அனைத்து சிவாலயங்களிலும், சிவத்தலங்களிலும் சிவபெருமானை சிவராத்திரியில் வழிபாடு செய்தால் இம்மை, மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் என்றாலும் சிவராத்திரிக்கதைகளோடு தொடர்புடையதாகவும் சிவராத்திரிக்கே உரியதாகவும் சில தலங்கள் சிறப்புடன் பேசப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். திருஅண்ணாமலை: பிரம்மனும் திருமாலும் அடிமுடிதேட அழல்மலையாய் நின்ற பெருமான், மானிடர் உய்யும் பொருட்டு கல்மலையாக நின்ற இடமே திருஅண்ணாமலையாகும். அவர் அந்நாளில் ஜோதி வடிவாய் நின்றதை விளக்கவே இந்நாளில் மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது என்று அருணாசலபுராணம் கூறும். இங்கு சிவராத்திரி பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இது மாசி சிவராத்திரிக்கு உரிய தலமாயினும், இந்நாளில் கார்த்திகை தீபத்தாலேயே மிகப்பெருமை அடைந்துள்ளது.
திருக்கடையூர்: இது மார்க்கண்டேயன் எமனை வெல்லும் பொருட்டு சிவபூஜை செய்த இடம். மூன்றாம் ஜாமத்தில் இங்குள்ள லிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு அவனுக்காக எமனை உதைத்து வீழ்த்திய இடம். சிவபெருமான் காலசம்ஹாரராக பெரிய திருச்சபையில் எழுந்தருளியுள்ளார். உதைபட்ட எமன் காலடியில் கிடக்கும் நிலையிலும் பின்னர் அருள் பெற்று வணங்கும் நிலையிலுமாக இரண்டு உலாத்திருமேனிகளாக அமைந்துள்ளான்.
காஞ்சி: சிவபெருமானின் கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாக மூட அதனால் உலகத்தில் இருள் சூழ, பெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதன் வெப்பத்தால் உலக உயிர்கள் வருந்தின. அப்பாவம் நீங்க சிவனை பார்வதிதேவி பூஜித்த இடம் இதுவாகும். உலகம் இருண்ட அந்தகாரமான இரவில் உருத்திரர்கள் இங்கு பூஜித்தனர். அந்த உருத்திரர்கள் பூஜித்த ஆனந்தருத்ரேசம், மகாருத்ரேசம் உருத்திர கோடீசம் முதலிய பல ஆலயங்கள் இவ்வூரில் உள்ளன. காஞ்சிப்புராணத்தில் இவ்வூரின் ஒருபகுதி உருத்திர சோலை என வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலம்: சிவமகாபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள மான், வேடன் கதை நடந்த இடம் இது என்பர். ஆந்திர மாநிலத்தில் பெரிய அளவில் சிவராத்திரி வழிபாடு நடைபெறும் இடம் இதுவாகும். மல்லிகை மலர்களைச் சூடுவதால் இப்பெருமான் மல்லிகார்ச்சுனர் என்றழைக்கப்படுகிறார்.
திருவைகாவூர்: இதுவும் சிவராத்திரித்தலமாகும். இதனை சிவராத்திரி கதைப்பகுதியில் காண்க. இது ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பதியாகும். இவ்வூர்த் தலபுராணத்தில் சிவராத்திரி மகிமை எமனை உதைத்தது எமன் அருள் பெற்றது ஆகியன விரிவாக பேசப்பட்டுள்ளன.
ஓமாம்புலியூர்: சிதம்பரத்தையடுத்து 24 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்திலும் திருவைகாவூர் புராணத்தையொட்டிய வேடன் புலிக்கதை கூறப்படுகிறது. சிவபெருமான் பிரணவப் பொருளை தேவிக்கு உரைத்த இடம். பிரணவ வியாக்ரபுரம் எனவும் அழைக்கப்பெறும்.
திருக்கழுக்குன்றம்: கோடி உருத்திரர்கள் சிவராத்திரி காலத்தில் பூஜித்த இடம். இந்தத்தலம் உருத்திர கோடி என்றும் அழைக்கப்படும். இவை தவிர ஸ்ரீகாளத்தி, திருக்கேதீச்சரம் திரிகோணமலை, மதுரை முதலியனவும் சிவராத்திரிக்கு உரிய தலங்களாகும்.
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணாரமுதக் கடலே போற்றி
சிவராத்திரியில் பார்வதிதேவி
பூஜித்த தேவிகாபுரம் சிவராத்திரிக்கு உரிய பல தலங்களில் வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் தனிச்சிறப்புடையதாகத் திகழ்கிறது. ஒருசமயம் உலகம் ஒடுங்கிய ஊழி இரவில் உலகம் வெள்ளத்தில் அமிழ இங்குள்ள மலை மட்டும் பொன்போல பிரகாசித்து மிதந்தது. இம்மலை மீதுதேவியார் சிவலிங்கம் அமைத்து நான்கு கால பூஜையைச் செய்தாள். அவள் பூஜை செய்யும் சிறப்பையும் நேர்த்தியையும் காண சிவபெருமான் அவள் அருகில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவளுடைய அன்பையும், பக்தியையும் கண்டு அவளுக்குத் தரிசனம் தந்து அவளைத்தன் இடப்பாகத்தில் சேர்த்துக்கொண்டார். இத்தகைய திருத்தலமே தேவிகாபுரமாகும். இது வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஆரணிக்கும் போளூருக்கும் இடையில் அமைந்துள்ளது.
இங்குள்ள மலைமீது அழகிய சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் கருவறையில் அம்பிகை அமைத்து வழிபட்ட தேவீச்சரரும் அவள் பூஜையைக் காண எழுந்த சுயம்புலிங்கமான கனககிரீசுவரரும் எழுந்தருளி உள்ளனர். இப்போது தேவி பூஜித்த லிங்கம் காசிவிஸ்வநாதர் என்றழைக்கப்படுகிறது. இதுவே கருவறையின் மையத்தில் உள்ளது. அதன் வடமேற்கில் சுயம்புலிங்கம் அமைந்துள்ளது. இதுபோன்று பிரதிஷ்டா லிங்கமும், சுயம்புலிங்கமும் ஒரே கருவறையில் இருப்பது ஓரிரு தலங்களில் மட்டுமேயாகும். இங்கு சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் சிவராத்திரியில் பூஜித்த தேவிக்கு இவ்வூரில் பிரதானம் கொடுத்து பெரியநாயகி எனும் பெயரில் கோயில் கொண்டு அருள அருள்பாலித்தார். அவள் பெயராலேயே இவ்வூர் தேவிகாபுரம் என்றழைக்கப்படுகிறது.
மலையின் அடிவாரத்தில் அமைந்த
தேவிகாபுரத்தின் மையப்பகுதியில் பெரியநாயகி கோயில் அமைந்துள்ளது. தேவியின் ஆன்மாவில் சிவமூர்த்தி எழுந்தருளியிருப்பதால் இங்கு தனியாக லிங்கம் இல்லை. தேவிக்கே முதன்மை அளிக்கப்பட்டு பெரிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசர்கள் காலத்தில் இக்கோயிலுக்கு விரிவான திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இப்போதைக்கு திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ளதும் நினைக்கத்தக்கதாகும். இத்தலத்தில் இன்றும் சிவராத்திரி காலங்களில் அம்பிகை பூஜை செய்வதாக ஐதீகம். எனவே சிவராத்திரி இரவில் நான்கு யாமங்களும் இங்கு வழிபடுவது நாமும் அம்பிகையோடு சேர்ந்து வழிபடுவதாகவே கருதப்படும்.கன ககிரீஸ்வரருக்கு நெய்க்காப்பும் வென்னீர் அபிஷேகமும் சிறப்புடையதாகப் போற்றப்படுகின்றது.
சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் பூஜை செய்யத்தக்க பொருட்கள்
சிவராத்திரி பூஜையில் சிவலிங்கத்திற்குப் பால், பஞ்சாமிருதம், பழங்கள் முதலிய அனைத்தாலும் அபிஷேகம் செய்தாலும் ஒவ்வொரு காலத்திலும் செய்ய வேண்டிய சிறப்பான அபிஷேக அலங்காரம் நிவேதனம் ஆகியவற்றைப் பெரியோர் வகுத்துள்ளனர். இவற்றைக்கொண்டு வழிபாடு செய்வது கூடுதல் நலம் பயப்பதாகும்...
No comments:
Post a Comment