திருமாலின் தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரமாகும். இதில் அவர் ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாகத் தோன்றினார். முனிகுமாரனாக இருந்தாலும் அரசர்களுக்குரிய அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். சிவனை உபாசித்து அவரால் தழுவப் பெற்றார். சிவன் அவருடைய அன்பாலும் தவத்தாலும் மகிழ்ந்து தனது மழுவின் அம்சமாக ஒரு மழுவைத் தோற்றுவித்து அவருக்கு அளித்தார். அதனால் அவருக்குப் பரசுராமர், மழுவாளன் என்பன பெயர்களாயின. ஒரு சமயம் கிருதவீரியன் என்ற மாமன்னன் தமது சேனைகளுடன் இவர்களுடைய ஆசிரமத்திற்கு வந்தான். அவனை ஜமதக்னி முனிவரும், அவர் மனைவியும் வரவேற்று காமதேனுவின் உதவியால் பெருத்த உபசாரத்தைச் செய்தனர்.
விருந்தினை உண்டு மகிழ்ந்த அவன், ‘‘முனிவரை நோக்கி, எளிய சிறு ஆசிரமத்தில் வசிக்கும் உங்களால் எப்படி இத்தகைய பெரிய விருந்தை அளிக்க முடிந்தது’’ என்றான். முனிவர் தன்னிடம் காமதேனு என்னும் பசு இருப்பதாகவும், அதன் மூலம் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம் என்றார். அந்த மன்னன், ‘முனிவனே எளிய குடும்பத்துடன் வாழும் உமக்கு எதற்கு இந்தத் தெய்வீகப் பசு. காமதேனுவை எனக்குக் கொடுத்து விடுங்கள். அதற்கு ஈடாக உமக்கு ஏராளமான பசுக்களைத் தருகிறேன்’ என்று கூறினார். முனிவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவன் கடுங்கோபம் கொண்டான். முனிவரை விலக்கி விட்டுப் பசுவைப் பிடித்துச் செல்ல ஆட்களை ஏவினான்.
அப்போது பசுவின் உடலிலிருந்து ஏராளமான வீரர்கள் தோன்றினர். அவர்கள் கிருதவீரியதனையும், அவனது வீரர்களையும் அழித்து விட்டு மறைந்தனர். கிருத வீரியன் மாண்டதைக் கேட்டு அவன் மகன் கார்த்தவீரியார்ச்சுனன் அங்கு வந்தான். தவத்தில் வீற்றிருக்கும் முனிவரைக் கண்டு வாளையெடுத்து அவர் தலையை வெட்டி வீழ்த்தினான். ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பிய ரேணுகாதேவி அதைக் கண்டு ஆற்றாமல் மார்பில் இருபத்தியோரு முறை அடித்துக் கொண்டு அழுதாள். அந்த வேளையில் பரசுராமனும் அங்கு வந்தார். தனது தந்தையைக் கொன்று விட்டு, பெரிய மரம் போல் நிற்கும் கார்த்தவீரியார்ச்சுனைக் கண்டு சினந்தார். அவனுடைய தலைகளையும், கைகளையும் வெட்டி எறிந்தார். பிறகு தனது தாயைத் தேற்றினார். ரேணுகை தீயுள் மூழ்கி தெய்வநிலை பெற்றாள்.
தாய் தந்தையரின் இழப்பால் வருந்திய பரசுராமர் அரசகுலத்திடம் கோபம் கொண்டார். இருபத்தோரு தலைமுறைகளைச் சேர்ந்த அரசர்களைக் கொன்று, அவர்களின் உடலிலிருந்து பெருகிய ரத்தத்தைத் தேக்கி, அதில் தந்தைக்கு இறுதிக்கடன் செய்தார். பின்னும் சினம் அடங்காமல் எதிர்பட்ட அரசர்களையெல்லாம் கொன்று குவித்தார். அவரை அடக்குவாரில்லை. பூவுலக அரசர்கள் எல்லோரும் காசிபன் என்னும் முனிவனிடம் தஞ்சமடைந்து தம்மைக் காக்குமாறு வேண்டினர். அந்த முனிவன் பரசுராமரிடம் சென்று, ‘நீ வென்ற இந்தப் பூமியை எனக்குத் தானமாக அளிக்க வேண்டும்’ என்றார். பரசுராமரும் அப்படியே தாரைவார்த்து அளித்தார். பின்னர் முனிவர் பரசுராமரிடம், ‘‘அன்பரே எனக்குத் தானமாக அளிக்கப்பட்ட பூமியில் இனி நீங்கள் இருக்கக்கூடாது.
இதை விட்டு அகலுக. மேலும் உமது சினத்தைத் தவிர்த்து சிவபூஜை செய்க’’ என்றார். பரசுராமர் மேற்குக் கடலோரம் சென்று தனது மழுவை வீசி, கடலை விலகும்படிச் செய்தார். கடல் பின் வாங்கியதால் உண்டான நிலத்தினை ஏற்றார். அதுவே இன்றைய மலைநாடான கேரளாவாகும். இது பரசுராமரால் உண்டாக்கப்பட்டதாதலின் பரசுராம க்ஷேத்ரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமர் அனேக சிவாலயங்களை அமைத்தார். இவை ‘பரசுராமப்பிரதிஷ்டைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. பரசுராமர் இந்த இடத்தை விட்டு நீங்காது இன்னமும் சிவபூஜை செய்து கொண்டிருக்கின்றார் என்று நம்பப்படுகிறது. பரசுராமர் உலகிலுள்ள அரசர்களைக் கொன்ற பாவம் தீர மகேந்திர மலையில் தவம் செய்து சிவனருளால் மேன்மை பெற்றார் என்று சிவமகாபுராணம் கூறுகிறது. அவருக்கு சிவபெருமான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை அளித்தார். அவர் மகேந்திர மலையில் தவம் புரிந்து கொண்டிருக்கின்றார். இந்த யுகமுடிவில் தன்னுலகம் சேர்வாரென்று புராணங்கள் கூறுகின்றன.
அதேபோல தமிழகத்தில் பரசுராமர் அனேக இடங்களில் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தார். அவை அவர் பெயரால் பரசுராமேஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம். திருச்சிக்கு அருகேயுள்ள அரியலூருக்குத் தெற்கே அமைந்துள்ள ‘‘பழுவூர்’’ பரசுராமரால் பூஜிக்கப்பட்ட தலமாகும். இங்குள்ள இறைவர் ஆலந்துறையீசர் என்றும், அம்பிகை அருந்தவ நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்குப் பரசுராமர் ஆலமரத்தின் கீழ் அதன் இலைகளைப் பரப்பி, அதன் மீது படுத்த நிலையில் இருந்து தவம் செய்து, தன் தாயைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அவர் சிவனருள் பெற்றதும் தொடர்ந்து மலையாள அந்தணர்களைக் கொண்டு பூஜிக்க ஏற்பாடு செய்தார் என்று கூறப்படுகிறது. இங்கு மலையாள அந்தணர்கள் பூசனை செய்ததைத் திருஞானசம்பந்தர்.
மண்ணின் மிசைஆடி மலையாளர் தொழுதேத்திப்
மண்ணின் ஒலிகொண்டு பயில்கின்ற பழுவூரே என்றும்,
அந்தணர்களான மலையாளவர் ஏந்தும்
பந்தமலிகின்ற பழுவூரானை
என்றும் பாடியருளுகின்றார். இந்த மூலத்தானத்திற்கு முன்னுள்ள நிலைக் கல்லில் சயன கோலத்தில் பரசுராமர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள வேகாமங்கலத்தில் பரசுராமர் பூஜித்த சிவாலயம் உள்ளது. இறைவர் பரசுராமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குப் பரசுராமர் வழிபட்டு இறைவனிடம் மழுவாயுதத்தைப் பெற்று உலகிலுள்ள அரசர்களைக் கொன்று தந்தைக்கு நீர்க்கடன் செய்தார் என்று புராணம் கூறுகிறது. கும்பகோணத்திற்கு அருகில் திரைலோக்கி என்ற ஊர் உள்ளது. கல்வெட்டுக்களில் இவ்வூர் ‘‘திரைலோக்கிய மகாதேவி சதுர்வேத மங்கலம்’’ என்று குறிக்கப்படுகிறது. இங்கு படுத்துள்ள நந்தி மீது உமாமகேஸ்வரர் அழகிய பிரபைக்குள் வீற்றிருப்பதைக் காண்கிறோம். கல்வெட்டில் இவ்வூர் ஆலயம் பரசுராமரால் அமைத்து வழிபடப்பட்டதால் ‘‘திருப்பரசு ராமேஸ்வரம்’’ என்று குறிக்கப்பட்டுள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமான திருநின்றியூர் மயிலாடுதுறை அருகிலுள்ள தலமாகும். இங்கு பரசுராமர் சிவபெருமானை வழிபட்டு அவருடைய திருவடியைக் காணும் பேறுபெற்றார் என்று கூறப்படுகிறது. இதனை சுந்தரர் தமது தேவாரத்தில்,
‘‘மொய்த்தசீர் முன்னூற்றறுபது வேலி
மூன்றுநூறு வேதியரோடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி
ஓங்கு நின்றியூர் என்றுஉமக் களிப்ப
பத்தி செய்த அப்பரசுராமற்குப்
பாதங்காட்டிய நீதிகண்டடைந்தேன்’’
என்று திருநின்றவூர் பதிகத்தில் பாடுகின்றார். இதன் மூலம் பரசுராமர் திருநின்றியூரில் சிவபெருமானை வழிபட்டு முன்னூறு அந்தணர்களோடு முன்னூற்று அறுபது வேலி நிலத்தைத் தாரைவார்த்துக் கொடுத்ததையும், அந்தப் பரசுராமருக்கு சிவபெருமான் திருவடி காட்டி அருள் செய்ததையும் அறிய முடிகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment