ஆற்றில் நீரோடு நீராகக் கலந்து சென்றது.
மறுநாளும் கல் தட்டி, பால் கொட்டியது. இந்த சம்பவம் மூன்று நாட்களாக தொடர்ந்தது. இதனால் வேதனையடைந்த அவள், தனது கணவனிடம் இது குறித்து கூறி வருத்தப்பட்டாள். கோவிந்தன் ஊர் பெரியவர்களிடம் கூறினார். உடனே ஊரார் சேர்ந்து கும்பலாக அந்த இடத்துக்குச் சென்றனர். அந்தக் கல்லைத் தோண்டி அப்புறப்படுத்த முயன்றபோது அது ஒரு சிலையாக இருக்கக் கண்டனர். ஆற்று நீரில் கழுவி பார்த்தபோது அது அம்மன் சிலை என்பது தெரிந்தது. அதை கரைக்குக் கொண்டு வந்தனர். கரைக்கு முன்னால் ஆற்றின் ஓரிடத்தில் மேடான தரைப்பகுதி தெரிய, அங்கு அந்த சிலையை வைத்தனர். அந்த இடம் தான் இப்போது கோயில் இருக்கும் இடம். ஆண்டுக்கு ஒரு முறை அந்த அம்மனுக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வந்தனர்.
ஒருநாள் அம்மன் இருக்கும் பகுதியில் வசித்த செல்லையா என்பவரின் மனைவி தங்ககனி கனவில் வந்த அம்மன், ‘வண்டி கட்டி பல மைல் தூரம் இருக்கற என் தங்கையைப் பார்க்க போறியே, உன் ஊர் ஆத்தங்கரையில் நான் இருக்கிறேன், என்னைய பார்க்க வரக்கூடாதா? அப்படி வருவதோடு எனக்கு கோயிலும் எழுப்பி பூஜித்துவா, உன் குலம் சிறக்க வைப்பேன். என்னை நம்பி வரும் யாவருக்கும் எல்லா வரமும் அருள்வேன். தீராத நோயையும் தீர்த்து வைப்பேன்,’ என்று கூறியது. தான் கண்ட கனவை, தனது கணவனிடம் கூறினாள் தங்ககனி. மறு நாள் காலையில் மனைவியுடன் அக்கம் பக்கத்தினர், உற்றார் உறவினரையும் அழைத்துக்கொண்டு அம்மனைத் தேடினார் செல்லையா. அங்கும், இங்குமாகப் பல இடங்களில் தேடிப் பார்த்து கடைசியாக அனைவரும் ஆற்றங்கரைக்கு சென்றனர். அங்கு தங்ககனி கனவில் கண்ட அம்மன் சிலை இருந்தது.
அந்த அம்மனுக்கு ஓலை குடிசையில் கோயில் அமைத்து வழிபட்டனர். நடு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதால் நடு ஆத்து அம்மன் என்று அம்மனை அழைத்தார்கள். அன்று முதல் தங்ககனி வம்ச வழியினர் அம்மனை வழிபட்டு வருகின்றனர். நடு ஆத்து அம்மன், நட்டாத்து அம்மனாகி, ‘நட்டாற்று அம்மன்’ என்றும் ‘நட்டார் கொண்ட அம்மன்’ என்றும், ‘நாட்டார் அம்மன்’ என்றும் அம்மனுக்குப் பெயர் வழங்கலாயிற்று. தமிழ் வருடம் 1108ம் ஆண்டு ரோகிணி நட்சத்திரத்தன்று இந்த கோயில் கற்கோயிலாக மாறியது. அடுத்தடுத்துப் புனரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு மிக பிரமாண்டமானதாக உருப்பெற்றிருக்கிறது. இக்கோயிலில் பங்குனி உத்திரம் அன்று திருவிழா நடக்கிறது. இங்கு விநாயகர், பெருமாள், சக்தியுடன் கூடிய சிவலிங்கம், வீரபத்திரர், பைரவர் மற்றும் பெரியசாமி, பேச்சியம்மை, மாடன், மாடத்தி, கருப்பசாமி ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இங்கே குடிகொண்டிருக்கும் கவிராயரை வணங்கினால் எவருடைய சாபமும் பாதிக்காது என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்தக் கோயிலில் பட்டாணி சாமியார் சந்நதி ஒன்று உள்ளது. ஒரே கல்லில் வடிக்கப்பட்ட குதிரையில் கம்பீரமாக வீற்றிருக்கும் இவர், ஒருகாலத்தில் மந்திரவாதியாக இருந்தவர். வேறு சமயத்தை சார்ந்தவர். பணம் கொடுப்பவனுக்கு சாதகமாக, அவனது எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் என்று வைத்து பழிவாங்கும் செயலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு ஒரு பெண்ணுக்கு அவர் சூனியம் வைக்க, அந்தப் பெண் அம்மன் சந்நதிக்கு வந்து மனமுருகி வேண்டினாள். அந்த பெண்ணை காப்பாற்றிய அம்மன், பட்டாணியரை வதம் செய்தாள். உயிர் துறக்கும் நேரத்தில் அம்மனிடம் சரணாகதி அடைந்த பட்டாணியர் தனக்கும் அந்த ஆலயத்தில் நிலையம் வேண்டும் என்றும், தன்னையும் அம்மனை வணங்க வரும் பக்தர்கள் பூஜிக்க வேண்டும் என்றும் வேண்டி நிற்க, தாயுள்ளம் கொண்ட அன்னை அதன்படியே ஆகட்டும் என்று அருள் வழங்கினார்.
அதன்படி பட்டாணி சாமிக்கு தனி பீடம் அமைக்கப்பட்டது. பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பட்டாணி சாமிக்கு பூஜை செய்தால் அவையனைத்து நீங்குவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நம்புகின் றனர். கோயிலின் தலவிருட்சம் வேப்ப மரம். தீர்த்தம் தாமிரபரணி தீர்த்தம். நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் ஏழுநாள், கால்படி பால் ஊற்றி அம்மனை வணங்கினால் எந்த அறுவை சிகிச்சையும் இன்றி குணமாகி விடுவர் என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்கின்றனர், அம்மனின் அருளால் பலன் பெற்றவர்கள். தற்போது இந்த கோயிலை நிர்வாகம் செய்து வரும் ஏழு பங்கு நாடார்களின் முன்னோரான ஒருவர் கனவில் அம்மன் தோன்றி, ‘‘எனது கோயிலின் வலப் பக்கமாக இரு. உன்னுடைய குடும்பம் வளர்ந்தோங்கும். உங்களது வாக்கு முதன்மையாக இருக்கும்,” என்று கூறினாராம்.
அப்படியே அம்மன் கோயிலுக்கு வலது பக்கமாக அந்த குடும்பத்தார் குடியேறினார்கள். இன்று அவர்கள் குடும்பம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாதம் தோறும் கடைசி செவ்வாய்க் கிழமை இந்தக் கோயிலில் அன்னதானம் மிகச்சிறப்பாக நடக்கிறது. சித்திரை வருடப்பிறப்பு, சித்திரா பவுர்ணமி, ஆனி மாதம் திருவிழா, ஆவணி மாதத்தில் திருமாலை பூஜை, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை விழா, மார்கழி திருவாதிரை, மாசிமாதம் சிவராத்திரி என பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. ஆண்டு தோறும் தை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் வருசாபிஷேகமும் பங்குனி உத்திரத்தின்போது கொடை விழாவும் முக்கியமானவை.
இது தவிர பக்தர்கள் தாங்கள் விரும்பிய நாட்களில் கிடா வெட்டி பொங்கலிட்டும் குழந்தைகளுக்கு முடியிறக்கியும் வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் தல விருட்சமான வேப்பமரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் மறு வருடமே அவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டுகிறது. நட்டாற்று அம்மன் எட்டு கரங்களுடன் விரிசடைத் தோற்றத்தில் உள்ளார். இடது காலை அசுரன் தலை மீது வைத்தும் வலது காலை குத்திட்டும் அமர்ந்த கோலத்தில் அருள் புரிகின்றார். கோயில் காலை 7 முதல் 12 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணிவரையும் திறந்து இருக்கும்.
திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் ஏரல் கிராமம் உள்ளது. ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் நட்டாத்து அம்மன் கோயில் அமைந்து உள்ளது...
நன்றி
- சு.இளம்கலைமாறன்
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment