Monday 7 May 2018

விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை வரலாறு.!!

விஜயநாராயணம், நாங்குநேரி

சத்தியத்தின் மகத்துவத்தை எடுத்துக்காட்டிய சங்கரன் மைந்தன், இந்த உலகிற்கு உண்மையை உணர்த்தி ஒத்தபனையில் அமர்ந்து அருளாட்சி நடத்துகின்றார்  ஒத்தப்பனை சுடலைமாடன். இந்தக் கோயில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள விஜயநாராயணத்தில் உள்ளது. விஜயநாராயணத்தில் விவசாய  நிலங்கள் அதிகம் வைத்திருந்த பேச்சிமுத்து ஒரு ஜோடி காளை மாடு வாங்க முடிவு செய்தார். அவரது உறவினர் விஜயநாராயணம் அருகேயுள்ள சங்கனாபுரம்  சண்முகமும் ஒரு ஜோடி மாடு வாங்க நினைத்திருந்தார். அவர் தனது வேலைக்காரன் ஆண்டியப்பனை, பேச்சிமுத்துவுடன் மாடு வாங்க அனுப்பி வைத்தார்.  பேச்சிமுத்துவும், ஆண்டியப்பனும் காளை மாடு வாங்க நெல்லை அருகேயுள்ள சீவலப்பேரி மாட்டுச் சந்தைக்கு சென்றனர். அங்கு மலையாளத்து வியாபாரி  (அப்போதெல்லாம் குமரி மாவட்டத்தை மலையாள நாடாக சொல்வதுண்டு) ஒருவரிடம் 2 ஜோடி மாடுகளை வாங்கிக் கொண்டனர்.

பின்னர் நிழலில் கட்டிப்போட மாடுகளை எழுப்பினர். அப்போது பேச்சிமுத்துவின் மாடுகளில் ஒன்று,  கால் சூம்பி வாத நோய்வாய்ப்பட்டிருந்தது தெரிந்தது. உடனே  வியாபாரியிடம் சென்று வேறு ஜோடி மாடுகளை வாங்கினார். வியாபாரி அதற்கு கூடுதலாக பணம் கேட்டார். மரத்தின் நிழலில் கட்டிப்போட்டு வந்து மீதி  பணத்தை கொடுக்கிறோம் என்று கூறி மாடுகளை ஓட்டி வந்தனர். அங்கிருந்த மரத்தில் கட்டிப்போட்டனர். சுமார் 2 மணி நேரம் கடந்து சந்தை முடியும் நேரம்  வந்தது. அப்போது வியாபாரிக்கு பாக்கி பணம் தரவேண்டிய பேச்சிமுத்து ஞாபகம் வந்து  அவரை தேடி வந்து பணம் கேட்டார். அப்போது அவர் பணத்தை  கொடுத்து விட்டதாக கூறினார். உடனே வியாபாரி நீங்கள் மனசாட்சிப்படி உண்மையைச் சொல்லுங்கள் என்று கூற,   , நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.   பணத்தை கொடுத்துவிட்டேன்.  நான் கொடுத்ததை ஆண்டியப்பனும் பார்த்திருக்கான் என்று கூற, வியாபாரி ஆண்டியப்பனை திரும்பி பார்த்தார். அவரும் ஆமா,  ஐயா, பணத்தை கொடுத்திட்டாங்களே என்று கூறினார். திகைத்து நின்ற வியாபாரி, நீங்க பணம் கொடுத்தது உண்மைன்னா, வாங்க சுடலைமாடசுவாமி  கோயிலுக்கு வந்து அவர் முன்னால் சொல்லுங்க, அது போதும் எனக்கு. என்று கூற, ஒப்புக்கொண்ட பேச்சிமுத்துவும், ஆண்டியப்பனும் கோயிலில் சென்று சாமி  முன்பு பாக்கி பணத்தை கொடுத்ததாக  கூறினர். சாமி முன்பு தயங்காமல் அவர்கள் கூறியதை கேட்ட வியாபாரி, சுடலைமாட சாமி முன்பு, சுடலை, நான் இங்க  பத்துவருஷத்துக்கும் மேலாக தொழில் பண்ணுறேன். நான் பொய் சொல்லல என்கிறது நான் அனுதினமும் கை தொழும் உனக்கு தெரியும். உண்மையை உணரச்  செய்து பொய் சொன்னவர்களுக்கு நீயே புத்தியை புகட்டு.

நீ இருக்கிறது உண்மைன்னா இன்னும் எட்டு நாளைக்குள்ளே உண்மை தெரியனும் சாமி என்று சுடலையிடம் முறையிட்டுவிட்டு புறப்பட்டார் வியாபாரி. கோயிலில் சென்று சத்தியம் செய்ததோடு பிரச்னை முடிந்தது என பெருமூச்சு விட்டுக்கொண்டு பேச்சிமுத்துவும், ஆண்டியப்பனும் கோயிலின் அருகேயுள்ள  முக்கூடல் பகுதியில் மூவாத்து கரையோரம் மரநிழலில் அமர்ந்து சாப்பிட உட்கார்ந்தனர். நல்ல பசியில் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை உண்பதற்காக  பிரித்தபோது, சாப்பாடு ரத்தமாக இருந்தது. அதை அவ்விடத்திலேயே போட்டு விட்டு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊருக்கு புறப்பட்டனர். நெல்லை அருகேயுள்ள  சிவந்திபட்டி அருகே வரும்போது, பேச்சி முத்துவின் மாடுகளில் ஒன்று இறந்து போனது. தொடர்ந்து நடந்து வந்தனர். புதுக்குறிச்சியை கடந்து வரும்போது  ஆண்டியப்பனின் ஒரு மாடு இறந்தது. மீண்டும் தொடர்ந்து நடை போட்டனர். ஆளுக்கொரு மாடுடன் வருகின்றனர்.

ரெட்டியார் பட்டி அருகே காரியாண்டி குளக்கரையில் வைத்து ஆண்டியப்பனின் ஒரு மாடும் இறந்து போனது. ஒத்த மாடுடன் பேச்சிமுத்துவும், ஆண்டியப்பனும் நடந்து வர விஜயநாராயணம் அருகேயுள்ள ஒத்தகட்டிப் பாறை அருகே வரும்போது பேச்சிமுத்துவின் மற்றொரு மாடும் மாண்டு போனது. வெற்று கையுடன் வீடு  வந்து சேர்ந்தனர். அவர்களது குடும்பத்திலுள்ளவர் வாந்திபேதி எடுத்து நோய்வாய்ப்பட்டனர். வேதனைகள் தொடர்ந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல்  தவித்தனர். அப்போது அங்கு வந்த வேடர் குல பெண்ணிடம் குறி கேட்டனர். அவர் நடந்த சம்பவங்களை கண்ணில் கண்டதுபோல் எடுத்துரைத்தார். தொடர்ந்து  உண்மையை உணர்த்திய சீவலப்பேரியானிடம் அவர் இருப்பிடம் சென்று மன்னிப்பு கேட்டு, அவருக்கு நிலையம் கொடுத்து வழிபட்டு வந்தால், செய்த பாவங்கள்  விலகும். வந்த வினையும், வரபோகிற வினையும் விலகும்.

நோய்கள் அகன்று ஆரோக்யம் கிடைக்கும் என்றாள். அதன் படி ஆண்டியப்பன் முதலில் சாமிக்கு நிலையம் கொடுத்து கொடையும் கொடுத்தார். அப்போது  சாமியாடுபவர் மூலமாக சுடலை பேசினார். என்னிடத்தில் பொய் சத்தியம் செய்ததால் தான், நான் உங்களுக்கு உண்மையை உணர்த்தவே வந்தேன். நான் ஊருக்கு  வடக்கே, (அதாவது தற்போது வடக்கு விஜயநாராயணம் என்று அழைக்கப்படுகிறது) ஒத்த பனை மரத்தில் நிலையம் கொண்டிருப்பேன். அங்கே எனக்கு கோயில்  எழுப்பி பூஜித்து வாருங்கள். என்னை நம்பி வருவோர்க்கு நல்லருள் தந்து காப்பேன் என்றார். அதன்படி ஒத்தப்பனையில் சுடலை வீற்றிருந்து அருளாட்சி புரிகிறார்.  அவரை நம்பி வணங்கும் அடியவர்க்கு நல்லருள் புரிகிறார். வெள்ளிக்கிழமை தோறும் இக்கோயிலில் சாமியாடி குறி சொல்கிறார். இந்தக்கோயில் நாங்குநேரி  அருகேயுள்ள விஜயநாராயணத்தில் உள்ளது...

நன்றி

சு.இளம் கலைமாறன்

🌤🚩🌤🚩🌤🚩🌤🚩🌤🚩

  🔔 *ஓம் நமசிவாய போற்றி* 🔔

📡🔹📡🔹📡🔹📡🔹📡🔹
  
      என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
             *வாட்சப் குழுமம்*

🎖 _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🎖
     🏡 *இறைத்தொண்டு!* 🏡

      👇🏼குழுவில் இணைய👇🏼
         📲+91 9486053609
🌻🍃🌻🍃🌻🍃🌻🍃🌻🍃

No comments:

Post a Comment