Thursday, 24 May 2018

காடுடைய சுடலை பொடி பூசி ( சுடுகாட்டில் உள்ள பிணம் எரித்த சாம்பலை பூசி ) ஏன் ? அதுவும் மெய் உணர்த்தும் மாபெரும் கருணை ??!!!

நமசிவாய

உடலை சுட்ட பொடியாக்கிய சாம்பலை ஏன் ஈசன் பூசி கொண்டுள்ளார் – மெய் உணர்த்தும் மேன்மையான கருணை என்று உணர்த்தவே இப்பதிவு ஈசன் திருவருளால்,

மெய்யை உணர்த்தும் மெய்யானவனை போற்றி பரவும் அடியார்கள் பாதம் பணிகிறேன்.

காடுடைய சுடலைப்பொடி :

இப்பிறவியில் உடலாகிய கூடு இறுதி பயணமாக சென்று அடைந்த சுடுகாட்டில், நெருப்பில் இடப்பட்ட உடலாகிய கூடு எரிந்து இறுதியில் கிட்டும் சாம்பல்.

சுடலைப்பொடி பூசும் சிவன் :

உயிர் உடலோடு வாழும் காலத்தில்,

உடல் என்றும் நிரந்தரம் என்று எண்ணத்தால், அந்த உடலை வளர்க்க நாவிற்கு சுவையும், வாசமும் கொண்ட உணவை நினைக்கும் நேரத்தில் நினைக்கும் பக்குவத்தில் ( சூடாக / குளிர்ச்சியாக ), உண்டு உடல் வளர்த்து, ( சில சமயம் மற்றவர் உணவையும் சேர்த்து உண்டு ),

உடலை வனப்புடன் மற்றவரை கவரும் வண்ணம் விதவிதமான நிறங்களில், விதவிதமான தோற்றம் உடைய உடைகள் அணிந்து, பொன் / வைர  நகைகள் அணிந்து, தான் பெருமை என்று காட்டிகொள்ள பலரை வதைத்து !!

சிற்றின்பம் வேண்டி பல வேலைகள் செய்து அனுபவித்து, அந்த சுவையை மீண்டும்மீண்டும் தேடி பலபல இடத்தில் தேடி ( திருடி ) சுவைத்தும் திருப்தி இல்லாமல் !!

சிறிது நேரம் மதி மயக்கும் போதையை ( புகழ், பணம் உட்பட ) நாடி தினம் திரிந்து கிட்டும் போதை போதாமல் மேலும்மேலும் வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பலரை துன்புறுத்தி இன்புறுவதாக நினைத்துகொண்டு வளர்த்த உடல் !!

உடல் மூலம் கிட்டிய வாரிசு தனது என்ற எண்ணம் கொண்டு பலர் உழைப்பில் அவற்றையும் வளர்த்து பேணி காத்து ( நம்மை காக்கும் என்ற எண்ணத்தால் ?????!!!!! )

இப்படிப்பட்ட உடலாகிய கூட்டை விட்டு உயிர் பிரிந்து சென்று சுடுகாட்டில் கருணையாளன் ஈசனை அடைந்த பின், இந்த உடலுக்கும் உய்வு வேண்டி அவற்றை எரித்த சம்பலையும் தான் மீது பூசிக்கொண்டு அருளுகிறார் மாபெரும் கருணையாளன் நம்பெருமான் ஈசன்,

இந்த மாபெரும் கருணையை மற்றவர் யாரும் அறியாவண்ணம் புரியும் கருணையை தான், ஆளுடை பிள்ளை திருஞான சம்பந்தர் பெருமான் அருளிய முதல் திருமுறையில் முதல் பாடலில் இக்கருனையை விளக்கும் பாடலை பாடிஉள்ளர்

“தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
“” காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன் “”-
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான்-இவன் அன்றே “”

உணர்த்தும் மெய் யாதேனில் :

எதை எரித்தாலும் சாம்பல் மட்டுமே மிஞ்சும், சாம்பலை மீண்டும்மீண்டும் அழித்தாலும் அதன் தன்மை மாறாது,

அதுபோல என்ன சொத்து சுகம் சுற்றம் சொந்தம் என்று எதைக்கொண்டு உடல் வளர்த்தாலும் முடிவில் ஒரு பிடி சாம்பல் தான், என்று உணர்ந்து நித்தம் திருநீறு அணிந்து, மெய்யானவன் கருணையை பெறவேண்டி, மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல், அன்பு செய்து சிவனடி சேர வழிகாட்டும் மெய் தான் ஈசன் உணர்த்தும் மெய்.

மெய் அறிவு அற்றவன் சிந்தையில் ஈசன் திருவருள் மட்டுமே தோற்றிய பதிவு...

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment